Published:Updated:

பாரம்பரியம் Vs பார்லர் - 8

ஆய்லி ஸ்கின்னுக்கு அசத்தல் ட்ரீட்மென்ட்! இந்துலேகா.சி

டந்த இதழ்களில் தலை மற்றும் தலைமுடி சார்ந்த பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் அலசிய 'பாரம்பரியம் Vs பார்லர்’ பகுதி, முக அழகு பராமரிப்பை இந்த இதழிலிருந்து ஆரம்பிக்கிறது...

பார்லர்

''எந்த வகை சருமமாக இருந்தாலும், தினந்தோறும் தவறாமல் முகத்துக்கான பராமரிப்பைக் கொடுத்துட்டு வந்தாலே போதும்... மாசு மரு இல்லாத அழகைப் பெறலாம்!'' என ஆர்வத்தோடு ஆரம்பித்தார் 'க்ரீன் டிரெண்ட்ஸ்’ சீனியர் டிரெயினர் பத்மா...

''தினமும் காலையில் குளிக்கும்போது, முகத்துக்கு மட்டும் கிளென்ஸிங் மில்க் பயன்படுத்துங்க. அடுத்து, டோனர் அப்ளை செய்து, பிறகு மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்யுங்க. வீட்ல இருந்தா இதுமட்டும் போதும். ஒருவேளை நீங்க வேலைக்கோ, இல்ல வெளியவோ போகணும்னா... இந்த மூணு ஸ்டெப்ஸ் முடிச்ச பிறகு, சன் ஸ்க்ரீன் அல்லது சன் ப்ளாக் அப்ளை பண்ணணும். வெளிய கிளம்புறதுக்கு 20 நிமிஷம் முன்னயே அப்ளை பண்ணிடணும். அப்பதான் அது வேலை செய்ய ஆரம்பிக்கும்.

பாரம்பரியம் Vs பார்லர் - 8

இதுவரைக்கும் நான் சொன்ன எல்லாமே உங்க ஸ்கின் டைப்புக்கு ஏத்த புராடெக்டா இருக்கிறது ரொம்ப முக்கியம். வெளிய போய், திரும்பி வந்ததும்... மறுபடியும் கிளென்ஸர், டோனர், மாய்ஸ்ச்சரைசர் அல்லது நைட் க்ரீம் பயன்படுத்தணும். இதை தொடர்ந்து செய்தாலே... சருமம் மென்மையாவும், பொலிவுடனும் இருக்கும்'' என்று சொல்லும் பத்மா,

இந்த இதழில் எண்ணெய்ப் பசை சருமத்துக்கான (ஆய்லி ஸ்கின்) பார்லர் ட்ரீட்மென்ட் எப்படி என்பது பற்றி விளக்குகிறார்.

''பார்லரில் அட்வான்ஸ் ஸ்கின் லைட்டனிங், பிரைட்டனிங்... இதுமாதிரி ஸ்பெஷலா இருக்கக்கூடிய ஃபேஷியல்களை, சரும வகைக்கு ஏத்த ஜெல் மற்றும் க்ரீம் பயன்படுத்தி செய்றோம். பொதுவா ஆய்லி ஸ்கின்னுக்கு வரும் பிரச்னை... டல் ஸ்கின் மற்றும் முகப்பரு. இதுக்கு 'அரோமா பேர்ல்' (pearl) ஃபேஷியல் செய்வோம். அதுல முகத்தை கிளென்ஸிங் மில்க் கொண்டு க்ளீன் செய்து, மைல்ட் ஸ்கிரப் பயன்படுத்தி, இறந்த செல்களை நீக்குவோம். முகப்பரு இருக்கும்ங்கறதால, ஆய்லி ஸ்கின்னுக்கு மசாஜ் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தா... பரு அதிகமாகிடும்.

