ஸ்பெஷல் 1
Published:Updated:

பட்டங்கள் ஆள்வதும்... சட்டங்கள் செய்வதும்... பாலியல் கொடுமைக்கு ஆளாவதும்..!

பொன்.விமலா, படங்கள்: ப.சரவணகுமார்

ற்ற கல்வியாலும், கொண்ட தன்னம்பிக்கையாலும் இன்று எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் எழும்பி வரும் நேரத்திலும், 'பெண் சுதந்திரம்' பற்றிய கதறல்கள் நின்றபாடில்லை. இப்போது அதைவிட அதிஅவசரமாக... 'பெண்களின் பாதுகாப்பு' குறித்த பதறல்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. 'ஏன் வீட்டை விட்டு வெளியில் வருகிறீர்கள்... பேசாமல் அடுப்பு ஊதிக்கொண்டு அடுக்களையிலேயே கிடக்க வேண்டியதுதானே' என்று ரிவர்ஸ் கியர் போடச் சொல்லும் அளவுக்கு நாடெங்கும் பெருகிக் கொண்டிருக்கின்றன பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், குற்றங்கள்!

'ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளானாள் என்றால், ஆடை, அலுவலக நேரம் என்று, அருகில் இருந்து பார்த்ததுபோல, ஏதோ ஒரு காரணத்தைத் தயாரித்து சப்பைக்கட்டு கட்டுவதில்தான் குறியாக இருக்கிறது இந்த சமூகம். ஆனால், ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதற்கு, ஆண்தான், ஆண் மட்டும்தான் காரணம் என்கிற கண்ணாடி உண்மையை ஒப்புக்கொள்ளாத சாபக்கேடு சமூகம் இது. காரைக்கால் இளம்பெண் பாலியல் பலாத்காரம், சிறுசேரி மென்பொறியாளர் உமாமகேஸ்வரி பாலியல் பலாத்கார கொலை என வன்கொடுமைகள் தொடர்ந்துகொண்டிருக்க, எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூட யாருமில்லை. ஏதோ... ஊருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்கும் சமூக அமைப்புகள் மட்டுமே கத்திக் கரைய வேண்டியதாக இருக்கிறது.

பட்டங்கள் ஆள்வதும்... சட்டங்கள் செய்வதும்... பாலியல் கொடுமைக்கு ஆளாவதும்..!

சட்டங்களும், அரசு போடும் திட்டங்களும் பெண்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை, இழிவுபடுத்தலை, ஓரங்கட்டுதலை, சுரண்டலை, பாலியல் தாக்குதல்களை, வன்புணர்ச்சிகளைத் தடுத்து நிறுத்த முடியுமா? ஆணாதிக்க வன்முறை குடும்பத்தில் தொடங்கி உலகம் முழுக்க பரவிக்கிடக்கும்போது, பாலின சம உரிமைகளை நிலைநாட்டுவது எப்படி? பெண்ணுக்கான போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு பெண்ணுக்கு மட்டும்தானா?’

- மக்கள் சிவில் உரிமைக் கழகம் மூலமாக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து, மார்ச் 5 அன்று மாலை, சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடலில், இப்படி பல கேள்விகள் எழுப்பப்பட்டன. முழங்கிய பல்வேறு சமூக ஆர்வலர்களின் முத்தாய்ப்பான சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு...

ஷீலு (தலைவி - பெண்கள் இணைப்புக் குழு): ''குடும்பத்தில் ஆரம்பித்து ஊடகங்கள் வரை பெண்களைப் பயன்படுத்தும், இழிவுபடுத்தும் சமூகம்தானே இது? ஒரு பெண்ணின் குடும்பச் சிக்கலைக்கூட, கட்டப்பஞ்சாயத்து போல நடத்தி, வீதிக்கு கொண்டு வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, சக பெண்களையே சுவாரஸ்யமாகப் பார்க்க வைக்கிறது மீடியா. உமாமகேஸ்வரிக்கு நடந்த கொடுமைக்கு, இவர்கள் கூறும் படுமோசமான காரணம், அவள் செருப்பைக் கழட்டி அடித்தாள் என்பது. ஆண்கள் செய்யும் அயோக்கியத்தனம் ஒவ்வொன்றுக்கும் காரண காரியங்கள் தயாரிக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீட்டுக்குள் அடைபட்டு கிடந்தபோது, வரதட்சணை, குடும்ப வன்முறை என்று நான்கு சுவருக்குள் நசுக்கப்பட்டாள். படிப்பு, தொழில், வேலை என்று வெளியில் செல்ல ஆரம்பிக்க... ஈவ் டீசிங், பாலியல் கொடுமைகள் என்று பொதுவெளிக் கொடுமைகளை எதிர்கொள்கிறாள். ஆக, பெண்களை எப்போதும் துரத்திக்கொண்டே இருக்கின்றன பிரச்னைகள்.

