ஏமாற்றியவருக்கு எதிராக இளம்பெண்ணின் யுத்தம்ஃபாலோ அப்ம.பிரியதர்ஷினி
அந்த இளம்பெண்ணின் போராட்டத்தைப் பார்க்கும்போதெல்லாம், 'ஒரு பெண்ணுக்குத்தான் எத்தனை எத்தனை கொடுமைகள்... அரசாங்கமும்கூட இந்த அபலைப் பெண்ணுக்கு ஆதரவுக்கரம் நீட்ட மறுக்கிறதே...' என்று கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது. அதேசமயம், ஆண்டுகள் கடந்தாலும் கொஞ்சம்கூட குலையாத அவருடைய மன உறுதி... நம்பிக்கையூட்டுகிறது பெண்குலத்துக்கு!
பிரியதர்ஷினி... இரண்டு ஆண்டுகளுக்கு முன், வருண்குமார் என்பவர், தன்னைக் காதலித்துவிட்டு, தற்போது வரதட்சணை மற்றும் கௌரவம் போன்ற காரணங்களால் திருமணம் செய்ய மறுக்கிறார் என்று நீதிமன்றப் படியேறியது குறித்து, 'வந்தது பதவி... பறந்தது காதல்... பொங்கி எழுந்த பிரியதர்ஷினி' என்ற தலைப்பில், 3.1.2012 தேதியிட்ட 'அவள் விகடன்’ இதழில் எழுதிஇருந்தோம்.

பெரும்பாலும், ஒருகட்டத்துக்கு மேல் போராட தெம்பில்லாமல் ஓய்ந்துபோகும் பெண்களைத்தான் இந்த சமூகம் அதிகம் சந்தித்திருக்கிறது. ஆனால், தன் போர்குணத்தைத் துளியும் மாற்றிக்கொள்ளாமல், தவறிழைத்த அந்த நபருக்கு தண்டனை பெற்றுத் தருவதன் மூலமாக, ஏமாற்ற நினைக்கும் ஆண்கள் அனைவருக்குமே பாடம் புகட்டுவதற்காக, கிட்டத்தட்ட தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, போராடி வருகிறார் பிரியதர்ஷினி.
பழைய கதை தெரியாதவர்களுக்காக குட்டி ஃப்ளாஷ்பேக்...
பல் டாக்டரான வருண்குமார், சென்னையில் உள்ள 'கணேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமி’யில் பயிற்சி பெற்றபோது, உடன் படித்த பிரியதர்ஷினிக்கும் அவருக்கும் காதல் மலர்ந்தது. நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்த காதல், தங்களுக்கு தெரிய வந்தபோது, இரு குடும்பங்களுமே மரியாதை செய்தன. ''எங்க வீட்டுக்கு வரப் போற மருமகனு சொந்தக்காரங்க, வர்றவங்க, போறவங்ககிட்டஎல்லாம் வருணோட பெற்றோர். என்னை அறிமுகப்படுத்தினாங்க'' என்று பிரியதர்ஷினி பெருமையோடு சொல்லிக்கொள்ளும் அளவுக்கான மரியாதை!
இதற்கிடையே ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வில் பிரியா தேங்கிவிட, இறுதித் தேர்வு வரை சென்ற வருண், இந்திய அளவில் மூன்றாவது இடம் பெற்றுத் தேர்வானார். இந்தச் சூழலில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க மண்டபமெல்லாம் பார்த்த நிலையில், திடீர் என்று அத்தனை ஏற்பாடுகளும் தடைபட்டன.
''என் பையனுக்கு நிறைய பேர் பொண்ணு கொடுக்க காத்திருக்காங்க. 2 கிலோ தங்கம், 50 பவுன் நகை, பி.எம்.டபிள்யூ கார் கொடுத்தாதான் கல்யாணம்னு சொல்லி, வருணோட பெற்றோர் குண்டு போட்டாங்க. எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவங்க மனசை மாத்திக்கல. கூடவே, காதலுக்கு ஆதாரமான நிறைய சாட்சியங்களையும் வருண் அழிச்சுட்டார்'' என்றபடி நீதிமன்ற படியேறினார் பிரியதர்ஷினி.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஐ.பி.எஸ் ஆபீஸர் எனும் அந்தஸ்தையும் பெற்றுவிட்ட, வருண்குமார், தற்போது தமிழக காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவியில் அமர்ந்திருக்கிறார் தெம்பாக.
