கவிஞர் பொன்மணி, ஓவியம் : ஸ்யாம்
சின்னஞ்சிறு பருவத்தில் கண்டு கேட்டு அனுபவித்த அனுபவங்களே நம் அனைவருக்குள்ளும் சித்தன்னவாசல் ஓவியங்களைப் போலப் பதிந்து போயிருக்கின்றன. அந்தப் பழைய பதிவுகள், வாழ்வின் எந்தப் பருவத்தில் வேண்டுமானாலும் மீண்டும் தலைதூக்கலாம், தொடங்கலாம், தொடரலாம் அல்லது செடியிலிருந்து பிஞ்சுகள் உதிர்ந்து போனாற்போல, அறவே மறந்தும் போகலாம்.
தாத்தா - பாட்டியோடு கிராமத்தில் பன்னிரண்டு வயது வரை வாழும் பசுமையான வாழ்க்கை வாய்த்தவள் நான். திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அருகேயுள்ள 'தண்டுறை’தான் நான் வளர்ந்த கிராமம். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் தந்தை பணிபுரிய வந்ததால், சென்னையிலேயே குடும்பம் இருக்கவேண்டி வந்தது. தந்தையோடு பிறந்தவர் ஒரே சகோதரி. அவரைத் திருமணம் செய்துகொடுத்ததும் பிரிவுதாளாமல் அழுத... வேதனைப்பட்ட தாத்தா - பாட்டியிடம், ஒரு வயதுக் குழந்தையான என்னை விட்டுவிட்டு, அம்மாவுடன் சென்னை சென்றுவிட்டார் அப்பா. ஒரு சமாதானக் குழந்தையாக, அவர்களிடம் வளர்ந்தேன்.
ஓடுகள் வேய்ந்த மிகப்பெரிய கிராமத்து வீடு. மிகப்பெரிய வாசல்... செங்கல் பாவிய திண்ணைகள்... தூண்களோடு கூடிய திறந்தவெளி முற்றம்... வெளியே பனை மரங்கள், நுணா மரங்கள், மிகப்பெரிய கிணறு... என்று எல்லாம் அம்சமாய் அமைந்த அழகான வீடு. கனிவை அதிகம் வெளிப்படுத்தாத கண்டிப்பான பாட்டி... பாசம் பொழியும் தாத்தா குமாரசாமி.

என் தாத்தா ஜோசியர். அவர் சொல்லும் ஜோசியம் பலித்திருக்கிறது. தேள் கடித்து வலியால் துடித்து வந்தவர்களுக்கு... ஏதோ மந்திரத்தை உச்சரித்தபடியே இலையால் விஷத்தை இறக்கிவிட்டு சரியாக்கியிருக்கிறார். வேட்டி கட்டுவார்... சட்டை போடுவதில்லை... வெள்ளிக்குடுமி வைத்திருப்பார். தோள்களில்... நெஞ்சில்... நெற்றியில் பளீரென்று முப்பட்டையாக நீரில் குழைத்து விபூதி இட்டிருப்பார். நெற்றி நடுவில் சந்தனப்பொட்டு மணக்கும்.
பாடம் படித்து... இரவு உணவு முடிந்ததும் திண்ணையில் உட்கார்ந்து தாத்தாவிடம் நான் கேட்ட தெனாலிராமன் கதை... பரமார்த்த குரு கதை... மதனகாமராஜன் கதை எல்லாம் மிக அருமையானவை. கர்ணமோட்சம், நல்லதங்காள் கதை... போன்ற தெருக்கூத்துக்களின் நீளமான வசனங்களை கம்பீரமாகச் சொல்வார். அவரோடு அமர்ந்து விடிய விடிய தெருக்கூத்து பார்த்திருக்கிறேன். 'டென்ட்’ கொட்டகையில் மணலைக் குவித்து உட்கார்ந்து அவரோடு பார்த்த படங்களில், புராணப் படங்களே மனதில் பெரிதும் இடம்பிடித்தன. காலையில் குளித்து, பிள்ளையாருக்கு பூஜை செய்யும்போது 'அல்லல்போம் தொல்வினைபோம்’ என்று பாடி, அவர் கற்பூர ஆரத்தி எடுப்பது... இன்னும் மனத்திரையில் பதிந்திருக்கிறது. என் ஆன்மிக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவரே... தாத்தாதான்.
