ஸ்பெஷல் 1
Published:Updated:

தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

பொன்.விமலா

தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

'பதினாறு வயதுக்குட்பட்டவர்கள், இதயம் பலவீனமானவர்கள் படத்தைப் பார்க்க வேண்டாம்’ என்கிற அறிவிப்பு இல்லை. இருட்டோ இருட்டில், ஓபனிங் ஷாட் வைக்கவில்லை. சின்ன வெளிச்சத்தில் மோப்ப நாய் ஓடுவதைக் காட்டவில்லை. கேமராவில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லை. ரெயின் கோட், தலையில் தொப்பி சகிதம் ஓர் உருவம் மழையில் நனைந்தபடி நடந்துவரவில்லை. 'வீல்ல்ல்’ என அலறல் சத்தத்துக்கு 'டி.டி.எஸ். எஃபெக்ட்' கொடுக்கவில்லை. முத்தக் காட்சியோ... மொத்தமாக இல்லை. இத்தனை 'இல்லை’களுடன், ஒரு த்ரில்லர் படத்தைக் கொடுத்ததற்காகவே, புதுமுக இயக்குநர் ரமேஷ§க்கு சல்யூட் வைக்கலாம்!

கதாநாயகன் துப்பறிவாளன். அவனைச் சுற்றி நடக்கும் கொலைகளை மையமாகக்கொண்டு கதை நகர்கிறது. கொலைகளை செய்தது யார், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மோசடி செய்கிறார்களா, அவர்களுக்கு உடந்தையாக இருப்பது யார், அதை கதாநாயகன் எப்படி கண்டுபிடிக்கிறான்..? இது மாதிரியான பல மர்ம முடிச்சுகளை அடுக்கிக்கொண்டு த்ரில்லாக நகரும் திரைப்படம் 'தெகிடி’. சத்தமில்லாமல் வந்து, பலரையும் பேசவைத்திருக்கிறது படம்!

படத்தின் பெயருக்கான அர்த்தம் தொடங்கி, படம் எழுப்பியிருக்கும் அதிர்ச்சி வரை பேச, 'தெகிடி’ இயக்குநர் ரமேஷை சந்தித்தபோது, தன் மனைவிக்கு முதலில் மரியாதை செய்தார்!

''நான், பக்கா சென்னைக்காரன். சின்ன வயசுல இருந்தே சினிமா மேல காதல். ஐ.டி கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தப்போ, கலைஞர் டி.வி 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். டைட்டில் வின்னர் ஆனேன். என்னோட ஏழு குறும்படங்களுமே சமூகத்துக்கு ஏதாவது கருத்து சொல்ற மாதிரிதான் இருக்கும். அதனால, முதல் திரைப்படத்திலும், கருத்து சொல்ல நினைச்சேன்.

பெரும்பாலானவங்க, 'கல்யாணத்துக்கு முன்னயே கேரியரை ஸ்ட்ராங் பண்ணிக்கணும்'னு நினைப்பாங்க. என்னோட கனவு வாழ்க்கையே, கல்யாணத்துக்குப் பிறகுதான். மனைவி ஹரிப்ரியா, அந்தளவுக்கு ஆதரவு. 'தெகிடி’ படத்துக்கு தயார் செய்த மூணு மாதிரியான கதைகளையும் மனைவிகிட்டதான் முதல்ல பேசினேன். அவங்கதான் மெருகேத்திக் கொடுத்தாங்க. என்னோட குறும்படங்களைப் பார்த்துட்டு, 'இது சரியில்ல, அது சரியில்ல’னு நிறைய திருத்தங்களை சொல்லியிருக்காங்க. ஆனா, 'தெகிடி’ பார்த்துட்டு சின்ன திருத்தத்தைக்கூட சொல்லல. அப்பவே பாதி ஜெயிச்ச மாதிரி ஆயிடுச்சு. ஒவ்வொரு கலைஞனுக்கும் பக்கபலமே மனைவிதான். அதேமாதிரி என் வெற்றிக்கும் ஹரிப்ரியாதான் காரணம்'' என்ற ரமேஷ்,

''விட்டா அவங்கள பத்தியே இந்த பேட்டி முழுக்க சொல்லிட்டே போவேன்... கொஞ்சம் படம் பத்தியும் பேசலாம்!'' என்று பூரிப்பு மாறாமல் தொடர்ந்தார்.

தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

''படம் பார்த்த எல்லோரும் கேட்கிற கேள்வி, 'இதுமாதிரி இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் மக்களை ஏமாற்ற வாய்ப்பிருக்கா?’ என்பதுதான். மனைவிக்குத் தெரியாமல் கணவனும், கணவனுக்குத் தெரியாமல் மனைவியும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, அதன் காரணமாக ஏமாந்தது, பாதிக்கப்பட்டது நிறையவே செய்தித்தாள்களிலும், இணையத்திலும் படிச்சுருக்கேன். குறிப்பா, வடஇந்தியாவுல இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகம் நடந்திருக்கு. இதிலிருந்தே என்னோட படத்துக்கான கருவை உருவாக்க ஆரம்பிச்சேன்.

அதேமாதிரி தினம் தினம் தெரியாத நம்பர்களில் இருந்துவரும் போன்கால்கள், எனக்கு இன்னொரு முடிச்சை கொண்டு வந்து கொடுத்துச்சு. 'சார், நான் இன்ஷூரன்ஸ் கம்பெனியில இருந்து பேசறேன்’னு ஒரு கால் வரும். இன்னொரு கால், 'நாங்க அனாதை ஆசிரமத்துல இருந்து பேசறோம்... ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா’னு கேட்பாங்க. 'ஈ.சி.ஆர் பக்கத்துல பிளாட்ஸ் இருக்கு வேணுமா?’னு போன் பண்ணிக் கேட்பாங்க.

இப்படி தினம் தினம் வரும் தேவையில்லாத போன்கால்கள், எனக்குள்ள நிறைய கேள்விகளை கேட்க வெச்சுது. யார் இவங்க, எப்படி இவங்களுக்கு நம்ம நம்பர் தெரியும்னு நமக்கு புரியாது. ஆனா, நமக்குத் தெரியாமலே நம்ம நம்பரை யாரோ ஒருத்தர்கிட்ட வாங்கறது நிச்சயம். அந்த ஒருத்தர் யார்... அது நம்ம கம்பெனியா, இல்ல வேற யாராவதானு குழம்பிப் போவேன். அதையே கருவா எடுத்துகிட்டு கற்பனை கதையை ரெடி பண்ணினேன். அதுதான் 'தெகிடி’.

தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

இன்ஷூரன்ஸ் பிடிக்கிறதுக்கு முன்ன ஆயிரம் போன் கால்ஸ் வரும். ஆனா, பாலிஸி போட்ட பிறகு, ஒரு கால் கூட பண்ணிச் சொல்ல மாட்டாங்க. இது என் வாழ்க்கையிலும் நடந்துச்சு. இந்த மாதிரி நான் சந்திச்ச, கேள்விப்பட்ட விஷயங்களோட கற்பனைதான் 'தெகிடி’. படம் பார்த்த பிறகு, பாலிசி போடுறது பத்தின பயம் வந்திருக்கறதா நிறைய பேர் சொன்னாங்க. சொல்லப் போனா பாலிசி போட்டவங்களைவிட, போடாதவங்களுக்கான விஷயம்தான் என் படம். ஒவ்வொருத்தருக்குமே பாலிசி போடுற உரிமை இருக்கு. அது நல்லதும், அவசியமானதும்கூட. ஆனா, படத்துல நான் சொல்ல வர்ற கருத்து பாலிசியைப் பத்தினது மட்டும் இல்ல. நம்மோட பர்சனல் தகவல்கள் நமக்கே தெரியாமல் அடுத்தவங்களால திருடப்படுதுங்கிறதுதான்.

போன் நம்பரில் ஆரம்பித்து, நம்மைப் பத்தின எந்தத் தகவலும் அடுத்தவங்களுக்கு போகாமல் இருந்தாலே போதும்... நமக்கு வரும் ஆபத்தை தடுத்துடலாம். முகம் தெரியாத நம்பர்ல இருந்து யாராவது கால் பண்ணினா, எரிச்சலோட அவாய்ட் பண்றதைத்தான் அதிகபட்சமா நாம செய்றோம். ஆனா, எத்தனை பேர், நம்ம நம்பர் அவங்களுக்கு எப்படிப் போகுதுனு யோசிச்சு விசாரிக்கிறோம்? இந்த மாதிரி தற்காப்பு விழிப்பு உணர்வு வேணும்னுதான் 'தெகிடி' மூலமா சொல்றேன்.

