மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

ரிமோட் ரீட்டா

##~##

 ஒரு பேட்டி!

கிளிப்பிள்ளை... கில்லிப்பிள்ளை!

ராஜ் டி.வி. 'வெள்ளித்திரை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பிச்சப்போ, தேவிகிருபாவுக்கு தமிழே சரியா தெரியாதாம். 'இப்ப நிலைமை எப்பூடி..? எனி முன்னேற்றம்..?’னு அவங்க முன்ன போய் நின்னேன்.

''வா ரீட்டா! புதுசு புதுசா டி.வி-க்கு வரும் ஆட்களைத்தான் நீ சந்திப்பேனு ஊருக்குள்ள பேச்சு. பரவாயில்லயே எங்களையும் ஞாபகம் வெச்சுருக்கே!''னு நைஸாக குத்தியபடியே கை கொடுத்தாங்க தேவிகிருபா.

''அதெல்லாம் இருக்கட்டும், உங்களுக்கு தமிழே தெரியாதுனு கேள்விப்பட்டேனே?''

''ஓ அதுவா! என்னோட அப்பா தெலுங்கு, அம்மா கன்னடம். அதனால, எனக்கு தமிழ் தெரியவே தெரியாது. நான் நடிச்சுட்டிருக்குற எல்லா சீரியல்கள்லயும் டப்பிங் வாய்ஸ்தான். ஆனா, விகடன் டெலிவிஸ்டாஸ் 'தென்றல்’ சீரியல்ல மட்டும் சொந்தக் குரல்தான். அதுக்கு காரணம்... அந்த யூனிட்ல, நான் தப்பு தப்பா தமிழ் பேசினாலும், பொறுமையா சொல்லிக் கொடுப்பாங்க.''

கேபிள் கலாட்டா!

''இப்பகூட நல்லாதான் தமிழ் பேசுறீங்க... அப்புறம் என்ன தயக்கம்?''

''எமோஷனல் ஸீன்களுக்கு வாய்ஸ் கொடுக்கும் போது அவுட் ஆயிடுவேன் ரீட்டா. ராஜ் டி.வி. 'வெள்ளித்திரை’ நிகழ்ச்சியில ஆரம்பத்துல ஒருத்தர் வாசிக்க வாசிக்க... அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிட்டு இருந்தேன். இப்போ நானே சமாளிக்கிற அளவுக்கு முன்னேற்றம் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல பாரு... கில்லிப்பிள்ளை யாகிடறேன்!''

-குட்டிக் கண்களை இடுக்கி, சிரிச்சாங்க தேவிகிருபா.

ஒரு திறமை!

 பல திறமை..!

'ஒரு சேனல்ல, படு ஸ்டைலா நுனி நாக்கு இங்கிலீஷ் பேசிட்டிருந்த பொண்ணு ஒண்ணு, இப்ப தமிழ் சேனல் பக்கம் தலை காட்டிட்டி ருக்கேன்னு, ஆச்சர்யமாகி அட்டன்டென்ஸ் போட்டேன். பொண்ணு பேரு தீபிகாஷி. சென்னை, டபுள்யூ.சி.சி. காலேஜ்ல பி.காம் முடிச்சாச்சு.

''ரேடியோ ஒன் எஃப்.எம், 'காலேஜ் சாம்பியன்’னு ஒரு நிகழ்ச்சியை எங்க காலேஜ்ல நடத்தினாங்க. அதுல ஜெயிச்சதால, என் ஆர்.ஜே கனவு நனவாச்சு. அப்போதான் ஜூனியர் ஒருத்தி, 'என்.டி.டி.வி- ஹிந்து' சேனல்ல காம்ப்யரிங் ஆடிஷன் நடக்குது, நீயும் முயற்சி பண்ணு’னு சொன்னா. ஆடிஷன்ல ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, படிக்கச் சொல்லிக் கொடுத்தாங்க. நாங்கள்லாம் யாரு, சிங்கிள் டேக்லயே ஓகே வாங்கிட்டோம்ல!

கேபிள் கலாட்டா!

அப்புறம் என்ன... காலேஜ் போயிட்டே டி.வி-யில ஷோ பண்ண ஆரம்பிச்சேன். காலேஜ் முடிச்சதும், அதே சேனல்ல முழுநேர வேலை. ஆங்கரிங் மட்டுமில்ல, 'என்டர் தி கிச்சன்’, 'ஃபீடிங் ஃப்ரெண்ட்லி’னு ரெண்டு நிகழ்ச்சிகளுக்கு புரோக்ராம் புரொடியூஸராவும் வேலை பார்த்திருக்கேன்''.

''அது சரி, எல்லா சேனல்லயும் முகம் காட்டுற வித்தை எப்படி..?''

''என்ன ரீட்டா என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே..? சரி சரி விஷயத்துக்கு வர்றேன். அது என்னமோ தெரியல என்னோட முகராசிக்கு எல்லா சேனல்லயும் சிறப்பு நிகழ்ச்சிகள் செய்யக் கூப்பிடறாங்க. ஜெயா டி.வி., ஜீ தமிழ், 'சினிமா’, ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகள்னு செம பிஸி. இன்னொரு பக்கம், கார்ப்பரேட் கம்பெனி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறேன், ஃபேஷன் ராம்ப் வாக் பண்றேன், சின்னச் சின்ன விளம்பரங்கள்லகூட நடிச்சுட்டிருக்கேன். 12 வரு ஷமா டான்ஸ் கத்துக்கிட்டேன். பேஸ்கட் பால் பிளேயர் நான். நல்லா பாடுவேன். சமையல் நிகழ்ச்சிகள் நிறைய பண்றதாலயோ என்னவோ, ஹோட்டல் சம்பந்தமான தொழில் பண்ணணும்கிறதுதான் என்னோட ஆசை!''  

