ரிமோட் ரீட்டா
##~## |
ஒரு பேட்டி - வில்லியை மிரட்டும் கில்லி!
விகடன் டெலிவிஸ்டாஸ் 'தெய்வ மகள்’ சீரியலில் அண்ணி ரோலில் மிரட்டிக்கிட்டிருக்கற ரேகா குமார், தன்னோட டிரெஸ்ஸிங் மூலமா தமிழ்ப் பெண்களையும் மிரட்டத் தவறல. 'ச்சும்மா அசத்தறாளேடியம்மா...'னு செம்ம அப்ளாஸ் வாங்கிட்டிருக்கற அவங் களோட ஆதிஅந்தம் என்னனு நீங்களும் தெரிஞ்சுக்கறதுக்காக...
''ஹாய் ரேகா மேடம், ஹவ் ஆர் யூ...''னு கொஞ்சம் பயத்தோடவே ஆரம்பிச்சேன்.
''ஹாய் ரீட்டா... இந்த நடிப்பெல்லாம் வேணாம்... ஐ ஆம் பேஸிக்கலி ஸோ ஃப்ரெண்ட்லி யூ நோ..!''னு என்னை கூல் பண்ணினாங்க. பிறகென்ன பின்னிட மாட்டாளா இந்த ரீட்டா?!
''மேடம், மீடியாவுக்கு வந்தது எப்படி?''
''நான் பெங்களூரு பொண்ணு, வீட்டுல யாருமே மீடியால இல்லை. ஸ்கூல் டான்ஸ்ல நம்பர் ஒன் நான்தான். பெஸ்ட் ஃப்ரெண்ட் அனிதாராணி, 'நீ பேசாம நடிக்கலாமே'னு சொல்லிட்டே இருப்பா. அவளோட அப்பாவுக்கு மீடியால நிறைய ஃப்ரெண்ட்ஸ். அவர் மூலமா ஒரு டைரக்டரோட அறிமுகம் கிடைச்சு, தூர்தர்ஷன் சீரியல்ல கேரக்டர் வாய்ப்பு வந்துச்சு. தொடர்ந்து வாய்ப்புகள் வரவே இதுவரைக்கும் கன்னடத்துல நாப்பது, மலையாளத்துல நாலுனு சீரியல் பண்ணியிருக்கேன். தமிழைப் பொறுத்தவரை, 'தெய்வமகள்’, எனக்கு ரெண்டாவது சீரியல்!''

''வீட்டுலயும் வில்லத்தனம்தானா..?''
''இதானே வேணாம்கிறது. பொறந்த வீடு, புகுந்த வீடுனு ஏக சப்போர்ட். என் கணவர், என் பொண்ணு, ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே பெரிய சப்போர்ட். அத்தனை பேருக்கும் நான் ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன்.''
''சூப்பரா டிரெஸ் பண்றீங்களே.... ஃபேஷன் டிசைனிங் ஏதாச்சும்?''
''இல்லவே இல்ல. பர்சனலா ஜீன்ஸ் வித் டாப்ஸ், இல்லைனா குர்தா... இதுதான் என்னோட ஆல்டைம் ஃபேவரைட். சீரியல்ல மட்டும்தானே புடவை. அதை ஒழுங்கா பண்ணலாமேனுதான் பக்காவா பார்த்துப் பார்த்து பண்ணிக்கிறேன். புடவை, நெக்லஸ், கம்மல் எல்லாமே ஸ்பான்ஸர்தான். மேட்சிங் வளையல், மோதிரம் இதெல்லாம்தான் என்னோட கலெக்ஷன். வில்லியா பண்றதாலதான் பெரிய பெரிய மணி மாலை. பாத்தவுடனே பயப்படணும்ல..!''
''ஸ்க்ரீன்ல வந்தாலே... 'ச்சும்மா அதிருதில்ல'ங்கற மாதிரி பயமுறுத்தறீங்களே?''
''ஏம்மா... ஏன்..? ஏதோ சொர்ணாக்காகிட்ட பேசுற மாதிரியே பில்டப் கொடுக்கிறே! உண்மைய சொல்லணும்னா நான் எல்லாரோடவும் ஈஸியா மிங்கிள் ஆகிடுவேன். புதுசா பாக்கறவங்கதான் கொஞ்சம் பயந்து பேசுவாங்க. மத்தபடி என் பொண்ணே அசால்ட்டா என்னைக் கலாய்ச்சுடுவா. கோபமா திட்டினா... 'மம்மி நீ இப்ப ரியல் லைஃப்ல இருக்கே. சீரியல்ல நடிக்கலை'னு சிரிக்க வெச்சுடுவா!''
வில்லியை மிரட்டும் கில்லி!
ஒரு திறமை - கடல் கடந்த கலைச்சேவை!
தந்தி டி.வி-ல 'சந்திப்போமா' நிகழ்ச்சியை பண்ணிட்டிருக்கும் திவ்யா பொண்ணோட மூக்கும் முழியும்கூட அபிநயம் பிடிக்கும்போதே நெனச்சேன். அட, ஆமாங்க பொண்ணு கிளாஸிக்கல் டான்ஸரேதான்! ''நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே...''னு பாடிட்டே திவ்யா பொண்ணு முன்ன போய் நின்னா...
''இதையெல்லாம் நீ எப்படி மோப்பம் புடிக்கறே. எல்.கே.ஜி. காலத்துலயே பரதநாட்டியம் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். எட்டாவது படிக்கும்போது அரங்கேற்றமும் பண்ணிட்டேன். அதுக்குப் பிறகு, 'இனிமே வரிசையா பப்ளிக் எக்ஸாம்தான். நீ சீரியஸா படிக்கணும்'னு சொல்லி, டான்ஸுக்கு தடா போட்டுட்டாங்க. சேஞ்சுக்காக சன் மியூஸிக் ஆடிஷன்ல கலந்துகிட்டு, செலக்ட்டும் ஆகிட்டேன். மீடியா ஒரு பக்கம், இன்ஜினீயரிங் காலேஜ் மறுபக்கம்னு வாழ்க்கை போயிட்டிருந்துச்சா...''னு ரொம்ப ஆர்வமா சொல்ல... ''ம்'' கொட்ட ஆரம்பிச்சுட்டேன்.
பார்ட்டி டென்ஷனாகி, ''பாட்டி வடை சுட்ட கதையா சொல்றாங்க...? வேறென்ன, காலேஜ் முடிச்சதும் வேலை. திரும்பவும் பரதநாட்டியத்தையும் ஆரம்பிச்சாச்சு. என் குரு அனிதா குஹா மூலமா... பாம்பே, டெல்லி, சென்னைனு ஸ்டேஜ்கள்ல ஆடிட் டிருக்கேன். இந்த டிசம்பர் சீஸனுக்காக மலேசியாவுல ஒரு புரோகிராம் ரெடி!''னு சொன்ன திவ்யாகிட்ட...