'த்ரில்லர்' படம்னு முடிவு பண்ணின பிறகு, ரெகுலரா இல்லாம, வித்தியாசமா, குடும்பத்தோட பார்க்கிற படமா இருக்கணும்னு தெளிவா இருந்தேன். படத்துல காதலை சொல்றதைக்கூட லேட்டாதான் காட்டியிருப்பேன். ஆடியன்ஸுக்கு அவங்களோட காதல் புரியும்... ஆனா, சொல்லிப்பாங்களானு எதிர்பார்த்துட்டே இருப்பாங்க. எதிர்பார்க்காத நேரத்துலதான் ஹீரோ லவ் சொல்வான். பொதுவா நிறைய பொண்ணுங்க, கண்மூடித்தனமா ஆண்களை நம்புவாங்க. ஒரு கட்டத்துல ஏமாத்தினது தெரிஞ்சாலும் உடனே மன்னிச்சு ஏத்துப்பாங்க. என் படத்தில் அதையும் உணர்த்தியிருக்கேன்'' என்ற ரமேஷ்...

''சுத்தமான தமிழ் வார்த்தைதான் 'தெகிடி'. பகடை, சூது, விளையாட்டு, தாயம்... இப்படி நிறைய அர்த்தங்களை சொல்லிட்டே போகலாம். பொதுவா ஒரு படத்தோட தலைப்புக்கு ஓர் அர்த்தம்தான் இருக்கும். என் படத்துக்கு இதில் நீங்க எந்த அர்த்தத்தை எடுத்துக்கிட்டாலும், பொருத்தமா இருக்கும். பிளான் பண்ணின மாதிரி 45 நாள்ல முடிச்சோம்னா, அதில் படத்துக்காக கஷ்டப்பட்ட எல்லோருக்குமே முக்கியப் பங்கு இருக்கு. படத்தை பாருங்க... கண்டிப்பா ஏதோ ஒரு விதத்துல அலர்ட்டா இருக்கணும்னுங்கிற ஃபீலோட வெளிய வருவீங்க!''

- ஒரு ஃபீலிங்குடன் சொன்னார்.

தெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..?

''அலர்ட்னஸ் அவசியம்!''

''படத்தில் வருவதைப் போல் உண்மையாகவே நமக்குத் தெரியாமல் நம் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, வேறு யாராவது அதை அனுபவிக்க வழியிருக்கிறதா?'' என்ற கேள்வி... படத்தைப் பார்த்த, கேள்விப்பட்ட அத்தனை பேரின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது... திகிலுடன்!

இந்தக் கேள்வியை, சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஸ்ரீதரன் முன் வைத்தபோது... ''படத்தில் வருவதைப் போல் ஏமாற்றுவதற்கு நிச்சயமாக வழி இல்லை. முதலில், நமக்கே தெரியாமல் நம் பெயரில் பாலிசி போட முடியாது. நம்முடைய அடையாளங்கள், கையெழுத்து இல்லாமல் சாத்தியமில்லை. அப்படியே போட்டாலும் உறவினர்கள் அல்லாதவர்கள் ஆக்ஸிடென்ட் பாலிசி போடவே முடியாது. தனிநபர் பாலிசி போடும்போது, வாரிசுதாரர் (Nominee) ரத்த சொந்தமாக இருக்க வேண்டும். ரத்த சொந்தம் அல்லாதவர் வாரிசுதாரராக இருக்க முடியாது. அப்படியிருக்க, பாலிசி போட்ட ஒருவர் இறந்த பிறகு, ரத்த சொந்தம் அல்லாதவர் நிச்சயமாக அவருக்கான பணத்தை அனுபவிக்கவே முடியாது. ஒருவேளை மைனராக இருப்பவருக்கு பாலிஸி எடுக்கும்போது, வாரிசுதாரராக இருப்பவர் மைனராக இருக்க முடியாது. பாதுகாவலர்தான் வாரிசுதாரராக இருக்க முடியும். அவரும் ரத்த சொந்தமாகத்தான் இருக்க வேண்டும். மைனராக இருந்து, உறவுகள் யாருமில்லாத சமயத்தில், குடும்ப வழக்கறிஞர் வாரிசுதாரராக இருக்க முடியும். மற்றவருக்கு வாய்ப்பே இல்லை'' என்ற ஸ்ரீதரன்,

''அதேசமயம், இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கான விதிமுறைகள் அத்தனை அழுத்தமாக பின்பற்றப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் எடுத்துவிட முடியும் என்கிற நிலையில் இருப்பதை மறுப்பதற்கில்லை. அடையாள அட்டைகளை போலியாக தயாரிப்பது, போலியாக கையெழுத்து போடுவது இதெல்லாமே சாத்தியம்தான். எனவே, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கு நேரில் செல்வது போல, இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட நபர் நேரில் வரவேண்டும் என்றிருக்கும் விதியை, கட்டாயம் கடைபிடிக்கச் செய்ய வேண்டும். ஆகமொத்தத்தில் படத்தில் சொல்ல வருவதுபோல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை'' என்றார்.