பாரம்பரியம் Vs பார்லர் - 8

ஸ்கிரப் செய்து முடிச்சதும், நீராவி கொடுத்து, பிளாக் அண்ட் வொயிட் ஹெட்ஸை ரிமூவ் செய்து, முகத்தை துடைக்கணும். அடுத்தடுத்த ஸ்டெப்பா... டோனர் பூசி, இரண்டுவிதமான ஜெல் அப்ளை செய்து, பத்து நிமிஷத்துக்கு அப்புறம் பேண்டேஜ் துணியை ஒரு லேயர் மாதிரி முகத்துல வெச்சு, அதுக்கு மேல 'ஹை ஃப்ரீக்வன்ஸி’ ட்ரீட்மென்ட் கொடுப்போம். இது, முகப்பரு உருவாகக் காரணமா இருக்குற பாக்டீரியா போன்ற காரணிகளை அழிச்சுடும். இதுக்கு பிறகு, முகத்தை துடைச்சுட்டு, ஒரு 'பேக்’ பூசி, பத்து நிமிஷம் ஊறவிட்டு துடைச்சு, சென்ஸிட்டிவ் ஆயில் 2 அல்லது 3 சொட்டுக்கள் எடுத்து முகம் முழுக்க அப்ளை செய்து, துடைச்சு எடுப்போம். இந்த ஃபேஷியல் பண்ணின அடுத்த நாளே, முகப்பரு மறைய ஆரம்பிக்கறத பார்க்கலாம்'' எனும் பத்மா, ஆய்லி ஸ்கின் பராமரிப்புக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய சில டிப்ஸ்களைத் தந்தார்.

•  தயிர் மற்றும் கடலைமாவு கலந்து 'பேக்’ போட்டால், சருமத்தில் எண்ணெய் வடிவது குறைந்து, 'பளிச்’சென்று இருக்கும்.

•  தக்காளி துண்டுகளையோ அல்லது அதன் சாறையோ முகத்துக்கு அப்ளை செய்வது... முகத்தில் எண்ணெய் வழியாமல் இருப்பதுடன், சரும நிறத்தையும் கூட்டும்.

•  ஆரஞ்சு, எலுமிச்சை (எலுமிச்சை சாறை நேரடியாக முகத்தில் பூசக்கூடாது, கொஞ்சம் தேன் கலந்து பயன்படுத்தலாம்), திராட்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்களின் சாறை முகத்துக்குப் பூசினால், எண்ணெய் வழிவது குறைவதுடன், சருமத்துக்குத் தேவையான விட்டமின்கள் கிடைத்து ஆரோக்கியமாக இருக்கும்.

பாரம்பரியம்

பாரம்பரியம் Vs பார்லர் - 8

''பளிச்சிடும் கண்கள், எடுப்பான மூக்கு, மிருதுவான இதழ்கள், இவற்றையெல்லாம்விட பட்டுப்போன்ற சருமம்தான் முக அழகை பளிச்சிட்டுக் காட்டும். அந்த சருமப் பராமரிப்பு பற்றிப் பார்ப்போம்...'' என ஆரம்பித்தார் 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக், நிர்வாகி கீதா அஷோக்.

''ஆய்லி ஸ்கின், நார்மல் ஸ்கின், டிரை ஸ்கின், காம்பினேஷன் ஸ்கின், சென்ஸிட்டிவ் ஸ்கின் இப்படி மொத்தம் ஐந்து வகையான ஸ்கின் டைப் இருக்கு. நார்மல் டு ஆயில், டிரை டு நார்மல் இப்படி ஸ்கின் டைப்ல பல உட்பிரிவுகளும் இருக்கு. தோலில் மொத்தம் மூன்று அடுக்குகள் இருக்கு. முதல் அடுக்கு 'எபிடெர்மிஸ்' (Epidermis) - இது பல நுண்ணிய துவாரங்களைக் கொண்டது. இரண்டாவது அடுக்கு 'டெர்மிஸ்' (Dermis) - இதில், 'செபெஷியஸ் கிளாண்ட்' எனும் எண்ணெய்ச் சுரப்பிகள், முடியின் வேர் பகுதி, மெலனைஸ் எனப்படும் மெலனின் உற்பத்தி பண்ணும் காரணிகள் மற்றும் வியர்வைச் சுரப்பிகளும் இருக்கும். மூன்றாவது அடுக்கு 'சப்கியூட்டேனியஸ்' (Subcutaneous) - இதில் கொழுப்பு செல்கள் இருக்கு.  

ஆய்லி ஸ்கின்!

