Published:Updated:

பாரம்பரியம் Vs பார்லர் - 4

இந்துலேகா.சி

பாரம்பரியம் Vs பார்லர் - 4

பார்லர்

டந்த இதழ்களில் பொடுகுத் தொல்லையில் இருந்து மீண்டு, முடியை ஆரோக்கியமாக பாதுகாப்பது பற்றி விளக்கிய 'கிரீன் டிரெண்ட்ஸ்’ கற்பகம், இளநரையை சமாளிப்பது பற்றி தொடர்ந்து பேசுகிறார்...  

##~##

''கேசத்தின் அடிப்பகுதியில ஹேர் ஃபாலிக்கிள் இருக்கும். அதுலதான் மெலனின்னு சொல்லப்படற பிக்மென்ட் இருக்கும். அதுதான் நம்மோட முடிக்கு கறுப்பு நிறத்தைக் கொடுக்கும். ஆனா, இப்ப இருக்குற வாழ்க்கை முறையில மன அழுத்தம், சத்தில்லாத உணவுப் பழக்க வழக்கம், அதிகமான டிடெர்ஜென்ட் தன்மையுள்ள ஷாம்புவை உபயோகிக்கிறதுனு இது மாதிரி விஷயங்களால, முடியோட ஃபாலிக்கிள், பிக்மென்ட்டை உற்பத்தி பண்றதை நிறுத்திடும். இதனால பாதிக்கப்படும் முடி அதோட இயற்கையான கறுப்பு நிறத்தை இழந்து, நரை தோன்றும். வாழ்க்கை முறை தவிர, பரம்பரையும் இளநரைக்கு காரணமாகலாம்.

இளநரையைப் பொறுத்தவரை இதை சரிபண்றதுக்கோ, வந்துடாம தடுக்கறதுக்கோ பார்லர் சர்வீஸ்ல ட்ரீட்மென்ட் இல்ல. ஆனா, வந்ததுக்கு அப்புறம் அதை மறைக்கறதுக்கு வழி இருக்கு. அதுதான் கலரிங்! 'கலரிங்’கை பொறுத்தவரை நேச்சுரல் கலர்ஸ், ஆர்டிஃபீஷியல் கலர்ஸ்னு ரெண்டு வகை இருக்கு. பார்லர் சர்வீஸ்ல, இளநரையால பாதிக்கப்பட்டவரோட வயசு மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏத்தமாதிரி கலர்ஸ் தேர்வு செய்வோம். அதாவது, கல்லூரியில் படிக்கும் பொண்ணுக்கு சன் கிஸ்டு பிரவுன், வார்ம் மோக்கா, டீப் காப்பர்னு ரொம்ப ஃப்ரீக்கியான நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதுவே வேலைக்குப் போறவங்களா இருந்தா, கறுப்பு அல்லது கறுப்புக்கு நெருக்கமான நிறங்களையே தேர்வு செய்வோம்.''

''கலரிங் பண்றது முடிக்கு கெடுதல்னு ஒரு கருத்து இருக்கே?''

''எதையுமே சரியான விதத்துல செஞ்சா எந்தப் பிரச்னையும் இல்லை. தரமான பார்லரைத் தேர்ந்தெடுத்து, ஒரு நல்ல அழகுக்கலை நிபுணர்கிட்ட கலரிங் செய்துக்கணும். முதல்ல, பயன்படுத்தப்போற கலரை கஸ்டமரோட காதுக்கு பின்புறம் கொஞ்சமா அப்ளை செய்து, ஏதாவது அலர்ஜி வருதானு பரிசோதிப்பாங்க. அப்புறம் கஸ்டமரோட வயசு, கேசத்தின் தன்மை இதற்கேற்ப அவங்களுக்கான நிறத்தை தேர்வு செய்து...  

முதலில் வேர் பகுதிக்கு அருகிலும், அடுத்ததா முன், பின் முடியின் மற்ற பகுதிகளுக்கும் அப்ளை செய்வாங்க. ஒவ்வொரு இடத்துக்கும் கலரை ஊற வைக்க வேண்டிய நேரம் வித்தியாசப்படும். அதுக்கப்புறம் கலர் புரொடெக்டிங் ஷாம்புவைப் பயன்படுத்தி, கேசத்தை அலசிவிடுவாங்க. கலர் பண்ணதுக்கு அப்புறமா நாம தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு தடவையும் கலர் கொஞ்ச கொஞ்சமா போகும். அதனால முடிக்கு கலர் பண்ணதுக்கு அப்புறம், வீட்லயும் தொடர்ந்து கலர் புரொடெக்டிங் ஷாம்புவை யூஸ் பண் ணணும். இந்த மாதிரி பராமரிப்பு வழிகளையும் கற்றுக் கொடுப்பாங்க.

கலரிங்ல மூணு வகை இருக்கு. ஒண்ணு அட்வான்ஸ் கலரிங் - முடி நரைக்காதவங்க ஸ்டைலுக்காகவும், நரைத்த முடி உள்ளவர்கள் அதை மறைக்கறதுக்கும் பயன்படுத்துறது. அடுத்தது கலர் சேஞ்சிங் - ஏற்கெனவே இருந்த கலரை மாற்றி புதுசா டிரை பண்றது. மூணாவது ரூட் டச் அப் - நரைமுடிக்கு கலர் பண்ணினதுக்கு அப்புறம், அதைத் தொடர்ந்து புதுசா வளரும் முடிக்கு, அதன் வேர் பகுதிக்கு அருகில் ஆரம்பித்து அது வளர்ந்துள்ள உயரம் வரை கலர் பண்ணுவது. பொதுவா மாசத்துக்கு 1.25 சென்டிமீட்டர் முடி வளரும். பரம்பரை, உணவுப்பழக்கத்தை பொறுத்து இந்த அளவு மாறுபடும். அதனால குறைந்தது ரெண்டு இல்ல மூணு மாசத்துக்கு ஒரு முறை கலர் பண்ண வேண்டி இருக்கும்.

