ஸ்பெஷல் 1
Published:Updated:

நீங்களும் ஆகலாம் ‘குயின்’!

பொன்.விமலா, படங்கள் : ஆ. முத்துக்குமார், ப.சரவணகுமார்

குயின்... பாலிவுட் வரவான இந்த இந்தித் திரைப்படம், வெளியான சில வாரங்களிலேயே வசூலில் சாதனை படைத்திருப்பதோடு, இந்தியா முழுக்க பரபரக்கவும் படுகிறது. காரணம், முழுக்க முழுக்க பெண்ணின் உள்ளுணர்வுகளையும் அவளின் தீராத ஆசைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருப்பதே!

நாயகி ராணி (கங்கனா ரணாவத்), 'அப்பா சொன்னா, அது சரியாத்தான் இருக்கும்’ என தந்தை சொல்வதைத் தட்டாத, சராசரி நடுத்தர குடும்பத்துப் பெண். டெல்லி ஸ்வீட் ஸ்டால் ஒன்றின் உரிமையாளர் மகளான அவளுடைய வட்டம் மிகக்குறுகியது. ஆண்களிடம் பேசுவதெல்லாம் கனவிலும் நினைக்காதது. தந்தையுடைய நண்பரின் மகன் விஜய்க்கும் இவளுக்கும் குடும்ப ரீதியிலேயே பழக்கம் வர, அது காதலாகவும் மாறி, திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இரண்டு நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், 'இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை' என்று சொல்லிவிடுகிறான் விஜய். காரணம், தான் எதிர்பார்ப்பது போல மாடர்னாக இல்லாமல், பழைமைவாத வாழ்க்கை முறையை விட்டு ராணி மாற மறுப்பதுதான்.

நீங்களும் ஆகலாம் ‘குயின்’!

மனம் உடையும் ராணி, ஓர் அறைக்குள்ளேயே முடங்குகிறாள். ஹனிமூனுக்கு பாரீஸ் - ஆம்ஸ்டர்டாம் செல்வதற்காக எடுத்து வைத்திருந்த விமான டிக்கெட், அந்த அறையிலேயே இருக்க... சில நாட்கள் கழித்து அதைப் பார்க்கும் ராணி, 'நாம் மட்டும் தனியே அந்த இடங்களுக்கெல்லாம் சென்று வந்தால் என்ன?' என்று கிளம்பிவிடுகிறாள். அந்த வெளிநாட்டு மாநகரங்களில் ராணிக்கு ஏற்படும் அனுபவங்கள், ஒவ்வொரு பெண்ணுமே உள்வாங்க வேண்டியவை. அந்தப் பயணத்தில் கிடைக்கும் வாழ்க்கைப் பாடங்கள்தான், படத்தின் இதயம்.

பாரீஸ் ஹோட்டலில் அறிமுகமாகும், நவீன மங்கை விஜயலஷ்மி. கட்டுப்பெட்டியாக இருக்கும் ராணிக்கு, வாழ்க்கை டீச்சராகவே மாறுகிறாள். அவள் மூலமாக, புதிய அனுபவங்களைக் கற்கிறாள். அடுத்து, ஆம்ஸ்டர்டாம்... அங்கே ஆண்களுடன் அறையை (டார்மிட்டரி) பகிர்ந்து கொள்ளக்கூடிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறாள். ரஷ்யா, ஃபிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், ஏற்கெனவே தங்கியிருக்கும் அந்த அறையில், நான்காவதாக இவளும் சேர்கிறாள். அவர்களுடனான பயணம்... இவளுக்குப் புதியதொரு அனுபவம். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு நல்ல தோழியாகிவிடுகிறாள்.

இதற்கிடையே, ஒரு சவாலை ஏற்று... அங்குள்ள ரெஸ்டாரன்ட்டில் பானிபூரி உள்ளிட்ட இந்திய சாட் அயிட்டங்களை சமைக்கிறாள். அது நல்ல வரவேற்பைப் பெற்று, இவளுக்கு பேரும், புகழும் கிடைக்கச் செய்கிறது. உள்நாட்டில் விஜய்யிடம் அங்கீகாரம் கிடைக்காத அவளின் ஒவ்வொரு செயலும், அங்கு கொண்டாடப்படுகிறது.

தனக்கு மனைவியாகப் போகிறவள் எப்படியெல்லாம் மாடர்னாக இருக்க வேண்டும் என்று விஜய் எதிர்பார்த்தானோ, அப்படியெல்லாம் மாறிவிடுகிறாள் ராணி. பழக்க வழக்கத்தில், அணியும் உடைகளில், பேசும் பேச்சில்... என்று எல்லாவற்றிலுமே மேற்கத்திய நாகரிகம், கரகாட்டம் ஆடுகிறது அவளிடம். இந்தச்சூழலில், ராணியைச் சந்திக்கும் விஜய், அவளை ஏற்றுக்கொள்ள விரும்புகிறான். ஆனால், அவனை உதறிவிட்டு, மிகுந்த தெளிவுடன் புதிய உலகை நோக்கி நடக்கிறாள் ராணி.

நீங்களும் ஆகலாம் ‘குயின்’!

இந்தப் படத்தை, நம் வாசகிகள் சிலரையும் பார்க்க வைத்தோம். தங்களின் பார்வையை இங்கே பகிர்கிறார்கள் அந்த அந்த வாசகிகள்.

அபர்ணா (தனியார் நிறுவன ஊழியர்): ''சந்தோஷம்ங்கிறது எங்கயும் ஓடிப்போயிடல... அது நம்ம கையிலதான் இருக்குனு ராணி உணரும்போது, படம் பார்க்கற ஒவ்வொருத்தருமே அதை உணர்வோம். படத்தைப் பார்த்துட்டு வெளியே வரும்போது நிச்சயமா ஒவ்வொரு பொண்ணுக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் கிடைக்கும்ங்கிறதுக்கு நானே உதாரணம்.''