பாட்டியைப் பொறுத்தவரையில், கோலங்களைப் பிரமாண்டமாகப் போட்டு ஜோடனை செய்வது... பூச்சடை தைப்பது... கைமருந்துகள், லேகியங்கள் செய்வது... விதவிதமாகப் பலகாரங்கள் செய்வது... என்று எல்லாவற்றிலும் சகலகலாவல்லி. கடினமான வேலைகளுக்கு எங்களைப் பழக்குவார்... பண்பாடு ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கண்டிப்பு... தப்பித்தவறிக்கூட சினிமா பாடலைப் பாடிவிடக் கூடாது. ஒன்பது வயதில், அப்போது பிரபலமான படத்திலிருந்து... 'சந்திப்போமா’ பாடலைப் பாடிக் கொண்டிருந்தேன். 'என்ன பாட்டை பாடறா பாரு’ என்று முதுகில் பலமாக ஓர் அறை வைத்தார் பாட்டி. அவரிடம் நான் கற்றவை அதிகம்.
என்னை ஒத்த சிறுமியரோடு, வீட்டுக்கு எதிர்சாரியில் இடதுபக்கத்தில் இருந்த புதுப்பிக்கப்படாமலிருந்த பழைய பெருமாள் கோயிலுக்கு விளையாடப் போவேன். கூடவே, அங்குள்ள மரத்திலிருந்து உதிர்ந்து கிடக்கும் புளியம்பழங்களைப் பொறுக்கி எடுப்பதற்காகவும்தான். விளையாடி முடித்ததும் 'என்னைப் பார்க்காமல் போயிடாதே...’ என்று சொல்வதைப் போல் பார்த்துக்கொண்டிருக்கும் பெருமாளை ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போவேன். தெருக்கோடியிலிருக்கும் முத்துமாரியம்மன் கோயில் வாசலில், செங்கல் அடுப்புகளின்மேல் பானைகளில் பொங்கி வழிந்த பொங்கலும் அடுப்பின் புகை சூழ்ந்து கண்களில் நீர்சுழன்று நிறைந்ததும்... முத்துமாரியம்மனை பக்தி பரவசத்தோடு வழிபட்டு நின்றதும் இப்போது போலிருக்கிறது.
தீபாவளியையொட்டி வரும் 'கேதார கௌரிவிரதம்' எனக்குப் பிடித்த பண்டிகை. கிராமத்துப் பெண்கள் பலரும் எங்கள் வீட்டு பூஜையில் கலந்துகொள்வார்கள். அதிரசம், முறுக்கு, வடை, கார - இனிப்புத் தட்டை எல்லாம் இருபத்தொன்று... இருபத்தொன்றாய் வைக்கப்பட்டிருக்கும். சகோதரிகளோடு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் எனக்கு... இருபத்தியோருமுறை சுற்றுதல் மட்டும் அதிகமாகத் தோன்றும். கலசம் நிறுத்தி அம்மனை அலங்கரித்து, முறையாக வழிபாடு செய்தபடி நோன்புக் கதையைப் படித்து, பாடலைப் பாடி கிறுகிறுவென்று மணியடித்து ஆரத்தி காட்டுவார் தாத்தா. விபூதி, சந்தனவாசம், பரிமளாதி வாசங்களோடு வீடு திவ்யமான கோயிலாயிருக்கும்.
வருடாவருடம் குடும்பத்தோடு திருத்தணி முருகனை வழிபடுவோம். ஒருமுறை அப்பாவுக்காக வேண்டிக் கொண்டபடி முருகனுக்கு வெள்ளிவேல் சார்த்த வேண்டும் என்றார் தாத்தா. அப்போது திராவிட இயக்கத்தில் தீவிரமாயிருந்த அப்பா... தாத்தா கெஞ்சியும் வேல் எடுத்து வர மறுத்துவிட்டார். என் கையிலே கொடுத்து எடுத்துவரச் சொன்னார் தாத்தா. என்னைவிட உயரமான வெள்ளிவேலை எடுத்துக் கொண்டு 'முருகா முருகா’ என்றபடி திருத்தணிப் படிகளில் ஏறும்போது அப்படியொரு சந்தோஷம்!
