கண்டிஷனர்... கட்டாயம் தேவை குளிர்ந்த நீர் குளியல்! இந்துலேகா.சி
##~## |
பாரம்பரியம் மற்றும் பார்லர் என இரண்டு விதங்களிலும் அழகைப் பராமரிக்கும் வகையில், தலை முதல் பாதம் வரையிலான அத்தனை அழகு விஷயங்களையும் ஆராய்ந்து, தீர்வு தரும் பகுதி இது!

பார்லர்!
தலைமுடியை ஆரோக்கியமாக்கும் முறைகள் பற்றிச் சொல்கிறார், 'க்ரீன் டிரெண்ட்ஸ்’ கற்பகம்.
''தலையை சுத்தப்படுத்தறதுக்காக முடிக்கேத்த ஷாம்பு பயன்படுத்துறது போல... கண்டிஷனர், சீரம் (முடிக்கான ஊட்டச்சத்து திரவம்) பயன்படுத்தற விதத்தைப் பத்தி இப்போ பார்ப்போம். எண்ணெய்ப் பிசுக்கு கூந்தல், வறண்ட கூந்தல், அதிகபட்ச வறண்ட கூந்தல், பாதிப்படைந்த கூந்தல்னு நாலு வகையான கூந்தல்கள்ல... நம்ம தலைமுடி எந்த வகைனு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கேற்ற கண்டிஷனர், சீரம் பயன்படுத்தணும்.
கண்டிஷனர்ங்கிறது, தலைமுடியை ஆரோக்கியமாவும், பளபளப்பாவும் மாத்துறதுக்கான ஒரு பொருள். இது லிக்விட், மாஸ்க்னு (க்ரீம்) ரெண்டு வகையில இருக்கு. எண்ணெய்ப் பிசுக்கு கூந்தலுக்கும், சாதாரண கூந்தலுக்கும் லிக்விட் கண்டிஷனர்... வறண்ட, பாதிக்கப்பட்ட கூந்தலுக்கு மாஸ்க் கண்டிஷனர்னு பயன்படுத்தலாம்.
முடிக்கேத்த ஷாம்புவைப் பயன்படுத்தி தலையை நல்லா சுத்தப்படுத்தி அலசிட்டு, முடியில் உள்ள தண்ணி முழுவதையும் வடியவிட்டு, ஈரமான முடியில தேவையான அளவு கண்டிஷனர் தடவணும். தலையில் படாம முடியில் மட்டும்தான் தடவணும். அஞ்சு நிமிஷம் கழிச்சு நல்லா அலசிடணும். கண்டிஷனர் 'திக்’கா இருக்கறதால, அலச அதிக நேரம் பிடிக்கும். பொறுமையா அலசலைனா... தலையிலயே படிஞ்சுடும். அதோட, தூசு, அழுக்கு சேரும்போது பொடுகு (டேண்ட்ரஃப்) உருவாக காரணமாயிடும். அதேமாதிரி, கண்டிஷனர் பயன்படுத்தினா... தலையை குளிர்ந்த தண்ணியிலதான் அலசணும். சுடுநீரைப் பயன்படுத்தினா... தலையில் இருக்கற இயற்கையான எண்ணெய்த் தன்மையை அது குலைச்சுடும்.

'சீரம்’ங்கிறது, தலைமுடிக்கான ஒரு பாதுகாப்பு கவசம். ஷாம்பு, கண்டிஷனர் இதையெல்லாம் பயன்படுத்தின பிறகு, தலையை டவலால நல்லா துவட்டிட்டு, ஒரு மில்லி (இதற்கு மேல் வேண்டாம்) சீரத்தை உங்கள் உள்ளங்கையில் ஊற்றி, விரல்கள்ல பரவவிட்டு, ரெண்டு கையாலயும் நல்லா சூடு பறக்க தேய்க்கணும். பிறகு, நல்லா குனிஞ்சு, தலைமுடியை முன்பக்கமா தொங்கவிட்டு... சீப்பால சீவுறது போல விரல்களால முடியில அப்ளை பண்ணணும். இது, நாம வெளியில போறப்ப... சன் ஸ்க்ரீன் மாதிரி செயல்பட்டு முடியைக் காப்பாத்தும்!''

