மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

பேச்சுலர் டாடி!ரிமோட் ரீட்டா

டபழனி சிக்னல்ல, 'டாடி எனக்கு ஒரு டவுட்டு’ திண்டுக்கல் சரவணன் கண்ல மாட்டினாரு.

''என்னப்பா... பையனை ஸ்கூல்ல விட்டுட்டு வர்றியானு..?''னு கலாய்ச்சேன்.

''கிண்டலா ரீட்டா, எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல!''னு மனுஷன் முறைச்ச முறைப்பு இருக்கே?!

''சரி சரி... விடுப்பா. ஆமா, மொளச்சு மூணு எல விடாத பய, இந்த 'சேட்டை’ செந்தில் (சாருக்கு கல்யாணம் ஆகி, குழந்தையும் இருப்பதாகத் தகவல்). அவன் கேக்குற கேள்விக்கு பதில் தெரியாம இப்படி சதா அடி வாங்கிட்டிருக்கியே..?''

''அதெல்லாம் கேமரா முன்னதானே ரீட்டா. மத்தபடி, அந்த டவுட்டெல்லாம் ரெடி பண்றதே நான்தானே..! சின்ன வயசுல இருந்தே நிறைய டவுட் வரும் எனக்கு.''

''எல்லா பசங்களுக்கும் சின்ன வயசுல அப்படித்தான்.''

கேபிள் கலாட்டா!

''இல்ல ரீட்டா, எனக்கு எடக்கு மடக்கா டவுட் வரும். திண்டுக்கல், பாய்ஸ் கான்வென்ட்ல படிச்சேன். பக்கத்துலயே கேர்ள்ஸ் கான்வென்ட். ஒருமுறை எங்க கான்வென்ட்ல ஒரு ஃபாதர், 'கேர்ள்ஸ் கான்வென்ட்ல படிக்கிற பொண்ணுங்கள கேலி பண்ணாதீங்க, அவங்க எல்லாம் உங்களுக்கு சிஸ்டர்ஸ்’னு சொல்லி, அட்வைஸா அடிச்சுவிட்டாரு. அந்த சமயத்துலயா எனக்கு டவுட்டு வரணும்? 'ஃபாதர் ஃபாதர்... பக்கத்து கான்வென்ட் மதர்ஸை எல்லாம் நீங்க சிஸ்டர்னு கூப்பிடுறீங்க. உங்களை நாங்க ஃபாதர்னு கூப்பிடுறோம். அப்ப உங்க சிஸ்டர்ஸ் எங்களுக்கு அத்தை முறை வேணும். கான்வென்ட் பொண்ணுங்க சிஸ்டர்ஸை மதர்னு கூப்பிடறாங்க. அப்ப எங்களுக்கு அவங்க எல்லாம் அத்தை பொண்ணுங்க, நாங்க அவங்களுக்கு மாமா பசங்கதானே?’னு கேட்க, பிரம்பை எடுத்து சும்மா விளையாடிட்டாரு ஃபாதர்.

''ஆகமொத்தம் நீ டவுட் கேட்டாலும் சரி, உங்கிட்ட யார் டவுட் கேட்டாலும் சரி... அடி வாங்கறது என்னவோ நீதான்''னு சொல்லி 'கபகப’னு சிரிச்சேன்.

''அதை விடு ரீட்டா''னு தூசு தட்டிக்கிட்ட சரவணன்,

''இப்ப நீ ஏதாச்சும் டவுட்டு கேளு பார்ப்போம்... சும்மா டக்கு டக்குனு பதில் வரும்...'' - நிகழ்ச்சியை ஆரம்பிச்சுட்டார்.

''சரி! கிராமத்துல இருக்கிற நாட்டாமையை, எதுக்கு 'நாட்டாமை'னு சொல்றாங்க, 'கிராமத்தாமை'னு சொல்ல வேண்டியதுதானே?''

''இதுக்கு பதில் சொல்றதுக்கு முன்ன எனக்கு ஒரு டவுட்டு. ஊர் பசங்களை எல்லாரும் எதுக்கு ஊர்'நாட்டான்’னு சொல்றீங்க, கிராமத்து கைமருந்தை ஏன் 'நாட்டு’ மருந்துனு சொல்றீங்க, ஊர் கோழியை எதுக்கு 'நாட்டு’க்கோழினு சொல்றீங்க, கிராமத்து ஃபிகரை எதுக்கு 'நாட்டு’க்கட்டைனு சொல்றீங்க..? இதுக்கெல்லாம் என்ன பதிலோ, அதுதான் நீ கேட்ட கேள்விக்கும் பதில். எப்பூடி..?!''

''சரி அடுத்த டவுட்டு. டீக்கடையில 'டீ’னு கேட்டாலே கொடுக்கப் போறாங்க, எதுக்கு 'சிங்கிள் டீ’னு கேக்கறீங்க? ரெண்டு டீ, மூணு டீயை எல்லாம் டபுள் டீ, டிரிபிள் டீ-னு கேட்கிறதில்லையே ஏன்..?''

''கல்யாணம் ஆனவங்க எல்லோரும் வீட்டுல டீ குடிப்பாங்க. ஆனா, என்னை மாதிரி பேச்சுலர்ஸ் எல்லாம், டீக்கடைக்கு போய்தான் டீ குடிக்கிறோம். நாங்க இன்னும் சிங்கிளா இருக்கோம்னு அடிக்கடி ஞாபகப்படுத்திக்க, 'சிங்கிள் டீ’னு கேட்கிறோம்!''

''முடியல!''

