மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

ஒரே வாரத்துல... 28 ஷோ!ரிமோட் ரீட்டா

னியார் சேனல்கள் வந்த புதிதில், அதுல காமெடிக்குனு தனியா கான்செப்ட் உருவாக்கி, நம்ம எல்லாரையும் சிரிக்க வெச்ச 'லொள்ளு சபா’ பாலாஜி, தவறிட்டாரு. கண்ணைத் தொறந்தாலும்... மூடினாலும் அவரோட காமெடிகளே முட்டிக்கிட்டிருக்க... அவரோட வீட்டுக்குப் போனேன். தாளாத துக்கத்தால பாலாஜியோட மனைவி பேசுற நிலைமையில இல்ல. சாருக்கு முத்து மாதிரி மூணு பசங்க. அவரோட தம்பி சிவாகிட்ட, ''என்ன ஆச்சு?''னு கேட்டேன்.

கேபிள் கலாட்டா!

''அண்ணனுக்கு மஞ்சகாமாலை. ஆரம்பத்துலயே தெரியாம போச்சு. ரொம்ப சீரியஸாகி, லிவர், கிட்னினு ஒவ்வொண்ணா செயலிழக்க ஆரம்பிச்சுடுச்சு ரீட்டா''னு வருந்தின சிவா, அண்ணனோட நினைவுகளைப் பகிர்ந்தார்.

''எங்க அக்கா நித்யவதி, நல்ல மேடைப் பேச்சாளர். சின்ன வயசுலயே அக்கா மாதிரி பேசி கைதட்டல் வாங்கணும்னு அண்ணனுக்கும் ஆசை. பேச்சுப் போட்டி, பட்டிமன்றம்னு கலந்துகிட்டு, பரிசு வாங்க ஆரம்பிச்சார். நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சுட்டு இருக்கும்போதே... மேடை மிமிக்ரிகள் எல்லாம் பண்ணியிருக்கார்'' என்ற சிவா, சொன்ன கூடுதல் தகவல்... நடிகர் கருணாஸும், பாலாஜியும் நண்பர்களாக பல மேடை நிகழ்ச்சிகள் செய்திட்டிருந்தாங்களாம். டி.வி-யில பாலாஜி பிஸி ஆனதால, மேடை நிகழ்ச்சி பண்றதை விட்டுட்டாராம்.

''தனியார் சேனல்கள் வர ஆரம்பிச்ச புதுசுல, ஒரு சேனல்ல வாய்ப்புக் கிடைச்சுது. முதல் முதலா ஒருபடப் பாடல்கள், புதுப்பட பாடல்கள் இந்த கான்செப்ட் எல்லாம் பண்ண ஆரம்பிச்சார் அண்ணன். டாக்டர் மாத்ருபூதம் சாரை வெச்சு... 'புதிரா, புனிதமா’னு ஒரு நிகழ்ச்சி நடத்தி, சேனல் வரலாற்றுல ஒரு புரட்சியே பண்ணினதும் அண்ணன்தான். ஸ்டார் விஜய் டி.வி-யில 'லொள்ளு சபா’ மூலமா ஆடியன்ஸ்கிட்ட நல்லா ரீச் ஆக ஆரம்பிச்சார்.

கேபிள் கலாட்டா!

அண்ணனை நடிகராதான் பலருக்கும் தெரியும், ஆனா, அவரு நல்ல கிரியேட்டர். 'லொள்ளு சபா’வோட ஸ்கிரிப்ட்டு, டயலாக் எல்லாம் அவர்தான் பார்த்துக்கிட்டார். என்னையும் அதுல நடிக்க வெச்சார். அதுக்கப்புறம் சன் டி.வி. ஆஃபர் வந்ததும், சந்தானத்துக்கிட்ட 'லொள்ளு சபா’வை கொடுத்துட்டு, 'சன்' டி.வி-யில 'சூப்பர் டென்’ பண்ண ஆரம்பிச்சார். நீ நம்புறயோ இல்லியோ, ஒரே வாரத்துல 28 டி.வி ஷோ டைரக்ட் பண்ணினது அண்ணன் மட்டும்தான்!

