சிலம்பம் சிஸ்டர்ஸ் !
''ஆதி மனுஷன் காட்டுல வாழ்ந்தப்போ கல்லையும், கம்பையும்தான் தற்காப்பு ஆயுதமா பயன்படுத்தினான். அந்த தாய்க் கலைதான், சிலம்பம்!''
- அழகாக அறிமுக வாக்கியம் வைக்கிறார் சந்தியா. சர்வதேச அளவில் சிலம்பாட்டத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் சென்னைப் பெண். பொன்னேரி எல் அண்ட் ஜி கலை அறிவியல் கல்லூரியின் இளங்கலை இரண்டாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி!

##~## |
தும்பி பிடித்து, கபடி விளையாடித் திரிந்த நம் தமிழ்ப் பிள்ளைகள்... இப்போது கிரிக்கெட், வீடியோ கேம்ஸ் என்றே சரணடைந்து கிடக்கின்றன. இந்தச் சூழலில்... பாரம்பரியக் கலையான சிலம்பத்தை ஆர்வத்தோடு கற்றதுடன், பிற மாணவர்களுக்கும் அதைக் கற்பிக்கும் முனைப்பில் இருக்கும் சந்தியாவுக்கு, பேச்சிலும் சிலம்பின் வேகம்!
''என் மாமா ஹரி, நிறைய சிலம்பப் போட்டிகள்ல கலந்துகிட்டு ஜெயிச்சு வரும்போது... ஊரே அவரை மெச்சும். அவரைப் பார்த்துதான், எனக்கும் ஆசை வந்தது. அப்போ... எனக்கு நாலு வயசு! மாமாவோட ஆசான் சுப்பிரமணிகிட்ட சிலம்பம் கத்துக்கச் சேர்ந்தேன். 'சின்னப் பொண்ணு... ஆர்வக் கோளாறு’னு புறந்தள்ளாம... எல்லாருமே பக்கபலமா இருந்ததால, இந்தப் பதினஞ்சு வருஷத்துல சிறப்பான சிலம்பாட்டக்காரியா வளர்ந்து நிக்கறேன்!'' எனும் சந்தியா, மாவட்ட அளவில்-24 தடவை; மாநில அளவில்-11 தடவை; தேசிய அளவில்-3 தடவை; சர்வதேச அளவில் ஒரு தடவை என்று வெற்றிகளைக் குவித்திருக்கிறார்.
''கையில ஆயுதம் இல்லாம தற்காப்பு பயிற்சி செய்றது, 5 பக்கமிருந்து 32 பேர் தாக்க வந்தாலும் சுத்தி அடிக்கறது, தீப்பந்தம், மான் கம்பு, சுருள் வாள் சுத்துறது, கத்திச் சண்டை போடுறது, டயர் மாதிரி வட்டமான பொருள் எரியும்போது சுத்துறதுனு எல்லா பயிற்சிகளும் அத்துப்படி. கண்ணைக் கட்டிவிட்டாலும், சுத்திச் சுத்தி சிலம்பாடுவேன்!'' என்று வியக்க வைக்கும் சந்தியா,
''என்னைப் பார்த்து, என் தங்கை சூர்யாவும் சிலம்பம் கத்துக்க ஆரம்பிச்சா...'' என்றபடியே அவரை அறிமுகப்படுத்தினார்.
''எங்களை 'சிலம்பம் சிஸ்டர்ஸ்’னுதான் எல்லாரும் கூப்பிடுவாங்க. அதைவிட சந்தோஷம், எங்களைப் பார்த்து இன்னும் நிறைய பேர் எங்க ஏரியாவுல சிலம்பம் கத்துக்கறாங்க. 2011-ம் வருஷத்துக்கான தமிழ்நாடு அளவிலான சிலம்பப் போட்டி நடந்துச்சு. அதுல 16 பேர் நேஷனல் லெவலுக்கு செலெக்ட் ஆகியிருக்கோம். நான், அக்கா உட்பட ஒன்பது பேர் பெண்கள்!'' என்று பெருமையுடன் சொல்லும் சூர்யா, ப்ளஸ் டூ
முடித்து... காலேஜ் அட்மிஷனுக்காக காத்திருக்கிறார்.
ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்தும், ஒரு பள்ளியிலுமாக பொன்னேரியில் சிலம்பம் வகுப்புகளை எடுத்து வருகிறார் சந்தியா. அவருக்கு உதவியாக இருக்கிறார் சூர்யா. ''பூஸ்ட், ஹார்லிக்ஸ், முட்டை, பால் இதெல்லாம் தர்ற தெம்பை, தொடர் பயிற்சிகள் மூலமாவே நம்ம உடம்புல ஏத்திக்கலாம். அதனாலதான் ரன்னிங், ஜம்பிங், கால் அசைவுகள்னு படிப்படியான பயிற்சி தந்து அவங்களை தயார்படுத்தறோம்'' என்று சொல்லும் இந்த சகோதரிகள் முன் வைக்கும் கோரிக்கைகள் -
''பழமையான, பாரம்பரியமான சிலம்பக் கலைக்கு புத்துயிர் ஊட்ட அரசாங்கம் உரிய முயற்சி எடுக்கணும். முக்கிய விளையாட்டுகள்ல ஒண்ணா அங்கீகரிச்சி, ஒலிம்பிக் விளையாட்டுகள்ல இதைச் சேர்க்கறதுக்கு இந்திய விளையாட்டுத்துறை மேம்பாட்டு ஆணையம் முயற்சிக்கணும்!''
நிறைவாக, ''பெண்கள் எல்லாருமே இந்தக் கலையோட அடிப்படை பாடத்தையாவது கத்துக்கறது அவசியம். இது தர்ற தற்காப்புக்காக மட்டுமில்ல... தன்னம்பிக்கைக்காகவும்!'' என்று உறுதியான குரலில் முடிக்கும் தங்கள் பெண்களைப் பார்த்து பூரிக்கிறார்கள் இல்லத்தரசியான அம்மா சுதாதேவியும், பழ வியாபாரியான அப்பா காதரும்!
- க.நாகப்பன்
படம்: அ.ரஞ்சித்