ரிமோட் ரீட்டா

ஒரு திறமை!
நம்ம சீரியல் ஆர்ட்டிஸ்ட் காவ்யா, லைட் மியூசிக், கார்ப்பரேட் ஈவன்ட்ஸ்ல எல்லாம் மைக் பிடிச்சுப் பாடுறதோட, அழகா ஆடுறாங்களாம்! ''சொல்லவே இல்லையே..!''னு கேட்டா, சிரிக்கிறாங்க காவ்யா!
'சின்ன வயசுல இருந்தே நல்லா பாடுவேன் ரீட்டா. அதுக்காக முறையா பாட்டு கிளாஸ் எல்லாம் போனதில்ல. எல்லாம் கேள்வி ஞானம்தான். 15 வருஷமா புரொஃபஷனலா பாடிட்டு இருக்கேன்''னு சொன்னவங்ககிட்ட,
''பாட்டு சரி, டான்ஸும் ஆடுறீங்களாமே..? அதுதானே இப்ப சேனல் டாக்''னு கேட்டேன்.
''சிங்கர்ஸ் ஆடுறதுதானே இப்போ டிரெண்ட்!''னு சொல்லி சிரிச்ச காவ்யா,
''ஏழு வருஷத்துக்கு முன்ன கார்ப்பரேட் ஈவன்ட்ஸுக்கு பாட்டுப் பாடும்போது, தனியா தெரியணும்னு டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துட்டே பாடுவேன். இப்போ பாடுறவங்க எல்லாருமே ஆடவும் செய்றாங்க. இருந்தாலும், டி.வி. ஆர்ட்டிஸ்ட்டுங்கிற வகையில ஈவன்ட் பேனர், போஸ்டர்ல எல்லாம் மேடத்தோட முகம்தான்... தெரியும்ல!''னு முகத்துல பெருமை கூட்டினாங்க.
''அது சரி, அம்மணி டி.வி. பக்கம் வந்து சேர்ந்தது எப்படிங்கோ?''னு ஒரு கேள்வியைப் போட்டேன்.
''ஆரம்பத்துல வெளிநாட்டு சேனல்களுக்கு, சினிமா செலிபிரிட்டிகளை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியைப் பண்ண ஆரம்பிச்சேன். அது மூலமா ஜெயா டி.வி-யில ஸ்டார் இன்டர்வியூ நிகழ்ச்சிகள் செய்யும் வாய்ப்பு கிடைச்சுது. அங்க இருந்து சன் டி.வி 'செல்லமே’, 'திருமதி செல்வம்’, 'கார்த்திகை பெண்கள்’, 'தென்றல்’, கலைஞர் டி.வி. 'பார்த்த ஞாபகம் இல்லையோ’னு தொடர்ந்து சீரியல்கள் பண்ணிட்டு, இன்னொரு பக்கம் பாட்டும் பாடிட்டு இருக்கேன்''னு கள்ளமில்லாம தன் கலக்கல் கிராஃப் சொன்னாங்க காவ்யா!
பாடிக்கிட்டே ஆடிக்கலாம், ஆடிக்கிட்டே பாடிக்கலாம்!

