Published:Updated:

பாரம்பரியம் VS பார்லர் - 6

நுனி முடிப் பிளவு... நுணுக்கமான டீரீட்மென்ட் அவசியம்!இந்துலேகா.சி

##~##

பார்லர்

'நுனி முடிப் பிளவு' (split ends) பிரச்னைக்கான காரணங்களையும், பிரச்னை வராமல் தடுப்பதற்கான வழிகளையும், முடிப் பிளவுக்கான பார்லர் சர்வீஸ் பற்றியும் இங்கே விளக்கமாகச் சொல்கிறார் 'கிரீன் டிரெண்ட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த கற்பகம்...  

''இப்ப இருக்கும் சூழல்ல மாறி வரும் உணவுப் பழக்கம், காற்று மாசு, தரமில்லாத கெமிக்கல் புராடக்ட்களை பயன்படுத்துறது... இந்த மாதிரி பல காரணங்களால, தலையில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்த் தன்மையோட அளவு குறைஞ்சுடும். முடியோட நுனிவரை இந்த இயற்கை எண்ணெய் பரவினாதான்... முடிக்கு நல்லது. அப்படி இல்லாம போறதால... முடி வறட்சியாகி, முடியில் இருக்கும் கியூட்டிகள் கிழிஞ்சுடும். இதுதான் நுனி முடிப் பிளவுக்கான ஆரம்பம். அதை அப்படியே விட்டால், முடி வலுவிழந்து, உடைய ஆரம்பிச்சுடும். இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா... கண்ணாடி போலத்தான் கார்கூந்தலும். உடைஞ்சா... ஒட்டவைக்க முடியாது.

முடி வறண்டு போகாமல் இருக்க, அதிகமான கெமிக்கல் கலந்துள்ள கடின வகை ஷாம்பு பயன்படுத்துறதை முதல்ல நிறுத்தணும். அப்புறம் மலிவு விலை ஹேர் கலரிங் புராடக்ட், தரக்குறைவான ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் இதெல்லாம் செய்யறதை நிறுத்தணும். அவசர அவசரமா தலை வாருறது, தலை முடியை அடிச்சு துவட்டுறது, நீந்தும்போது தலைமுடியை கவர் பண்ணாமல் இருப்பது, ஹேர் ஸ்டைல் பண்றதுக்காக எதிர்ப்பக்கமா தலை முடியை வாருறது (Back combing), ஹேர் டிரையர் பயன்படுத்துறது, குளோரின் கலந்த தண்ணியில தலை குளிக்கறது... இதையெல்லாம் செய்யாதீங்க. அடுத்து, நல்ல சத்துள்ள உணவுகளா சாப்பிடறதை கடைபிடிக்கணும். அப்பதான் முடியின் வேருக்கு ஊட்டச் சத்து கிடைக்கும்.

ஏற்கெனவே சொன்னமாதிரி, உடைஞ்ச முடியை ஒட்டவைக்க முடி யாது. அதனால் நுனி முடிப் பிளவு வந்த தும், தரமான பார்லருக்குப் போய், ஸ்பெஷல் ஹேர் கட் செய்துக்கணும். இதுல என்ன பண்ணுவோம்னா... பிளவு பட்டிருக்குற பகுதி வரை முடியை டிரிம் செய்துட்டு, முடிகளைக் கற்றை கற்றையா பிரிச்சு, ஒவ்வொரு பிரிவையும் முறுக்கி, பக்கவாட்டு முடிகளோட நுனியை டிரிம் செய்வோம். இதன் மூலமா, நுனி முடிப் பிளவு பிரச்னையிலிருந்து தற்காலிகமா தப்பிக்கலாம்.

பாரம்பரியம் VS பார்லர் - 6

வறட்சி காரணமாக, திரும்பவும் இதே பிரச்னை வர வாய்ப்பிருக்கு. அதைத் தடுக்க... வாரம் மூணு முறையாவது எண்ணெய் தடவி, தரமான ஷாம்பு பயன்படுத்தி தலைக்குக் குளிக்கறது நல்லது. தொடர்ந்து 'சீரம்’ பயன் படுத்தறதும் நல்லது. இதன்மூலமா முடிக்கு ஊட்டச்சத்து கிடைக்கறதோட சன் ஸ்கிரீனாவும் செயல்படும்.

இதுக்கெல்லாம் முன்ன... தரமான பார்லர்ல, ஒரு டீப் கண்டிஷனிங் ட்ரீட் மென்ட், ஹேர் ஸ்பா செய்துகிட்டா...  முடியோட வேர்ல இருந்து நுனிவரை நல்ல ஈரப்பதத்தோட, பளபளப்பா    வும், ஆரோக்கியமாவும் வெச்சுக்கலாம். அதைப் பத்தி அடுத்த இதழ்ல பேசுவோமா...''

பாரம்பரியம்

நுனி முடிப் பிளவைப் போக்குவதற்காக, வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய தீர்வுகள் பற்றி பேசுகிறார்... 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக் கீதா அஷோக்.

