மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

ரிமோட் ரீட்டா, படங்கள்: ப.சரவணகுமார்

ஒரு ஃபேஷன்

ஷாலுவின் பொட்டீக்!

விஜய் டி.வி. 'காமெடியில் கலக்குவது எப்படி?’ நிகழ்ச்சியில்... கலக்கும் ஷாலு... ஒரு ஃபேஷன் டிசைனர்.

ஏர்ஹோஸ்டிங் படித்திருக்கும் இவர், கூடவே ஃபேஷன் டிசைனிங் கோர்ஸும் முடித்திருக்கிறார். விஷ§வல் மீடியாவில் கலக்குவதற்காக இதைக் கற்றுக்கொண்ட ஷாலு, இப்போது தோழி ஐஸ்வர்யாவுடன் இணைந்து... 'ஸரீ மேங்கோ' என்கிற பெயரில் 'பொட்டீக் ஷாப்' நடத்துகிறார்.

''ஃபீல்டுல இருந்துகொண்டே பொட்டீக் ஷாப் நடத்துவது... எனக்கு மட்டுமல்ல, மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்யும் வாய்ப்பை வரவழைத்துள்ளது. கடவுளுக்கு நன்றி சொல்வதற்கு முன்பாக... என் தோழிகளுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். என் தோழி, ஐஸ்வர்யாதானே இந்தக் கடையை முழுமையாக நடத்திச் செல்கிறார்!''

கேபிள் கலாட்டா!

மூழ்காத ஷிப்பே... ஃப்ரெண்ட்ஷிப்தான்!

அடப்பாவி’... அப்பாவி!

விகடன் டெலிவிஸ்டாஸின் 'தெய்வ மகள்' சீரியலில் (சன் டி.வி.) சிரிசிரி அட்ராக்ஷன்... 'எம்எல்எம்' மூர்த்தி (கணேஷ்). ஊரையே ஏமாத்துற இந்த மூர்த்தி, நெஜத்துல ஏமாந்த கதை தெரியுமா?

கேபிள் கலாட்டா!

''நிஜத்துல நான் ரொம்ப நல்லவங்க. உதாரணத்துக்கு... எங்க ஊர் மன்னார்குடி. அங்க போனா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து காசு வெச்சு வயக்காட்டுல சீட்டு விளையாடுவோம். ஒரு நாள் திருஞானம் மிஸ்ஸிங். லேட்டா வந்தவன், நாங்க விளையாட்ட ஆரம்பிச்சுட்ட கோவத்துல ஒரு ஓரமா ஒளிஞ்சு நின்னு, 'ஒன் நாட் த்ரீ, நீ அந்தப் பக்கம் போ... ஒன் நாட் எய்ட், நீ இந்த பக்கம் போ ’னு குரலை மாத்தி சவுண்டுவிட... 'துண்ட காணோம், துட்ட காணோம்'னு ஒட்டமெடுத்த நாங்க, ரெண்டு கிலோ மீட்டருக்கு அப்புறம்தான் திரும்பியே பார்த்தோம். வெறுத்துப் போய் திரும்பி வந்தா.. மொத்த காசையும் அள்ளி வெச்சுக்கிட்டு... கைகொட்டி சிரிக்கறான் திருஞானம்.''

ஹலோ டைரக்டர் சார்... இந்த 'அப்பாவி' கணேஷையா, இப்படி, 'அடப்பாவி'யா காட்டுறீங்க!

ஒரு கலெக்ஷன்

அட, பிளாட்ஃபார்ம் மால்!

ஆதித்யா சேனலில் 'ஜில்லுன்னு ஒரு கடி’யை தொகுத்து வழங்கும் ஐஸ்வர்யா  வீட்டுக்குப் போனால்... வீடு முழுக்க அக்ஸசரீஸ்தான். நிறைய கண்ணாடி வளையல்கள், ஹேண்ட் பேக், கீ செயின், வாட்ச்... இப்படி ஏகப் பட்ட கலெக்ஷன்ஸ். ஆதிகாலத்தில் பயன்படுத்திய நோக்கியா டபுள் ஒன் டபுள் ஜீரோ போன் தொடங்கி, லேட்டஸ்ட் ஐபோன் வரையிலும் இதில் அடக்கம்!