பாரம்பரியம்!
'அரோமா கேர் அண்ட் க்யூர்’ கீதா அஷோக், தலைமுடி பாதுகாப்புக்கான பாரம்பரிய முறைகளைப் பற்றி விளக்குகிறார்.
''தலையில் வெள்ளை கலர்ல பொடிப்பொடியான செதில்கள் வந்தா... 'ஸ்கர்ஃபி டேண்ட்ரஃப்’னு பார்த்தோம். 'ஸ்கேலி டேண்ட்ரஃப்’ பத்தி இப்போ பார்ப்போம். 'ஸ்கேலி டேண்ட்ரஃப்’பை பார்த்து கண்டுபிடிக்க முடியாது. தலையை சொரியும்போது விரல் நகங்கள்ல மெழுகு மாதிரி எண்ணெய் பசையோட கூடிய அழுக்கு படிஞ்சா... அதுதான், ஸ்கேலி டேண்ட்ரஃப்.

தலையில இருக்கக் கூடிய எண்ணெய்ச் சுரப்பிகள், சீபம்ங்கிற எண்ணெய்யை சுரக்கச் செய்யும். சிலருக்கு இது அளவுக்கு அதிகமா சுரக்கும். வெளியில போறப்போ, பொல்யூஷனால தலையில் படியுற அழுக்கோடு இந்த சீபமும் கலந்து, தலையில் படிஞ்சுடும். தினமும் தலைக்கு குளிக்கலைனா, சீபமும் அழுக்கும் சேர்ந்து மெழுகு மாதிரி படிஞ்சு, ஸ்கேலி டேண்ட்ரஃபா உருவாகிடும். அதிக மன அழுத்தம் காரணமாவும் அதிகமான எண்ணெய் சுரந்து, ஸ்கேலி டேண்ட்ரஃப் உருவாக வாய்ப்பிருக்கு (ஸ்கர்ஃபி டேண்ட்ரஃப் வருவதற்கு மன அழுத்தம் காரணமாக அமையாது).
இதுக்கு முதல் தீர்வு... தினமும் தலைக்கு குளிக்கறதுதான். அடுத்ததா, ஆன்டி டேண்ட்ரஃப் ஷாம்பு பயன்படுத்தலாம். எல்லா ஆண்டி டேண்ட்ரஃப் ஷாம்புலயும் 'கிடகோனஸொல்’ (Ketoconazole) கெமிக்கல் இருக்கும். இது தலையில் இருக்கற அளவுக்கதிகமான ஈரப்பதம், எண்ணெய்ப் பிசுக்கு இதையெல்லாம் எடுத்துடும். ஈரப்பதம் இருந்தா பூஞ்சை உருவாகும்ங்கிறதால... அதை எடுக்கறது ரொம்ப அவசியம். ரோஸ்மேரி, புதினா, துளசி, எலுமிச்சை இந்த நாலுல ஏதாச்சும் ஒண்ணு கலந்துள்ள ஷாம்பு பயன்படுத்தலாம். இது எல்லாமே எண்ணெய்ப் பசையை எடுக்கும் தன்மை யுள்ளது. முக்கியமான விஷயம், ஸ்கேலி டேண்ட் ரஃப் வந்துட்டா... கண்டிஷனர் பயன்படுத்தக் கூடாது. கண்டிஷனர், நம்ம தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கக் கூடியதுங்கற விஷயம் மனசுல இருக்கட்டும்.
வெள்ளை மிளகுப் பொடி, பொடுதலைப் பொடி ரெண்டையும் சம அளவு எடுத்து, கலந்துக்கணும். இதுல, ஒரு ஸ்பூன் எடுத்து, 'ஆப்பிள் சைடர் வினிகர்' (Apple cider vinegar) மூணு சொட்டு விட்டு கலந்துக்கணும். தலை முடியை சீப்பால் பகுதி பகுதியா பிரிச்சுக்கிட்டு, இந்தக் கலவையை, தலையில் மட்டும் அப்ளை பண்ணணும். அப்பறம், பெரிய பல் சீப்பு வெச்சு தலையை வாரிவிடணும். அப்பதான் இந்த சாறு, தலையில் இறங்கும். முப்பது நிமிஷம் ஊறவிட்டு... ஷாம்பு போட்டு தலையை அலசிடலாம்.
இந்த பிரச்னைக்கு இன்னும் பல தீர்வுகள் இருக்கு... தொடர்ந்து பேசுவோம்.''
பளீரிடும்...