ஸ்பெஷல் 1
Published:Updated:

கல்லூரியில் ஸீட் வாங்கித் தந்த திருக்குறள்!

கல்லூரியில் ஸீட் வாங்கித் தந்த திருக்குறள்!

கல்லூரியில் ஸீட் வாங்கித் தந்த திருக்குறள்!

அது 'கோடை     எஃப்.எம்’-ன் 'குறளமுதம்’ லைவ் நிகழ்ச்சி. ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், நேயர்கள் தொலைபேசி வழியாக குறிப்பிட்டுக் கேட்கும் திருக்குறளை, பிழையின்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

திடீரென 'லைவ்’வில் வரும் அன்றைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,  ''ஓர் அரசு, எப்படி இருக்கணும்ங்கறதுக்கு குறள்ல ஏதும் சொல்லியிருக்காங்களா?'’ என்கிறார்.

''இருக்குங்கய்யா!'' என்று கூறி, ''இயற்றலும் ஈட்டலும்...'’ எனத் தொடங்கும் குறளைச் சொல்லி, நிதி அமைச்சரிடம் 'சபாஷ்!’ வாங்குகிறார் மதுரா. அமைச்சரை அன்று அசத்திய சிறுமி மதுரா, இன்று கல்லூரி மாணவி!

கரூர், வள்ளுவன் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் பி.ஏ., பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிக்கிறார்... கட்டணம் எதுவும் இன்றி! காரணம், திருக்குறள் கோட்டா (பார்க்க பெட்டிச் செய்தி)!

##~##

மொத்தம் 36 விதங்களில் திருக்குறள் முழுமையும் சொல்லி அசத்தும் மதுரா, குறிப்பிட்ட எழுத்தில், வார்த்தையில் தொடங்கும் அல்லது முடியும் குறள், குறிப்பிட்ட எண்ணுக்குரிய குறள், குறளை சொன்னால் அதற்குரிய எண், பறவை, மரம், விலங்குகள், பூக்கள் இவற்றில் தொடங்கும் குறள், தலைகீழ் வரிசையில் குறள் என... இவர் சொல்ல சொல்ல அசந்துதான் போகிறோம்.

திருக்குறள் மட்டுமல்ல... பேச்சு, கட்டுரைப் போட்டிகளையும் விட்டு வைப்பதில்லை. கரூரில் எந்த முக்கிய நிகழ்ச்சியென்றாலும் பேசுவதற்கு கட்டாயம் இருப்பார் மதுரா.

''கொடுமுடியில விவசாயக் குடும்பத்துல பிறந்த பெண் நான். எங்க குடும்பத்துல முதல் பட்டதாரி'' என்று எளிமையும் இனிமையுமாக தொடங்கியவர், ''விவசாயியான எங்க அப்பாவுக்கு தமிழ் மேல ஆர்வம் அதிகம். ஒரு எழுத்தாளரோட நினைவாதான் 'மதுரா’னு பேர் வெச்சார். நாலாவது படிக்கும்போதே 'திருக்குறள் செல்வி’னு பட்டம் வாங்கியிருக்கேன்.

ப்ளஸ் டூ-வுல 1,157 மார்க் எடுத்ததால, இன்ஜினீயரிங் ஸீட் ஈஸியா கிடைச்சுது. ஆனா, ஐ.ஏ.எஸ். ஆகறதுதான் லட்சியம்ங்கறதால 'பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்' படிக்கலாம்னு முடிவு செஞ்சேன். கரூர் வள்ளுவன் காலேஜோட விளம்பரத்துல, '1,330 திருக்குறளையும் ஒப்பிச்சா... மூணு வருஷமும் ஒரு பைசாகூட கட்டணம் கட்டத் தேவையில்லை’னு உற்சாகப்படுத்தியிருந்தாங்க. ஒப்பிச்சேன். இதோ... பைசா செலவில்லாம ஃபைனல் இயர் வந்துட்டேன். ஒரு ஆர்வத்துல நான் படிச்ச திருக்குறளே, இப்போ என்னைப் படிக்க வைக்குது!'' என்று பெருமைப்படுபவர்,

''ஐ.ஏ.எஸ். ஆனதுக்கு அப்புறம் குறள் நெறி தவறாம நிர்வாகம் செய்யணும்!''

- ஏராள நம்பிக்கையுடன் முடித்தார் மதுரா!
முயற்சி... திருவினை!

புண்ணியம்!

 

கல்லூரியில் ஸீட் வாங்கித் தந்த திருக்குறள்!

திருக்குறள் நேசரான செங்குட்டுவன், கரூரில் தான் நடத்திவரும் 'வள்ளுவன் ரெசிடென்ஸி'யில் எங்கு திரும்பினாலும் திருக்குறள் மயமாக மாற்றி வைத்திருக்கிறார். அதேபோலவே தான் நடத்தி வரும் வள்ளுவன் கல்லூரியின் ஒவ்வொரு வகுப்பறையிலும், திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கில விளக்கங்களோடு எழுதி வைத்திருக்கிறார்.

''நல்ல விஷயத்தை இளைய தலைமுறையினர்கிட்ட போய் சேர்க்கறதைவிட வேற புண்ணியம் என்ன இருக்கு? அதனாலதான், 1,330 குறள்களையும் சொல்றவங்க, கட்டணமில்லாமலே மூணு வருஷமும் படிக்கலாம்கற திட்டத்தை காலேஜ் ஆரம்பிச்சதிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வர்றேன். மொத்தமா சொன்னாலும் சரி... இல்ல முதல் வருஷம் 500, ரெண்டாவது வருஷம் 500, மூணாவது வருஷம் மீதியிருக்கற குறள்கள்னு சொன்னாலும் சரி... கட்டணம் இல்லாமலே படிக்கலாம்'' என்கிறார் செங்குட்டுவன் பெருமையாக!

 - க.ராஜீவ் காந்தி
படங்கள்: ந.வசந்தகுமார்