நிறைய படங்களும் பண்ணிட்டார். கடைசியா, சிவா நடிச்ச 'தில்லுமுல்லு’ படத்துக்கு அண்ணன்தான் டயலாக். அடுத்து, 'ஆவி பறக்குது’னு ஒரு படத்துக்கு முதல் பாதி டயலாக் ரெடி பண்ணிட்டார். இதை முடிச்சுட்டு, ஒரு படம் டைரக்ட் பண்ணணும்னு கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் ரெடி பண்ணிட்டார். புரொட்யூசர்கூட துபாய்ல ரெடி. அந்தப் படத்தை நல்லபடியா டைரக்ட் செய்து, அண்ணன் பேர் போட்டு, எப்படியாச்சும் ரிலீஸ் பண்ணிடணும். அவரோட கடைசிப் பையன் ஆகாஷ§க்கு நடிப்புல ரொம்ப ஆர்வம். அவனை சில டெஸ்ட் ஷூட்டுக்குக்கூட கூட்டிட்டு போயிருக்கார். அவரோட ஆசைக்காகவாவது, அவனை எப்படியாச்சும் நடிக்க வெச்சுடணும்''னு நம்பிக்கையா சொன்னார் சிவா, கண்களை துடைச்சபடி.

அண்ணனோட ஆசீர்வாதம் அதை நடத்தும் சிவா..!

கேபிள் கலாட்டா!

''தலை வெச்சும் படுக்கமாட்டேன்!''

ந்தப் பிரியங்கா பொண்ணு வாயைத் திறந்தா போதும், ஒரே பட்...பட்... படார் சர வெடிதான். கேட்டா, 'அதானே என்னோட வேலையே’னு கவுன்ட்டர் வேற!

''ஹலோ ரீட்டா... என்னடா இது, கன்னடத்துப் பொண்ணு, இப்படி தமிழ்ல பொளந்து கட்றாளேனு பாராட்டாம, ரொம்பதான் சலிச்சுக்குறே...''

''அட, நீ சுத்த கர்நாடகம்னு எனக்கு இப்பத்தானே தெரியும்..!''

''என்ன காமெடியா! எனக்கு சொந்த ஊருதான் கர்நாடகா... ஆனா, ஒரு வயசு இருக்கும்போதே சென்னைக்கு வந்துட்டேன். படிச்சது... எத்திராஜ் காலேஜ்ல விஷ§வல் கம்யூனிகேஷன். தோழி ஒருத்தி, 'ஜீ’ தமிழ் டி.வி-யில 'அழகிய பெண்ணே’ ஷோ தொகுத்து வழங்கிட்டு இருந்தா. திடீர்னு அவளுக்கு வேற வேலை வந்ததால, அந்த ஷோவோட டைரக்டர்கிட்ட என்னைப் பத்தி இன்ட்ரோ கொடுத்தா. அவரும் டெஸ்ட் ஷூட் பார்த்துட்டு 'ஓகே’ சொல்லிட்டாரு. இப்படி ஆக்ஸிடென்ட்டாதான், மீடியாவுக்குள்ள வந்தேன்.''

''ஆர்.ஜே மாதிரி படபடனு பேசுறியே...''னு கேட்டு முடிக்கறதுக்குள்ள,

''அட ஆமா ரீட்டா! எனக்கு ஆர்.ஜே. ஆகணும்கிறதுதான் ஆசை. தனியார் ரேடியோவுல நம்ம மா.கா.பா. ஆனந்த் டீம்ல, இன்டன்ஷிப்  செய்துட்டிருந்தேன். அது முடிஞ்சதும், ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. எனக்கு முன்ன அதுல கலந்துக்கிட்ட ஒருத்தர் செலக்ட் ஆனதால, எனக்கு ஆடிஷன்ல பெர்ஃபார்ம் பண்ற வாய்ப்புகூட கொடுக்கல. கோபத்துல... 'இனி, எஃப்.எம். பக்கமே தலை வெக்கமாட்டேன்'னு சபதம் எடுத்ததைப் பார்த்து, நம்ம குரு மா.கா.பா., விஜய் டி.வி-யோட 'சினிமா, காரம், காபி’ ஷோவுக்கு ரெகமெண்ட் பண்ணினார். ரெண்டு பேரும் அந்த ஷோவை நடத்தினோம்.

