அவள் டீன்ஸ்
##~## |
ஆடி பதினெட்டாம் பெருக்கு... காஞ்சிபுரம், திருமங்கலம் கிராமத்தில் குலவையிட்டுக் கொண்டுஇருந்த மக்களுக்கு நடுவே... கொஞ்சம் வித்தியாசமான முகங்கள்! ஆம், அவர்கள்... கொரிய நாட்டு மாணவிகள்!
''எங்கள் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்ய கொரியாவில் இருந்து வந்திருக்கும் இந்த மாணவிகள். கிட்டத்தட்ட ஒரு மாதமாக இந்த கிராமக் குழந்தைகளுக்கு படிப்பு கற்றுத் தருவது தொடங்கி, பள்ளி சுவர்களுக்கு பெயின்ட் அடிப்பது வரை பல உதவிகளையும் செய்கிறார்கள். இவர்களுக்கு ஒரு சந்தோஷத்தை தருவதற்காக, ஆடிப் பெருக்கு விழாவை பயன்படுத்திக் கொண்டோம்!'' என்று குஷியோடு அறிமுகம் செய்து வைத்தனர் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தினர்!
டி-ஷர்ட்டை ஜாக்கெட்டாக உடுத்தி, பட்டுப்புடவை, காலில் ஷூ, தலையில் மஞ்சள் நீர்க்குடம் என வித்தியாச வேடத்தில், ஆடி மாத ஸ்பெஷல் கூழ் குடிப்பதற்காக... வெட்டவெளியில் அன்னநடை நடந்து வந்த அந்த நான்கைந்து முகங் களைப் பிடித்து அமர வைத்தோம். கொரியன், ஆங்கிலம், கொஞ்சம் தமிழ் என்று பிசைந்து பிசைந்து பேசிய அவர்கள் அனைவரிடமிருந்தும் வந்த முதல் வார்த்தை... 'வணணணக்கம்!’
''எங்கள் ஊரில் மிகவும் பிடித்தது என்ன..?'' என்றோம் எதிர்பார்ப்புடன்.

பதில் சொல்வதற்கு லீ ஜி சேன், யோசிக்க ஆரம்பிக்க... ''உங்கள் சாப்பாடு... அந்த காரம்... வாவ்!'' என்று முந்திக் கொண்ட ஆவ் ஜிசூ,
''ஆரம்பத்தில் கண்ணீர் வழிய, ஒரு வாய் சாப்பாடு, ஒரு வாய் தண்ணீர் என்றுதான் பழகினோம். நாட்களாக ஆக, இந்த காரத்துக்கு எங்கள் நாக்கு அடிமையாகிவிட்டது. இனி எங்கள் ஊருக்குப் போன பின்னும், இதைத்தான் மனம் தேடும். இந்த ஊர் ஆன்ட்டிகளிடம் ரெசிபி வாங்கிச் சென்று, எங்கள் ஊர் மம்மிகளிடம் தந்து, சமைத்துத் தரச் சொல்ல வேண்டும்!'' என்றார் ஜிசூ.
இதை ஆமோதிக்கும் வகையில் நாலாவது முறையாக கூழை வாங்கி குடித்துக் கொண்டிருந்த செங்க் இங்க் ஜங்க், ''இந்த கருவாட்டுக் குழம்பு, கூழுக்கு சரியா சைட் டிஷ்!'' என்று சிலாகித்தார், சப்புக் கொட்டியபடி!

ஊர்ப்பக்கம் பேச்சைத் திருப்பிய ஜூ க்வோன், ''இந்த மக்கள், ஒவ்வொரு நாளும் ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். ஊரும் வீடும் சொல்கிறது இவர்களின் வறுமையை. ஆனால், இந்த வறுமையிலும் இவர்கள் சந்தோஷமாக வாழும் வித்தை... அனைவருக்குமே வாழ்க்கைப் பாடம்'' என்று சிலிர்ப்புடன் சொன்னார்.
''எங்கள் நாட்டில் காதல் திருமணங்கள் தான். இங்கு பெரியவர்களின் சம்மதத் துடனும், நிறைய சம்பிரதாயங்களுடனும் நடக்கும் உங்களின் திருமணங்கள்... எங்களுக்கெல்லாம் நம்ப முடியாத வேடிக்கை!'' என்று கண்கள் விரித்து யூ ஜி கிம் சொல்ல,
''இதோ சாப்பிடுங்கள்!'' என்று ஜிசூவும், ஜின்மும் கூழ் கொடுத்து நம்மை விருந்தோம்ப... சூப்பர்!
- கட்டுரை, படங்கள்: உ.கு.சங்கவி