மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

40 வயசுல, ஒரு காதல் ஜோடி! ரிமோட் ரீட்டா

##~##

 "உள்ளம் கொள்ளை போகுதடா...
உன் அருகில்
உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா...''

- இளம் காதலர்கள் பலரோட ரிங்டோனா கலக்கிட்டிருக்கற இந்தப் பாட்டு, 40 வயசு காதலர்களுக்காக எழுதப்பட்டது! நம்ம நா.முத்துக்குமார் எழுதி, பாடகி சுஜாதாவோட பொண்ணு ஸ்வேதா மேனன் பாடின இந்தப் பாட்டு, 'பாலிமர் டி.வி'-யோட 'உள்ளம் கொள்ளை போகுதடா’ சீரியலின் டைட்டில் சாங்.

ஆண்கள், பெண்கள், பெரியவங்க, சின்னவங்கனு பலரோட உள்ளத்தையும் கொள்ளையடிச்ச இந்த சீரியலோட புராணத்தைதான், உங்க ரீட்டா இப்ப பாடப் போறா (மைக் டெஸ்டிங் ஒன், டூ...)!

2011-ம் வருஷத்துல 'சோனி டி.வி'-யில ஆரம்பிச்ச... 'படே அச்ஹே லக்டே ஹய்ன்' சீரியல், இப்போவரைக்கும் நேயர்கள்கிட்ட எக்கச்சக்க லைக்ஸ் வாங்கிட்டிருக்கு. அதுதான் தமிழ்ல 'உள்ளம் கொள்ளை போகுதடா'ங்கற பேர்ல 'டப்' ஆகி பாலிமர்ல வந்துட்டிருக்கு. 2012-ம் வருஷத்துல இருந்து கிட்டத்தட்ட 300 எபிசோடுகள் தாண்டி வெற்றிகரமா போயிட்டிருக்கு. ஹீரோ ராம் கபூர், ஹீரோயின் சாக்ஷி தன்வார் ரெண்டு பேரும்... இப்போ பல தமிழ்க் குடும்பங்களோட டார்லிங்ஸ்!

கேபிள் கலாட்டா!

'ரெண்டு குழந்தைங்களுக்கு அப்பா!’

அப்பா இல்லாததால தன்னோட குடும்பத்தைப் பொறுப்பா நடத்துற கம்பீரமான பிசினஸ்மேன் கேரக்டர்ல கலக்குவார் 'ராம்குமார்’ (ராம் கபூர்). இவரோட வயசு... 40. ஆனா, 'வயசானாலும் உன் ஸ்டைலும்... அழகும்'னு நம்ம 'நீலாம்பரி' ஸ்டைல்ல சொல்ல வைக்கிற மஸ்குலர் பார்ட்டி.

''டெல்லியில பிறந்த பஞ்சாப் பையன் நான். வளர்ந்தது எல்லாம் மும்பை. பள்ளிக்கூட நாடகங்கள்ல முக்கியமான கதாபாத்திரம் எப்பவும் எனக்குதான். அதிலிருந்து ஆரம்பிச்சதுதான் என்னோட நடிப்பு’னு சிரிக்கற ராம் கபூர், பத்தாவதுக்கு மேல நம்ம கொடைக்கானல், இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிச்சுருக்காரு. அப்புறம் அமெரிக்காவோட லாஸ் ஏஞ்சல்ஸ் நகர்ல இருக்கற 'ஆக்டிங் அகாடமி'யில டிகிரி முடிச்சுருக்காரு, நம்ம அமுல் பேபி (அப்படி போடு)!

''கார்ப்பரேட் கம்பெனி வேலைக்குத்தான் நான் போகணும்னு ஆசைப்பட்டார் எங்கப்பா. ஆனா, நடிப்பை 'டிக்’ செய்த நான், என் செலவுகளுக்காக, செகண்ட்ஸ்ல கார்கள் விக்கறது, கேபிள் டி.வி., கிரெடிட் கார்டு சேல்ஸ்னு நிறைய வேலைகள் பார்த்தேன். 97-ம் வருஷத்துல டி.வி-யில் என்னோட முதல் என்ட்ரி. அந்த நிகழ்ச்சி ஃபிளாப். ஆனா, தனிப்பட்ட முறையில் நிறைய பாராட்டுகள் கிடைச்சதோட, அடுத்தடுத்து சீரியல், ரியாலிட்டி ஷோ, சினிமானு வாய்ப்புகள் வரிசையா வந்துச்சு. இப்போ தமிழ்நாட்டுக்கும் நான் தோஸ்த்!'’னு சிரிக்கும் ராம் கபூர், 'கர் ஏக் மந்திர்’ சீரியல்ல தன்கூட நடிச்ச கௌதமியை 2003-ம் வருஷத்துல திருமணம் செய்துகிட்டு செட்டில் ஆகிட்டார்.