பாவப்பட்ட பிரியதர்ஷினியோ... காவல் நிலையம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்... குறையாத போர்க்குணத்துடன்!
சென்னை, விருகம்பாக்கத்தில் வசிக்கும் பிரியதர்ஷினி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தன்னைச் சுற்றி படர்ந்திருக்கும் ஆபத்து மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செல்போன் நம்பரை மாற்றி வருபவரின் தோற்றம்... இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாம் பார்த்திலிருந்து மிகமிக மாறிப்போயிருக்கிறது. ஆனால், குரலிலும் மனதிலும் முன்பைவிட கூடிப்போயிருக்கிறது உறுதி!
''அவங்க வரதட்சணை கேட்க ஆரம்பிச்சதும், 'தப்பானவனா இருக்கான், அவன் வேண்டாம்’னு அப்பாவும், அம்மாவும் கோபப்பட்டாங்க. 'எனக்கு வருண்தான் வேணும்’னு கண்ணீரோட வீட்டுல மல்லுக்கட்டிட்டே, 'என்னை கல்யாணம் பண்ணிக்கோ’னு வருண்கிட்டயும் கதறிட்டு இருந்தேன். அப்போ... ஐ.பி.எஸ். டிரெயினிங்கில் இருந்த வருண், 'நீ இருக்கறதாலதான் எல்லாருக்கும் பாரம். நீ செத்துட்டா... எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க. உனக்கென்ன என்கூட இருக்கணும் அவ்வளவுதானே? நீ செத்துட்டா என்கூட ஆன்மாவா எப்பவும் இருப்பே. அப்ப யாரும் வரதட்சணை கேட்க மாட்டாங்க’னு, ஒவ்வொரு தடவை போன்ல பேசும்போதும் வேற வேற வார்த்தைகள்ல சொல்லி, தற்கொலையை நோக்கி துரத்தறது மாதிரியே பேசுவார்.
ஒருகட்டத்துக்கு மேல பொறுக்க முடியாமதான், 2011 டிசம்பர்ல 'வரதட்சணை கேட்டு கல்யாணத்தை நிறுத்திட்டார்’னு போலீஸ்ல புகார் கொடுத்தேன்'' என்று சொல்லும் பிரியதர்ஷினியின் வாழ்க்கை மேலும் சுழற்றியடிக்கப்பட்டது அன்றிலிருந்துதான்.

''வரதட்சணை கேட்டதோட மட்டுமில்லாம, வருண் குடும்பம் என்னை அடிச்சது, என் மெயில் எல்லாத்தையும் வருண் அழிச்சதுனு பல ஆதாரங்களோட கமிஷனர் அலுவலகத்துல புகார் கொடுத்தும், வருணை கைது பண்ணவே இல்லை. நாலு மாசம் ஆகியும் எஃப்.ஐ.ஆர். கூட போடல. அட்வகேட் பிரபாகரன் சார் மூலமா, ஹைகோர்ட் படியேறினேன். அஞ்சு மாச போராட்டத்துக்கு அப்புறம், கோர்ட் சொன்னதால எஃப்.ஐ.ஆர். போட்டாங்க. அரசுப் பணியில உள்ளவங்க மேல எஃப்.ஐ.ஆர். இருந்தா, சம்பந்தப்பட்ட நபரை தற்காலிக பணிநீக்கம் செய்யணும்ங்கிறது சட்டம். ஆனா, எதுவும் நடக்கல. காவல்துறை உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் கண்டுக்கலை. அதேசமயம், என்னையும், எனக்காக சாட்சி சொல்லத் தயாரா இருந்தவங்களையும் போன்ல மிரட்டுறது, ஆள் விட்டு மிரட்டுறது, அவங்க வேலை பார்க்கிற அலுவலகத்துக்கு தப்பு தப்பா மொட்டை கடிதாசி போடுறதுனு கீழ்த்தரமா இறங்கியிருந்தார் வருண்.
