மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

ரிமோட் ரீட்டா, படம்: பொன்.காசிராஜன்

##~##

 ஒரு ஜோக்

ஃபீலிங் மயில்!  

ந்த ஒஃபீலியா பொண்ணு, ரேடியோல இருந்து எல்லாரையும் கலாய்ச்சது பத்தாதுனு, இப்போ டி.வி-யிலயும் கலாய்க்க ஆரம்பிச்சுடுச்சு.

''என்னங்க மேடம் ஒருத்தரை விட்டு வெக்கறது இல்ல போல''னு ஆரம்பிச்சா...

''யூ டூ ரீட்டா... நெஜம்மா சொல்றேன் ரியல் லைஃப்ல நான் சரியான அருக்காணி. வர்றவங்க போறவங்கதான் என்னை கலாய்ப்பாங்க. அவ்ளோ ஏன்... என்னோட வீட்டுக்காரரே பயங்கரமா கலாய்ப்பாரு. எங்க ஃப்ளாட்ல டெய்லி காலையில குப்பை கலெக்ட் பண்றதுக்கு ஆள் வருவாங்க. நேத்திக்கு காலைல கதவை தட்டி 'மேடம் குப்பை’னு குரல் கொடுத்ததும், என் ஹஸ்பண்ட் என்னை பாத்து, 'அதான் அவரே சொல்லிட்டாரு இல்ல... 'மேடம் குப்பை'னு கௌம்பி போ...போ’னு தொரத்துறாரு. என்னத்த சொல்றது!

இந்த விஷயத்துல என்னோட ரசிகர்களை அடிச்சுக்கவே முடியாது. ஒரு நாள், 'சிவனே'னு போயிட்டிருந்த என்னை கூப்பிட்டு, 'ஹலோ.... ஒஃபீலியா மேடம், உங்க புரோகிராம் ரெகுலரா கேப்பேன். காமெடி சூப்பர், அது சூப்பர் இது சூப்பர்'னு சொல்லி, கடைசியில 'உங்க குரல் மட்டும் ஏன் தார் ரோட்டுல... ரோடு ரோலர் போறப்ப வர்ற சவுண்ட் மாதிரியே இருக்கு’னு கலாய்ச்சார் ஒருத்தர்.

வந்த கடுப்புல... 'ஆமா சார்... தினமும் காலையில கால் கிலோ கூழாங்கல், அரை கிலோ கருங்கல் ரெண்டையும் தண்ணி சேர்த்து மிக்ஸியில அடிச்சு குடிச்சிடுவேன்'னு கூலா பதில் சொல்லிட்டு வந்துட்டேன். என்ன பண்றது... மயிலுக்கு குரல் நல்லா இல்லைனாலும், அழகா அம்சமா இருக்குல்ல..!''

கொஞ்சம் விட்டா நாமளும் சிக்கிடுவோம்னு விட்டேன் ஜூட்!

கேபிள் கலாட்டா!

ஒரு பிஸினஸ்

கலக்கும் காயத்ரி!

முதன்முதல்ல 'இமயம் டி.வி'-யில காலடி வெச்சு. அப்படியே கேப்டன், விஜய், ராஜ்னு... பல டி.வி-க்கள்லயும் காம்ப்பயரிங், சீரியல்... இதுதவிர விளம்பரங்கள், புதுசா மூணு சினிமானு அடிச்சு தூள் கௌப்பும் காயத்ரி, இன்னொரு விஷயத்துலயும் கலக்கிட்டிருக்காங்கனு கேள்விப்பட்டேன். என்னனு தெரிஞ்சுக்கலாமேனு நேர்லயே போயிட்டேன்.

