மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆனந்தம் விளையாடும் வீடு - 4

அறிவு சுரங்கம்... இந்த அமுதகம்!சண்.சரவணக்குமார், படங்கள்: இ.பொன்குன்றம்

##~##

 ''பக்கத்து வீட்டம்மா வந்து, 'ஐயா, நாளைக்கு ராமேஸ்வரத்துக்கு யார் யார் போறோம்?'னு கேட்டுச்சு.

உடனே இவரு சொன்னாரு.... 'நீங்க எம்பொண்டாட்டி... நான் உங்கபுருஷன்'னு.

அந்தம்மா கிடுகிடுனு நடுங்கிரும்.

பிரச்னை என்னன்னா... பேசுறப்ப வார்த்தைக்கு தேவையான இடைவெளியில்லாம பேசினதுதான். இவரு சொல்ல வந்தது... நீங்க, என் பொண்டாட்டி, நான், உங்க புருஷன் நாலு பேரும் போறோம்ங்கறதைத்தான். ஆனா, வார்த்தைக்கு கமா போடாம பேசினதால வந்த வினை இது. இந்த இவரு யாரு தெரியுமா... நம்ம என்.எஸ்.கிருஷ்ணன்தான்...''

- இப்படி தன்னுடைய வக்கணையான மதுரைத் தமிழால், உலகத் தமிழர்களை வயிறுகுலுங்க சிரிக்கவைப்பதோடு, சிந்திக்கவும் வைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், வீட்டில் ஆனந்தம் மட்டுமல்ல... அறிவும் சேர்ந்தே விளையாடிக் கொண்டிருக்கிறது!

மதுரை, கே.கே நகர், சப்-கலெக்டர் காலனியில் சுந்தரம் தியேட்டர் எதிரில் உள்ள முதல் வீடு அது. 'அமுதகம்’ என்ற பெயர் பொறித்த அந்த வீட்டுக்குள் நுழையும் நம்மை வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரவேற்கிறார், ஞானசம்பந்தன். அவர் மட்டுமா... தரையில் இடப்பட்டிருக்கும் மாக்கோலம், கீச்கீச் பறவைகள்... என வீடே நம்மை வரவேற்கிறது!

ஆனந்தம் விளையாடும் வீடு - 4

''இது, ஆஸ்திரேலியா லவ் பேர்ட்ஸ். வெள்ளை, புளூ, மஞ்சள்னு மூணு கலர்ல வளர்க்கிறோம். அதுங்களுக்கு சாப்பாட்டு நேரமாச்சு. கொஞ்சம் பொறுங்க, அதுங்களுக்கு தீனி கொடுத்துட்டு வந்துடறேன்'' என்றவர், கொத்தமல்லித் தழைகளைக் கிள்ளி, கிளிகளுக்குக் கொடுத்தபடியே பேச ஆரம்பித்தார்.

''எனக்கு பூர்விகம் சோழவந்தான். பேராசிரியர் வேலைக்காக மதுரைக்கு வந்தேன். 84-ம் வருஷம் பிப்ரவரி 6-ம் தேதி கல்யாணம் நடந்துச்சு. 2005-ம் வருஷம் மதுரைக்கு ஒதுக்குப்புறமான இந்தப் பகுதியில இடத்தை வாங்கி, வீடு கட்ட ஆரம்பிச்சேன். கட்டி முடிக்க ஒரு வருஷம் ஆச்சு. முழு டிசைனிங்கும் மனைவி அமுதாவும், மகள் அர்ச்சனாவும்தான். இப்போ இந்த ஏரியா, பரபரப்பான ஏரியாவா மாறிடுச்சு.

ஆனந்தம் விளையாடும் வீடு - 4

என் அப்பா தமிழாசிரியர். அவர் வீட்டுக்கு 'தமிழகம்’னு பேரு வெச்சிருந்தார். அதனால, புதுசா கட்ற என் வீட்டுக்கு 'புதிய தமிழகம்’னு வெக்கலாமானு யோசனை. ஆனா, அது அரசியல் கட்சியோட பேருங்கறதால, மனைவி பேரையே வெச்சு, பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11-ம் தேதி புதுமனைப் புகுவிழாவை நடத்தினேன்.

இந்த வீடு கட்டினதோட நோக்கமே, பெருசா ஒரு நூலகம் அமைக்கறதுதாங்க. எல்லாரும் 'கனவு இல்லம் கட்டணும்’னு நெனப்பாங்க. ஆனா, நான் 'கனவு நூலகம் கட்டணும்’னு நெனைச்சேங்க. வீட்டுல எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் நூலகம்தான். இங்க மூவாயிரம் புத்தகங்கள் இருக்கு. 19-ம் நூற்றாண்டு தொடங்கி, சமீபத்திய வெளியீடு வரை எல்லா புத்தகங்களையும் வாங்கிக் குவிச்சுருக்கேன். குளியலறை, படுக்கையறைனு எல்லா வசதியோட, என் இலக்கிய நண்பர்களுக்காகவே இதை கட்டியிருக்கேன். மாணவர்களும் வந்து படிக்கறதுக்கு வசதி செஞ்சுருக்கேன். இதுவரைக்கும் 10 பேருக்கு பிஹெச்.டி., 60 பேருக்கு எம்.ஃபில். பட்டம் வாங்கி தர்றதுக்கு இந்த நூலகம் உதவியிருக்கு. அரிய நூல்கள் இருக்கறதால, 'அமுதகத்தில் அறிவகம்’னு இங்க வர்ற மாணவர்களே இதுக்கு பேர் வெச்சுருக் காங்க'' என்றவர், வீட்டை சுற்றிக் காட்டினார்.

