எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை! பொன்.விமலா, படங்கள்: எம்.உசேன்புதிய பகுதி
##~## |
'புது வசந்தம்’ என்கிற பெயருடன், இரண்டு பெரிய கதவுகளுடன், ஒன்றரை கிரவுண்ட் இடத்திலிருக்கும் அந்த வீட்டுக்குள் நுழைந்தால்... முதலில் வரவேற்பு காட்டுவது, பலவித பசுமை வளைவுகள்தான். பாரிஜாதம், மனோரஞ்சிதம், மல்லிகை, முல்லை என பூத்துக் குலுங்கும் பூக்களின் வாசம் மூக்கைத் துளைக்க, மனதுக்குள் மகிழ்ச்சி பொங்குகிறது.
சென்னை, அசோக் நகரில் இருக்கும் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்... 'புது வசந்தம்' படம் மூலமாக தமிழ் திரையுலகில் புதிய பாதையைப் போட்ட இயக்குநர் விக்ரமன்!
பசுமையில் லயித்திருந்த நம்மை வரவேற்ற விக்ரமன், ''99-ம் வருஷம் இந்த வீட்டைக் கட்டினேன். இங்க வந்த பிறகுதான் எதிர்பாராத நிறைய சந்தோஷங்கள் என் வாழ்க்கையில நடந்துச்சு. 'கோகுலம்’, 'பூவே உனக்காக’னு நிறைய படங்கள் நான் டைரக்ட் பண்ணியிருந்தாலும், இங்க வந்த பிறகு வெளியான 'வானத்தைப்போல’ படம்தான் தேசிய விருது வாங்கி கொடுத்துச்சு. கலைமாமணி விருது, தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருது எல்லாமும் இங்க வந்த பிறகுதான்.
அன்பான மனைவி ஜெயப்பிரியா, சமர்த்துப் பையன் கனிஷ்கா விக்ரமன், செல்லப் பொண்ணு பூஜானு இந்த வீடு எப்பவும் எனக்கு ஒரு கோயில்...''
- அவருடைய கண்களில் தெறிக்கிறது, ஆனந்தம்.

''இங்க வரும்போது, கனிஷ்காவுக்கு நாலு வயசு. குட்டிப் பையன். பயங்கர துறுதுறுனு இருப்பான். படிக்கட்டுகளோட கைப்பிடி அதிக இடைவெளி இல்லாம... மார்பிள்ஸ் எட்ஜ் ஷார்ப்பா இல்லாமனு... வீட்டுல பல இடங்களையும் குழந்தைக்காகவே பாத்துப் பாத்து வடிவமைச்சோம். இப்போ பையனுக்கு 17 வயசாகுது. பொண்ணுக்கு 14 வயசாகுது. ஆனாலும், வீட்டுக்குள்ள அவங்க ஓடியாடி விளையாடின தடங்கள இன்னும் மறக்கல'' என்று 'ஃப்ளாஷ்பேக்'கினார் விக்ரமன்.
தொடர்ந்த ஜெயப்பிரியா, ''எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்... தோட்டம், பூஜையறை. வீடு கட்ட ஆரம்பிச்சப்பவே தோட்டத்துக்கான விதையையும் போட ஆரம்பிச்சுட்டேன். சொன்னா நம்பமாட்டீங்க... வெறும் பத்து ரூபாய்க்கு வாங்கிப் போட்ட விதைகள்தான்... இவ்வளவு பெரிய தோட்டமா மாறியிருக்கு. வீட்டுக்குத் தேவையான காய்களை இதுலயே பறிச்சுக்குறோம். பூஜைக்கான பூவெல்லாமும் இங்க இருந்துதான்'' எனச் சொல்லும் அம்மாவை இடைமறிக்கும் கனிஷ்கா,
''பூஜை பண்றப்ப அம்மா வீணை வாசிப்பாங்க. அதைக் கேட்டு நாங்க எல்லாருமே மெய்மறந்துடுவோம். சாமி கும்பிட்ட பிறகு அமைதி நிலவும். அதுக்குப் பிறகு எல்லாரோட மைண்ட்லயும் ஒரு பாட்டு ஓடும். அது என்ன பாட்டு தெரியுமா... 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை... எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை' என்று கனிஷ்கா பாட... மொத்த குடும்பமும் கோரஸ்!