''ஒரு பொண்ணு, ஒரு பையன்னு நிஜ லைஃப்ல பொறுப்பான அப்பா நான்!'’னு சிரிக்கிறார், மஸ்குலர்.

கேபிள் கலாட்டா!

'நான் சிங்கிள்!’

இதே சீரியல்ல 'ப்ரியா ராம்’ கேரக்டர்ல அசத்துற சாக்ஷி தன்வார், பிறந்தது ராஜஸ்தான்ல.

''டெல்லியில காலேஜ் படிப்பை முடிச்ச நான், நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சுருக்கேன். ஒருமுறை தூர்தர்ஷன்ல ஆடிஷன் நடந்தப்போ, 'டிரை பண்ணேன்...’னு தோழி ஒருத்தி அனுப்பி வெச்சா. பார்த்தா, 'சூப்பர்’னு சொல்லி ஸ்பாட்லயே செலக்ட் செய்துட்டாங்க!''னு பெருமையில பொங்கற இந்த அழகி, அதிலிருந்து இன்னிக்கு வரை டி.வி. நிகழ்ச்சி கள், ஹிட் சீரியல்கள், ஷார்ட் ஃபிலிம், சினிமானு பிஸியோ பிஸி. 'உள்ளம் கொள்ளை போகுதடா’ பிரியா கேரக்டர் மாதிரி, சாக்ஷியும் லேட்டா மேரேஜ் பண்ணிக்குற பிளான்ல இருக்காங்களாம்.

''யெஸ்! இப்பவரைக்கும் நான் சிங்கிள்தான்!’'னு சிரிக்கறாங்க சாக்ஷி. கபூர் வயசு தெரிஞ்சுடுச்சு... ஆனா, தன்வார் வயசு?

வழக்கம்போல பதினாறுதான்!

'சீரியலை 'டப்’ பண்றது சுலபமில்லை!’

''இப்படி அந்தக் கால தூர்தர்ஷன் ஸ்டைல்ல... டப்பிங்ல இறங்கிட்டீங்களே?''னு 'பாலிமர்’ சேனல் எம்.டி கல்யாணசுந்தரத்துக்கிட்ட கேட்டேன்.

''வீடு மாதிரி ரெண்டு செட் போட்டு, மொத்தமே 10 கேரக்டர்கள் வெச்சு ஷூட் பண்ணின சீரியல்கள், இன்னிக்கு டெக்னாலஜி வளர்ச்சியால சினிமாவுக்குச் சமமா வளர்ந்துட்டு வருது. கதையில் கவனம் செலுத்துறதைவிட, 'இன்னிக்கு இந்தக் காட்சியை எவ்வளவு தூரம் இழுக்க முடியும்’கற நோக்கத்துலதான் பெரும்பாலும் சீரியல்கள் போயிட்டிருக்கு. இதுல யாரையும் குறை சொல்ல முடியாது. ஏன்னா... இதுவும் ஒரு பிசினஸ்தானே!''னு வெளிப்படையா பேசினவர்,

கேபிள் கலாட்டா!