''ஆமா ரீட்டா. ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திட்டு இருக்கேன் (பார்றா..!). நான் மதுரைக்கார பொண்ணு. காலேஜ்ல படிக்கத்தான் சென்னைக்கு வந்தேன். சாதாரணமாவே நாம ரொம்ப 'லொட லொட'. சும்மா 'லொட லொட'க்காம, அதையே சம்பாதிக்கற ஐடியாவா மாத்திக்கிட்டேன். ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போதே பார்ட் டைம்ல கார்ப்பரேட் ஈவன்ட்ஸை தொகுத்து வழங்க ஆரம்பிச்சேன். பிறகுதான் டி.வி. இப்ப ஃபுல் ஃபார்ம்ல போயிட்டிருக்கேன்... எப்பூடீ..!'’னு காலரைத் தூக்கி விட்ட காயத்ரி,

''ஆரம்பத்துல மீடியா வேணாம்னு வீட்டுல சொன்னதால, கார்ப்பரேட் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்தேன். அங்க எனக்கு புரொமோஷன் கொடுத்து... கொல்கத்தாவுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணினாங்க. அதுக்கும் வீட்ல ரெட் சிக்னல். சரினு ஈவன்ட் மேனேஜ்மென்ட் விஷயத்தை கையில எடுத்தேன். இந்த முறை நிகழ்ச்சி தொகுப்பாளரா இல்லாம, 'லெட்ஸ் டூ ஈவென்ட்ஸ்’ அப்படிங்கற கம்பெனிக்கு ஓனரா புரொமோஷன். 'பொண்ணு ரொம்ப டேலண்டா இருக்கா’னு திரும்பவும் டி.வி-யில தலை காட்ட வீட்டுல க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க''னு கண்ணடிச்சார் காயத்ரி.

''அது சரி, ரெண்டுமே பிஸியான ஃபீல்டாச்சே எப்படி சமாளிக்கறே?''னு கேட்டா...

''ஒரு வேலையை ஆரம்பிக்கறதுக்கு முன்ன... இது முடியுமா முடியாதானு முடிவு பண்ணிடுவேன் (முடியலம்மா முடியல..!). லேட்டஸ்டா, கிரீன் டிரெண்ட்ஸ் பியூட்டி பார்லரோட புது ஷோரூம் திறப்பு விழாவுக்கு சிம்ரன்... அம்பத்தூர்ல ஒரு நகைக் கடை திறப்பு விழாவுக்கு சினேகானு ரொம்ப கிராண்டா ஈவன்ட்ஸை நடத்திக் கொடுத்துருக்கேன்'' ஆரம்பிச்சு நிறுத்தாம பேசிட்டே போகுது பொண்ணு.

''பத்து ரூபாய்க்கு பேசச்சொன்னா... பொண்ணு பத்தாயிரம் ரூபாக்கு பேசித் தீர்க்குதே...''னு நான் சிணுங்க...

''ஆமா ரீட்டா... அதானே என்னோட சக்சஸ் ஃபார்முலா..!''

ஆத்தா... கலக்குங்க!

ஒரு கேள்வி

யார் இந்த பீஷ்மர்?

''யாருப்பா இந்த பீஷ்மர்..? சும்மா கலக்குறாரு!''னு நாலா பக்கமிருந்தும் கமென்ட்ஸ் மழை.

விஜய் டி.வி-யில திங்கள் முதல் வெள்ளி வரை இரவுல ஒளிபரப்பாகற மஹாபாரதத்துல வர்ற பீஷ்மரைப் பத்தித்தான் இந்தப் பேச்சு.

விடுவாளா இந்த ரீட்டா... சாரைப் பத்தி கொஞ்சம் போல விசாரிச்சேன். அடிப்படையில அவர் ஒரு பெரிய மாடல். பேரு ஆரவ் சௌத்ரி. ஹாலிவுட் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிப்பை முடிச்சுட்டு, இந்திப் படங்கள்ல நடிச்சுட்டிருக்கார். மெகா ஹிட் 'தூம்' படத்தில் வரும் நான்கு திருடர்கள்ல... சாரும் ஒருத்தர். பொறந்தது ஜெய்ப்பூர்ல. நடிப்பு மேல இருக்குற ஆர்வத்தால... தியேட்டர் ஆர்ட்டிஸ்டா வாழ்க்கையை ஆரம்பிச்சுருக்கார். 99-ம் வருஷத்துல 'மிஸ்டர் இண்டியா' டைட்டில் வின்னர். ராம்ப் வாக் மாடல், ஓல்டு ஸ்பைஸ், விமல், ஸோடியாக்னு நிறைய விளம்பரங்கள்ல பட்டைய கௌப்பியிருக்கார். இப்ப... சீரியல், சினிமானு தூள் கிளப்பறார்!

கேபிள் கலாட்டா!

