வெற்றிப்படியில் இந்திரலட்சுமி வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்
'முதலீடு 20 ஆயிரம்... லாபம் 25 ஆயிரம்! இல்லத்தரசிகளுக்கு நம்பிக்கையூட்டும் இந்திரலட்சுமி’ என்ற தலைப்பில், 13.9.11 தேதியிட்ட 'அவள் விகடன்' இதழில், புடவை டிரைவாஷ் கடை வைத்திருக்கும், சென்னை, மின்ட் பகுதியைச் சேர்ந்த இந்திரலட்சுமி பற்றிய கட்டுரை வெளியாகிஇருந்தது. இன்று, அனைவரும் வியக்கும் அளவுக்கு தன் தொழிலில் அதிவேகமாக வளர்ந்திருக்கிறார் இந்திரா. 'டிரைவாஷ் தொழில் வகுப்புகள் எடுக்கிறது என்னோட அடுத்தகட்ட திட்டம்’ என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவர், சொன்னபடியே இன்று எழுநூறுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சியளித்திருக்கிறார்.

''இந்த, 'ஃப்ரெண்ட்ஸ் ஸ்டார்ச்’ கடையை ஆரம்பிச்சு 17 வருஷம் ஆகுது. என்னைப் பற்றி கட்டுரை வந்தப்போ, நூறு கஸ்டமர்கள் என்ற அளவில் இருந்த தொழில், அதுக்கு அப்புறம் வேகமெடுக்க ஆரம்பிச்சுது. நானா தேடிப் போய், 'புடவை பாலிஷ் பண்ணித் தர்றேன்'னு ஆர்டர் கேட்டாலும், கிட்டத்தட்ட ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் மாத சம்பளம் அளவுக்கு விலை உயர்ந்ததா இருக்கற பட்டுப்புடவைகளை, பலரும் நம்பி கொடுக்க மாட்டாங்க. ஆனா 'அவள் விகடன்’ல என் முகம் வந்த பிறகு, போற இடத்துலயெல்லாம் 100 பர்சன்ட் நம்பிக்கையோட புடவைகளை என்கிட்ட கொடுத்தாங்க.

உதிரியா கஸ்டமர்கள் சேர்த்திட்டிருந்த நான், அதுக்குப் பிறகுதான் தொழில் சார்ந்த நபர்களை அதிகமா சந்திச்சேன். தறி வெச்சுருக்கறவங்க, லாண்டரி யூனிட் வெச்சுருக்கறவங்கனு தேடிப் போய் ஆர்டர் வாங்கினேன். ஆந்திரா காட்டன், காஞ்சிபுர நெசவுப் பட்டுனு ஒவ்வொரு ஊரா போய், ஒவ்வொரு யூனிட்டையும் பார்த்தேன். இப்போ... தமிழ்நாடு முழுக்க சுமார் 400 யூனிட்கள்ல இருந்து எனக்கு ஆர்டர்கள் வருது. மயிலாப்பூர், நங்கநல்லூர், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, வில்லிவாக்கம், கொருக்குப்பேட்டைனு சென்னை முழுக்க 19 இடங்கள்ல கலெக்ஷன் சென்டர்களும் ஆரம்பிச்சுருக்கேன்'' என்று அசரவைத்தவர், தொடர்ந்தார்...
''சென்ற முறை நீங்க சந்திச்சப்போ டிரைவாஷ் மட்டுமே பண்ணிட்டிருந்த நான், ஜரி மற்றும் புடவை பாலிஷிங், பொட்டீக் சேலைகளுக்கு ரோலிங் (அயர்ன் பண்ணாமலேயே, அந்த அளவுக்கு ஃபினிஷ் கொடுப்பது) எல்லாம் செய்றேன். நிறைய புத்தகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்னு தேடித்தேடி கத்துக்கிட்டதுதான் இதெல்லாம். கூடவே, உங்ககிட்ட சொன்ன மாதிரியே பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பிக்க, நானே எதிர்பார்க்காத அளவுக்கு முதல் மாதமே 65 ஆயிரம் ரூபாய் லாபம்.
என்கிட்ட முதன்முதலா பயிற்சிக்காக மதுரையில இருந்து வந்த ஒரு பெண்மணி, இன்னிக்கு தொழில்முனைவோரா ஆகியிருக்காங்க. அதுதான் ஆரம்பம். தொடர்ந்து திருப்பூர், கோவைனு பல மாவட்டங்களில் இருந்தும் பயிற்சி எடுத்துட்டுப் போனாங்க. திருப்பூர்ல மட்டுமே நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள், என் பயிற்சிக்கு பிறகு தொழில்ல பிஸியா இருக்காங்க. டிரைவாஷ் மட்டுமில்லாம, பாலிஷிங், ஜரி பாலிஷிங், ரோலிங்னு இந்தத் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்துப் பயிற்சிகளும், அதற்கான மெட்டீரியல்களும் பொதுவா ஒரே இடத்தில் கிடைக்காது. அதை சாத்தியப்படுத்தினதுதான் என் பயிற்சி வகுப்புகளோட வெற்றி ரகசியம்'' என்று பெருமையோடு சொன்ன இந்திரலட்சுமி,

''பி.எஸ்சி., கணிதப் பட்டதாரியான நான், இந்தத் தொழிலுக்குத் தேவையான கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கிட்டேன். தொழிலில் பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் சந்திச்சு சந்திச்சே, பட்டை தீட்டிக்கிட்டேன். தேவக்கோட்டையில பிறந்து வளர்ந்து, இப்போ சென்னையில ஒரு வெற்றிகரமான தொழில் பெண்மணியா நான் காலூன்றியிருக்கறதுல... கணவரோட பங்கு நிறைய.
ஆரம்பத்தில் ஒரு புடவைக்கு ஸ்டார்ச் செய்தா... எனக்குக் கிடைக்கறது ஆறு இல்லனா ஏழு ரூபாயாத்தான் இருந்துச்சு. 'இதுக்காக உட்கார்ந்து இவ்வளவு உழைக் கணுமா..?’னு பல குரல்கள் என்னை கேலி பண்ணினாலும், என் உழைப்பைக் குறைக்காம, ஒவ்வொரு படியா நிதானமா ஏறினேன். இப்போ திரும்பிப் பார்த்தா, நான் ஏறி வந்ததெல்லாம் வெற்றிப் படிக்கட்டுகளா இருக்கு!'' என்றவர்,
''இந்த சந்தோஷ தருணத்துல... அவள் விகடன் வாசகிகளுக்கு பயிற்சி கொடுக்கத் தயாரா இருக்கேன்ங்கிறதையும் நான் பகிர்ந்துக்கிறேன். ஒவ்வொரு பொண்ணும் தனக்குனு ஒரு தொழிலைத் தேடிக்கணும். நம்பிக்கையோட வாங்க... கையில் தொழி லோட திரும்பிப் போகலாம்!'' என்று அழைப்பு வைத்தார் இந்திரலட்சுமி!
