ஸ்பெஷல் 1
Published:Updated:

எங்கே போச்சு... 181?

இரா.ரூபாவதி

எங்கே போச்சு... 181?

வீட்டு பட்ஜெட் போட்டு போட்டே நொந்து நூடுல்ஸ் ஆகிக்கிடப்பவர்கள் பெண்கள். இந்நிலையில், நாட்டின் பட்ஜெட்டில் பெண்களுக்கான ஒதுக்கீடுகளில் கை வைத்து, மேலும் நோகடித்திருக்கிறார், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். முந்தைய நிதியாண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றம், பாதுகாப்புக்கு ஒதுக்குவதாக சொன்ன நிதி, பெரும் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 'யங்புல்ஸ் எஜுகேஷன்’ நிறுவனத்தின் இயக்குநர் தன்மதி திருவேங்கடம் பேசியபோது, ''2012-ம் ஆண்டு டிசம்பரில் டெல்லியில் நடந்த பாலியல் கொடுமை, நாட்டையே உலுக்கிய சம்பவமாக அமைந்தது. இதன் விளைவாக 'நிர்பயா திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டது. இதில் பெண்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்காக பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவது, பொதுத்துறை போக்குவரத்தில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்துவது,

எங்கே போச்சு... 181?

பேருந்துகளில் நிகழும் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக அவசரத் தேவைகளுக்கு அழுத்தும்விதமாக பொத்தான்கள் பொருத்துவது, இலவச தொலைபேசி சேவை துவங்குவது என பல திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த வசதிகள் எந்த அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. இவையெல்லாம் இன்னமும் தமிழகத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை என்பதற்கான உயிர்சாட்சிதான், சமீபத்தில் சென்னையில் நடந்திருக்கும் ஐ.டி. பெண் ஊழியர் உமாமகேஸ்வரியின் கொலை.

'நிர்பயா திட்டம்' மூலமாக ஒதுக்கப்பட்ட நிதியில், அனைத்து மாநிலங்களிலும் செயல்படும்விதமாக 181 என்ற ஹெல்ப்லைன் எண்ணைக் கொண்டு வந்தது அரசு. இந்த எண் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை 7.29 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 3,000 அழைப்புகள் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி வரும் அழைப்புகளில் 40 பர்சன்ட் ஆசிட் வீச்சு, கடத்தல், வன்முறை சம்பவங்களாக உள்ளன. கால்சென்டருக்கு வரும் அழைப்புகளின் நிலையைப் பொறுத்து போலீஸுக்கும், மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப்படும். ஆனால், இந்த கால்சென்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதால், இது தற்போது செயல்பாட்டில் இல்லை என்பது கொடுமை!

இதையெல்லாம் சரிசெய்து, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் நாட்டின் போக்கு இருக்கிறது. இந்த நிலையில், எந்த தைரியத்தில் பெண்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கிறார்களோ தெரியவில்லை'' என்று வருத்தம் பொங்கச் சொன்னார் தன்மதி.

பெண்கள், நாட்டின் கண்கள் என்பார்கள். கண்கள் சரியில்லை என்றால், நாட்டின் நலனில் இருள்சூழும் என்பதை அரசுகள் உணர வேண்டும்.