''இதிகாச கதாபாத்திரம்... ஏகப்பட்ட வெயிட்டான டிரெஸ், ஆயுதம்னு இம்சையா இருக்குமே..?''

''முதலில் பீஷ்மர் வேஷத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இதுவரைக்கும் மஹாபாரதத்தை படித்ததுகூட இல்லை. தூர்தர்ஷனில் தொடராக வந்தபோது சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொருநாள் ஷூட்டிங் சமயத்திலும், பீஷ்மராக மாற்றுவதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகும். தலையில் வைத்திருக்கும் கிரீடம் மட்டுமே 10 கிலோ. கையிலிருக்கும் ஆயுதம், உடைகள் என்று பத்து, பதினைந்து கிலோவுக்கு மேல் வரும். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஒரு தடவை... ஷூட்டிங்கின்போது, அடிபட்டு தோல் உரிந்துவிட்டது. பாதம் இரண்டும் வீங்கிவிட்டது. ஆனால், ஷூட்டிங் நடந்தே ஆகவேண்டிய கட்டாயம். டாக்டரிடம் கூட போகாமல், ஷாட் இடைவெளிகளில் ரெஸ்ட் எடுத்து சமாளித்து முடித்தேன்.

ஒருமுறை ரதத்தின் சக்கரம் கழன்றுவிட்டது. குதிரையோ... வேக மாக ஓடுகிறது. உயிர் தப்பிய தருணம் அது. இப்படி எதிர்பாராத விஷயங்களை சமாளிப்பதுதான்... பெரிய கஷ்டமே. ஆனால், பீஷ்மர் கதாபாத்திரத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பு... எல்லா கஷ்டத்தையும் மறக்கடித்துவிடுகிறது!''  

நோ பெயின்... நோ கெயின்.

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா!

 150

விழிப்பு உணர்வு பெறுங்கள்!

''ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்னைகளை அலசுவதோடு... நல்ல தீர்வும் தருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். கடந்த 9-ம்தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இறுதியில் நல்லதொரு கருத்தை சொன்னார். அதாவது, 'ஆண்கள் எல்லா பிரச்னைகளையும் உடனே கடந்துவிடுகிறார்கள்... பெண்களோ, மனதளவில் குழப்பிக்கொண்டு மனஉளைச்சலுக்கு ஆளாகி, சிறிய பிரச்னையைக்கூட பெரிதாக்கி விடுகிறார்கள்' என்றார். அதுவும் உண்மைதானே!? பெண்களே... விழிப்பு உணர்வு பெறுங்கள்'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் கோவிலாம்பூண்டியில் இருந்து பி.கவிதா.

மனது லேசாகிறது!

''மெகா டி.வி. மாலையில் ஒளிபரப்பும் 'தெய்வ ராகம்' நிகழ்ச்சி, மனதை லேசாக்கி, தெய்விக குணத்தை வளர்க்கிறது. வீட்டில் ஊதுபத்தி வாசனையோடு 'தெய்வ ராகம்' தரும் பாடல்கள், வீட்டையும் மனதையும் தூய்மைப்படுத்தி செழிக்க வைப்பதுபோல இனிக்கிறது'' என்று உருகுகிறார் சீர்காழியில் இருந்து சாய் ஸாத்விகா.

திருநங்கைக்கு மரியாதை!

''சன் டி.வி. 'உதிரிப்பூக்கள்' சமீபத்தில் முடிவடைந்தது. 'திருநங்கைகள்' என்கிற பெயரில் நடிகர், நடிகைகளேதான் வேடமிட்டு நடிப்பார்கள். அதீத நடிப்பை வெளிப்படுத்துவதோடு... திருநங்கைகளை கேவலப்படுத்தும் வகையிலும்தான் பெரும்பாலும் அவர்களின் நடிப்பு இருக்கும். ஆனால், இந்தத் தொடரில் நிஜ திருநங்கைகளையே நடிக்க வைத்திருந்தனர். கதாநாயகிக்கு உதவுபவர்களாகவும், மனிதநேயமிக்கவர்களாகவும் திருநங்கைகளைக் காட்டியிருந்தது... பாராட்டத்தக்கது'' என்று போற்றுகிறார் ஆலந்தூரில் இருந்து ஜே.சி.ஜெரினாகாந்த்.