மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா

சின்னத்திரை நீலாம்பரி!ரிமோட் ரீட்டா

''என்னம்மா, ரேஷ்மா... சும்மா மூக்கும் முழியுமா, ஹீரோயின் கணக்கா 'நச்’சுனு இருக்கே. ஆனா, இப்படி வில்லியா வந்து மிரட்டுறியே..?''

''அதனாலதானே ரீட்டா, என்னைத் தேடி வந்திருக்கே..!''

- 'பட்’டுனு பதில் கொடுத் தாங்க, சன் டி.வி. 'வாணி ராணி’ சீரியல்ல கலக்கிட்டு இருக்கும் ரேஷ்மா.

கேபிள் கலாட்டா

''அது சரி, ரேஷ்மாவை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே...''னு இழுத்ததும், மேடம் 'கொசுவத்தி'யை க்ளோஸப்ல சுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

''உனக்கு தெலுங்கு சேனல் பார்க்கற பழக்கம் இருந்தா, நிச்சயமா என்னைப் பார்த்திருப்பே ரீட்டா. ஏன்னா, தெலுங்கு சேனல்கள்லதான் என்னோட கேரியரை ஆரம்பிச்சேன். சென்னையில் பிறந்தாலும், படிச்சு வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவில். அங்கயே இன்டர்நேஷனல் ஃப்ளைட்ல ஏர்ஹோஸ்டஸா வேலை பார்த்தேன். அப்படியே 17 வருஷம் யு.எஸ். வாசம். மறுபடியும் சென்னைக்கு ரிட்டர்ன். ஆனா, இந்த ஹாட் சிட்டியைத் தாங்க முடியாம ஹைதராபாத் போயிட்டேன். ஒருநாள் ஷாப்பிங் மாலுக்குப் போயிருந்தேன். அங்க ஒரு தெலுங்கு சேனல், பப்ளிக்ல புரோகிராம் நடத்திட்டு இருந்தாங்க. அதுல கலந்துகிட்ட நான், சும்மா ரெண்டு வார்த்தை பேசினேன். ரெண்டே நாள்ல அந்த சேனல் எம்.டி, இங்கிலீஷ் நியூஸ் ரீடர் வேலைக்குக் கூப்பிட்டார். என்னோட அப்பா தெலுங்கு சினிமா தயாரிப்பாளர். அதனால மீடியா அந்நியமில்லையேனு, ஆஃபரை ஏத்துக்கிட்டேன். அப்படியே டி.வி-5, மா டி.வி, சன் நெட்வொர்க்கோட ஜெமினி டி.வினு போயிட்டே இருந்தேன்...''

''என்ன ரேஷூ, கொசுவத்தி முடிஞ்சுருச்சா?''

''இப்பதான் ஸ்பீடா சுத்த ஆரம்பிக்குது ரீட்டா. நடுவுல டிஸ்டர்ப் பண்ணாதே. ஜெமினி டி.வி-யில என்னைப் பார்த்த ராதிகா மேடம்தான், 'வாணி ராணி’ சீரியலுக்காக இங்க கூட்டிட்டு வந்தாங்க. இந்த சீரியல் பார்த்துட்டு, 'படையப்பா படத்துல வர்ற நீலாம்பரி மாதிரியே இருக்கே!’னு நிறைய பேர் சொல்றாங்க. எனக்குதான் இன்னும் 'படையப்பா’ பார்க்கறதுக்கு நேரம் வரல.

இப்போ 'புதுயுகம்’ டி.வி-யில 'காகிதம்’ சீரியலும், 'வேந்தர்’ டி.வி-யில 'சுந்தரகாண்டம்’ சீரியலும் பண்ணிட்டு இருக்கேன். ஜஸ்ட் லைக் தட் ஆரம்பிச்ச மீடியா வாழ்க்கை... சுவாரஸ்யமாவும் பரபரப்பாவும் போயிட்டிருக்கு ரீட்டா!''

