இது கேர்ள்ஸ் ஹாஸ்டல் ரணகளம்!
''கேர்ள்ஸ் ஹாஸ்டல்ங்கறது எப்படி இருக்கும்..?!''
''இப்படி இருக்கும்...'' என்று இலக்கணம், இலக்கியம் எல்லாம் சொன்னார்கள் சேலம், சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி ஹாஸ்டல் கேர்ள்ஸ்!
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ஹாஸ்டல் உள்ளே நுழைந்தால்... துவைக்காத துணி மூட்டை, கீழே கிடக்கும் பெட், மேக்கப் போட்டுக்கொண்டு பல் தேய்க்கத் தொடங்கிய பெண்கள், தலைவிரி கோலமாக கிடந்த அறை... என்று செம அடாவடியாகத்தான் இருந்தன ஹாஸ்டல் அறைகள்.
''ஹலோ ஹலோ... சண்டே மட்டுமில்ல, என்டேவும் (எல்லா நாளுமாம்) இப்படித்தான். அழகா அடுக்கி வைக்க நாம என்ன மியூசியத்துலயா குடியிருக்கோம்?!''னு சினிமா டயலாக் சுட்டு ஃபிலிம் காட்டினார் ஜனனி.
''வாரத்துல ஒரு தடவை வெளியில போகலாம். ஆனா, நாலு மணி நேரம்தான். அதுக்கப்புறம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலும் வெளியில இருக்க மாட்டோம். அவ்ளோ ஒபீடியன்ட் கேர்ள்ஸ். வெளியில போறப்போ எல்லாம் அவங்கவங்களுக்குப் பிடிச்ச காய்கறிகள் வாங்கிட்டு வந்து, என்.ஆர்.ஐ ஹாஸ்டல் பொண்ணுங்கள 'ஃப்ரெண்ட்ஸ்’ பிடிச்சு, அவங்க வெச்சுருக்கிற கேஸ் ஸ்டவ்ல சமைச்சு மனசார சாப்பிடுவோம். உள்ள இருக்கிற ஸ்விம்மிங் பூல்ல 50 ரூபாய் கொடுத்துட்டு, ஒரு மணி நேரம் பயன்படுத்தலாம். ஆனா... நாங்க முங்குற முங்குல எங்களைப் பார்த்தாலே 'க்ளோஸ்டு’ போர்ட் போட்டுடுறாங்க. ஸோ ஸேட்!'' என்று இடைவெளி விட்டார் கீதாஞ்சலி.

''ஏய்... கதையில காரமே இல்ல. நம்ம சண்டையை எல்லாம் சொல்லுடி...'' என்று ஜனனி எடுத்துக் கொடுக்க, ஆரம்பித்தார் தீபா.
''ஹாஸ்டலுக்கு வந்த புதுசுல நாம துவைச்சு, அயர்ன் பண்ணி ரெடியா வெச்சுருக்கும் சுடிதாரை, கூலா ஒருத்தி எடுத்து போட்டுக்கிட்டு, 'நல்லாயிருக்கா..?’னு நம்மகிட்டயே கேட்டு, 'டாடா’ காட்டி போயிட்டே இருப்பா. இப்படி சுடிதார்ல இருந்து சோப்பு வரைக்கும் ஒருத்தியோடதை இன்னொருத்தி எடுத்து பயன்படுத்த, அதனால் ஏற்படும் குருஷேத்ரம் ரொம்ப ஹாட். இதைவிட, பாத்ரூமுக்காக அடிச்சுக்கிற சண்டை இருக்கே... குழாயடி சண்டையெல்லாம் தோத்துடும்.

எப்பப் பார்த்தாலும் இப்படி டூ விட்டுட்டே திரியற எங்களுக்கு, ஒருகட்டத்துல 'ஹாஸ்டல்ல உன் உடைமைகள் உனக்கு மட்டுமே சொந்தமல்ல’ என்கிற உண்மை புரியும். அப்புறம் டிரெஸ், பேஸ்ட், நோட், பென் எல்லாம் ஷேரிங்லதான் ஓடும். லேட்டா வந்தாதான் அது ஞானோதயம் போல!'' என்று சொல்லி கலகலவெனச் சிரித்த தீபா,
''காலையில நடக்கற திருப்பள்ளி எழுச்சி பத்தி சொல்லுங்கடி...'' என்று அடுத்த லீட் எடுத்துக் கொடுத்தார்.

''இன்டர்னல் இருக்கு, செமஸ்டர் இருக்குனு காலையில அஞ்சு மணிக்கெல்லாம் அலார்ம் வெச்சுட்டு தூங்கிடுவா ஒருத்தி. ஆனா, மத்த பொண்ணுங்களை எல்லாம் அந்த அலார்ம் எழுப்பி விட்டுடும். கசங்கின கண்ணுல கொலவெறியோட, 'அலார்ம் வெச்சது யாருடி?’னு தேடினா, பொண்ணு போர்வைக்குள்ள ஆழ்நிலை தூக்கத்துல இருப்பா. அவளை அடிச்சு எழுப்பி கேவல கேவலமா திட்டுவோம். அடுத்த நாள் வேறொரு பார்ட்டி அலார்ம் வெச்சுட்டு, வழக்கம்போல அசையாம தூங்க... மத்த கேர்ள்ஸ் தூக்கம் மர்கயா. அலார்ம் தடை செய்யும் சட்டம் கொண்டு வர்றதைப் பத்தி ஆலோசிச்சுட்டு இருக்கோம்!'' என்று படபடத்தார் மேனகா.

''காலையில ஹாஸ்டல் சாப்பாட்டை பெரும்பாலும் மிஸ் பண்ணிடுவோம். இங்க நான் வெஜ்-க்கு தடா. அதனால மதிய சாப்பாடும் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்காது. ஃப்ரெண்ட்ஸ்கிட்ட, 'ஏதாச்சும் வாங்கிட்டு வாங்கடி, காசு தர்றேன்...’னு சொல்லிவிடுவோம். ஆனா, ஒருநாளும் காசு கொடுத்ததே இல்ல..!'' என்று சிரித்தார் சவீதா.

''ஹாஸ்டலுக்குப் பொண்ணைப் பார்க்க யாரோட அம்மா வர்றதா இருந்தாலும், உளவுத்துறை தகவல் கொடுத்திடும். முதல் நாளே அவங்களுக்கு இங்க இருந்து மெனு போயிடும். அடுத்த நாள் அதையெல்லாம் அவங்க சமைச்சு எடுத்துட்டு வர, ஒரே விருந்துதான்!'' என்று பிரியதர்ஷினி சொல்ல,
''ஏய் நாளைக்கு தீபாவோட அம்மா வர்றாங்களாம்டி!'' என்று உளவுத்துறை ரிப்போர்ட் ஒலிக்க...
'யேய்ய்ய்!’ என்று மெனு கார்ட் தயாரிப்பதில் பிஸி ஆகினர் கேர்ள்ஸ்!
- ந.அபிநயரோஷிணி
படங்கள்: க.தனசேகரன்