அப்புறம், சுட்டி டி.வி நிகழ்ச்சிகளுக்கு வாய்ஸ் கொடுக்குற வாய்ப்பு வந்து... காம்பயர் பண்ண ஆரம்பிச்சு, சன் டி.வி 'சூரிய வணக்கம்’, சன் மியூசிக் 'மாமீஸ் டே அவுட்’னு சும்மா பூந்து விளையாடிட்டு இருந்தேன். எம்.பி.ஏ. படிப்புக்காக, கொஞ்சம் ஒதுங்கி இருந்த நான், மறுபடியும் விஜய் டி.வி-யோட 'ஒல்லி பெல்லி’ ஷோ மூலமா ரீ-என்ட்ரி. சைடுல கார்ப்பரேட் ஈவென்ட் காம்பயரிங், ஷார்ட் ஃபிலிம்னு பிஸியா போயிட்டிருக்கு. ஸோ... இதுக்கு மேல உங்கூட மொக்க போட எனக்கு டைம் இல்ல... வர்ட்டா... டாடா!'

சொன்னேன்ல, பட்...பட்... படார்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:   150

வாசகிகள் விமர்சனம்

வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!

''வசந்த் டி.வி-யின் வரும் 'வாய்மையே வெல்லும்’, 'ஜீ’ தமிழ் டி.வி-யில் வரும் 'சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற நிகழ்ச்சிகள், உளவியல்ரீதியாக பாதிப்பைத் தருகின்றன. இதில் கலந்துகொள்பவர்களில் பலரும், அவ்வளவாக படிப்பறிவோ, உலக அனுபவமோ இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். தங்களின் பிரச்னைகளை ஒரு மணி நேர நிகழ்ச்சியில் சேனல்கள் தீர்த்து வைக்கும் என்று நம்பி வருகின்றனர். ஆனால், நிகழ்ச்சி முடிவுறும் தறுவாயில், பெரிதாக எந்தத் தீர்வையும் கண்டுவிடாமல்... 'இதுதான் தீர்வு.... போய் வாழுங்கள்' என்று சொல்லி அவசர அவசரமாக அனுப்பிவைக்கின்றனர் நிகழ்ச்சியை நடத்துபவர்கள். இது, அந்த அப்பாவிகளின் வாழ்க்கையோடு விளையாடுவது போலல்லவா இருக்கிறது...?'' கேள்வி எழுப்புகிறார் சென்னை அம்பத்தூரில் இருந்து அஸ்வினி ஆனந்த்.

'ஒல்லி பெல்லி’ நிஜமா!

''விஜய் டி.வி. 'ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியில், மிகவும் குண்டாக இருக்கும் ஏழு ஆண்களையும், ஏழு பெண்களையும் தேர்ந்தெடுத்து... அவர்களின் வலி, வேதனைகளை அவர்கள் மூலமே சொல்ல வைத்து, நம் கண்களில் நீரை வரவழைத்துவிட்டனர். கூடவே... டாக்டர் மற்றும் யோகா நிபுணரின் துணையுடன் அவர்களையெல்லாம் ஒல்லியாக்கி காட்டுவதாக உறுதி கூறியிருப்பதுதான் யோசிக்க வைக்கிறது. இந்த 14 பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றினால்... எங்களுக்கு மகிழ்ச்சியே'' என்று எதிர்பார்ப்புடன் பேசுகிறார் கோவையில் இருந்து சி.எஸ்.சித்ரா.

நேர்த்தி... அருமை!

''பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தேநீர் நேரம்’ நிகழ்ச்சியில் 'காரடையான் நோன்பு’ பலகாரங்களை கீதா பாலகிருஷ்ணன் நேர்த்தியாகச் செய்துகாட்டினார். கூடவே, பண்டிகையின் சிறப்பம்சங்களையும், புராண கதாபாத்திரமான சாவித்திரியின் மேன்மையான குணங்களையும் சொன்னது மிகவும் அருமை'' என்று மனமுவந்து பாராட்டுகிறார் சென்னை கே.கே.நகரில் இருந்து வி.ஜானகி..