மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆனந்தம் விளையாடும் வீடு! - 3

தென்றலாக நீ வருவாயா? ஜன்னலாகிறேன்..! பொன்.விமலா, படங்கள்ள் எம்.உசேன்

##~##

   ''சென்னை, நெசப்பாக்கத்திலிருக்கும் அந்தத் தெருவின் அழகானதொரு வீட்டின் வாயில் சுவரில்... 'வித்தக கவிஞர் பா.விஜய்’ என்ற எழுத்துக்கள் கிரானைட் கல்லில் மின்னுகின்றன. உள்ளே... தன் குட்டிக் குழந்தைகளுடன், தானும் ஒரு குழந்தையாகி விளையாடிக் கொண்டிருந்தார்... விஜய். செம ஜாலி மூடில் நம்மை வரவேற்றவர்... அதே குதூகலத்துடன் பேச ஆரம்பித்தார்.

''2005-ம் வருஷம் 'வித்தக கவிஞர் விருது' கொடுத்தார் கலைஞர். அடுத்ததா, 'ஒவ்வொரு பூக்களுமே’ பாடலுக்காக தேசிய விருது கிடைச்சுது. இந்த இனிய நிகழ்வுகளுக்கு அப்புறம்தான், சொந்த வீடு கட்டணும்ங்கிற கனவே வந்துச்சு. 4 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பில் வீட்டைக் கட்ட ஆரம்பிச்சோம். செங்கல், மணல், மரம், வேலையாள்னு எல்லாமே அரியலூர் பக்கத்துல இருக்கற சொந்த கிராமமான உட்கோட்டை பகுதியில இருந்துதான் வரவழைச்சோம்.

ஆனந்தம் விளையாடும் வீடு!  - 3

2007-ம் வருஷமே இங்க குடிவந்துட்டோம். ஆனா, மர வேலைப்பாடுகளெல்லாம் முடியறதுக்கு கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆகிடுச்சு. சும்மாவா... வீடு முழுக்க தேக்கு மரத்துல இல்ல இழைச்சுருக்கோம்! நூறு வருஷம் பழமையான மரங்களா தேடிப் பிடிச்சு வாங்கினோம். மரவேலைகள் மொத்தமுமே எங்க ஊர் ஆசாரியோட கைவண்ணம்தான்'' என்று பெருமையோடு சொன்ன விஜய்,

''நிலம் வாங்கினது மட்டும்தான் என்னோட வேலை. அஸ்திவாரம் போட ஆரம்பிச்சதிலிருந்து, புதுமனைப் புகுவிழா வரைக்கும் அப்பாதான் பார்த்துக்கிட்டார். அவர்கிட்ட பேசுங்க'' என்று அப்பா பாலகிருஷ்ணனை அறிமுகப்படுத்தினார்.

ஆனந்தம் விளையாடும் வீடு!  - 3

''மரவேலைகளுக்காக கிட்டத்தட்ட மூணு லாரி அளவுக்கு மரம் கொண்டு வந்தோம். ஒரு துண்டுகூட மிச்சமில்ல. பாரம்பரியமா தொழில் பண்ற எங்க ஊர் ஆசாரியோட சிறப்பே, சிறு அளவுலகூட மரத்தை வீணடிக்காததுதான். மர வேலைப்பாடுகள்லயே ரொம்ப முக்கியமானது நிலைக்கதவு. 5 அடி, ஓரங்குல அகலம், ஏழரை அடி உயரத்துல இதை செய்துருக்கோம்.  வாசற்கால் தேக்குல இருக்கக் கூடாதுனு பூவரசு மரத்தால செஞ்சோம். மீன், குபேரரின் அடையாளம். அதைத்தான் கதவுல செதுக்கியிருக்கோம். ஹால்ல இருக்குற அலமாரிகள் மொத்தமும் என் மனைவிக்கானது'' என்றவாறு, மனைவி சரஸ்வதி பக்கம் கைநீட்டினார் பாலகிருஷ்ணன்.

''விஜய் சின்ன வயசுல இருந்தே ரொம்ப சாதுவான பையன். இன்னிவரைக்கும் எங்களை அன்பா கவனிச்சுக்கிறான். ஒவ்வொரு தரமும் பரிசு வாங்கிட்டு வரும்போது, அதை துடைச்சி கவர்ல சுத்தி ஷோ கேஸ்ல அடுக்கி வெச்சுருவேன். ஒரு கட்டத்துல நிறைய பரிசுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பிச்சுட்டான். அதனால, புது வீடு கட்டினா... கண்டிப்பா ஷோகேஸ் பெரிசா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கேத்த மாதிரியே இந்த அழகான ஷோ கேஸை வடிவமைச்சுருக்கோம். இப்ப கண்ணுக்கு அழகா ஜொலிக்கிற இந்த மெடல்களும் அவார்டுகளும்தான் விஜய், எங்களுக்கு கொடுத்திருக்கிற நிஜமான பொக்கிஷம். மகன் கட்டின வீட்டில், பேரக் குழந்தைகளோட ஆனந்தமா வாழற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்!'' கண்களில் பெருமிதம் பொங்கப் பேசினார் சரஸ்வதி.

