விளம்பர மாடல் போல ஜொலிக்கலாம்!கட்டுரை : இந்துலேகா.சி
##~## |
பார்லர்
சென்ற இதழில் நுனி முடிப் பிளவு பற்றி பேசியிருந்தோம். மேற்கொண்டும் அதை அலசுகிறார் 'கிரீன் டிரெண்ட்ஸ்’ டிரெய்னர், பத்மா.
''நுனி முடிப் பிளவுக்கு முதல் தீர்வா, பிளவுபட்ட முடிகளோட நுனிகளை வெட்டின கையோட... பார்லரில் ஒரு 'ஹேர் ஸ்பா’ எடுத்துக்கறது நல்லது. இது முடியை கண்டிஷனிங் பண்றதோட, முடி கொட்டும் பிரச்னை உள்ளவங்களுக்கும் நல்ல ட்ரீட்மென்ட்.
இந்த ட்ரீட்மென்ட்டை எப்படிப் பண்றோம்னு விரிவா பார்க்கலாம். முதல்ல கஸ்டமருக்கு முடி ரொம்ப வறண்டு இருக்கா, இயற்கையாவே வறண்டதா... இல்லை கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் செய்ததால சேதமடைஞ்சுருக்கா, தலை ரொம்ப வறண்டு இருக்கா, பொடுகு இருக்கா, எண்ணெய் பிசுக்குள்ள தலையா... இப்படி எல்லாத்தையும் செக் பண்ணுவோம். 'ஹேர் ஸ்பா’ செய்யறதுக்கு மொத்தம் நாலு வகையான ஹெட் க்ரீம் மற்றும் மூணு வகையான கான்சென்ட்ரேட் (சீரம் போன்றது) இருக்கு. ஒவ்வொரு வகை தலை மற்றும் முடிக்கும் ஏற்ற ஹெட் க்ரீம் மற்றும் கான்சென்ட்ரேட் பயன்படுத்துவோம்.
முதல்ல ஷாம்பு போட்டு தலையை அலசிட்டு, டிரையர் இல்லாம டவலால துவட்டி, கொஞ்சம் ஈரப்பதமா இருக்கும்போதே ஹெட் க்ரீம் மற்றும் கான்சென்ட்ரேட் ரெண்டிலும் சிறிது எடுத்து கலந்து, தலையோட ஸ்கால்ப் ஏரியாவுல மட்டும் அப்ளை செய்வோம். அடுத்ததா... தேவையான அளவு கான்சென்ட்ரேட் எடுத்து, முடிகள்ல தடவுவோம். 15 - 20 நிமிஷம் ரிலாக்ஸிங் மஸாஜ் கொடுத்து முடிஞ்சதும், ஹெட் ஸ்டீமர் கொடுப்போம். அல்லது வெந்நீரில் நனைத்தெடுத்த சூடான டவலை தலையில் சுத்தி, பத்து நிமிஷம் நீராவி ட்ரீட்மென்ட் கொடுப்போம். இதன் மூலம், வேர்க்காலுக்கு ஊட்டம் கிடைக்கும். பிறகு, ஷாம்பு போடாமல் தலையை அலசி, டவல் அல்லது டிரையர் கொண்டு கேசத்தை உலர வைப்போம். கூடுதலா அவங்கவங்க தலைமுடியோட தன்மைக்கு ஏத்த மாதிரி... எந்த ஷாம்பு, என்ன கண்டிஷனர், எந்த சீரம் பயன்படுத்தணும்னு ஆலோசனை சொல்வோம். சேதமடைந்த முடியுள்ளவர்கள், மாதம் ரெண்டு முறையும், நார்மல் முடியுள்ளவர்கள் மாதம் ஒரு முறையும் 'ஹேர் ஸ்பா’ செய்தாலே... நுனி முடிப் பிளவு பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்.

பொதுவா, எல்லோருமே தரமான பார்லருக்கு போய், வாரம் ஒரு முறை டீப் கண்டிஷனிங் ட்ரீட்மென்ட் செஞ்சுக்கறது நல்லது. இதுல தலைமுடியின் தன்மைக்கு ஏத்த ஹேர் மாஸ்க் அப்ளை பண்ணி, ஊறவெச்சு, நல்லா அலசி, முடியை உலர்த்துவோம். ரெண்டு ஸ்டெப்லயே முடியக்கூடிய இந்த சிம்பிள் ட்ரீட்மென்ட்... நல்ல பலன் கொடுக்கக் கூடியது. முடி, எந்தப் பிரச்னையும் இல்லாம பட்டுப்போல மின்னும்.''
பாரம்பரியம்
தலை முடி, வறட்சியின் ஆரம்ப நிலையில் இருக்கும்போது, அது மேலும் வறண்டு போகாமல் இருக்கவும், அதனால் ஏற்படும் நுனி முடிப் பிளவைத் தடுப்பதற்கும் வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகளைச் சொல்கிறார் 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக், கீதா அஷோக்.
