ஸ்பெஷல் 1
Published:Updated:

''இது நமக்கான மேடை..!''

வாசகிகளின் நெகிழ்ச்சியில் குளிர்ந்த ஜாலி டே! தி.ஜெயப்பிரகாஷ், ஞா.சுதாகர், படங்கள் : தி.விஜய், ர.சதானந்த்

 வாசகிகளுக்கு அளவில்லாத ஆனந்தத்தை அள்ளித்தரும் அவள் விகடன் 'ஜாலி டே’ திருவிழா, இம்முறை கோவை மாநகரில்! சத்யா நிறுவனம் மற்றும் சன்லேண்ட் சன்ஃப்ளவர் ஆயில் நிறுவனம் ஆகியவையும் நம்மோடு கைகோக்க... கோவை குசும்புகளுடன் துவங்கியது கொண்டாட்டம்!

பிப்ரவரி 22, சனிக்கிழமை காலையில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முன்தேர்வுப் போட்டிகளில்... கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஈரோடு என வாசகிகள் பல ஊர்களிலிருந்தும் வந்து அமர்க்களப்படுத்தினர். பிப்ரவரி 23 ஞாயிறு காலை முதலே பி.எஸ்.ஜி. கலைக்கல்லூரி ஆடிட்டோரியத்தில் குவியத் துவங்கியது பெண்கள் கூட்டம். காலை 10 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டு, பரதநாட்டியத்தோடு படபடத்தது ஜாலி டே!

அமைதியில் அர்த்தம் கூறும் 'மௌனமொழி’, பழைய, புதிய திரை இசைப் பாடல்களுக்கு ஆன் தி ஸ்பாட் ஆட்டம் போடும் 'உல்டா புல்டா’, அறிவு ஜீவிகளின் சங்கமமான 'வினாடி வினா’, 'அடடே’ ஆட்டம் போடும் 'டான்ஸ் மச்சி டான்ஸ்’, பரபரக்கும் போட்டியாக 'பாட்டுக்குப் பாட்டு’ என போட்டிகள் அனைத்திலும் வாசகிகள் கலக்கிக்கொண்டு இருந்தாலும், நம் பெண்களுக்கு கூச்சம் இயல்புதானே! அப்படித் தயங்கி நின்ற அம்மணிகளையெல்லாம் கொத்தாக அள்ளி வந்து மேடையில் குத்தாட்டம் போடவைத்து, கூச்சத்தை போக்கினார், நம் தொகுப்பாளினி சுபாஷினி. பிறகென்ன? விழா முடியும் வரை அரங்கு முழுவதும் ஒரே தகிட தகிடதான்!

''இது நமக்கான மேடை..!''

ஆட்டம்... செம அசத்தல்!

'டான்ஸ் மச்சி டான்ஸ்’ போட்டியில் கலந்துகொண்ட அணிகளில் பலரின் மனதைக் கவர்ந்தது, மனோன்மணியம் டீம். பி.எஸ்.ஜி. கல்லூரியில் பேராசிரியராக பணி புரியும் மனோன்மணியம், ரிட்டயராகும்  வயதை நெருங்கிவிட்ட நிலையிலும் ஆடிய ஆட்டம்... செம அசத்தல்!

'வருஷம் முழுக்க எங்கள் கல்லூரியில் ஏதாவது விழா நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். ஆசிரியை என்பதால், மாணவர் களை ஒழுங்குபடுத்தி, நிகழ்ச்சியை சரியாக நடத்துவதிலேயே என் கவனம் இருக்கும். அதேசமயம், 'நம் ஆட்டத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்காதா?' உள் ளுக்குள் ஏக்கம் நிறைந்தே இருக்கும். இதை போக்கும்விதத்தில் இந்த மேடை என்னை தத்தெடுத்துக் கொண் டது. 'இது நமக்கான மேடை... எந்தத் தடையுமின்றி ஆடிப் பாடலாம்' என்ற முடிவோடுதான் வந்தேன். எதிர் பார்த்தது போலவே 100 பர்சன்ட் அன்லிமிட்டட் ஆனந்தத்தைக் கொடுத்த அவள் விகடனுக்கு நன்றி!'' என்று நெகிழ்ச்சியின் உச்சியில் நிற்பவராகப் பேசினார் மனோன்மணியம்.