'ஓ.கே... டாடா!'

 ஹீரோயின்ஸ் குரல்ல... ஹிட் அடிச்சாச்சு!

திருச்சி சரவணக்குமார், சின்னத்திரை பெரியதிரைனு கலக்கிட்டிருக்கார்.

''ஆமா ரீட்டா, 'வாராயோ வெண்ணிலாவே’ படத்துல 'அட்டக்கத்தி’ தினேஷ§க்கு நண்பனாவும், 'நீயெல்லாம் நல்லா வருவடா’ படத்துல விமலோட நண்பனாவும் நடிக்கிறேன். அது சரி, என் பேரை எதுக்கு நீட்டி முழக்குறே? அதான் மீடியால எல்லாரும் ஷார்ட் அண்ட் க்யூட்டா என்னை 'டி.எஸ்.கே'னு கூப்பிடறாங்கள்ல... நீயும் அப்படியே கூப்பிடு!''

''என்ன டி.எஸ்.கே... எஸ்.டி.ஆர் மாதிரி ஏதேதோ பில்டப் கொடுக்குறியே...''

கேபிள் கலாட்டா

''ஏதோ இப்பதான் ஃபீல்டுல கால் இன்ச், அரை இன்ச்னு வளர்ந்துட்டு வர்றேன். அது பொறுக்காம கோத்துவிட பாக்குறியே ரீட்டா. நான் எந்தளவுக்கு முயற்சி எடுத்து இந்த இடத்துக்கு வந்திருக்கேன் தெரியுமா? பத்தாவது படிக்கும்போதே சினிமா டைரக்டர் ஆகணும்னு கனவு கண்டிருக்கேன். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ-வுல... கூடப் படிக்கறவங்க, டீச்சர்ஸ்னு எல்லாரும் அதிசயப்படுற அளவுக்கு மிமிக்ரி பண்ணுவேன். ரோபோ ஷங்கர் சாரோட பெர்ஃபார்மன்ஸ் பார்த்து, என்னை இன்னும் மெருகேத்திக்கிட்டேன்.

மிமிக்ரியில ஏதாச்சும் வித்தியாசமா பண்ணணும்னு, நடிகைகளோட குரல்களைப் பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். கல்லூரியில படிச்சப்போ, என்னோட ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் பார்த்துட்டு, 'அசத்தப் போவது யாரு’ டைரக்டர் பாராட்டினார். உடனே நான் நடிகைகள் குரல்ல பேசினதும், டோட்டலா இம்ப்ரஸ் ஆகி, உடனே வந்து நிகழ்ச்சியில கலந்துக்கச் சொன்னார். நிகழ்ச்சியோட ரெண்டாவது எபிசோட்லயே 'அசத்தல் மன்னன்’ அவார்டு வாங்கிட்டேன்.

அப்புறம் கலைஞர் டி.வி 'எல்லாமே சிரிப்புதான்’, 'ஜீ’ தமிழ் 'காமெடி ஜோடீஸ்’ வாய்ப்புகள் கிடைச்சுது. ஆதித்யா டி.வி 'சின்னவனே பெரியவனே’ நிகழ்ச்சிதான் பெரிய பிரேக். கிட்டத்தட 500 எபிசோட்கள் முடிச்சோம். தொடர்ந்து 'காமெடிக்கு நாங்க கியாரன்டி’, 'சவாலே சமாளி’னு நிகழ்ச்சிகள் பண்ணிட்டிருக்கேன்...''

''ஆமாம்... இந்த 'சவாலே சமாளி’யில உன்கூட வர்ற 'சிட்டி’ எப்படி..?''