அப்பா முருகேசன், மிக விரைவில் ஆன்மிகத்துக்குத் திரும்பினார். என்னிடம் வாழ்வில் மிக அதிகமாகப் பேசியதும் போதித்ததும் புத்தக வாசிப்பில் நாட்டத்தை எனக்குள் ஏற்படுத்தியதும் அப்பாதான். திரு.வி.க., மு.வ. எல்லாராலும் போற்றி வணங்கப்பட்டவர்... வேலூர் கரிகேரி மௌனசாமிகள். எங்கள் கிராமத்து வீட்டுக்கு அவரை அழைத்து வந் தார் அப்பா. ஆற்றங்கரைக்குச் சென்று மண லில் அனைவரும் அமர்ந்திருந்தபோது அவர் கேட்க, பாரதியாரின், 'எங்கள் தாய்’ பாடலை எனக்குத் தெரிந்தபடி பாடி ஆடினேன். கைதட்டி ரசித்துப் பாராட்டிய மௌனசாமி, 'மணி ஒலிக்கும்’ என்று எழுதி ஆசீர்வதித்தார்.
பன்னிரண்டு வயதுக்குப் பிறகு படிப்பதற்காக சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார் அப்பா. அந்தப் பிரிவு தாளாமல், யாரும் பார்க்காதபடி புழக்கடை கிணற்றடியில் உட் கார்ந்து அழுதிருக்கிறார் தாத்தா. என்னிடம் பாட்டி, இதைச் சொன்னபோது அழுதுகொண்டே இருந்தேன். என் வளர்ப்பில் தாத்தா - பாட்டியின் பங்களிப்பே அதிகம். அவர்களிடம் அனுபவித்த பாசத்தை, அதன் பிறகு எங்குமே அனுபவிக்கவேயில்லை. இன்னமும் ஒரு கிராமத்துப் பெண்ணின் மனநிலையில்தான் நான் இருக்கிறேன். சென்னை வாழ்க்கை எனக்கும் அதிகம் ஒட்டவில்லை.
பல கோயில்களுக்கும் அப்பா எங்களை அழைத்துப் போவார். கிருபானந்த வாரியார் 'கந்தபுராணம்’ சொன்னபோது அவர் கேள்விக்குப் பதில் சொன்ன எனக்கு... 'கைத்தல நிறைகனி’ என்று ஒரு பழம் தந்து ஆசீர்வதித்தார். அமைந்தகரை சிவன்கோயில் கச்சேரியில் கேட்டு மகிழ்ந்த கே.பி.சுந்தராம் பாளின் 'வெண்ணீறணிந்ததென்ன... வேலைப் பிடித்ததென்ன...’ என்று பரவிய வெண்கலக் குரல்... இன்னும் செவிகளில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
என் அப்பா... இப்போது தீவிரமாக சத்யசாயி வழிபாட்டுக்கு வந்திருந்தார். அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சாயி பஜனுக்கு குடும்பத்தினரை அழைத்துப் போவார் அப்பா. ஸ்வாமி பாபாவின் அபயஹஸ்தம்... அன்பு ததும்பும் முகம், அந்த பஜன் பாடல்கள், விபூதிவாசம் இதெல்லாம் சுகந்த பரிமளமாய் எனக்குள் பதிந்தன.
ஆழ்வார்பேட்டையில் சாயிபக்தர் வேங்கடமுனி பங்களாவுக்கு ஸ்வாமி வந்திருந்தபோது, அப்பா எங்களை அங்கே அழைத்துப் போனார். தகதகவென்ற ஆரஞ்சு அங்கியில் கரும்பிரபையிட்ட முடியோடு பளீரென்று ஜொலித்த முகத்தில் புன்முறுவலோடு நடந்து வந்த சத்யசாயி பாபாவைப் பார்த்தபோது... ஒரே பிரமிப்பாயிருந்தது. ஸ்வாமி பாபாவை முதலில் பார்த்தது அப்போதுதான்..!
ஜெய் சாயிராம்!
தொடரும்...