ஃபை ஃபை ஃபை... கலாய்ச்சிஃபை... மோனிகா என்னோட எனர்ஜிஃபை! பொன்.விமலா, படங்கள்: ஆ.முத்துக்குமார்
##~## |
இன்னிசையால் நிரம்பி வழிகிறது... இசையமைப்பாளர் இமான் வீடு. சென்னை, விருகம்பாக்கத்தில் இருக்கும் அந்த வீட்டில் இன்னமும் கிறிஸ்துமஸ் கோலாகலம் களைகட்டியிருக்க, புத்தாண்டு மற்றும் பொங்கலுக்காக நாம் ஸ்பெஷல் விசிட் அடிக்க, இரண்டு குழந்தைகளையும் இடுப்பில் தூக்கி அணைத்தவாறே அன்புடன் வரவேற்கிறார் இமான்.
பாசம் பொழியும் அப்பா டேவிட் கிருபாகர தாஸ், அழகு மனைவி மோனிகா, குட்டி நட்சத்திரங்கள்... வெரோனிகா, பிளஸிகா என ஆனந்தம் விளையாடிக் கொண்டிருந்தது அந்த வீட்டில்.
''வாழ்க்கையில நாம எவ்ளோ தூரம் பயணிச்சாலும், நம்ம சந்தோஷத்தை இரட்டிப்பாக்குற சக்தி... நம்ம வீட்டுக்குத்தான் இருக்கு. அப்படி என் சந்தோஷங்களை பெருக்கிக் கொடுக்கிறது, என் மனைவியும், அப்பாவும், குழந்தைகளும்தான். அப்பாவைப் பத்தி நிறைய சொல்லிட்டே போகலாம். அதுக்கு முன்ன மோனிகா பத்தி சொல்லிடட்டுமா?!''
- சிரித்த முகத்தோடு மனைவியைப் பார்க்க, 'ஏதாச்சும் ஏடாகூடமா சொல்லிடாதீங்க...’ என்பதுபோல ஓரக்கண்ணால் செல்லமாகக் கெஞ்சினார்.
''சேச்சே... நான் சொல்லப்போற மேட்டர் நிச்சயமா கலாய்ச்சிஃபை கிடையாது மோனிகா...'' என்று உறுதி கொடுத்து ஆரம்பித்த இமான், ''நான் கம்போஸ் பண்ற காதல் பாடல்கள், குத்துப் பாடல்கள், தத்துவப் பாடல்கள்னு எல்லா பாடல்களுக்குப் பின்னா£££டி... என் மோனிகாதான் இருக்காங்கனு சொல்ல மாட்டேன்!'' என்று ஒரேயடியாகக் கவிழ்க்க, செல்ல கோபம் வீசுகிறார் மோனிகா.

''ஸ்கூல், காலேஜ் நாட்களில் பயங்கரமா (!) சைட் அடிப்பேன். அந்த பப்பி லவ், இன்ஃபேக்சுவேஷன், கெமிஸ்ட்ரி கலாட்டாக்கள்... அதன் மூலமா அழகுப் பெண்களோட ஏற்பட்ட அனுபவங்கள்தான் என் கம்போஸிங்கில் எதிரொலிக்கும்!''னு இமான் ஸ்டேட்மென்ட் கொடுக்க, செல்லமாகத் தட்டிவிட்டு, தோள் மேல் கை போட்டவாறே ஆரம்பித்தார் மோனிகா...
''பெரியவங்க பார்த்து ஏற்பாடு பண்ணின திருமணம் எங்களோடது. 2008-ல கல்யாணம். ஆசைப் பட்ட மாதிரியே ரெண்டும் பெண் குழந்தை கள். கூடவே ஒரு ஆண் குழந்தை. என்ன யோசிக்கிறீங்க... இவர்தான் அது! பொதுவா எல்லாரும் கணவரை மீசை வெச்ச குழந் தைனு சொல்லுவாங்க. இவர், குடுமி வெச்ச குழந்தை!'' என்று இமானுக்கு ஈக்வலாக மோனிகாவும் கலாய்ச்சிஃபையோடு செல்ல அடி கொடுக்க...
''பொண்டாட்டி அடிச்சாலும் இமான் ஹேப்பி அண்ணாச்சிதாங்க'’ என்றவாறே தொடர்கிறார் இமான்...
''மோனிகா, என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவங்க. ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. பல நேரங்கள்ல என் வேலைப்பளுவுக்கு நடுவுல நிறைய மிஸ் பண்ணுவேன். தொழில்சம்பந்தமான சின்னச் சின்ன பிரிவுகளை எல்லாம் அழகா கடப்பாங்க. என்னோட 100% வெற்றியோட ரகசியம், மோனிகாவோட 0% தொந்தரவுதான்!'' எனும்போது பூரணம்... இமான் முகத்தில்.

''இந்த வீட்டைப் பாருங்க. இங்க நிறைஞ்சிருக்கிற அன்பு, அழகு ரெண்டுக்கும் காரணம் எங்கப்பாதான். என்னோட இசை ஆர்வத்துக்காக அவரோட சக்திக்கும் மீறி நிறைய கருவிகள் வாங்கிக் கொடுத்திருக்கார். இந்த வீட்ல பார்க்குற இடமெல்லாம் அழகா இருக்கணும்னு மெனக்கெட்டு அழகுபடுத்துவார். இந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னயே அம்மா தவறிட்டாங்க. ஆனாலும் அந்த இழப்பை, சோகத்தை வெளிக்காட்டாம எங்க சந்தோஷத்துக்காக, வெற்றிக்காக எப்பவும் உறுதுணையா இருக்கார்!''
- இமான் அன்போடு அணைக்க, பெருமிதத்துடன் தொடர்ந்தார் அப்பா.
''இமான் மாதிரி ஒரு பையனும், மோனிகா மாதிரி ஒரு (மரு)மகளும் கிடைக்க நான் கொடுத்து வெச்சுருக்கணும். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிச்சவன், இன்னிக்கு இசையமைப்பாளரா வளர்ந்து நிக்கிறான். இந்த அங்கீகாரத்துக்காக அந்த சுயம்பு கடந்த தடைகள், எனக்குத்தான் தெரியும். இமான், மோனிகா, பேத்திகளோட வாழுற சந்தோஷம்... உண்மையிலேயே சொர்க்கம்!' என்று அவர் சொல்லும்போதே... தாத்தாவிடம் தாவுகிறார்கள் வெரோனிகா, பிளஸிகா!
''வாழ்க்கையில நாம நிறைய விருதுகள் வாங்கியிருப்போம். 'கும்கி’யில மகிழினியை அறிமுகப்படுத்தினப்போவும், 'ஊதா கலரு ரிப்பன்’ பாட்டுல ஹரிஹரசுதனை அறிமுகப்படுத்தினப்போவும் அவங்களுக்கு கிடைச்ச அங்கீகாரமும் சந்தோஷமும் இருக்கே... இதுமாதிரி புதுமுகங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர்ற சந்தோஷம் ஆயிரம் விருதுகளுக்குச் சமம். எல்லாத்தையும்விட அன்பான, நிம்மதியான குடும்பம் கிடைக்கிறது வரம். இதை என்னை ஒவ்வொரு நாளும் உணர வைக்குது இந்த வீடு!''
- இசைக்காமலே கசிந்தது அங்கே ஓர் ஆனந்த ராகம்!