''சரி... இப்ப நான் கேட்கிறேன் ஒரு டவுட்டு. 'நம்பர்’ என்ற ஆங்கில வார்த்தையை சுருக்கி எழுதும்போது ஏன் Noனு எழுதுறோம். Numberல் 'o’ என்ற எழுத்தே இல்லையே..? அடுத்த டவுட்டு...''

''ஆளவிடுப்பா.... நீ அறிவாளிதான் ஒப்புக்கிறேன்!''

ஆல் ரவுண்டர் அர்ச்சனா!

''நீங்க ரொம்ப பிஸியாமே? கால்ல சக்கரம் கட்டாத குறையா ஓடிட்டே இருப்பீங்களாமே?!''னு கேப்டன் டி.வி தொகுப்பாளினி அர்ச்சனாகிட்ட கேட்டேன்.

''கொஞ்சம் அப்படித்தான் ரீட்டா. கேப்டன் டி.வி-யில 'சினிமாஸ்கோப்’ நிகழ்ச்சியை ரெண்டு வருஷமா நடத்துறதோட, இப்போ 'ஹாலிவுட் கஃபே’ நிகழ்ச்சியையும்  நடத்துறேன். அப்புறம், ஒரு நிறுவனத்துல ஹெச்.ஆர். வேலையையும் பார்க்கிறேன். கார்ப்பரேட் மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு காம்பயரிங் பண்றேன். ஒரு டான்ஸர்ங்கறதால, அந்த ஏரியாவிலும் நான் பிஸி...''

கேபிள் கலாட்டா!

''எப்பூடி... இப்பூடி..?!''

''சூழ்நிலையும் தேவையும்தான் வாய்ப்புகளைத் தேடி ஓட வெச்சது ரீட்டா. ஆறாவது படிக்கும்போதே, அப்பா இறந்துட்டார். ஸ்கூல் படிக்கும்போதே வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். ஸ்கூல் முடிஞ்சதும் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல பில்லிங் செக்ஷன்ல பார்ட் டைமா வேலை பாத்துட்டு, வீட்டுக்கு போய், 9 மணிக்கு மேல ஹோம் வொர்க் பண்ணிட்டு, தூங்குவேன்.

ஸ்கூல் ஆண்டு விழாக்களைத் தொகுத்து வழங்கறதுக்காக மைக் பிடிக்க ஆரம்பிச்சேன். காலேஜ்லயும் என் கையிலதான் மைக். அதைப் பார்த்து மற்ற கல்லூரிகள்ல கல்சுரல்ஸ் நிகழ்ச்சிகளுக்கு காம்பயர் பண்ண கூப்பிட ஆரம்பிச்சாங்க. அப்படியே கார்ப்பரேட் ஈவென்ட்ஸ் தொகுத்து வழங்க ஆரம்பிச்சேன்.

ஒருமுறை கிளாஸ் கட் அடிச்சுட்டு, 'ஏழாம் அறிவு’ படத்துக்குப் போனோம். படம் பார்த்துட்டு வெளிய வந்ததும், கேப்டன் டி.வி-யில இருந்து போன். 'நீங்க தொகுத்து வழங்கின கார்ப்பரேட் நிகழ்ச்சியைப் பார்த்தோம். நல்லா பண்றீங்க. எங்க சேனலோட ஆங்கர் ஆடிஷனுக்கு வரமுடியுமா..?’னு கேட்டாங்க. உடனே சேனல்ல போய் நின்னேன். அடுத்த நாள்ல இருந்து 'சினிமாஸ்கோப்’ வேலைகள் ஆரம்பமாயிடுச்சு... '’

அப்ளாஸ் அர்ச்சனா!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா!

 150

பிரசாதங்களின் மகிமை!

''மக்கள் தொலைக்காட்சியில், வெள்ளிக்கிழமைதோறும் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் 'தேவாம்ருதம்’ நிகழ்ச்சியில் பெருமாள், சிவன் கோயில்களில் செய்யப்படும் நைவேத்தியங்கள் மற்றும் அது தயாரிக்கப்படுவது பற்றி ஒளிபரப்புகிறார்கள். பிரசாதங்களின் மகிமையையும் அவற்றில் சேர்க்கப்படும் பொருட்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களையும் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கு  வது... வரவேற்கத்தக்கது'' என்று பரவசப்படுகிறார் மதுரையில் இருந்து வி.ஜெ.விஜயலஷ்மி.

மன அழுத்தம் குறைக்கிறது!

''சன் டி.வி-யின் ஆதித்யா சேனலில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை கலாட்டாக்கள்... மனஅழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியைத் தருகின்றன. மேலும், இடையிடையே... 'சும்மா நடிங்க பாஸ்’, 'டாடி எனக்கு ஒரு டவுட்’ போன்ற காட்சிகளும் கலக்கல்'' என்று ஆனந்தத்தில் குதூகலிக்கிறார் தென்காசியில் இருந்து ஏ.ஆர்.லெட்சுமி.

நல்வழிப்படுத்துகிறது!

''கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மதியவேளையில் 'நெஞ்சு பொறுக்குதில்லையே..!’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. 'பெற்றோர்களை, பிள்ளைகள் புறக்கணிக்கக் காரணம், பணச்சுமையா... பணிச்சுமையா?' என்ற தலைப்பிலான நிகழ்ச்சி... என்னை உருக்கிவிட்டது. வயதானவர்கள் படும் கஷ்டங்கள் நேரடியாக விவரிக் கப்படும்போது, கண்ணீர் முட்டுகிறது. இதேபோல இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு தலைப்புமே அருமை. இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்களை நல்வழிப்படுத்திக் கொள்வார்கள்'' என்று நம்பிக்கை வார்த்தைகள் பகர்கிறார்... சென்னை அடையாறில் இருந்து சாந்தி சுந்தர்.