யம்மா... போதும்மா, லிஸ்ட் ரொம்...ப்ப்ப்ப பெருசா போயிட்டே இருக்கு. அவள் விகடன்ல, சேனல் நியூஸுக்கு மொத்தமே மூணு பக்கம்தான் கொடுப்பாய்ங்க. வர்ட்டா!  

இது வேற மாதிரி!

 வரலாற்றின் வசூல் ராஜாக்கள்..!

ஸ்கூல்ல ஹிஸ்டரி பீரியட்ல தூங்கின பாவத்தைப் போக்க, 'ஹிஸ்டரி’ சேனல் பார்ப்போமேனு ரிமோட்டை எடுத்து சேனலை டியூன் பண்ணினேன். 'பான் ஸ்டார்ஸ்’னு ஒரு நிகழ்ச்சி. செம்ம ஷோ!

கேபிள் கலாட்டா!

அதாவது, அமெரிக்காவோட லாஸ் வேகாஸ்ல வாழ்ந்துட்டிருக்குற ஹாரிஸன் குடும்பத்துல, அப்பா ரிச்சர்ட், பையன் ராக், பேரன் கோரே... இப்படி மூணு தலைமுறையா 'பான் ஷாப்' (பாக்கெட் காலியாயிட்டா... காது, கழுத்துல போடுற நகையில இருந்து... வீட்டுல இருக்குற அண்டா, குண்டா வரைக்கும் அடகு வைப்போமே.. அந்த மாதிரி ஒரு கடை) நடத்திட்டு இருக்காங்க.

கஷ்டப்படறவங்க/அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படறவங்க, அவங்ககிட்ட இருக்குற பழம்பெரும் பொருட்கள், பழைய புத்தகத்தோட முதல் பதிப்பு, போர் காலத்துல பயன்படுத்தப்பட்ட போருக்கான பிளான் மேப், பழமை வாய்ந்த அந்தக்கால விளையாட்டுச் சாமான்கள்னு எதுவா இருந்தாலும்... இந்த ஷாப்ல விற்கலாம்.

அப்படியான பொருட்களைப் பத்தின வரலாறு, அதுக்கு என்ன விலை கிடைக்கும் இப்படியெல்லாம சுவாரஸ்யமா பேசுறதுதான் இந்த நிகழ்ச்சி. அறிவுப் பூர்வமாவும், த்ரில்லிங்காவும் போகுது ஷோ. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி, மதியம் 1. 30 மணி, மாலை 6.30 மணி, இரவு 10 மணி... வாட்ச் ஹிஸ்டரி சேனல்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா!

 150

நேசிக்க வேண்டுகிறேன்!

''தந்தி டி.வி. 'அச்சம் தவிர்’ நிகழ்ச்சியில், வெட்டியான் வேலை செய்யும், பெண்களின் நிலைமையைப் பார்த்து, மிகவும் வேதனை அடைந்தேன். 'வேறு வழியின்றி இதைச் செய்துவரும் நாங்கள், எங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறோம். ஆனால், அவர்களை சமூகம் மிகவும் கேவலமாக நடத்துகிறது' என்று அந்தப் பெண்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியது வேதனை தருவதாக இருந்தது. உறவினர்கள்கூட, எந்த நிகழ்வுகளுக்கும் அழைப்பதில்லையாம். உண்மையிலேயே மனித சமூகத்துக்குத் தேவையான மிகமிக நல்ல காரியத்தை செய்வது இந்தப் பெண்கள்தான். இதை உணர்ந்து, அவர்களை அனைவரும் நேசிக்க வேண்டும்''  என்று மனம் உருகுகிறார், சென்னை, வேளச்சேரியிலிருந்து ஆர்.ராஜலக்ஷ்மி.

நெஞ்சம் நெகிழ்கிறது!

''வசந்த் தொலைக்காட்சியில் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் 'இந்தியா, எங்கள் தேசம் இந்தியா’ என்று தேச பக்திப்பாடலை ஒளிபரப்புகிறார்கள். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கணீர் குரலும், காட்சியமைப்பும் பரவசத்தில் ஆழ்த்துகிறது'' என்று நெகிழ்கிறார், திருச்சி, மேலச்சிந்தாமணியிலிருந்து என்.சாருலதா.

காலத்துக்கேற்ற மாற்றம்!

''அது ஒரு அலைபேசி நிறுவன விளம்பரம். பொம்மலாட்டக் கலையை பலரும் மறந்ததைக் கவலையோடு யோசிக்கிறார், ஒரு பெண்மணி. அதேசமயம், நடனக் கலை மீது மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தைக் காண்கிறார். இதனால் அவருக்கு ஒரு யோசனை தோன்ற, நடனக் கலையை பொம்மலாட்டத்தில் புகுத்தி புதுமை படைக்கிறார். மக்கள் ஆர்வத்தோடும் ஆச்சரியத்தோடும் வரவேற்கின்றனர். விளம்பரம் என்றாலும், அழிந்து வரும் கலைகள் மீது, காலத்துக்கேற்ற அக்கறையைக் காட்டியிருப்பது அருமை'' என்று பாராட்டுகிறார் பெருங்குடியிலிருந்து எம்.புவனேஸ்வரி.