கொலை மிரட்டல் விடுத்தப்பவும் நான் பின்வாங்கல. ஆனா, கைது பயத்துல மொத்த குடும்பமும் முன்ஜாமீன் வாங்கிட்டாங்க. 'முன்ஜாமீன் கொடுத்தா அவர் தப்பிச்சுட மாட்டாரா? என்னோட மெயில் எல்லாத்தையும் அழிச்சுருக்கார். தகவல் தொழில்நுட்ப சட்டப்படி அது குற்றம்’னு கோர்ட் படியேறினேன். உடனே, 'நான் பயன்படுத்தின லேப்டாப், மொபைல் எல்லாத்தையும் விசாரணை அதிகாரிகிட்ட ஒப்படைக்கிறேன். என்னை கைது பண்ண வேண்டாம்’னு கோர்ட்ல சொன்னார். ஆனா, மூணு மாசம் கழிச்சுதான் விசாரணை அதிகாரிகிட்ட கொடுத்தார். அதுவும் போலி லேப்டாப், மொபைல். கோர்ட் ஆர்டரையே மதிக்காம, போலிகளை சமர்ப்பிச்சதால... 'வருண் எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்கல. அவர் சொல்ற பதிலிலும் உண்மை இல்லை’னு விசாரணை அதிகாரியே உயர் நீதிமன்றத்தில் சொன்னார். இத்தனை நடந்ததுக்கு அப்புறமும் முன்ஜாமீன் கொடுத்தப்போ, ரொம்பவே நொந்துட்டேன்...'' என்று, சற்று தேங்கினாலும், தன் விடாமுயற்சியை மட்டும் கைவிடவில்லை பிரியதர்ஷினி.
''இதையே ஒரு சவாலா எடுத்துகிட்டு, 2012 ஜூலை மாசம், சுப்ரீம் கோர்ட்ல வழக்குப் பதிவு பண்ணினேன். இதுக்காக ஒவ்வொரு தடவையும் டெல்லிக்கும் சென்னைக்குமா அலைஞ்சது கொஞ்சநஞ்சமில்லை. மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான், அவ்வளவு பணம் செலவு பண்ணி நீதி கிடைக்கப் போராட, வருணுக்கு வாய்தா கொடுக்கும்போதெல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகி, அம்மாகிட்ட கதறியழுவேன். 'ஒண்ணு நீ இந்தப் போராட்டத்துல இறங்கி இருக்கக் கூடாது, இறங்கின பிறகு, எந்தத் தருணத்திலும் பின்வாங்கக் கூடாது’னு அம்மா உறுதுணையா நின்னாங்க. எனக்காக சுப்ரீம் கோர்ட் பார்கவுன்சில் பிரசிடென்ட், சீனியர் அட்வகேட் கிருஷ்ணமணி சார் ஆஜர் ஆனார்.
நடுவுல ஒரு நாள், சென்னையில தனியா போயிட்டிருந்த என்னை கார்ல வழிமறிச்சு மிரட்டினாங்க. கார் நம்பர் மற்றும் தெளிவான அடையாளங்களோட விருகம்பாக்கம், காவல் நிலையத்துல புகாரா எழுதிக் கொடுத்தேன். அதை எடுத்துக்கவே இல்ல. விசாரணை அதிகாரி முன்னாடியே, 'உன் குடும்பத்தை ஒண்ணும் இல்லாம பண்ணிடுவேன் ஜாக்கிரதை’னு வருண் சவால் விட்டார்'' என்றபோது, தவிப்பு அவர் கண்களில்.
''டெல்லிக்கும் சென்னைக்குமா நான் அலைந்த 18 மாச முடிவுல, வருண்குமாரை கைது செய்யச் சொல்லி, இந்த பிப்ரவரி 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்டிருச்சு. ஆனா, வருண் தலைமறைவாயிட்டார். போலீஸ் தேடுது. இப்பவும் போலீஸ் டிபார்ட்மென்ட் வருணை சஸ்பெண்ட் பண்ணல. இதுக்கிடையில சிவகாசியில இப்ப ஐ.பி.எஸ் வேலை பார்க்கிற அம்பிகா பாண்டேங்கிற நார்த் இண்டியன் பெண்ணை, வருண் அவசரக் கல்யாணம் பண்ணிட்டார்.