இதையெல்லாம் பார்த்தால்... 'ஏதாச்சும் ஸ்டோர் வெச்சுருக்கீங்களோ?' என்று கேட்காமல் இருக்கமாட்டீர்கள்!

''எல்லாமே நான் யூஸ் பண்றதுக்ககாக வாங்கினதுதான். பத்தாவது முடிச்ச கையோட வாங்க ஆரம்பிச்சவ... இன்னிவரைக்கும் வாங்கிட்டே இருக்கேன். 'உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவன், ரெகுலரா பழனிக்கு மொட்ட போட வேண்டியதுதான்'னு ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. ஆனா, எங்க வீட்ல எல்லாரும் 'மூணு பத்து... மூணு பத்து'னு கேலி பண்ணுவாங்க. நாமதான் 'லோ பட்ஜெட்'ல செம்ம டிரெண்டியா வாங்குறதுல கில்லியாச்சே!

கேபிள் கலாட்டா!

என் அக்கா வீடு புனேவுல இருக்கு. அங்க, நம்ம தி.நகர் ரங்கநாதன் தெரு மாதிரியே, 'லஷ்மி ரோடு'னு ஒரு தெரு. இதோ... ப்ளூ கலர்ல அழகா பெரிய பெரிய மணியோட இருக்கே... இது, அங்க வாங்கினதுதான். கடைக் காரர் 500 ரூபாய்னு சொன்னார். அம்பது ரூபாய்க்கு கேட்டு, கடைசியா 100 ரூபாய்க்கு வாங்கினேன். அக்கா, ரொம்ப ரெக்கமெண்ட் பண்ணதால... மீட்ட ருக்கு மேல பத்து ரூபாயைப் போட்டுக் கொடுத்தேன்னா பார்த்துக்கோ... நான் எவ்வளவு நல்லவவவவவனு!'' என்று சொல்லும் ஐஸுக்கு சென்னையின் ஃபேவரைட் மால்... 'பிளாட்ஃபார்ம் மால்!'

அட ஆமாங்க, அவரோட ஆல் டைம் ஃபேவரைட்டே பிளாட்ஃபார்ம் கடைங்க தான். வழியில் நரிக்குறவர்கள பார்த்தா... ஓடிப்போய் மடக்கி, அவங்ககிட்ட கலர் கலரா மணிகளை வாங்கறதும் ஆத்தா வோட ஹாபி!

''இன்னொரு விஷயம் ரீட்டா... ஹேண்ட் பேக், எனக்கு ரொம்ப சென்டிமென்ட். அது எவ்வளோதான் பிஞ்சு போனாலும், பீரோவுல ரொம்ப பத்திரமா எடுத்து வெச்சுருவேன்.''

இதப்பார்றா...!

கேபிள் கலாட்டா!

ஒரு பேட்டி

கல்யாணிக்கு கல்யாணம்!

''பொண்ணு, இப்பதான் குட்டிக் குழந்தையா... பிரபுதேவா கூட டான்ஸ் ஆடுன மாதிரி இருக்கு. அதுக்குள்ள கல்யாண வயசு வந்துடுச்சாம்...''

ஆச்சர்யத்தோட கல்யாணியை போய்ப் பார்த்தேன்.

''ஆமா ரீட்டா... அவர் பேரு ரோஹித். எங்கேஜ்மென்ட் முடிஞ்சுடுச்சு. பக்கா அரேஞ்சுடு மேரேஜ்தான். ஆனா, ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆனதால... லவ் மேரேஜ் மாதிரியே செம ஃபீல்!'' (ஹய்ய்ய்யோ!)

''சூப்பரு... சார் பத்தி ஒரு மினி பயோடேட்டா ப்ளீஸ்?''

''பேஸிக்கலி கேரளா. பெங்களூர்ல வீடு. இப்ப மும்பையில டாக்டர்.''

''அப்போ கல்யாணத்துக்கு அப்புறம், அமிதாப், அமீர்கான்னு பாலிவுட் பக்கம் காத்தடிக்குமோ!''

''அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் நடிக்கற 'தாயுமானவன்' சீரியலை முதல் ஆளா உக்காந்து பாக்கறது எங்க மதர்-இன்-லா வீட்லதான். அந்த அளவுக்கு எல்லாரும் எனக்கு சப்போர்ட். கல்யாணத்துக்கு அப்புறமும் நல்ல கேரக்டரா வந்தா... கண்டிப்பா நடிக்கலாம்தானே!''