''இது நமக்கான மேடை..!''

விறுவிறு குலுக்கல் போட்டி!

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த 5 வாசகிகளை மேடையேற்றி, சத்யா நிறுவனத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்களின் பட்டியலில், யார் 30 நொடிக்குள் அதிக பெயர்களைக் கூறுகிறாரோ அவருக்கு சத்யா நிறுவனம் வழங்கும் இண்டக்ஷன் ஸ்டவ் பரிசு என அறிவித்ததும், கடகடவென 11 பொருட்களின் பெயர் களைக் கூறி பரிசைத் தட்டிச் சென்றார், 'கணபதி’ பகுதியை சேர்ந்த ரீனா.

ஸ்லோகன் பாட்டி!

சட்டென்று மேடையேறிய ஜெயலட்சுமி பாட்டி, ''என் வயசே மறந்திருச்சு. குழந்தைகளை அழைத்து வர வேண்டாம்னு ஏன் சொன்னாங்கனு இப்ப புரியுது. அதான், நாமளே குழந்தைகளா மாறிடறோமே!'' என்று ஆசையாகப் பேசியவர், சன்லேண்ட் நிறுவனத்தைக் குறிப்பிட்டு, ''சன்னுக்கு கீழே நம்ம லேண்டு, நம் உடலை காப்பது சன்லேண்டு!'' என இன்ஸ்டன்ட் ஸ்லோகன் சொல்லி அசரடிக்க, அவருக்கு ஐந்து லிட்டர் சன்லேண்ட் சன்ஃப்ளவர் ஆயிலை அன்புப் பரிசாக வழங் கினார் அந்நிறுவனத்தின் பொதுமேலாளர் ரமேஷ்.

LED  டி.வி என்ன விலை?!

நிகழ்ச்சியின் ஹைலைட்... 'என்ன விலை?’ போட்டி. மேடையில் வைக்கப்பட்டிருந்த LED டி.வி-யின் விலையை ரூபாய் 12,989 என மிகச் சரியாகக் கூறி அரங்கத்தில் விசில் பறக்க வைத்தார், ராஜாமணி. அவருக்கு சத்யா நிறுவன பொதுமேலாளர் காந்திராஜன் அந்த டி.வி-யையே பரிசாக வழங்க, பூரிப்படைந்த ராஜா மணி, ''இட்லி மாவு வியாபாரம் செஞ்சுட்டு இருக்கேன். போன வருசம் 'ஜாலி டே’ல பார்வையாளரா கலந்துகிட்டேன். இந்த வருஷம் பரிசோட நிக்கிறேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' என்றார் முகம் முழுக்க சிரிப்புடன்!

பம்பர் பரிசு யாருக்கு..?!

வாசகிகளை படபடக்க வைத்தது பம்பர் பரிசு நேரம். தொகுப்பாளினி சுபாஷினி, வெற்றி    கூப்பனை கையில் எடுத்து, ''வி.ஜிஷா...'' என்று அறிவிக்க... ஜிஷாவுடன் வந்திருந்தவர்கள் எழுப்பிய இடி முழக்கச் சத்தம், அரங்கையே ஆட்டிப் பார்த்தது. தடதடவென மேடைக்கு ஓடி வந்து, ஐந்து நிமிடம் சந்தோஷ ஆட்டம் போட்டார் ஜிஷா. அவருக்கு சத்யா நிறுவனத்தின் மண்டல மேலாளர் முருகேசன், பம்பர் பரிசாக ஃப்ரிட்ஜை வழங்கினார்.

போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ்களும் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. கை நிறையப் பரிசு, மனது நிரம்ப மகிழ்ச்சியோடு விடைபெற்றனர் அம்மணிகள்!