''ஆமா ரீட்டா, 'அவர்கள்’ பட கமல் சார் டெக்னிக்கையும், 'எந்திரன்’ பட ரஜினி சாரோட பேரையும் மிக்ஸ் பண்ணி, 'சிட்டி’ பொம்மையோட இந்த ஷோல வர்றேன். இதுக்காகவே 'வென்ட்ரிலோக்யூசம்' (Ventriloquism) அதாவது, வேற எங்கயோ இருந்து நம்மளோட குரல் கேட்குற மாதிரி பேசுற கலையைக் கத்துகிட்டு, கலக்கிட்டு இருக்கேன். இந்த நிகழ்ச்சியில பப்ளிக்ல போய் மக்கள்கிட்ட சில கேள்விகள் கேட்டு, பதில் சொல்ல முடியலைனா... அவங்கள நாய் மாதிரி குரைக்கச் சொல்றது, டான்ஸ் ஆடச் சொல்றது, குரங்கு மாதிரி நடிக்கச் சொல்றது(!)னு நானும் 'சிட்டி’யும் அதகளம் பண்ணுவோம்...''

''அப்படி என்ன பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்பீங்க..?''

''சரி, நான் உன்னை கேட்கிறேன். இப்ப நீ ரொம்ப அவசரமா வெளிய கிளம்புறே... ஆனா, உன் வண்டி பஞ்சர் ஆயிடுது. ஏதாச்சும் ஆட்டோல ஏறிப் போகலாம்னு பார்த்தா, ஆட்டோ நஹி. அப்போ பார்த்து ஒரு சொறி நாய் வண்டி, மார்ச்சுவரிக்கு போற வண்டி, குப்ப லாரினு இது மூணும் வருது. நீ எதுல ஏறிப் போவே..?''

''நல்லா கேட்கறாங்கய்யா... கேள்வி!''

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:   150

விழிப்பு உணர்வு ஜெயதே!

''விஜய் டி.வி-யில் ஞாயிறுதோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சத்தியமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில், நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை ஆதாரப்பூர்வமாக ஒளிபரப்புகிறார்கள். மேலும், இவற்றிலிருந்து மக்களை காப்பாற்றப் பாடுபடும் சமூக ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் காட்டுகிறார்கள். மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தக்கூடிய இந்த நிகழ்ச்சி அருமை'' என்று மனமுவந்து பாராட்டுகிறார் மடிப்பாக்கத்தில் இருந்து ரஜினி பாலசுப்ரமணியன்.

குண்டானவர்களைக் கலாய்க்காதீர்!

''ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் பிற்பகல் 2 மணிக்கு 'ஹோம்மேக்கர்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் கலந்துகொள்வோருக்கு விதவிதமான விளையாட்டுப் போட்டி நடத்துகிறார்கள். இறுதியில் நடனம் ஆடச்சொல்லி சம்பந்தப்பட்டவர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கிறார்கள். எல்லாம் சரிதான்... ஆனால், காமெடி என்கிற பெயரில் கொஞ்சம் குண்டான உடல்வாகு உள்ளவர்களைக் கலாய்ப்பது சங்கடமாக இருக்கிறது. அதை மட்டும் தவிர்க்கலாமே'' என்று கோரிக்கை வைக்கிறார் ஈரோட்டில் இருந்து யசோதா பழனிச்சாமி.

தேவையான நிகழ்ச்சி!

''மயக்கமா... கலக்கமா?’ எனும் நிகழ்ச்சி, சத்தியம் டி.வி-யில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 முதல் 5 மணி வரை ஒளிபரப்பாகிறது. தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பவர்கள் வாழ்க்கை குறித்த பயம், வெளியே சொல்வதற்கு தயக்கம், விரக்தி போன்ற நிலைகளில் இருப்பவர்கள் தொலைபேசி வழியாக தங்களின் பிரச்னைகளைப் பகிர்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி நல்வழி காட்டுகிறார்கள். இன்றைய காலத்துக்கு தேவையான நிகழ்ச்சி'' என்று சிலாகிக்கிறார் தஞ்சாவூரில் இருந்து எஸ்.நித்யலஷ்மி.