''நுனி முடிப் பிளவு பிரச்னைக்கு மொத்தம் ஐந்து காரணங்கள் இருக்கு. முதல் காரணம், ஊட்டச்சத்துக் குறைபாடு. இந்தக் காலத்துல, சத்துணவு எடுத்துக்கிறவங்ககூட, தொடர்ந்து ஒரே சத்தையே எடுத்துக்கறாங்க. அந்தக் காலம் மாதிரி கூட்டு, பொரியல், அவியல், துவையல் எல்லாம் இப்ப இல்ல. அதனால பேலன்ஸ்ட் டயட் நமக்கு கிடைக்கறதில்ல. இது உடனடியா கேசத்தைப் பாதிக்கும். ஆனா, அது நமக்குத் தெரியாது. ஏன்னா... தலைமுடி பாதிக்கறதாலே வலி எதுவும் எடுக்காதே! சத்தில்லா உணவுப் பழக்கத்தால், முடியின் வேருக்கு சத்துக் குறைவு ஏற்படும். இதனால் முடி வறண்டு போய், நுனி முடி பிளவு ஏற்படும். உள்ளுக்குள் பிரச்னை இருக்கும்போது, உடைஞ்ச முடியை வெட்டினாலும், பிரச்னை தொடரத்தான் செய்யும். அப்படியே விட்டா... நுனி முடி மட்டும் இல்லாம, வேர் வரைக்கும் முடி பிளந்து செல்ல வாய்ப்பு அதிகம். இப்படி பாதிக்கப்பட்டவங்க, தலைமுடியில் எண்ணெய் இல்லாதபோது, முடியை என்னதான் வாரினாலும் பரட்டைத் தலைபோல முடி அடங்காமல் இருக்கும். பாதிக்கப்பட்டவங்க பிளட் டெஸ்ட் எடுத்து டாக்டர்கிட்ட காட்டி, அவர் சொல்லும் உணவுப் பழக்கத்தை கடைபிடிச்சா, ஆரோக்கியமான தலை முடிக்கு உத்தரவாதம்.

பாரம்பரியம் VS பார்லர் - 6

ரெண்டாவது காரணம், உடல் சூடு மற்றும் முடி வறட்சி. உடல் சூடு அதிகமாகும்போது, அதனால் முதலில் பாதிக்கப்படுவது உச்சந்தலை, கண்கள், உள் பாதம். உச்சந்தலையில், உள்ளங்கையை அழுத்திப் பார்த்தா அளவுக்கு அதிகமான சூட்டை உணர முடியும். நம் முகத்தில் இருக்கறதவிட, உச்சந்தலை தோல் ரொம்ப மென்மையானது. சூடு அதிகமாகும்போது, உச்சந்தலையில் உள்ள தோல் உறிய ஆரம்பிக்கும். அது அப்படியே முடியின் வேர்க் கால்களில் சேர்ந்து அடைச்சுக்கும். ரத்தமோ, சத்துக்களோ வேர்க்கு போய் சேராது. அதனால் ஆரோக்கியம் இழந்து, முடி பிளவுபட ஆரம் பிக்கும். நல்ல குளிர்ச்சியான, ஆரோக்கியமான காய்கறி, பழங்களை எடுத்துக்கறதோட, தலைக்கு எண்ணெய் வெச்சு குளிச்சாலும் உடல் சூட்டை குறைச்சு, ஆரோக்கிய முடியை பெற முடியும்.

மூன்றாவது காரணம்... மலச்சிக்கல். நம்ம உடலோட இயக்கம் சரியா இருந்தாதான், முடி ஆரோக்கியமா இருக்கும். மலச்சிக்கல் ஏற்படும்போது நம்ம உடலின் நச்சுத்தன்மை உடலிலேயே தங்கிடும். அதனால ரத்தமும் அசுத்தமாக ஆரம்பிச்சுடும். இதனால தலைமுடி வலுவிழக்க ஆரம்பிச்சுடும். சுத்தமான தண்ணியை அடிக்கடி குடிக்கறது, கீரை வகைகள், நார்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் எல்லாம் சாப்பிடறதுனு வழக்கப்படுத்திக்கிட்டாலே... மலச்சிக்கல் எட்டிப்பார்க்காது. இதன் மூலமா முடியை ஆரோக்கியமா வெச்சுக்க முடியும்.

நான்காவது காரணம், ஹார்மோனல் இம்பேலன்ஸ். ஆண், பெண் ரெண்டு பேருக்குமே ஹார்மோன் சுரக்கறது சரியா இல்லைனா, தோலோட ரெண்டாவது அடுக்கு (டெர்மல்) பாதிக்கப்படும். மெலனின், அதாவது நிறமிகள் உற்பத்தியிலயும் மாற்றங்கள் ஏற்படும். முடியும் வறண்டு போகும்.

ஐந்தாவது காரணம், கெமிக்கல் புராடக்ட்கள். விளம்பரத்துல மயங்கி, ஷாம்பு உள்ளிட்ட விஷயங் களை தலைக்குப் பயன்படுத்துறது தப்பு. நம்ம தலைக்கு சரிப்பட்டு வராத புராடக்டா இருந்தா... அவ்வளவுதான். குறிப்பா, முடியை அடர்த்தியா காட்டுறதுக்கான ஷாம்பு கூடவே கூடாது. இதன் மூலமா, நம்ம முடி அளவுக்கு அதிகமா வறண்டுபோயிடும். அதோட இதுமாதிரியான ஷாம்புல இருக்கற கெமிக்கல், ரொம்ப சுலபமா ஊடுருவும் திறன் கொண்டதுங்கறதால.. முடியின் உள் கற்றையான கியூட்டிகள்ல ஊடுருவி, பாதிப்பை ஏற்படுத்தும். கெமிக்கல் நிறைஞ்ச ஷாம்பு மட்டுமில்ல... ஹேர் கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் முதலான ஸ்டைலிங் புராடக்ட்களாலயும் முடி வறண்டு, நுனி முடிப் பிளவு ஏற்படும்.

நுனி முடிப் பிளவை சரிசெய்யுறது... டீப் கண்டிஷனிங்கை வீட்டிலிருந்தே செய்துக் கறதுக்கான வழிமுறைகள்... இதையெல்லாம் அடுத்த இதழ்ல பார்க்கலாம்.''

பளீரிடும்...