'இன்ஜினீயரிங் படிப்பில் எந்த பிரிவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது?'
''என் மகளை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ப்பதென தீர்மானித்திருக்கிறேன். காலகாலமாக நிலைத்திருக்கும் மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் போன்ற பிரிவுகளை தேர்ந்தெடுப்பதா... அல்லது புதிதாக அறிமுகமாகி வரும் வேறு ஏதாவது பிரிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதா எனக் குழப்பமாக இருக்கிறது. எதில் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் இருக்கும்?'' என்று பெற்றோர் பலரின் மனதிலிருக்கும் சந்தேகத்தை பிரதிபலித்திருக்கும் பரமக்குடி, நாதமுத்துவுக்காக விளக்கம் தருகிறார்... பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் டீன், வை.சேகர்.

##~## |
''பொறியியல் படிப்புகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடரும் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் படிப்புகளில் இருந்து முளைத்தவைதான் தற்போது நடைமுறையில் இருக்கும் பல்வேறு பொறியியல் பிரிவு படிப்புகள். இத்தகைய படிப்புகளில் சேர்பவர்களே தற்போதைக்கு மெஜாரிட்டி. உதாரணமாக, சிவிலில் இருந்து உருவான கன்ஸ்ட்ரக்ஷன், டிரான்ஸ்போர்டேஷன், வாட்டர் இரிகேஷன்; மெக்கானிக்கலில் இருந்து உருவான ஆட்டோமொபைல், தெர்மல், மெரைன்; எலெக்ட்ரிக்கலில் இருந்து உருவான எலெக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமென்டேஷன், மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. என்று அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். போட்டிகள் நிறைந்த இன்றைய வேலை வாய்ப்புச் சந்தையில், தங்களை தனித்துக் காட்டிக் கொள்ள இந்தச் சிறப்பு படிப்புகள் மாணவர்களுக்கு அவசியமாகின்றன.
தற்காலிக தொய்வு ஏற்பட்டிருந்தாலும், சர்வதேச அளவில் ஐ.டி. சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கு இன்னும் பத்து ஆண்டுகள் வரை நல்ல வாய்ப்புகள் இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.
லேட்டஸ்டாக அறிமுகமாகி மாணவர்கள் - பெற்றோர்கள் மத்தியில் ஆர்வத்தையும் தயக்கத்தையும் ஒரு சேர ஏற்படுத்தும் பொறியியல் படிப்புகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு கம்ப்யூட்டர் துறையின் 'எம்படட் இன்ஜினீயரிங்' (Embedded Engineering)படிப்பைச் சொல்லலாம். தற்போதை படிப்புகளில் ஹாட் கேக்கான இந்தப் பிரிவில் தேர்ச்சியடைபவர்களைக் கொத்திக்கொண்டு போக ஐ.டி. நிறுவனங்கள் கால் கடுக்க காத்திருக்கின்றன.

இதேபோல, சிவில் படிப்பின் புதிய பரிணாமமான 'என்விரான்மென்டல் இன்ஜினீயரிங்’ (Environmental Engineering) மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறையின் வாரிசுகளான ஏவியேஷன் மற்றும் ஏரோநாட்டிகல் படிப்புகளும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
இவை தவிர்த்து புது தினுசாக வந்திருக்கும் பயோ இன்ஜினீயரிங், நானோ டெக்னாலஜி, நியூக்ளியர் இன்ஜினீயரிங் போன்றவையும் தொலைநோக்குப் பார்வையில் கவனம் பெறுகின்றன.
அதேசமயம், இன்றும்கூட பொறியியலின் அடிப்படைப் படிப்புகளான சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம்... வேலைவாய்ப்பு சந்தையில் கூடுதலாக ஒரு கம்ப்யூட்டர் படிப்பு உதவியுடன் செட்டிலாக முடிகிறது என்பதுதான். பொறியியல் படிப்புகளைப் பற்றி போதிய விவரங்கள் கிடைக்காதவர்கள், அப்படிக் கிடைத்தும் தயங்குபவர்கள், கிராமப்புற பின்னணியில் வருபவர்கள் போன்றவர்களின் விருப்பத் தேர்வாகவும் இருப்பவை, இந்த அடிப்படை பொறியியல் படிப்புகள்தான்!
எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பெரிதாக குழப்பம் மற்றும் தயக்கம் இருப்பின்... அடிப்படை பிரிவுகளே பெஸ்ட். மேற்படிப்பு, வேலை வாய்ப்பு, ஆர்வம் என ஐடியா இருப்பவர்கள் சிறப்பு பிரிவுகளில் சேரலாம். தகவல் தட்டுப்பாடு இருந்தால் முன்னாள் பொறியியல் மாணவர்கள், கல்லூரி பேராசியர்கள் மற்றும் கல்வி ஆலோசகர் உதவியை நாடலாம்.
மொத்தத்தில், அதிகம் செலவு பிடிக்கும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு முன்பாக போதுமான முன்யோசனை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகவும் அவசியம்!''