உணவில் இருக்கு கருங்கூந்தல் ரகசியம்!இந்துலேகா.சி
##~## |
பார்லர்
இளநரைக்கான காரணத்தைப் பற்றியும், அதற்கு மாற்று வழியான ஹேர் கலரிங் பற்றியும் கடந்த இதழில் விளக்கிய 'கிரீன் டிரெண்ட்ஸ்’ நிறுவனத்தின் கற்பகம், தவறான முறையில் கலரிங் செய்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தொடர்கிறார்...
''ஏற்கெனவே சொன்னது மாதிரி, தரமான பார்லர்ல ஹேர் கலர் பண்ணினா, பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். ஆனா, செலவுக்குப் பயந்து, தரமில்லாத பார்லருக்குப் போனா, இளநரை பிரச்னையோட... இன்னும் பல பிரச்னைகளும் சேர்ந்துக்கும். அதுக்காக விலையுயர்ந்த, தரமான காஸ்ட்லி ஹேர் கலரிங் புராடக்டை வாங்கி, வீட்டுலயே செஞ்சுக்கலாம்னு, தப்புத்தப்பா செய்துட்டாலும் பிரச்னைதான். உதாரணமா, வீட்டிலேயே கலரிங் பண்ணும்போது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கலரிங் புராடக்டை கேசத்தில் ஊறவிட்டா, அதில் உள்ள கெமிக்கல் காரணமா... நம்ம முடியானது தன்னோட இயற்கையான ஈரப்பதத்தை இழந்து வறண்டு போறதோட, பளபளப்பு, பொலிவு இதையெல்லாமும் இழந்துடும்.
கலரிங் புராடக்டை கேசத்தில் மட்டும் இல்லாம ஸ்கால்பிலும் பரவுவதுபோல அப்ளை செய்துட்டா, கெமிக்கல் காரணமா ஸ்கால்ப் வறண்டு போறதோட, அரிப்பு, அலர்ஜி மாதிரியான பிரச்னைகளும் ஏற்படலாம். தோலோட அதிகபட்ச வறட்டுத்தன்மை காரணமா பொடுகு ஏற்படுறதுக்கான வாய்ப்பும் அதிகம்.
மலிவான விலையிலும், தவறான முறையிலும் கலரிங் செய்து... அதன் விளைவா தலையில் தாங்க முடியாத அரிப்போ, எரிச்சலோ, சிவந்த தடிப்புடன் கூடிய அலர்ஜியோ ஏற்பட்டா... உடனே பார்லருக்குப் போகாம, நேரடியா சரும சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போகணும்.

தவறான முறையில் கலரிங் செய்றதால ஏற்படும் முடியின் வறட்டுத்தன்மை காரணமா... முடியில் உள்ள கியூட்டிகள் எனப்படும் முடியின் பாதுகாப்பு அடுக்குகள் கிழிஞ்சி போயிடும். அதை திரும்பவும் ஒட்ட வைக்க முடியாது. நுனி முடிவு பிளவு பிரச்னைக்கும் இதுவே காரணமாகிடும். இந்த பிரச்னையை அடுத்த இதழ்ல பேசுவோம்...''
பாரம்பரியம்
சென்ற இதழ் தொடர்ச்சியாக இளநரையைப் போக்க, வீட்டிலேயே தீர்வு காணும் வழிமுறைகளைக் கூறுகிறார் 'கேர் அண்ட் க்யூர் அரோமா கிளினிக்’ கீதா அஷோக். ''ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் ஆயில்னு விளம்பரத்தைப் பார்த்துட்டு உங்க முடியின் தன்மைக்கு செட் ஆகாத புராடக்டை பயன்படுத்துறதை விட, சின்ன வயசுல இருந்தே நீங்க பழகின புராடக்ட்களை பயன்படுத்தினாலே பாதி பிரச்னை தீர்ந்துடும். கூடவே, வெளிப்புற கவனிப்பைவிட, நாம் சாப்பிடற சாப்பாடுதான் நம்ம கேசத்தின் ஆரோக்கியத்துக்கு அடிப்படை அமைக்கும். முளைகட்டிய பயறு, பயத்தமாவு உருண்டை, கறிவேப்பிலை பொடி சாதம், உளுத்தங்களி... இதுமாதிரியான சத்தான உணவுகளை சாப்பிட்டா, கேசம் அடிப்படையிலேயே சத்தாக வளர ஆரம்பிக்கும்.