ஒரு பேட்டி
கொலவெறி... கலைவெறி...
''என்னாச்சு பாலாஜி, தமிழ் மக்கள் மேல உனக்கு ஏன் இப்படி ஒரு 'கொலவெறி’?''
- ஜீ தமிழ் சேனல்ல 'ஒய் திஸ் கொலவெறி’ ஷோ பண்ணும் பிக் எஃப்.எம்., 'ஆர்ஜே' பாலாஜிக்கு கொக்கி போட்டேன்.
''நிகழ்ச்சியோட பெயரைப் பார்த்து புரளி கிளப்பாதே ரீட்டா. இதுல கலந்துகிட்டவங்க எல்லாம், 'இந்த நிகழ்ச்சி எங்களைத் திரும்பவும் சின்னக் குழந்தைங்களாவே மாத்திடுச்சு, ரொம்ப ஜாலியா இருக்கு!’னு சொல்லிட்டுப் போறாங்க!'' என்று காலரைத் தூக்கிவிட்டுக்கிட்டார் பாலாஜி.
''சரி, 'ஒய் திஸ் கொலவெறி’யில பாலாஜி எப்படி..?''
##~## |
''நான் பக்கா சென்னைப் பையன். 'ஆர்ஜே'-வா வேலை செய்யும்போது, கலகலனு பேசறதைப் பார்த்து, நிறைய சேனல்ல காம்பயரிங் கூப்பிட்டாங்க. அப்படி வந்ததுதான் விஜய் டி.வி-யின் 'சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி. நமக்கு எப்பவுமே ஜாலியா இருந்து, அடுத்தவங்களயும் ஜாலியா வெச்சுக்கதான் புடிக்கும். ஆனா, ஜாலி மட்டுமே இல்லாம எலிமினேஷன், அழுகைனு ரியாலிட்டி ஷோவா இருந்ததால, என்னோட கேரக்டருக்கு அது செட் ஆகல. கமிட் ஆகிட்டதால, நிகழ்ச்சியை முடிச்சுக் கொடுத்துட்டு வந்துட்டேன். தொடர்ந்து நிறைய சேனல்ல வாய்ப்பு கிடைச்சாலும், ஜீ தமிழ் சேனல்ல 'ஒய் திஸ் கொலவெறி’ நிகழ்ச்சியோட டீடெயில் சொன்னதும், உடனே 'ஓ.கே’ சொல்லிட்டேன்.''
''அப்பூடி என்ன டீட்டெயிலு..?''
''இதேமாதிரி ஷோவை உலகம் முழுக்க 10, 12 சேனல்கள்ல பண்ணிட்டு இருக்காங்க. அமெரிக்காவில் உள்ள 'ட்ரூ’ சேனல்ல இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகுது. 'யூடியூப்’ல கில்லர் கரோகி (Killer karaoke) நிகழ்ச்சியை நீயே பாரேன். இந்த நிகழ்ச்சியை நடத்தற 'ஸோடியாக்' புரொடக்ஷன் கம்பெனியில பேசி, ரைட்ஸ் வாங்கிதான், தமிழ்ல பண்ணிட்டிருக்கோம். அமெரிக்க நிகழ்ச்சிக்கு, ரொம்ப ரிஸ்க்கான டாஸ்க் கொடுப்பாங்க. அதை நம்ம மக்களுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தி பண்ணிட்டிருக்கோம். மத்த ரியாலிட்டி ஷோ மாதிரி இல்லாம, முழுக்க பொழுதுபோக்கான நிகழ்ச்சியா இருக்கறதால, எனக்கு சூப்பரா செட் ஆயிடுச்சு!''
''ஆனா, போட்டியில கலந்துக்க வர்றவங்கள நீங்க படுத்துறபாடு தாங்க முடியலையே..!''
''ஆன் ஸ்கிரீன்ல மட்டும் பார்த்துட்டு அப்படி சொல்லாதே ரீட்டா. ஒவ்வொரு போட்டியாளரைத் தேர்ந்தெடுத்ததும் அவங்களோட உடல் நிலை, அவங்களுக்கு என்னவெல்லாம் அலர்ஜினு எல்லாத்தையும் செக் பண்ணிட்டு, அவங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் போட்டியை முடிவு பண்ணுவோம். திரையில் ரெண்டு, மூணு நிமிஷத்துக்கு வர்ற ஒவ்வொரு போட்டிக்கு முன்னயும், அதை ரெடி பண்றதுக்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். தவிர, செட்டுல எப்பவுமே முதலுதவிக்கு ஒரு டீம் ரெடியா இருக்கும். இப்படி எல்லாத்துலயும் கவனம் செலுத்தறதுதான் இந்த நிகழ்ச்சியோட வெற்றி!''
- 'தம்ஸ் அப்’ காட்டுற பாலாஜி, டி.வி-யில் 'விஜே'-வாக கலக்க ஆரம்பித்துவிட்டாலும், பிறந்த வீட்டை மறக்காம ரேடியோ 'ஆர்ஜே' வேலையையும் கண்டினியூ பண்ணிட்டு இருக்கார்!
கலக்குங்க!

அட்றா சக்க!
அதே அதகளம்!
தீபாவளியப்ப, விஜய் டி.வி-யில, 'விஜய் டி.வி ஸ்டார்ஸ்' கலந்துகிட்ட தீபாவளி ஸ்பெஷல் அலப்பறையை பார்த்து, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்காத வங்களே இல்லைனு சொல்லலாம். அதுவும் கோபிநாத், டி.டி, மாகாபா இவங்கள... 'காமெடியில் கலக்குவது எப்படி?’ புரோகிராமோட மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகள் இமிடேட் பண்ணி னது, செம ஹிட். அதேமாதிரி வித்தியாச மான விஜய் ஸ்டார்ஸ் காமெடி ஷோ, பொங்கலுக்கும் வருதாம்டோய்!
வாசகிகள் விமர்சனம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
உத்வேக 'சாம்பியன்ஸ்’!
''சன் டி.வி.யில் ஞாயிறுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான 'சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் ஒவ்வொருவரும் மிகுந்த தன்னம்பிக்கை, தைரியம், கடின முயற்சியை வெளிப்படுத்துகின்றனர். மாற்றுத்திறனாளிகளின் இந்தத் திறமைகளைப் பார்க்கும்போது, தன்னம்பிக்கையுடனும், நம்மால் முடியும் என்ற உறுதியுடனும் அனைவருமே இருக்க முடியும் என்கிற உத்வேகம் பிறக்கிறது'' என்று உருகுகிறார் சென்னை, ஈக்காட்டுதாங்கலில் இருந்து இந்திராணி பொன்னுசாமி.
பாசக்கார பிஸ்கட்!
''அது, பிஸ்கட் விளம்பரம். அண்ணன் - தங்கை பாசம் அரிதாகி வரும் இந்தக் காலத்தில், விளம்பரத்தில் அண்ணனாக வருபவர், தங்கையிடம் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டை பங்கு போடுவதற்காக பண்ணும் பிரயத்தனங்கள் அருமை. பாசத்தை பொங்க வைத்து, பழைய நினைவுகளுக்கு இழுக்கிறது இந்த விளம்பரம்'' என்று நெகிழ்கிறார் நெல்லையில் இருந்து ஆர்.கற்பகபூமி.
செய்திக்கு கூடுதல் நேரம்!
''சன் டி.வி-யில் காலை, இரவு அரை மணி நேரம், மதியம் 5 நிமிடம் மட்டுமே செய்திகள் ஒளிபரப்பாகின்றன. சீரியல், சினிமா நிகழ்ச்சிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கும்போது, நாட்டுக்குத் தேவையான இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் கூடுதல் நேரம் கொடுத்து ஒளிபரப்பலாமே'' என்று ஆலோசனை சொல்கிறார் வந்தவாசியில் இருந்து பி.கஸ்தூரி.