''முன்ன மாதிரி நாலஞ்சு சேனல்னு இல்லாம, இப்ப முளைச்சுருக்கிற எக்கச்சக்கமான சேனல்களால வியாபார ரீதியா கடுமையான போட்டி உருவாகியிருக்கு. அதையெல்லாம் சமாளிக்கறதுக்கு சீரியல்ல சுவாரஸ்யத்தைக் கூட்ட வேண்டிய நிர்பந்தம். அதுக்காகத்தான் பழிவாங்குறது, இல்லீகல் ரிலேஷன்ஷிப், கோபம், வெறுப்பு, துரோகம், வெட்டு, குத்துனு பலதையும் கையில எடுக்கறாங்க... சீரியல் தயாரிப்பாளர் கள். அந்த வகையில 'உள்ளம் கொள்ளை போகுதடா’ சீரியல்ல, வாழ்க்கையை இயல்பா காட்டி இருக்காங்க. பாஸிட்டிவ் எண்ணங்களைத் தூண்டுற மாதிரியான கதைக்களம் அது. காட்சிகளும் ரொம்ப நவீனத்துவமா இருக்கு. முக்கியமா... வயசு வித்தியாசம் இல்லாம, குடும்பத்தோட பார்க்கலாம்.

வேற்று மொழி சீரியலை 'டப்’ செய்றது சுலபமில்லை. நடிகர்களோட பாடி லாங்கு வேஜுக்கு ஏத்த டப்பிங் குரல்ல ஆரம்பிச்சு நிறைய சவாலான வேலைகள் இதுல இருக்கு. இந்த சீரியலை ஒளிபரப்பறதுக்கு முன்ன, 'வியாபார ரீதியா இது போகுமா... சரிவருமா?'னு ஆயிரம் யோசனைகளோட தான் கையில எடுத்தோம். 'இந்தியில செம ஹிட் அடிச்ச சீரியல்... நம்பி இறங்கு வோம்'னு துணிஞ்சு கால் வெச்சோம்... எதிர்பார்ப்புக்கு மேலயே ஹிட்!’'னு மனுஷரோட பேச்சுல ஏகத்துக்கும் உற்சாகம்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா!

 150

வீடு தேடி வரும் கிளினிக்!

''புதுயுகம் டி.வி-யில் தினமும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் '6 டாக்டர்களும் 1008 சந்தேகங்களும்’ என்ற நிகழ்ச்சி பயனுள்ளதாக உள்ளது. வெவ்வேறு துறை சார்ந்த டாக்டர்கள், நேயர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்துத் தீர்வுகளைச் சொல்லி வழிகாட்டுகிறார்கள். மொத்தத்தில், 'வீடு தேடி வரும் மினி கிளினிக்’ இந்த நிகழ்ச்சி'' என்று வியந்து பாராட்டுகிறார் தஞ்சாவூரில் இருந்து எஸ்.நித்யலஷ்மி.

ல... ள... லளலளலள!

''மெகா டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தினம் ஒரு கோயில்’ நிகழ்ச்சியை நான் விரும்பிப் பார்ப்பேன். ஆனால், அதன் வர்ணனை  யாளருக்கு 'ல, ள’ போன்ற எழுத்துக்களை சரி யாக உச்சரிக்கத் தெரியவில்லை. 'பாவம் அகலும்' என்று சொல்வதற்கு... 'பாவம் அகளும்’ என்கிறார். இது, அருமையானதொரு நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கெடுக்கிறது'' என்று ஆதங்கப்படுகிறார் செகந்திராபாத்தில் இருந்து வெ.சியாமளா ரமணி.

அருமையான 'சிம்பாலிக்’!

''சன் டி.வி-யின் 10 மணி கதைகளில் 'எதிர்வீட்டுப் பையன்’ என்ற குறுந்தொடர் பார்த்தேன். அதில், சிவப்பிரகாசமாக நடிப்பவர், எதிர்வீட்டில் குடித்தனம் வரும் கதாநாயகன் மஹியை சந்தேகப்படுவார். க்ளைமாக்ஸில்... இம்சை தாங்காமல், கதாநாயகன் வீட்டை காலி செய்துகொண்டு போக... அடுத்து அந்த வீட்டில் குடியேறப்போகும் நபர் மீதும், தன் சந்தேக இம்சையைத் தொடர்வதற்காக, எதிர்வீட்டுக் கதவையே சிவப்பிரகாசம் முறைத்து பார்த்துக் கொண்டிருப்பது போல முடித்திருப்பார்கள். 'மனிதர்களின் சுபாவத்தை மாற்றுவது சுலபமல்ல' என்று 'சிம்பாலிக்’காக சொல்லும் இந்தக் காட்சி அருமை!'' என்று புகழ்கிறார் சென்னை, நெசப்பாக்கத்தில் இருந்து எஸ்.பிரேமா.