''தலைமுடி வறண்டு போக ஆரம்பிக்கும்போதே, சரியான பராமரிப்பு தந்தால்... நுனி முடிப் பிளவிலிருந்து தப்பிக்கலாம். அதுக்கு, மூணு ஸ்பூன் சுத்தமான விளக்கெண்ணெயை ஒரு கிண்ணத்தில் விட்டு, அதை சுடுநீரில் வெச்சு மிதமா சுடவெச்சு, அதுல மூணு ஸ்பூன் தேன் விட்டு (தேன் முடியில் பட்டால் நரைக்கும் என்பது தவறான நம்பிக்கை) கலந்து, தலை முடியில நல்லா தேய்ச்சுவிடணும். தலையை பெரிய பல்லு சீப்பால நல்லா அழுத்தி வாரி, 2 மணி நேரம் ஊறவிடணும். தரமான ஹெர்பல் ஷாம்புவால தலையை அலசணும். இப்படி வாரத்துக்கு மூணு நாள் செய்தா, வறண்ட கூந்தலும் சாஃப்டா மாறிடும், நுனி முடிப் பிள வும் வராது. வறண்ட தலைமுடி உள்ளவங்க, வெறும் விளக்கெண்ணையை தலையில் தேய்ச்சுக்கிட்டு, தலைக்கு நீராவி கொடுத்து, அரை மணி நேரம் ஊறவிட்டு தலைக்கு குளிச்சா... முடி இன்ஸ்டன்ட்டா மிருதுவாகிடும்.

அடுத்ததா, வீட்டிலேயே டீப் கண்டிஷனிங் எப்படி செய்யுறதுனு பார்க்கலாம். இதைச் செய்றதுக்கு முன்ன... பார்லருக்கு போய், நுனி முடிப் பிளவை கட் செய்துக்கணும் (split end hair cut). அடுத்ததா பிரெட் சாண்ட்விச்ல தடவுற மயனைஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள்ல கிடைக்கும்) எடுத்துக்கணும். இதுல முட்டை கலந்தது, கலக்காதது ரெண்டுமே கிடைக்கும். நமக்குத் தேவை... முட்டை கலந்த மயனைஸ்தான். இந்த மயனைஸ் 50 கிராம், தேன் 30 மில்லி, கிளிசரின் 30 மில்லி, விளக்கெண்ணைய் 30 மில்லி, சர்க்கரை 10 - 15 ஸ்பூன், இதோட, காஸ்மெடிக் கடைகள்ல கிடைக்கக்கூடிய அரோமா எண்ணெய்களான ஜெரேனியம் ஆயில் (Geranium oil), ஃபிராங்கின்சென்ஸ் ஆயில் (Frankincense oil), இலாங் இலாங் ஆயில் (Ylang-ylang oil) இது மூணுலயும் தலா பத்து சொட்டு விட்டு, எல்லாம் சேர்த்துக் கலந்து, ஒரு ராத்திரி முழுக்க ஊறவிடணும் (ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது).
அடுத்த நாள், முடியை லேயர் லேயரா பிரிச்சுக்கிட்டு, ஊறவெச்ச கலவையை அப்ளை செய்யணும். அடுத்ததா, ஸ்டீமர் அல்லது வெந்நீரில் நனைச்சு பிழிஞ்ச டவலை, தலையை சுத்தி வெச்சு, நீராவி கொடுக்கணும். 5 நிமிஷம் கொடுத்தபிறகு, 2 மணி நேரம் ஊறவிடணும். அல்லது கடந்த இதழ்கள்ல சொன்ன மாதிரி அலுமினியம் ஃபாயிலை தலையில் சுத்தி கவர் செய்து, 2 மணி நேரம் வெச்சுருக்கலாம். இதுவும் தலைக்கு சூடு கொடுத்து, தலைக்குள்ள சத்துக்களை இறங்கச் செய்யும். நல்லா ஊறியதும் ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கலாம்.
சேதமடைஞ்ச கேசம் உள்ளவங்க... இந்த டீப் கண்டிஷனிங்கை 5 அல்லது 6 முறை செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும். டிரை ஹேர் உள்ளவங்க, வாரம் ரெண்டு முறையும், நார்மல் ஹேர் உள்ளவங்க வாரத்துக்கு ஒரு முறையும் எடுத்துக்கிட்டா, நுனி முடிப் பிளவுகள் மேலும் பிளக்காம, உறுதியாகிடும். கேசம் ஆரோக்கியமா, விளம்பர மாடல்கள் போல ஷைனிங்கா ஜொலிக்கும்!''
அடுத்த இதழில், முக அழகு பற்றிப் பார்ப்போம்.
பளீரிடும்...