தொடர்ந்த விஜய்யின் மனைவி லேனா, ''காலையில எழுந்து குளிச்சு, தெருவுல கோலம் போட்டு, பூஜை அறைக்கு வந்து விளக்கேத்தின பிறகுதான் மத்த வேலைகளையே ஆரம்பிப்பேன். விஷ்வாவுக்கு 9 வயசு. விஷ்னாவுக்கு 5 வயசு. ரெண்டு பேருமே வாலு பசங்க. வீட்ல இவங்க அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை. இவங்க விளையாடுறதுக்காகவே வீட்டோட முதல் தளத்தில் கிரானைட்டுக்கு மேல் ஸ்பான்ஞ்ச் வெச்சு, அதுக்கு மேல ரெக்ஸின் ஒட்டி தரையை மெத்தைப் போல வடிவமைச்சுருக்கோம். கட்டிப் பிடிச்சு உருண்டாலும் தரையில விழுந்தாலும் அடிபடாது.

பசங்களோட ஃபேவரைட் மீன்தொட்டியை வீட்டுக்குள் நுழையும்போதே தெரியற மாதிரி வெச்சுருக்கோம். இதுக்குப் பின்னால ஒரு கதையே இருக்கு. மொதல்ல ரெண்டு நாய்க்குட்டி வளத்தோம். ரெண்டையும் ஃப்ரெண்ட்ஸ் எடுத்துட்டுப் போயிட்டாங்க. அடுத்து கோழி குஞ்சு வளர்த்தோம். அதுங்க எங்கயோ பறந்துடுச்சு. முயல் வளத்தோம். அதுங்களுக்கு வெயில் தாங்க முடியல. ஊர்ல கொண்டு போய் விட்டுட்டோம். கடைசியா ஒரு பஞ்சவர்ண கிளி, தானாவே வந்துச்சு. வந்த வேகத்துலயே போயிடுச்சு. இதுக்குப் பிறகு வாங்கினதுதான் மீன்தொட்டி. இந்த மீனுங்கதான்... பசங்களுக்கு இப்ப ஃப்ரெண்ட்ஸ். செம ஜாலியா விளையாடிட்டு இருக்காங்க'' என்று மகன்களின் மகிழ்ச்சியில் தான் ஆனந்தம் பொங்கினார் லேனா.

ஆனந்தம் விளையாடும் வீடு!  - 3

இதையெல்லாம் ரசித்தபடியே கிச்சனுக்கு அழைத்துச் சென்ற விஜய், ''என் மனைவி சமையல்ல கில்லாடி. அதுவும் அசைவம்னா அசத்தலோ... அசத்தல்தான்! ஆனா, என் மனைவிக்கு நான் சுட்டுத்தர்ற நெய் ரோஸ்ட்தான் ரொம்ப பிடிக்கும்'' என்றபடியே தோசையை வார்த்துத் தர, வெட்கச் சிரிப்புடன் லேனா சாப்பிட, சிரிப்பொலியில் குலுங்கியது... சமையலறை.

''வாய்க்கு ருசியான சமையலை தினமும் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுட்டே இருந்தா என்னவாகும்? அதுக்காகத்தான் மொட்டை மாடியில, மல்டி ஸ்பெஷல் ஜிம். உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லவா... நான் இப்ப ஒரு படத்துல நடிச்சுட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் அந்த படம் ரிலீஸ் ஆகப்போகுது. அதுக்காகவே தினமும் காலையில 7 மணியானா போதும்... 'ஜிம்’முக்கு ஓடோடி வந்துடுவேன்'' அழகாக வொர்க் அவுட் செய்து கொண்டே போஸ் கொடுக்கிறார் விஜய். திடீரென வீட்டுக்கு வருபவர்கள், 'நீங்க விஜய்யோட தம்பியா?' என்று கேட்டு ஏமாறவும்கூடும்!

''எல்லாத்துக்கும் மேல வீட்ல ஒரு முக்கியமான இடம் இருக்கு. அது என்னோட எழுத்தறை. ஆயிரம் புத்தகங்களுக்கு மேல வெச்சுருக்கேன். இந்த வீட்டு புதுமனை புகு விழாவுக்கு என் குருநாதர் வாலி வந்திருந்தார். அவர், இந்த அறையில் உட்கார்ந்து எழுதிக் கொடுத்து பிள்ளையார்சுழி போட்ட பிறகு தான் நான் எழுத ஆரம்பிச்சேன். பாக்கியராஜ் சார் வந்து வாழ்த்தினதும் மறக்கமுடியாத நிகழ்வு. இப்படி இந்த வீட்டுல நிறைய சந்தோஷமான நிகழ்வுகள் நடந்திருக்கு'' என மலரும் நினைவுகளுக்குள் புகுந்த விஜய், தன் வீடு பற்றி ஸ்பெஷலாக நம்மிடம் வாசித்த கவிதை -

''எங்கள் வீடு
குட்டியாய் ஒரு சொர்க்கம் - இங்கு
இன்பங்கள் மட்டுமே
எட்டு திசைகளாய் நிற்கும்!
கற்களால்
கட்டப்பட்டதல்ல எமது இல்லம்
எங்களின்
கனவுகளால் ஒட்டப்பட்டது!''

ஆனந்தம் விளையாடும்...