ஸ்பெஷல் 1
Published:Updated:

நேற்று வரை இல்லத்தரசி... இன்று, சப்டைட்டிலிஸ்ட்!

விண்ணைத் தொடும் ரேக்ஸ் பொன்.விமலா, படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

ந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும் சரி... மொழி தெரியாதவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக படத்தில் வரும் காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் தகுந்தவாறு, திரையின் கீழ்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் ஆங்கில வசனங்களே... சப்டைட்டில். இவற்றை தயாரித்து பதிவு செய்யும் கலைஞருக்குத்தான்... சப்டைட்டிலிஸ்ட் (மொழிக்கோர்வையாளர்) என்று பெயர். கடந்த சில பல ஆண்டுகளாக அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்தத் துறையில்... தனக்கென தனி அடையாளத்துடன் நிமிர்ந்து நிற்கிறார் ரேக்ஸ்!

''என்னோட அம்மா விஜி ஸ்ரீநிவாசன், சிறந்த சமூகசேவகி. தனியார் நிறுவனத்துல எடிட்டர் வேலையையும் பார்த்துட்டு இருந்தாங்க. அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. ஐந்தாவது படிக்கும்போதே, புத்தகம் படிக்கற பழக்கத்தைச் சொல்லிக் கொடுத்தது அம்மாதான். எல்லாமே இங்கிலீஷ் ஸ்டோரி புக்ஸ். அட்டை டு அட்டை படிக்கணும், படிச்ச கதையை அன்னிக்கு நைட் அம்மாகிட்ட சொல்லணும். வழக்கமா அம்மாதான் குழந்தைக்கு கதை சொல்வாங்க, எங்க வீட்டுல உல்டாவா நடக்கும். முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தையும் மட்டும் படிச்சுட்டு, ஏனோதானோனு கதை சொல்லிட முடியாது. ஏன்னா, எனக்கு முன்னாடியே அந்த புக்ஸை எல்லாம் அம்மா படிச்சுருப்பாங்க. ஒவ்வொரு இரவும் இப்படி கதைகளோடதான் கண்கள் மூடுவோம். இப்படி சின்ன வயசுல எங்கம்மா தந்த புத்தக ஆர்வம்தான், என் ஆங்கில அறிவை வளர்த்துச்சு.

நேற்று வரை இல்லத்தரசி... இன்று, சப்டைட்டிலிஸ்ட்!

என் கணவர் ஹரி, பிரபல டி.வி.எஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  கணவர், மூணு பெண் பிள்ளைகள்னு பல வருடங்கள் இல்லத்தரசியா மட்டுமே இருந்தேன். கணவர்தான் சினிமா துறை பக்கம் என் கவனத்தைத் திருப்பினார். நிறைய ஆங்கிலப் படங்களை பார்க்க வெச்சு, என் திரைப்பட அறிவை வளர்த்தார்.

நான், ஃபைன் ஆர்ட்ஸ் ஸ்டூடென்ட்கிறதால 'சேது’ படத்தில் ஹீரோயின் அபிதாவுக்கு ஆடை வடிவமைக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. கணவர் ஹரி, 'தூவானம்’னு ஒரு படத்தை இயக்கி, தயாரிச்சார். அந்தப் படத்துக்குத் தான் முதல் முதலா சப்டைட்டிலிங் பண்ணினேன். அதுக்கடுத்து 'விண்ணைத் தாண்டி வருவாயா’ வாய்ப்புக் கிடைக்க, திரைத்துறையில் பலராலும் அறியப்பட்டேன்'' என்றவர், தன் பணியின் இயல்பு பற்றியும் பேசினார்.

''சப்டைட்டில்ங்கிறது வெறுமனே மொழிபெயர்ப்பு மட்டுமில்ல.... மாற்று மொழிக்காரங்களுக் கும் படத்தோட ஒவ்வொரு நொடியையும் வார்த்தைகள் மூலமா புரிய வைக்கற சவாலான வேலை. ஒரு மொழிபெயர்ப்பு நேரடியா அர்த்தம் மட்டும் சொல்லாம, அந்தக் காட்சிக்குரிய பாரம்பரியம், கலாசாரம் எல்லாத்தையும் சேர்த்தே புரிய வைக்கிற மாதிரி இருக்கணும். பொதுவா திரையில சப்டைட்டில் 2 - 5 செகண்ட்ஸ்தான் இருக்கும். அதுக்குள்ள அந்தக் காட்சியைப் பத்தி நச்சுனு விளக்கணும்.