''சுற்றி தோட்டம் வெச்சுருக்கேன். மதுரையோட பாரம்பரிய மரமான கடம்பு, மல்லிகை, முல்லை, ரோஜா, மூலிகை செடிகள்னு இருக்கு'' என்றவர், மனைவியின் தோள் மீது தோழமையாக சாய்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தபடியே, ''30 வருஷமாச்சு... இது மாதிரி கை போட்டு'' என்று கண்ணடிக்க, வெட்கப் புன்னகை வீசிய அமுதா... பூஜை அறைக்கு அழைத்து சென்றார். அங்கே அன்னபூரணி, ராமானுஜர், மதுரை மீனாட்சி, ஷீரடி சாய்பாபா ஆசி வழங்கிக் கொண்டிருந்தனர். கூடவே... காலடி தடம் பதிந்த சிமென்ட் பலகை ஒன்று நம்மை ஈர்த்தது!

''எங்க மாமனார் வீடு கட்டும்போது ஓரிடத்தில சிமென்ட் பூச்சுல கால் வெச்சுட்டாங்க என் மாமியார். அந்த தடத்தை அப்படியே பெயர்த்து எடுத்து வந்து இந்த வீட்டு பூஜையறையில வெச்சு பூஜிக்கிறோம்'' என்று அமுதா சொல்ல, மாமியார் காலடித் தடத்தை கடவுளாக பாவிக்கும் அமுதாவும், பாசக்கார மகன் ஞானசம்பந்தனும் நம்மை நெகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றனர்.

ஆனந்தம் விளையாடும் வீடு - 4

''வீட்டு சமையல் அறையில எப்பவும் அசைவம்தான் பட்டையைக் கிளப்பும். வீட்டுக்கு வர்ற நண்பர்கள், பிரியாணி சாப்பிடாம போனது கிடையாது. அதேபோல டைனிங் டேபிள் முழுக்க சாப்பாடு அயிட்டத்தைவிட, புத்தகங்கதான் அதிகமா இருக்கும். இப்படித்தான் ஒரு தடவை 'கரன்ட் கட்’ ஆனப்ப, தின்பண்டம்னு நினைச்சு, புத்தகத்தை எடுத்து கடிச்சுட்டாரு'' என்று, கணவருக்கு சற்றும் குறையாதவராக காமெடி கிளப்பினார் அமுதா.

''இரை தேடிச் செல்லும் பறவை போல, உலகம் முழுக்க பயணம் போயிட்டு வந்தாலும், அவரோட உலகம் இந்த வீடுதான். பேரன், பேத்திகளுக்காக வீட்டோட தெற்கு பக்கம் நிலா முற்றம் வெச்சுக் கட்டியிருக்கார். ஆனா, அடிக்கடி 'கரன்ட் கட்’ ஆகறதால, நானும் அவரும்தான் நிலாச்சோறு சாப்பிடறோம். இரண்டாம் தளத்துல, வெட்டவெளி இடத்தை இலக்கிய முற்றத்துக்காக வெச்சுருக்கார். அங்க 100 பேர் கலந்துக்குற அளவுக்கு நிகழ்ச்சிகளை நடத்த முடியும். பத்தாவது வரை படிச்சிருந்த நான், இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் எம்.ஃபில் படிச்சு முடிச்சேன்'' என்ற அமுதாவை, பெருமையோடு பார்த்தபடி தொடர்ந்த ஞானசம்பந்தன்,

'கதவு, ஜன்னல் எல்லாம் தேக்கு, வேங்கை மரங்கள்ல செஞ்சுருக்கோம். 4 ஆயிரத்து 500 சதுரடியில இருக்குது வீடு. நல்ல வெளிச்சம் கிடைக்கற மாதிரியும் கட்டியிருக்கோம். தரையில மார்பிள், கார் பார்க்கிங் ஏரியாவுக்கு 'ரஃப் டைல்ஸ்’... இப்படி பார்த்துப் பார்த்துக் கட்டின இந்த வீட்டுக்குள்ள நான், மனைவி, பொண்ணு அர்ச்சனா, பையன் குரு நாலு பேரும் வாழறோம். இப்ப பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. பையன் லண்டன்ல அனிமேஷன் படிச்சுட்டுருக்கான். இப்ப நானும் மனைவியும் மட்டுமே இருந்தாலும்... எங்க பசங்க, ஓடி ஆடி, கூடி குதூகலிச்ச நினைவுகளை இந்த வீடும், இங்க இருக்கற பொருட்களும் அள்ளித் தெளிச்சுட்டே இருக்கு. என் வாழ்க்கையோட அடையாளம்... இந்த வீடுதான்!''

- கண்களில் பெருமிதம் வழியச் சொன்னவரின் வார்த்தைகளில் தெறிக்கிறது... உழைப்பின் வெற்றி.

ஆனந்தம் விளையாடும்...