ஒரு ஐ.பி.எஸ் ஆபீஸர், கிரிமினல் மாதிரி தலைமறைவாகி ஓடும்போதே, தப்பானவர்னு இன்னொரு முறை நிரூபணமாயிருச்சு. வருணை கஸ்டடி எடுத்து விசாரிச்சாதான், சார்ஜ் ஷீட்டே போட முடியும். அதுக்கப்புறம் அவர் பேசுறதை வெச்சு விசாரணை, முடிவுனு பல தூரம் இன்னும் நான் காயப்பட வேண்டியது இருக்கு. எப்படி இருந்தாலும் முடிவு எனக்கு சாதகமா வரும்னு நம்பிக்கை இருக்கு. வருண் தண்டிக்கப்படணும், அதைப் பார்த்த பிறகு... பொண்ணுங்களை ஏமாத்தவோ... வரதட்சணை வாங்கவோ... எந்த ஆணும் துணியக்கூடாது''
- நம் கண்களுக்கு பெண்குலத்தின் பிரதிநிதியாக தோன்றும் பிரியதர்ஷினியின் குரலில் பலமடங்கு உறுதி கூடுகிறது.
மழுப்பும் போலீஸ் அதிகாரிகள்!
ஐ.பி.எஸ். அதிகாரி எனும் உயரிய அந்தஸ்தில் இருக்கும் வருண்குமாரின் தரப்பை கேட்பதற்காக அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால், அது தோல்வியில்தான் முடிந்தது.
தமிழகக் காவல் துறையின் தரப்பை அறிவதற்காக, டி.ஜி.பி-யான ராமானுஜத்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். அவரிடமிருந்து, 'நீங்கள் சென்னை போலீஸ் கமிஷனரை தொடர்பு கொள்ளுங்கள். சிட்டி போலீஸ்தான் அவருடைய வழக்கை விசாரித்து வருகிறார்கள்’ என்று பதில் வந்தது. இதையடுத்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு போன் செய்தபோது, பதில் இல்லை. இதனால், அவருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளோம். அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறோம்!
''ஜெயலலிதாவுக்கு தெரியுமா!''
பிரியதர்ஷினிக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கும் 'ஆல் இந்தியா டெமாக்ரேட்டிக் விமன் அசோஸியேஷன்’ அமைப்பின் மாநில செயலாளர் வனஜா, ''தப்பு செய்த ஒருத்தனை ஒட்டுமொத்த போலீஸும் காப்பாத்த நினைக்கிறது வேடிக்கையாவும், வேதனையாவும் இருக்கு. இத்தனை ஆதாரங்களையும் கையில் வெச்சுட்டு ரெண்டு வருஷத்துக்கும் மேலா போராடுறாங்க பிரியதர்ஷினி. சட்டத்துல இத்தனை ஓட்டை இருக்கறப்ப, என்ன செய்றது? அவனைக் கண்டுபிடிச்சு, அதுக்கப்புறம் கோர்ட்ல நிறுத்தி, தண்டனை வாங்கிக் கொடுக்கும் நம்பிக்கை... மெலிஞ்சுட்டே வருது'' என்றார் வருத்தத்துடன்.
பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இந்த விஷயமெல்லாம் தெரியுமா?!

''கோர்ட்டை ஏமாற்றுபவர், போலீஸ் பதவியில் இருக்கிறார்!''
பிரியதர்ஷினியின் வழக்கறிஞர் டி.பி.செந்தில்குமார், ''கிரிமினல் கேஸில் இன்வால்வ் ஆகியிருக்கலாம் என்று சந்தேகப்படுபவரை, கான்ஸ்டபிள் பதவியில்கூட நியமிக்கக் கூடாது. ஆனால், பெண்ணுக்கு எதிரான வன்முறை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒருவரை, அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஏ.எஸ்.பி எனும் உயரிய பதவியில் உட்கார வைத்து அழகு பார்க்கிறது தமிழக காவல்துறை. உயர் நீதிமன்றம் கொடுத்த முன்ஜாமீனை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து 20 நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும், பதவியில் நீடிக்கும் வருண், மெடிக்கல் லீவு போட்டுவிட்டு, தலைமறைவாகிவிட்டதாக சொல்கிறது தமிழக போலீஸ். இந்த வழக்கில் இதுவரை வருண்குமார் கொடுத்த ஆதாரங்கள் அனைத்துமே பொய் என்பது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் இரண்டுக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழலில்தான் முன்ஜாமீன் ரத்தாகியுள்ளது. ஆனால், நீதிமன்றங்களையே ஏமாற்றக்கூடிய இவரெல்லாம் போலீஸ் பதவியில் இருப்பது, சாபம்!'' என்று வேதனை பொங்கச் சொன்னார்.