டயானாவின் டைமண்ட் ரிங்!

28 வயதாகும் உலகின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலருக்கு டும்டும்டும்! பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் - டயனா தம்பதியின் முதல் மகன் பிரின்ஸ் வில்லியம்ஸ் - கேத் மிடில்டன் ஜோடியின் காதல் திருமணத்தை பங்கிங்ஹாம் அரண்மனை மட்டுமல்ல... உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடக்கிறது!
பத்து மில்லியன் யூரோ செலவில் திருமண பட்ஜெட், திருமண நாளான ஏப்ரல் 29 அன்று அரசு விடுமுறை என்பதால் இப்போதே ஓவர் டைம் செய்யும் ஊழியர்கள், யூத்களின் டிரெண்டாகிப் போயிருக்கும் கேத் மிடில்டனின் என்கேஜ்மென்ட் ரிங்... என கல்யாண குதூகலம் தொற்றிக் கொண்டிருக்கிறது லண்டனை!
##~## |
செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த கேத், 2001-ம் ஆண்டு 'யுனிவர்ஸிட்டி ஆஃப் ஆன்ட்ரூஸ்'-ல் சேர்ந்தபோதுதான் வில்லியம்ஸுடன் அறிமுகம். நண்பர்களாகப் பழகியவர்களை, காலம் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாற்றி ஆசீர்வதிக்க... மீடியாக்களில் தலைப்புச் செய்தியானார்கள்.
'அழகுக்கும், ஸ்டைலுக்கும் அத்தாரிட்டியாக வலம் வந்த டயானா போலவே இருக்கிறார் கேத்...’ என்று அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ஆர்வத்துடன் டயானாவின் சாயல்களை இங்கிலாந்தின் பத்திரிகைகள் தேடுவது ஒரு பக்கம் நடக்க... இன்னொரு பக்கம், இந்தக் காதல் முறிந்தது என்பது போன்ற செய்திகளும் கிளம்பிவந்து வழக்கம்போல சர்ச்சையைக் கிளப்பின!
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தத்தை நடத்தி, திருமணச் செய்தியை உறுதி செய்தது இந்த ஜோடி. ''என் அம்மா டயானாவின் என்கேஜ்மென்ட் மோதிரத்தைதான் நான் 'கேத்’-க்கு

அணிவிக்கிறேன். இந்த சந்தோஷ தருணத்தில் என் அம்மாவும் என்னுடன் இருப்பதைப் போல உணர்கிறேன்'' என்று வில்லியம்ஸ் நெகிழ, ''வில்லியம்ஸ் மிகவும் ரொமான்ட்டிக்கானவர்...'' என்று கன்னம் சிவந்தார் இருபத்தி எட்டு வயதாகும் கேத்.
'கேத்’தின் என்கேஜ்மென்ட் ரிங்தான் இப்போது இங்கிலாந்தின் ஹாட் டிரெண்ட். சஃபயர் கல்லைச் சுற்றிலும் டைமண்ட் கற்கள் பதிக்கப்பட்ட அந்த மோதிரம், விலை மதிப்பிட முடியாதது என்று பிரமிப்புடன் பேசப்படுகிறது. 'அதே ஸ்டைல் மோதிரம் வேண்டும்...’ என்று நகைக்கடைகளில் இளம் பெண்கள் ஆர்டர்களை நிரப்பிக் கொண்டுள்ளனர். இன்னொரு பக்கம் வில்லியம்ஸ் - கேத் ஜோடியின் போட்டோ பதிக்கப்பட்ட கப், பிளேட், கிஃப்ட் அயிட்டங்கள் எல்லாம் இப்போது லண்டனில் பரபர விற்பனையில்!
- ம.பிரியதர்ஷினி