''கடல் கடந்து கலைச்சேவையாற்றும் கலையரசியே வாழ்க!''னு நான் கலாய்க்க...
''எல்லாத்துக்குமே என் அப்பா அம்மா, அண்ணாதான் முக்கிய காரணம். அவங்க சப்போர்ட்லதான் சக்ஸஸ்ஃபுல்லா பேலன்ஸ் பண்ண முடியுது''னு பாசமழை பொழிஞ்சாங்க அம்மணி.
சபாஷ்!
ஒரு ட்ரீட் - இது புதுசு!
'பெப்பர்ஸ்’ டி.வி-யில் வியாழக்கிழமைதோறும் பகல் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகற 'படித்ததில் பிடித்தது' நிகழ்ச்சி, வெற்றிகரமா எழுபத்தைந்தாவது வாரத்தை கடந்துடுச்சு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிகழ்ச்சியில கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மாதிரியான பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள்னு பலரும் தங்களோட ஸ்கூல், காலேஜ் டேஸ் பத்தி பேசுறாங்க. சின்ன வயசுல ரசிச்ச புத்தகங்கள், ஊக்கம் தந்த புத்தகங்கள்னு நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்கிறாங்க. கூடவே, புதுப்புது புத்தகங்களையும் அறிமுகப்படுத்தறதால... புத்தக புழுக்களுக்கு நல்ல ட்ரீட்!

வாசகிகள் விமர்சனம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
யோகா குடும்பம்!
''பொதிகை தொலைக்காட்சியில்... 93 வயதில் யோகாவில் உலக சாதனை நிகழ்த்தி தங்கப்பதக்கம், பரிசுகள் பெற்ற கோவை, ஞானம்மாள் ஒவ்வொரு ஆசனங்களாக செய்து காட்டியதோடு... 'ஐந்து தலைமுறையாக யோகா சொல்லிக்கொடுக்கிறோம். யோகா செய்வதால் நாங்கள் மருத்துவமனைக்கே சென்றதில்லை' என்றும் சொல்லி, ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டார். 'யோகா மூலமாக நினைவாற்றலை அதிகரிக்க வைப்பதோடு, ஆரோக்கியத்தையும் கட்டிக் காக்கலாம்' என்பதையும் அனுபவப்பூர்வமாக தாங்கள் உணர்ந்திருப்பதாக தன் மகனுடன் சேர்ந்து அவர் எடுத்துரைத்தது... அருமை!'' என்று பாராட்டுகிறார் சிட்லபாக்கத்தில் இருந்து எஸ்.சித்ரா.
மருதாணி டு மெகந்தி!
''மெகந்தி கலாசாரம் பெருகி வருவது பற்றி, சன் நியூஸ் சேனலில் காண்பித்தார்கள். 'மெகந்தி, சீக்கிரம் காய்ந்துவிடுவதோடு பல வண்ணங்களில் கிடைப்பதால்தான் மருதாணியையே பெண்கள் மறந்து போனார்கள். ஆனால், இந்த மெகந்தியால் அழையா விருந்தாளியாக அலர்ஜியும், புற்றுநோயும் வரும்' என்று சொல்லி அதிர வைத்துவிட்டனர். இப்படிப்பட்ட உஷார் செய்திகளை தந்ததற்கு சன் நியூஸ் சேனலுக்கு நன்றி'' என்கிறார் தூத்துக்குடியில் இருந்து வி.சகிதா முருகன்.
கண்ணியமான விளம்பரம்!
''டி.வி-களில் வரும் 'சிக் ஷாம்பு’ விளம்பரம், கண்ணியமாக... கண்ணுக்கும், காதுக்கும் விருந்தாக உள்ளது. மேலும் பெண்ணியம் அற்புதமாக காட்டப்படுகிறது. முழுமையான உடை, நீண்ட கூந்தல், 'உற்றார் கண்படட்டும், ஊரார் கண்படட்டும்....’ என்றெல்லாம் அந்த விளம்பரத்தில் பாடப்படுவது மனதை மயக்குகிறது. விளம்பரங்கள் கவர்ச்சியாக இருக்கும்போது... தூற்றுகிறோம். குடும்பப்பாங்காக இருந்தால்... பாராட்டவும் தவறக் கூடாது அல்லவா!'' என்று மகிழ்கிறார் ஸ்ரீரங்கத்தில் இருந்து எஸ்.மீனா.