ஒரு படத்துக்கு சப்டைட்டிலிங் பண்ணும்போது கிட்டத்தட்ட 2,000 - 4,000 வாக்கியங்கள் வரை தேவைப்படும். இதில் என்னோட சவால், காமெடி ஆக்டர் சந்தானம்தான். அவர் திட்டுறதை நான் விளக்கம் கொடுக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். 'சாவு கிராக்கி’னு சொல்வார். உடனே அதுக்கு நான் ரொம்ப ஆராய்ச்சி பண்ணி death clientனு கொடுத்தேன். அதுமாதிரி அவர் பேசுற பக்கா லோக்கல் ஸ்ல்லாங்குக்கு சப்டைட்டிலிங் பண்ணறதுக்குள்ள 2,000 வாக்கியங்கள்ல முடிய வேண்டிய படம் 4,000 வாக்கியங்களைத் தாண்டிரும்.

'இது கதிர்வேலன் காதல்’ படத்தில் 'கடலுக்கே உப்பா?’னு ஒரு வசனம் வரும். அதை அப்படியே மொழிப்பெயர்ப்பு செய்யாம உதயநிதி ஸ்டாலின் நடிச்சுருக்கறதால... 'ஓகே ஓகேவுக்கே ஓகே-வா?’னு அர்த்தம் வர்றது மாதிரி மாற்றியிருப்பேன். இப்படி அந்தப் படத்துக்குரிய ஹுயூமர் மாறாம கொடுக்கறதுலயும் சப்டைட்டிலிங் பங்கு நிறையவே இருக்கு.

பொதுவா பாராகிராஃப் மாதிரி சப்டைட்டில் கொடுக்கறது படிக்கக் கஷ்டமா இருக்கும், படிச்சு முடிக்கறதுக்குள்ள காட்சி போயிடும். காட்சியையும் கவனிக்க முடியாம... சப்டைட்டிலையும் படிக்க முடியாம... படமே புரியாத நிலைதான் ஏற்படும். அதனால, திருக்குறள் போல 'நச்’சுனு ரெண்டு வரியில இருக்கிற மாதிரி பார்த்துக்கணும். சப்டைட்டிலில் நிறைய முற்றுப்புள்ளி இருந்தா படிக்கக் கண் வலிக்கும், ஆச்சர்யக் குறி பயன்படுத்தினா சுலபமா இருக்கும் என்பதை ஒரு கண் டாக்டர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்'' என்று சின்னச் சின்ன விஷயங்களிலும் நேர்த்தி காட்டும் ரேக்ஸ்... இதுவரை 124 தமிழ்ப்படங்கள், 71 மலையாளப்படங்கள், 3 கன்னடப்படங்களுக்கு சப்டைட்டிலிங் செய்திருக்கிறார். குட்டி 16 அடி பாயும் என்பதுபோல, இவருடைய மகள் ஷ்ரையந்தி, இப்போதே 25 படங்களுக்கும் மேல் சப்டைட்டிலிங் செய்திருக்கிறார்.

''பொதுவா படம் ரிலீஸ் ஆகறதுக்கு மூணு வாரத்துக்கு முன்ன படத்தை என்கிட்ட கொடுத்தா பொறுமையா பண்ண முடியும். ஆனா, பெரும்பாலான படங்கள் அவசர அவசரமா முடிக்கற கட்டாயத்தில்தான் வருது. என்னோட ஆர்வத்தால அதையும் சவாலா எடுத்துட்டு வேலை செய்றேன்'' என்று சொல்லும் ரேக்ஸ்...

''உலகம் முழுக்க திரையிடப்படும் வாய்ப்பை மனதில் வெச்சு, ரொம்ப சின்ஸியரா சப்டைட்டில் செய்யும் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு கிடைக்கும் சம்பளம்... 0.001 பர்சன்ட்கூட இல்லைங்கறதுதான் உண்மை!'' என்கிற வருத்தத்தையும் பதிவு செய்துவிட்டு, அடுத்த திரைப்படத்தின் சப்டைட்டிலிங் வேலைகளில் பரபரப்பாக இறங்குகிறார்!

நேற்று வரை இல்லத்தரசி... இன்று, சப்டைட்டிலிஸ்ட்!

படத்தையே புரிய வைக்கணும்!