இந்த இதழ்ல ஆய்லி ஸ்கின் பற்றிப் பார்ப்போம். தோலின் இரண்டாவது அடுக்கான டெர்மிஸில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகள், 'சீபம்’ எனும் எண்ணெயைச் சுரக்கும். இது நார்மல் அளவைவிட அதிகமா சுரக்கும்போது, இரண்டாவது அடுக்கிலிருந்து, முதல் அடுக்கான எபிடெர்மிஸ் என்பதில் உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியா அது வெளியே வரும். அதனாலதான் சருமம் ஆய்லி ஆகும். ராத்திரி தூங்கி, காலையில் எழுந்ததும் முகம் கழுவாம நேரா கண்ணாடி முன்ன நின்னா, முகம் சும்மா மினுமினுக்கும். அப்படி இருந்தா... உங்களோடது ஆய்லி ஸ்கின்.

இதோட நன்மைனு பார்த்தா, முகத்துல அவ்வளவு சீக்கிரமா சுருக்கம் வராது, 50 வயசானாலும் சருமத்தை இளமையா வெச்சுக்கும். தீமைனு பார்த்தா, முகம் பொலிவில்லாம எண்ணெய் வழிசலோடு இருக்கும், வியர்க்குரு மாதிரியான ரேஷஸ் மற்றும் முகப்பரு எளிதில் வரும். ஆய்லி ஸ்கின்ல முகப்பரு எதனால வருதுனா... தோலின் முதல் அடுக்கில் உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியா வரும் எண்ணெயின் மேல் படியும் தூசு, துவாரத்தின் வழியா உள்ளே போகும். அதை நம் சருமம் தானாகவே வெளியேற்றும். இதுதான் முகப்பரு. முகப்பருவைக் குறைக்க, சரும மருத்துவரின் ஆலோசனையோட தினமும் ஒரு ஸின்க் (Zinc) சத்துள்ள மாத்திரை சாப்பிடலாம்.

ஆய்லி ஸ்கின்னை பராமரிக்கறதுக்கு, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 - 7 முறை முகத்தை கழுவணும், செயற்கை வாசனைகள் இல்லாத மெடிக்கேட்டட் சோப்புகளை (ஆங்கில மருந்துக் கடைகளில் கிடைக்கும்) பயன்படுத்தணும், ஃபேஸ்வாஷ் பயன்படுத்துறவங்க சாலிசிலிக் ஆசிட் (Salicylic acid) உள்ளதா பார்த்து தேர்ந்தெடுக்கணும், முகத்துக்கு கிளிண்டமைசின் போன்ற உட்பொருட்கள் உள்ள க்ரீம்களை பயன்படுத்தலாம். முகத்துக்கு எண்ணெய்ப் பசை உள்ள க்ரீம், மேக்கப், ஃபவுண்டேஷன் பயன்படுத்தக் கூடாது. மேக்கப் போடவேண்டிய சூழ்நிலை வந்தா... 'மேட் ஃபினிஷ்’ வகை மேக்கப் அயிட்டங்களைப் பயன்படுத்தலாம். ஆய்லி ஸ்கின் இருக்கறவங்களுக்கு சூட்டுடம்பு. அதனால நிறைய தண்ணி குடிக்கணும்.

பாரம்பரியம் Vs பார்லர் - 8

முகப்பருவைத் தவிர, ஆய்லி சருமத்துக்கு பெருசா எந்தப் பிரச்னையும் வராது. சொல்லப்போனா ஸ்கின் டைப்லயே ஆய்லி ஸ்கின்தான் பெஸ்ட். ஏன்னா, முகத்துல சுருக்கம், தேமல் போன்ற சருமப் பிரச்னைகள் வரவிடாமல் தடுக்கறதோட, ஸ்கின் கேன்சர் வர்றதுக்கும் வாய்ப்பு குறைவு. ஆய்லி ஸ்கின்ல சுரக்கற சீபம், அந்த அளவுக்கு சருமத்தைப் பாதுகாக்கும்.''

பளீரிடும்...

'ஆய்லி ஸ்கின்’னுக்கான ஃபேஸ்பேக்!

ஒரு கட்டு புதினாவை சுத்தப்படுத்தி, தண்ணீர் விடாமல் அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வெச்சுக்கோங்க. தேவைப்படும்போது ஒரு ஸ்பூன் புதினா சாறு, மூன்று சொட்டு டீ ட்ரீ ஆயில் (Tea tree oil), ரெண்டு சொட்டு பச்சோலி ஆயில் (Patchouli oil) சேர்த்துக் கலந்து, முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு கழுவினா, 3 - 5 மணி நேரத்துக்கு முகம் எண்ணெய் வழியாம ஃபிரெஷ்ஷா இருக்கும்.