ஸ்பெஷல் 1
Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

200

'ரோட்டுல எப்படி கூப்பிடணும்?’

நான் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தேன். எங்கள் மகனையும் அங்கேயே எல்.கே.ஜி-யில் சேர்த் தோம். முதல் நாள் பள்ளிக்கு அவனை தயார் செய்துகொண்டே ''இதபார் கண்ணா, வீட்டுலதான் என்னை 'அம்மா'னு கூப்பிடலாம். ஸ்கூல்ல 'மிஸ்’னுதான் கூப்பிடணும். சரியா...'' என்றேன். சமர்த்தாக தலையாட்டினான். பள்ளிக்கு நடந்துபோகும்போது என் புடவையைத் தொட்டு இழுத்து ஏதோ கேட்டான். நானும் பதில் சொன்னேன். திரும்பவும் அதேபோல் என் புடவையை இழுத்து ஏதோ கேட்க முயன்றவனை கோபமாகப் பார்த்து ''ஏன் இப்படி புடவையை இழுக்கறே... அம்மானு கூப்பிட்டு பேச முடியாதா'' என்று கேட்டவுடன், ''வீட்டுல 'அம்மா’னு கூப்பிடணும். ஸ்கூல 'மிஸ்’னு கூப்பிடணும்னு சொன்னே... ரோட்டில் எப்படி கூப்பிடணும்னு சொல்லவே இல்லையே... அதுதான்!'' என்று அவன் சொன்னதும், கண்களில் நீர் வரும்வரை சிரித்தேன்.

- சாந்தி நாதன், பெங்களூரு

குட்டீஸ் குறும்பு!

'உங்களுக்கெல்லாம் பொறாமை!’

எங்கள் வீட்டுச் சுட்டி பிரகதீஸ்வரிக்கு பற்கள் கொஞ்சம் எடுப்பாக இருக்கும். இதைக் கவனித்த நானும் என் மூத்த மகளும், ''இவளுக்கு பல் கொஞ்சம் தூக்கிக்கிட்டு இருக்கறதால, டாக்டர்கிட்ட காண்பிச்சு 'கிளிப்’ போடணும்'' என்று பேசிக்கொண்டிருந்தோம். இதை கவனித்த எங்கள் சுட்டி, ''உங்களுக்கெல்லாம், என்னை மாதிரி பல் நீளமா வளரலையேனு பொறாமை!'' என்று சீறினாளே பார்க்கலாம்..! நானும் என் மூத்த மகளும் விழுந்து விழுந்து சிரித்ததில் பல் சுளுக்கிக்கொண்டுவிட்டது!

- கே.கீதா கார்த்திகேயன், வேலூர்

'பாஸ்’ போட்ட பாப்பா!

நான் டி.வி.டி-யில் அடிக்கடி பழைய படம் பார்ப்பேன். ஏதாவது வேலையாக கிச்சனுக்கு எழுந்து போகும்போது, ரிமோட்டை எடுத்து பாஸ் (pause) மோடில் போட்டுவிட்டு, மறுபடி வந்து படத்தைத் தொடர்வேன். ஒரு நாள் டி.வி-யில் 'சோட்டா பீம்’ ஓடிக்கொண்டிருக்க, வாயில் வைத்த இட்லியைக் கூட விழுங்க மறந்து என் இளைய மகள் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். ''என்னாச்சு பாப்பாவுக்கு..?'' என நான் கேட்டதற்கு, ''அவ வாய்க்கு 'பாஸ்’ போட்டுட்டாம்மா...’' என்று என் மூத்த மகள் ஐஸ்வர்யா அடித்த கமென்ட்டில் வீடே சிரிப்பில் மூழ்கியது.

- ஆர்.விஜயாரவி, ஈரோடு

32ம் தேதி!

குடும்ப விஷயங்களைப் பற்றி விவாதிக்கும்போது, எங்கள் வீட்டு சுட்டி வர்ஷினி குறுக்கிட்டு, 'தீர்வு’ சொல்வாள். ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஆலோசித்துக் கொண்டிருந்தோம். என் கணவருக்கு லீவு கிடைப்பதைப் பொறுத்து, '30-ம் தேதி போகலாம்... அல்லது 31-ம் தேதி போகலாம்’ என்று சீரியஸாக பேசிக்கொண்டிருந்தோம். திடீரென குறுக்கிட்ட வர்ஷினி ''31-ம் தேதி லீவு கிடைக்கலைனா... 32-ம் தேதி போகலாம்'' என சொல்ல... சிரிப்போ சிரிப்புதான்!

- இரா.நந்தினி, வந்தவாசி