அன்பைக் கொட்டும் பெற்றோர்... அனலைக் கக்கும் தங்கை!
##~## |
'நமக்காக யாருமே இல்லையே...’ என்று, எப்போதாவது உள்ளுக்குள் உடைந்ததுண்டா..? 'ஆம்’ என்றால், 'அந்த நிமிடம் எவ்வளவு வேதனையானது’ என்பதை உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அதை தினம் தினம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அபாக்கியவதி நான்.
பிறந்த அடுத்த நிமிடமே, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டாள் என் தாய். எப்படியோ... நல்லவர் ஒருவர் கண்ணில்பட்டு, அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து கொண்டிருந்த என்னை, ஐந்து வயதில் தத்தெடுத்தது குழந்தையில்லா ஒரு தம்பதி. நான் வந்த நேரமோ என்னவோ... என் வளர்ப்புத் தாய்க்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்கையாகக் கருதி அளவில்லா அன்பை பொழிய ஆரம்பித்தேன். போட்டி போட்டு பெரியவளானோம்!
நான் கல்லூரியில் சேர்ந்த காலகட்டத்தில்... அந்த பூகம்பம் வெடித்தது. 'நான் அனாதை’ என்பதை யார் மூலமாகவோ அறிந்துகொண்ட தங்கை, அன்றிலிருந்து அந்நியமாகப் பார்க்க ஆரம்பித்தாள். வெறுப்பை, நெருப்பாக உமிழத் தொடங்கினாள். அவளுடைய பார்வை ஊசியாகக் குத்த... என்னால் நிம்மதியாக படிக்கக்கூட முடியவில்லை. வீட்டிலும் சொல்ல முடியவில்லை. 'பரிதாபமாகப் பார்ப்பார்களோ’ என்கிற பயத்தில் தோழிகளிடமும் பகிர முடியவில்லை.
'நான் என்ன தவறு செய்தேன்... என்னை ஏன் குப்பைத் தொட்டியில் வீசினாள் என் தாய்?’ என்ற புலம்பல்களுடன்தான் பெரும்பாலான இரவுகள் தற்போது கரைகின்றன. 'வீட்டைவிட்டு வெளியேறலாம்’ என்று நினைக்கும்போதெல்லாம், 'தத்தெடுத்து, அன்பு காட்டி வளர்த்தெடுத்த அப்பா, அம்மாவை உதறிவிட்டுப் போகிறாயே...' என்று மனசாட்சி தடுத்து நிறுத்துகிறது.

'சொத்துக்காகவோ, சுயநலத்துக்காகவோ நான் இங்க இருக்கல. நீயே எல்லா சொத்தையும் எடுத்துக்கோ. எனக்கு உறவுனு சொல்ல இந்த உலகத்துல உங்களை விட்டா வேற யாரும் இல்ல. உறவா மட்டும் நீங்க இருந்தா போதும்’ என்று வாய்விட்டு அவளிடம் ஒரு நாள் கதறியும் விட்டேன். அப்படியும் அவளுக்கு என் மீது இரக்கம் எழவில்லை.
அனலில் இட்ட புழுவாகத் துடித்துக் கொண்டிருக்கும் நான், இனி என்ன செய்ய வேண்டும் என்பதை தோழிகளாகிய நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 315ன் சுருக்கம்
''மாற்றுத்திறனாளியைக் காதலித்து, எதிர்ப்புகளை மீறி கைபிடித்தேன். கவலைகளை விரட்டி, எங்கள் முகத்தில் புன்னகையைத் தவழவிட மகன் பிறந்தான். யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல், கிடைக்கும் வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பம் நடத்தினேன். ஆனால், மஞ்சள் காமாலையால் கணவர் இறந்துபோக உலகமே சூன்யமானது. வாழ்க்கை தேவைக்காக பனியன் கம்பெனி வேலையில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கம்பெனி மேலதிகாரி, என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார். 'இனி குழந்தைதான் எல்லாமே' என்று இருக்கும் நான்... இடைச்செருகலாக வந்திருக்கும் இவரை ஏற்பதா... வேண்டாமா?''
வாசகிகள் ரியாக்ஷன் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

100
ஆலோசித்து முடிவெடு!
'உன் மேலதிகாரி நல்லவர்தானா... குழந்தையோடு உன்னை ஏற்றுக் கொள்வாரா?’ என்பது போன்ற கேள்விகளுக்கு முதலில் பதில் தேவை. இதற்காக அவருடன் பேசி, அவருடைய மனநிலையை உன் பெற்றோர் அறிந்து கொள்வதுதான் மிகமுக்கியம். அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே மேற்கொண்டு முன்னேறு. நீயாக எந்த முடிவும் எடுக்க முயற்சிக்காதே. எல்லாம் நல்லபடியாக முடிய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

- பிரபா டாக்கர், ஹைதராபாத்
தைரியம் தேவை!
ஒரு மாற்றுத்திறனாளியைக் காதலித்து மணந்துகொண்டு, சுயமாக சம்பாதித்து குடும்பத்தை நகர்த்தியபோது இருந்த தைரியம்... உனக்கு கடைசி வரை அவசியம். இப்போது உனக்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவால்... குழந்தையை வளர்த்து ஆளாக்குவதுதான். காதலித்து கைபிடித்தபோது உன்னைப் பார்த்து சிரித்தவர்கள் முகத்தில் கரியைப் பூசுவதற்கு... இதைத்தான் நீ செய்தாக வேண்டும். எனவே, இடைச்செருகலை களைந்தெறிந்து... 'குழந்தைதான் உலகம்' என்று வாழ்ந்து ஒளிவீசு!
- டி.எஸ்.ரமா, சென்னை-1
இரண்டாம் வசந்தம்!
வாழ்க்கையில் எதிர்பாராமல் நமக்கு துன்பம் வரும்போது அதைக் கடந்து, அடுத்த கட்டத்துக்கு செல்வதுதான் நல்லது. ஆனால், அந்த முடிவு பாதுகாப்பானதுதானா என நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும். உங்களை மறுமணம் செய்ய விழைபவர் எப்படிப்பட்டவர் என பாரபட்சம் இல்லாமல் ஆராய்ந்து பாருங்கள். தராசு நல்ல முடிவை தந்தால்... வெற்றிகரமான இரண்டாம் வசந்தத்துக்கு தயாராகுங்கள், ஆல் தி பெஸ்ட்!
- ஸ்ரீதேவிராஜன், டி.வி.மருதூர்