அவள் டீன்ஸ்
##~## |
ஃபேஸ்புக், டிவிட்டர்... இதெல்லாமே 'ஓல்டு யா’ என்று ஒதுக்கி, இப்போது 'வாட்ஸ்அப்ப்’ (WhatsApp), 'வீசாட்' (We Chat), 'வைபர்' (Viber) போன்ற அப்ளிகேஷன்களின் டிரெண்டுக்கு மாறியுள்ள யூத்களிடம், ''இந்த டெக்னாலஜிஸ்... அப்ளிகேஷன்ஸ் எல்லாம்... வொர்த்தா... வேஸ்ட்டா?'' என்று இந்த இதழுக்காக 'டீன் டாக்' செய்யச் சொன்னோம்! சென்னை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகள் அலசி, பிழிந்து, காயப்போட்ட கலந்துரையாடலின் தொகுப்பு இதோ...
''ஆப்ப் (app - application) என்பது டெக்னாலஜி தந்த வரம். தொலைதூரத்துல இருக்கற நம்ம நண்பர்கள், வருடக்கணக்கா பார்க்காம இருக்கற வெளிநாட்டு பந்தங்கள்கிட்ட எல்லாம் 'வாட்ஸ்அப்ப்’ செஞ்சோ... 'வீசாட்’ பண்ணியோ... எப்பவுமே தொடர்புல இருக்கலாம். எவ்வளவு நல்ல விஷயம் இது..?'' என்று பிள்ளையார்சுழி போட்டார் ராகவிஜயா.
'நண்பர்கள், உறவினர்கள்கிட்ட தொடர்பில் இருக்கறதைவிட, முன்ன பின்ன தெரியாத நபர்கள்கிட்ட ஸ்கைப் கால், வைபர் மெசேஜ்னு பொழுதை கழிக்கறதுதான் இங்க அதிகமா நடக்குது'' என்று ஹர்சிதா குத்திக்காட்ட...
''உலகமே உள்ளங்கைக்குள் சுருங்குற இந்த யுகத்துல, புது மனுஷங்களோட பழகுறது தப்பா? அதுவும்கூட புரொஃபைல் பார்த்து, அலசி ஆராய்ஞ்சதுக்கு அப்புறம்தானே பேசுறோம்’ என்று சுமையா பாய்ச்சல் காட்ட... கூட்டத்தில் கொஞ்சம் கர்புர்.

சந்தடி சாக்கில், ''அடச்சே.... ஃபேக் (fake) புரொஃபைல் பத்தி 1,473 தடவை சொல்லி அலுத்துட்டாலும், திருந்தவே மாட்டோம்னு தீர்மானம் போட்டிருக்கவங்கள என்னதான் பண்றது?'' என்று லந்துவிட்டார் லூயிஸ்.
''என்னதான் சொல்லுங்க, மனசு கஷ்டம்... சின்னதா ஒரு வெற்றினு நாலு பேர்கிட்ட எதையும் பகிர்ந்துக்குற நிம்மதி, திருப்தி... இதெல்லாம் தனிதானே! அது, ஒரு 'வாட்ஸ்அப்ப்’ ஸ்டேட்டஸ்ல கிடைச்சுடுமே!'' என்று தன் அனுபவத்தை அமிட்டா சொல்ல...
''ம்க்கும்... வீட்டுல எத்தனை பேர் அம்மா, அப்பா, அண்ணன், தங்கைகிட்ட எல்லாம் மனம்விட்டுப் பேசிக்கிறோம்? ஆரம்பத்துல எஃப் பி, டிவிட்டர், இப்போ 'ஆப்ப்ஸ்’னு மூழ்கிக் கிடக்குறோம். அமிட்டா சொல்ற மனக்கஷ்டம், வெற்றினு இதையெல்லாம் 'சாட்’லதான் பகிர்ந்துக்கணுமா என்ன..? '' என்று சாட்டையை வீசினார் லட்சுமி.
''நிஜம்தான்...'' என்று ஆமோதித்த ஷ்ரதா, ''இப்பல்லாம், 'ஐ’ம் இன் லவ்’, 'வி புரோக் அப்’னு பர்சனல் விஷயங்கள ஸ்டேட்டஸா போடுற டிரெண்ட்தான் அதிகமா இருக்கு. மொத்தத்துல இளைஞர்களோட வாழ்க்கையை சிக்கலாக்குது டெக்னாலஜி'' என்று வருத்தப்'பா' பாடினார்.

''நியூஸ், மெஸேஜ், கருத்துனு சமூக விஷயங்களில் இளைஞர்களை முனைப்பா செயல்பட வைக்கிறது இந்த 'ஆப்ப்ஸ்’ங்கறதையும் மறுக்க முடியாது'' என்று ரோஹினா சொல்ல,
''கருத்து சொல்லி மும்பையில் ரெண்டு பெண்கள் பிரச்னையில் சிக்கினது மறந்திருக்காது. இந்த இணையவெளி, ஒரு கட்டுப்பாடற்ற, அநாவசிய சுதந்திரத்தை கொடுக்குதுனுதான் எனக்கு தோணுது'' என்று எச்சரிக்கை சிக்னல் கொடுத்தார் எஸ்தர்.
''எஸ்தர் சொல்றது உண்மைதான்... இப்போ இருக்குற உலகத்துல நல்லது, கெட்டதுனு எல்லாத்தையும் கடந்து வரத்தான் வேண்டிஇருக்கு. அதுக்காக 'ஆப்ப்ஸ்’ ஒரேயடியாக வேண்டாம்னு சொல்றது முட்டாள்தனம்'' என்று ஒரு டீம் சொல்ல,
''அப்போ எங்களை முட்டாள்னு சொல்றீங்களா..?'' என்று எதிர் டீம் எகிற...
வெள்ளைக்கொடி காட்டி பேக்-அப் ஆனோம்!
- அ.பார்வதி
படங்கள்: தி.குமரகுருபரன்