எய்ட்ஸ் குறித்து, கிராமங்களில்கூட இன்றைக்கு போதுமான தெளிவு வந்திருக்கிறது. அதற்குக் காரணம்... அரசாங்கம் செய்த விளம்பரங்களே. அதுபோல பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் போதிய விளம்பர பிரசாரங்களை அரசாங்கம் செய்ய வேண்டும்.''

பாண்டிமாதேவி (உயர் நீதிமன்ற வழக்கறிஞர்): ''இன்றைக்கு எத்தனை பேர் பெண்களைத் துன்புறுத்தும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்? மனைவியை தெருவில் இழுத்துப் போட்டு ஒரு கணவன் அடித்தாலும் கேள்வி கேட்காமல் நமக்கென்ன வந்தது என ஒதுங்கிக் கொள்பவர்கள்தான் நம்மைச் சுற்றி இருப்பவர்கள். அனைத்துக்கும், 'நான் நான்’ என்று மார்தட்டி வரும் ஆண்கள்... பெண்களின் பிரச்னைக்காக மட்டும் போராட வருவதில்லை. அது ஏதோ பெண்ணிய அமைப்புகளின் பொறுப்பு என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். சாதியப் பிரச்னைகளுக்காக கொக்கரிக்கும் அரசியல் கட்சிகளும், பெண்களுக்காகப் போராடுவதில்லை.

பெண் தன்னை தற்காத்துக்கொள்ள கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். மனித குலத்தின் பெண், மற்றொரு பாலான ஆணிடமிருந்து பாதுகாப்புப் பெற கவசத்தோடுதான் அலைய வேண்டுமா? ஏதோ விலங்கினத்தை எதிர்த்துப் போராடப் போவதுபோல, பெண்களை கராத்தே, பெப்பர் ஸ்பிரே என்று தயார்படுத்தச் செல்லும் அளவுக்கு அவளை கொடுமைக்குள்ளாக்கியிருக்கிறது ஆண் இனம். அது அவர்களுக்கான வெட்கக்கேடு!''

பட்டங்கள் ஆள்வதும்... சட்டங்கள் செய்வதும்... பாலியல் கொடுமைக்கு ஆளாவதும்..!

கீதா (சமூக ஆய்வாளர்): ''ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் இது... 'இவ்ளோ நேரமா அந்தப் பொண்ணுக்கு போன்காலோ, எஸ்.எம்.எஸ்-ஸோ வரலைனாலே அந்தப் பொண்ணு நல்ல பொண்ணுன்னு அர்த்தம்’. எவ்வளவு மலிந்த வரையறையை பெண்களுக்கு வைக்கிறார்கள்?! ஆனால், பெண்ணைக் கடவுளாகப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள், அழகின் சின்னமாக வர்ணிக்கிறார்கள், நதியாக, இயற்கையாக புகழுரைக்கிறார்கள். இந்தப் பொய்கள் எதுவும் வேண்டாம். பெண்ணைப் பெண்ணாகப் பார்த்தாலே போதும். குறைந்தபட்சம் பாதுகாப்பான சூழல் இருந்தாலே போதும்.

மீடியாக்கள்... பெண்களின் கண்ணியத்தைக் குறைத்து, போகப் பொருளாகச் சித்திரிப்பது, சகிக்க முடியாத குற்றம். பாலியல் கொடுமைகள் நிகழ மது ஒரு முக்கியக் காரணம். அதனால் மதுவைத் தடை செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மது வெறியர்களுக்குப் பலியாக பல பெண்களின் உயிரை தொடர்ந்து தாரைவார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டிவரும்''.

ஓவியா (பெண்ணியவாதி): ''ஆரம்பத்திலிருந்தே ஆண் உயர்த்தப்பட்டவனாகவும் பெண் தாழ்த்தப்பட்டவளாகவும் சமூக அமைப்பில் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது இப்போது பெண்ணுக்கான சுதந்திரம் பூட்டியும் இல்லாமல், திறந்தும் இல்லாமல் கிடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், பாதுகாப்பு குறைந்துகொண்டு வருகிறது. இதுவரை பெருமளவில் வெளியில் வராமல் இருந்த அல்லது பதிவு செய்யப்படாமல் இருந்த பாலியல் வன் முறைகள், இப்போது வெளிச்சத்துக்காவது வருகின்றன. பெண்களின் ஆடைகள்தான் பாலியல் பலாத்காரத்துக்கு வழி செய்கிறது என்பதை, ஏற்றுக்கொள்ளவே முடியாது. இறுக்கமாக உடை அணிந்தாள் என்பதற்காக,   பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, 'ஆடைக் கவர்ச்சியால் கற்பழித்தேன்’ என்பது ஆண் திமிர்!''