''எங்களுக்குக் கூட்டாஞ்சோறு சமையல் ரொம்ப பிடிக்கும். சீரகம், வெங்காயம், தேங்காய்னு எல்லாத்தையுமே அம்மியில அரைச்சு கலந்து, முருங்கைக்காய் சேர்த்து அம்மா செய்யும் கூட்டாஞ்சோறு சூப்பரா இருக்கும்'' சொல்லும்போதே நாக்கால் இதழ்களை நனைத்துக் கொண்டார் பூஜா.
''டைனிங் ரூம் ஷோகேஸ்லதான் என்னோட ஃபேவரைட் வெசல்ஸ் எல்லாத்தையும் அடுக்கி வெச்சுருக்கேன்'' என்று ஜெயப்பிரியா சொல்ல...
''வரவேற்பறையில பாரம்பரியமான ஊஞ்சல் இருக்கு. இதுல நாங்க யாரும் உக்கார்ந்து ஆடுறதில்ல. என் மனைவி கலெக்ட் பண்ணின அரிய சிலைகளைத்தான் ஊஞ்சல்ல வெச்சுருக்கோம். இந்த வரவேற்பு மங்கை சிலையை வீட்டுக்கு வர்றவங்க எல்லாரும் ஆச்சர்யமா பாத்துட்டு இருப்பாங்க. பூஜை ரூம் பக்கத்துல இருக்குற இந்த ரெண்டு யானை சிலைகளும் ஒரு பிரமாண்டத்தை கொடுக்கும்.

வரவேற்பறைக்கு அடுத்ததா நான் ரசிக்குற இடம்... டிராயிங் ரூம். வர்ற கெஸ்ட் எல்லாரையும் இங்கதான் உபசரிப்போம். ரெண்டு பக்கமும் மரத்துல ஷோகேஸ் டிசைன் பண்ணி இருக்கோம். அடுத்து விண்டோ கிளாஸ். இது வெயில் பட்டாலும் சரி, நைட்ல லைட் எரியும்போதும் சரி... பயங்கர கலர்ஃபுல்லா ஜொலிக்கும்.
தரைக்கு இட்டாலியன் மார்பிள்ஸ். ஷைனிங்காவும் இருக்கும். அதேநேரத்துல கிராண்ட் லுக் கொடுக்கும். இதோட மிச்சம் மீதி துண்டுகளை வேஸ்ட் பண்ணாம, கார் பார்க்கிங்ல போட்டிருக்கோம். பாக்கறதுக்கு சிவப்பு கம்பளம் விரிச்ச மாதிரி அவ்வளவு அழகா இருக்கும்'' என்றபடியே மாடிக்கு அழைத்துச் சென்ற விக்ரமன்,
''என்னோட ஃபேவரைட் ஹோம் தியேட்டர்... ஜாலி மூடுக்கு மாறணும்னு நினைக்கிறபோது இங்க செட்டில் ஆகிடுவேன். எனக்கே எனக்குனு மினி லைப்ரரி இங்க வெச்சுருக்கேன். அம்புலி மாமா கதை புக்குல ஆரம்பிச்சு... பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், லேட்டஸ்ட்டா விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கற புக்ஸ் வரைக்கும் ஏகப்பட்ட கலெக்ஷன்ஸ்'' என்றபடியே திரும்பியவர்,
''அட, இத மறந்துட்டேனே... இது, என் மனைவியோட அழகின் ரகசியம். அட ஆமாங்க, இந்த ஆளுயர கண்ணாடிதான் அவங்களுக்கு ரொம்ப ஃபேவரைட். வித்தி யாசமா இருக்கணும்னு அழகா, கொடியில பூக்கள் பூத்து தொங்குற மாதிரி டிரெஸ்ஸிங் டேபிளை டிசைன் பண்ணி இருக்காங்க'' என்றவர், பிரமாண்ட தஞ்சாவூர் பெயின்ட் டிங் ஒன்றின் முன்பாக நின்றார்.
''சூப்பரா இருக்குல்ல....'' என்று நாம் சொல்ல... அருகில் நின்றிருந்த ஜெயப்பிரியா சிலிர்க்க...
''இதை வரைஞ்ச கைகள்... என் அன்பு மனைவியோடது. ஆமாங்க... அவங்களுக்கு தஞ்சாவூர் பெயின்ட்டிங் சூப்பரா வரும். அது மட்டுமில்ல... அவங்க குச்சிப்புடி டான்ஸரும்கூட. அதனால, எங்க வீடு எப்பவும் பாட்டு, டான்ஸுனு களை கட்டியிருக்கும்'' என்றபோது விக்ரமனின் விழிகளில் ஏக பெருமை!
அழகு ப்ளஸ் ஆனந்தம் இருந்தால்... வீடே சொர்க்கம்தானே!
ஆனந்தம் விளையாடும்...