''சப்டைட்டிலிங் என்பதில் நான்கு வகைகள் உண்டு'' என்றபடி ரேக்ஸ் தந்த சிறுவிளக்கம்...

''முதலாவது, 'டிரான்ஸ்லிட்ரேஷன்' (Transliteration) என்ற வகையில், தங்கிலீஷ் ஸ்டைலில் எழுதுவது. உதாரணமாக, அவள் வந்தாள் - AVAL VANDHAAL.

இரண்டாவது, டிரான்ஸ்லேஷன் (Translation) எனப்படும் நேரடியாக பொருள் சொல்வது. உதாரணமாக, அவள் வருவாள் -SHE WILL COME.

மூன்றாவது, 'கேப்ஷன்' (Caption). இது, வாய் பேச முடியாத, காது கேளாத மற்றும் உச்சரிப்பு புரியாதவர்களுக்குமானது. இது, திரையில் பேசப்படும் வசனங்கள் முழுமையாக அப்படியே இடம்பெறுவது. உதாரணமாக, திரையில் போன் ஒலித்தால், காதுகேளாதவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக, 'போன் ரிங்கிங்' என்று சப்டைட்டில் ஓடும்.

நான்காவது, 'சப்டைட்டில்' (Subtitle).  இது வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் இல்லை. இதுதான், மொழி தெரியாதவர்களுக்கும் படத்தைப் புரிய வைக்கக்கூடியது. இதை நேரடியாக மொழிபெயர்ப்பு மூலமாக மட்டுமே சொல்லிவிட முடியாது. உணர்ந்து சொல்ல வேண்டும்.

உதாரணமாக, 'வத்திக்குச்சி’ படத்தில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும்போது, 'வா இங்கே’ என்றொரு வசனம் வரும். காலில் விழுந்தால், அது ஆசீர்வாதம் வாங்குவதற்காக என்பது நமக்குத் தெரியும். ஆனால், உலக மக்கள் எல்லோருக்கும் தெரியாதே! அதனால் 'வா இங்கே’ என்ற வசனத்துக்கு நேரடியாக 'Come here’ என்று சப்டைட்டிலிங் கொடுக்காமல், 'Bless me’ என்று கொடுத்திருப்பேன்'' என்கிறார் ரேக்ஸ்.

அம்மானா... சும்மா இல்ல!

ரேக்ஸுக்கு மட்டுமல்ல... சமூகத்துக்கே முன்னுதாரணமாக இருந்திருக்கிறார் அவருடைய அம்மா.

''சின்ன வயசுல இருந்து அம்மா எனக்கு பிரமாண்டமாவே தெரிஞ்சாங்க. குறிப்பா, பீகார் மாநிலத்துல அம்மா செய்த சேவைகள் அவங்க மேல பெரிய மரியாதையை கொடுத்துச்சு. பிறக்கற பெண் குழந்தைகளை உயிரோடு புதைச்சு கொல்ற வழக்கம் பீகார்ல இருந்துச்சு. இதுக்காக 20 ரூபாய் கூலி கொடுப்பாங்க. இப்படிப்பட்ட இடைத்தரகர்கள்கிட்ட, 'கொல்றதுக்காக 20 ரூபாய் வாங்கியிருக்கே. நான், 100 ரூபாய் தர்றேன். அந்தக் குழந்தைகளை வாழ விடு’னு சொல்லி, குழந்தைகளை காப்பாத்தி கொண்டு வந்து, அவங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தாங்க. வரதட்சணைக் கொடுமைக்குள்ளான பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள்னு பாதிக்கப்பட்ட பெண்களையெல்லாம் ஒருங்கிணைச்சு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாங்க.

2005-ம் வருஷம் அம்மா இறந்து போனாங்க. ஈமச்சடங்கு செய்றது... அஸ்தியைக் கரைக்கறதெல்லாம் பெண்களோட வழக்கம் கிடையாது. குறிப்பா, பிராமண குடும்பத்துல முடியவே முடியாது. ஆனா, அம்மாவையும் அவங்க தைரியத்தையும் பிரதியெடுத்த நான்... எங்க குடும்பத்துல முதல் பிராமணப் பெண்ணா அம்மாவுக்கான இறுதிச் சடங்குகளை செய்தேன்'' என்று அம்மாவின் நினைவுகளை அசைபோட்டார் ரேக்ஸ்!