பரம்பரையா இளநரை வரும் வாய்ப்பு இருக்கறவங்க விளக்கெண்ணெய், கடுகெண்ணெய் ரெண்டையும் சமமா கலந்து, வாரத்துக்கு ரெண்டு தடவை தலைக்கு தேய்ச்சு ஊறவெச்சு குளிக்கறது நல்லது. மருதாணி, கறிவேப்பிலை, கருஞ்சீரகம், மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைப்பொடி, செம்பருத்தி இலைப்பொடி... இவை எல்லாத்தையும் சமமா எடுத்து, ரெண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய், ரெண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் கலந்து, ஒரு கிண்ணத்தில் முந்தின நாள் இரவே ஊறவெச்சுடணும். சுமார் எட்டு மணி நேரம் ஊறினா போதும். அடுத்த நாள், எண்ணெய் பிசுக்கில்லாத தலை முடியை கற்றை கற்றையாக எடுத்து, இந்த கலவையை அப்ளை செஞ்சு, ரெண்டு மணி நேரம் ஊறவிடணும். பிறகு தரமான ஹெர்பல் ஷாம்பு போட்டு, மிதமான சூடு அல்லது குளிர்ந்த நீரில் நல்லா அலசணும். இதை வாரம் ஒண்ணு அல்லது ரெண்டு முறை தொடர்ந்து செய்தா, பரம்பரை காரணமா முடி நரைக்கறதை தள்ளிப் போடலாம்.
பொடுகை குறைக்கிறேன் பேர்வழினு அடிக்கடி 'ஆன்டி டேண்ட்ரஃப் ஷாம்பு’ பயன்படுத்தினா, அதிலிருக்கும் கீடகொனாஜெல் எனும் கெமிக்கலால், முடியின் கருமை நிறம், செந்நிறமாக மங்க ஆரம்பிக்கும். அதனால் இளநரை இருப்பவர்கள் ஆன்டி டேண்ட்ரஃப் ஷாம்புவை தவிர்க்கறது நல்லது.
சிலருக்கு முடியோட மேல்பகுதி நரைச்சும், வேர்ப்பகுதி கறுப்பாவும் இருக்கும். இதை ஸ்கேன் செய்து பார்த்து தெரிஞ்சுக்கலாம். இந்த பிரச்னைக்கு, முடியை குட்டையா வெட்டிவிட்டு, பிறகு தேவையான சிகிச்சை எடுத்துக்கிட்டா, முடியின் கருமையை மீட்டுடலாம். அதேமாதிரி ஒண்ணு, ரெண்டு முடி நரைக்க ஆரம்பிச்சதுமே சிகிச்சை எடுத்துக்கிட்டா, இளநரை பரவாம தடுக்கலாம்.
'நரைமுடியைப் பிடுங்கினா... நிறைய நரைமுடி முளைக்கும்'னு சொல்றது பொய் நம்பிக்கை. நரைமுடி அதிகம் பரவாம இருக்க அத்திப் பழம், முருங்கைக் கீரை, பசலைக் கீரை, புளூ பெர்ரி, புரூக்கோலி, காளான், பரங்கிக்காய், அச்சு வெல்லம், கறுப்பு எள், கறுப்பு காராமணி, தோலுடன் கூடிய உளுந்து இதையெல்லாம் தொடர்ந்து எடுத்துக்கலாம். இதெல்லாம் கேசத்தோட கருமை நிறத்தை மீட்கறதோட... தக்கவும் வெச்சுக்கும்.
பளீரிடும்..

நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!
இன்றைய சூழலில், முப்பது வயதுக்குள் நரை வந்தால், அதை இளநரை என்று சொல்லலாம். இந்த இளநரை வேரிலிருந்தே நரைக்க ஆரம்பித்தால் அதை மாற்றவே முடியாது. ஆனால், டை போடலாம். அதற்கான இயற்கை டை இதோ!
கறுப்பு வால்நட் கொட்டை, நீலி அவுரி இலை, நெல்லி முள்ளி, ஒற்றை செம்பருத்தி பூ, அஞ்சனக் கல்பொடி, பிள்ளையார் குன்றிமணி (இதெல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). குறிப்பிட்ட அளவுக்கு இவற்றை எடுத்துக் கொண்டு தனித்தனியாக பொடித்து, அதிலிருந்து சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் நாள் இரவே பீட்ரூட்டை துருவி எடுத்து, தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்க வேண்டும். இந்தச் சாற்றுடன் தயாராக இருக்கும் பொடிகளையும் இரும்பு பாத்திரம் ஒன்றில் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதுதான் இயற்கை ஹேர் டை. அடுத்த நாள் காலை... எண்ணெய், அழுக்கு, பிசுக்கு இல்லாத சுத்தமான தலையில் தடவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து அலசினால், இயற்கை ஹேர் டையினால் கூந்தல் பளபளக்கும். இந்த டையை 15, 16 வயதினர்கூட உபயோகிக்கலாம். பக்கவிளைவுகள் ஏதுமில்லை!