இவ்ளோ விஷயங்கள் இருக்கும்போது, நீங்களே கடையில போய் ஒரு கலரிங் புராடக்ட் வாங்கிட்டு வந்து, பேட்ச் டெஸ்ட் எடுக்காம... எப்படி அப்ளை பண்ணணும், எவ்வளவு நேரம் ஊற வைக்கணும்னு இப்படி எதுவுமே தெரியாம பயன்படுத்தினா, உங்க முடிக்கு உத்தரவாதம் இல்லை!''

பாரம்பரியம் Vs பார்லர் - 4

பாரம்பரியம்

சென்ற பகுதியின் தொடர்ச்சியாக, தலையில் மெழுகு போல் படியும் 'ஸ்கேலி டேண்ட்ரஃப்’ஐ போக்க, இயற்கை முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகளைக் கூறுகிறார், 'கேர் அண்ட் கியூர் அரோமா கிளினிக்’ கீதா அஷோக்.

''ஸ்கேலி பொடுகிலிருந்து விடுபட, முதல் நாள் தலைக்கு குளிச்சிட்டு, அடுத்த நாள் ஆவாரம் பூ பொடி, வில்வ இலைப் பொடி, ஆலம் விழுது பொடி மூணையும் சம அளவு எடுத்து, புளிப்பான மோரில் கலந்து, அதில் 10 - 15 சொட்டு வேப்பெண்ணெயும் கலந்துக்கணும். அதை எண்ணெய் இல்லாத வெறும் தலையில் நல்லா அப்ளை பண்ணி, பெரிய பல்லு சீப்பால தலை வாரணும்.  

நீராவி கருவி பயன்படுத்தியோ அல்லது சில்வர் ஃபாயில் பேப்பரை தலை முழுசும் அழுத்தி பிரஸ் செய்தோ செட் பண்ண, தலை சூடாகி மூலிகைக் கலவை தலைக்குள் நல்லா இறங்கும். ரெண்டு மணி நேரம் ஊறவெச்சு அப்புறம் தரமான ஷாம்புவால அலசிடலாம். இதுபோல் தொடர்ந்து மூணு, நாலு முறை செய்தாலே நல்ல ரிசல்ட் தெரியும்.  

இதே பிரச்னைக்கு இன்னொரு தீர்வும் இருக்கு. பொடுதலைப் பொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணிப் பொடி, துத்தி இலைப் பொடி, நில வாகைப் பொடி இதெல்லாம் தலா 50 கிராம் எடுத்துகிட்டு, முதல் நாள் இரவே ஐந்நூறு மில்லி தண்ணியில கலந்து நல்லா தைல வாசனை வரும் வரை கொதிக்கவிடணும். கொதித்ததை இறக்கி மூடி வெச்சிடணும். மறுநாள் அதை வடிகட்டி, அந்தச் சாற்றில் 200 மில்லிக்கு 50 மில்லி வினிகர் என்ற அளவில் கலந்து பாட்டில்ல ஊத்தி ஃப்ரிட்ஜ்ல வெச்சுக்கலாம்.

பாரம்பரியம் Vs பார்லர் - 4

இந்தக் கலவையை பஞ்சுல தொட்டு தலை முழுசுக்கும் ஒத்தி ஒத்தி அப்ளை செய்துட்டு, ஒரு மணி நேரம் ஊறவெச்சு, தலைக்குக் குளிக்கலாம். அல்லது முதல் நாள் இரவே தலையில தடவி மறுநாள் தலைக்குக் குளிக்கலாம். இதை தலைக்கு தடவியதும் ஒருவித அரிப்பு இருக்கும். அதாவது இந்தக் கலவை ஸ்கேலி பொடுகை ஒழிக்க நல்லா வேலை செய்யுதுனு அர்த்தம். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் ஸ்கேலி பொடுகு தொல்லையே இருக்காது' எனும் கீதா அஷோக், தொடர்ந்து தலை சார்ந்த முக்கிய பிரச்னையான இளநரையைப் பற்றிப் பேசினார்...

''அந்தக் காலத்துல இளநரை பரம்பரை காரணமா மட்டுமே வந்துட்டிருந்துச்சு. ஆனா, இந்தக் காலத்துல எட்டு வயசு, பத்து வயசு குழந்தைங்களுக்குகூட இளநரை வருது. எல்லாத்துக்கும் காரணம், மாறிவரும் நம்ம ளோட வாழ்க்கை முறைதான். 30 வயசுக்கு மேல உள்ளவங்க பயன்படுத்துற ஷாம்புவை விளம்பரத் தாக்கத்தால குழந்தைகளுக்கும் பயன்படுத்துறதுல ஆரம்பிச்சு, சத்தில்லாத ஜங்க் ஃபுட் சாப்பிடறதுனால ஏற்படற அயன், காப்பர் போன்ற விட்டமின் குறைபாடு வரை இளம் நரைக்கான காரணங்கள் பெருகிக்கிடக்கு.

சின்ன வயசுலயே முடி நரைக்காம இருக்கவும், ஆரம்பகால இள நரையை ஒழிப்பதற்கும், ஏற்கனவே உள்ள இளநரைக்கு மாற்று வழியையும் பற்றி அடுத்த இதழில் அலசலாம்...''

பளீரிடும்...