''அதுசரி, 'தாயுமானவன்' சீரியல்ல உங்க கேரக்டர் லவ் ட்ராக்ல போயிட்டிருக்கே..''

''நீ என்ன ட்ரை பண்ணாலும், பத்த வெக்க முடியாது ரீட்டா. ஏன்னா, ரோஹித்துக்கும் எனக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. என்னோட சீரியல் ஸீன்களை முதல்ல அவர்கிட்டதான் சொல்லு வேன். ஸோ... நோ பிராப்ளம்!''

''சீரியல் கேரக்டர் மாதிரி, நிஜத்துலயும் நீங்க ஒரு நிருபரா இருந்தா..?''

''கண்டிப்பா பாரபட்சமே இல்லாம எல்லா விஷயத்தையும் நோண்டி எடுத்துடுவேன். பிரச்னை வந்தா, காப்பாத்தறதுக்குத்தான் சீனியர் நீ இருக்கியே ரீட்டா!''

அப்பிடி போடு!

வாசகிகள் விமர்சனம்                              ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா!

 150

மனிதநேயம் தேவை!

"பொதிகை டி.வி-யில் 'காரசாரம்’ நிகழ்ச்சியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பற்றிய விவாதம் ஒளிபரப்பானது. அந்த குழந்தைகளின் பெற்றோர் படும் கஷ்டத்தை அறிந்தபோது, மிகவும் பரிதாபமாக இருந்தது. உறவுகள் உள்பட யாரும் அத்தகைய குழந்தையை விரும்புவதில்லை. அந்த வீட்டில் பெண் கொடுப்பதற்குகூட யாரும் விரும்புவதில்லை. அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதுகூட கஷ்டம் என்பதெல்லாம் பெருங்கொடுமையாக இருக்கிறது. மனிதநேயம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது'' என்று வேதனையை வெளிப்படுத்துகிறார் வேளச்சேரியில் இருந்து ஆர்.ராஜலஷ்மி.

நல்லதையும் சொல்லுங்கள்!

"விஜய் டி.வி. 'நீயா... நானா?’ நிகழ்ச்சியில் பொழுதுபோக்கை மையப்படுத்தும் தலைப்புகளில் பேசுவதுதான் அதிகமாக இருக்கும். இதற்கு நடுவே, சமீபத்தில் 'பணவீக்கம்' என்ற தலைப்பில் ஒளிபரப்பான நிகழ்ச்சி... அருமை! ஆனால், அதை எத்தனை பேர் ரசித்திருப்பார்கள், புரிந்து கொண் டிருப்பார்கள் அல்லது சேனலை மாற்றி இருப்பார்கள் என்று தெரியவில்லை. என்றாலும், அவ்வப்போது இப்படிப்பட்ட தலைப்புகளை விவாதித்து, நல்ல விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்லத் தயங்கக்கூடாது'' என்று கோரிக்கை வைக்கிறார் திருமங்கலக்குடியில் இருந்து ரிபாத்துன்னிஷா தமீம்.

மதிப்புக்குரிய தாய்!

"சன் டி.வி. 'சூப்பர் குடும்பம்’ நிகழ்ச்சியில் சீரியல் நடிகர்கள் நடத்திக் காட்டிய ஒரு நிகழ்ச்சி... சிந்திக்க வைத்தது. மகள் சரியாக மார்க் வாங்காததால் அவளை அடிப்பதுடன், டியூஷனுக்கு அனுப்புகிறார் தந்தை. டியூஷன் வாத்தியார் சில்மிஷம் செய்ய, தன் தாயிடம் அழுதுகொண்டே சொல்கிறார் சிறுமி. பிறகு, ஒரு பெண்ணிடம் டியூஷனுக்கு அனுப்பி, நல்ல மதிப்பெண் பெற வைக்கிறார் தாய். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டைரக்டர் ராம், 'குழந்தை பள்ளி செல்லமாட்டேன் என்று அடம் பிடித்தால், ஏதோ பிரச்னை என்பதை புரிந்து, தீர்வு காண வேண்டும்' என்று அருமையான யோசனையையும் தந்தார்'' என்று பெருமிதப்படுகிறார் திருச்சியில் இருந்து விஜயா சீனிவாசன்.