லஷ்மி (மாடலிங் கோ-ஆர்டினேட்டர்): ''பொதுவா கல்யாணத்துக்கு முன்ன பெத்தவங்க சொல்றதைக் கேட்பாங்க. கல்யாணத்துக்குப் பிறகு, கணவன், அவரோட குடும்பமும் சொல்றதைக் கேட்பாங்க. தன்னோட தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை ஒரு பெண்ணால வெளிப்படுத்தவே முடியுறதில்ல. தனக்கான சுயவிருப்பங்கங்களை எந்தத் தடையும் இல்லாம எப்ப ஒரு பெண்ணால் நிறைவேத்திக்க முடியுதோ, அப்பதான் அந்தப் பொண்ணு நிஜமாவே சந்தோஷப்படுவா. இந்த படத்தைப் பார்த்ததுல இருந்து... எனக்கும் என்னோட தனிப்பட்ட ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு தோணுச்சு. உடனே இப்ப டான்ஸ் கிளாஸ்ல சேர்ந்துட்டேன். சந்தோஷமா இருக்கு!''

சோனல், (இல்லத்தரசி): ''தங்களோட எண்ணங்களை, விருப்பங்களை, கட்டளைகளைப் பிரதிபலிக்கும் பொம்மைகளாகவே பெண்களை வைத்திருக்கும் ஆண்களின் மனதை அசைச்சுப் பார்க்கறதுலதான் 'குயின்' ஜெயிக்கறா.''

ஸினு (வழக்கறிஞர்): ''ஒரு பெண்ணுக்கு திருமணம் சார்ந்த ஏதாவது தடை ஏற்பட்டால், ராசியில்லாதவனு முத்திரை குத்தும் இந்தச் சமூகம். அந்தப் பெண்ணும் கண்ணைக் கசக்கிட்டு விரக்தியில் இறங்குவா. இதைத்தான் நிஜத்திலும் சினிமாவிலும் இதுவரை பார்த்திருக்கோம். ஆனா, எதையும் பாஸிட்டிவ்வா அணுகி போராடும் கலையை, நெத்தியடியா சொல்லுற படமா இது வந்திருக்கு. 'நாம பலவீனமானவர்கள்'னு நினைச்சிட்டிருக்கிற பெண்கள், இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நிறைய மாற்றங்களை உணர்வாங்க.''

அபிநயா, (கல்லூரி மாணவி): ''ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டு, வேற எதைப் பத்தியும் தெரிஞ்சிக்காம, அதையே நல்ல பொண்ணுக்கான இலக்கணமா நம்புற அப்பாவிப் பெண்கள், இன்னிக்கும் இருக்காங்க. அப்படித்தான் ராணியும். கேர்ள்ஸ்... வட்டம், கட்டம் போட்டு வெச்சிருக்கிறது மட்டுமே வாழ்க்கை இல்லைங்கறத  தெரிஞ்சுக்கறதுக்காவது... ஒரு முறை பாருங்க 'குயின்' படத்தைப் பாருங்க.''

நீங்களும் ஆகலாம் ‘குயின்’!

ஜெயித்துவிட்டாள் ராணி!

பொதுவாக, பெண்களுக்குத் தவறு தானாக நேர்ந்தாலும் அல்லது ஆணால் நேர்ந்தாலும், பெண்களே குற்றவாளிகள் ஆகிறார்கள். ஆண்களை யாரும் துரதிர்ஷ்டசாலியென அழைப்பதில்லை. பல பெண்கள் திறமைசாலிகளாக இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் ஆண்களுக்காவே தங்களை மறைத்து வாழ்கிறார்கள். அதை உணர்த்தும் இந்தப் படம் கண்டிப்பாக ஆண்களும் பார்க்க வேண்டிய படம்.

இந்தப் படம் தந்திருக்கும் புத்துணர்வோடு, படத்தின் இயக்குநர் விசாக் பாலிடம் பேசினேன்.

'படத்துக்கான கரு, என் குடும்பத்தின் தாக்கம்தான். என் பாட்டி, அம்மா, சகோதரி என என்னை வளர்த்த பெண்கள் அனைவரும், எங்கள் வீட்டு ஆண்களின் சொற்படியே வாழ்ந்தவர்கள். வீட்டில் எல்லா முடிவுகளும் ஆண்களே எடுப்பார்கள். 'பெண்களுக்கு முடிவு எடுக்கும் உரிமையே இல்லையா?’ என்று அவ்வப்போது வருந்தும் நான், 'வீட்டில் பல முடிவுகளைப் பெண்கள் எடுத்திருந்தால், நம் குடும்பத்தில் நிறைய நல்மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமோ!’ என்றுகூட யோசித்திருக்கிறேன்.

ஒரு பெண் எதற்கெடுத்தாலும் அடுத்தவரின் முடிவையே சார்ந்திருக்கும்போது, ஓர் ஆண், அவளை எளிதில் உதாசீனப்படுத்திவிட முடியும் என்கிற கருத்தை முதன்மையாக எடுத்துக்கொண்டேன். அப்படி நிகழாமல் தன் நிலையை உயர்த்த, ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ, அப்படியே உருவானாள் ராணி. படத்தைப் பார்த்த பல பெண்களும், தங்களின் நிஜ வாழ்க்கையுடன் பொருந்துவதாகக் கூறினார்கள். ஆம்... நீங்கள் அனைவருமே என் 'ராணி’கள்தான்!’ என்றார் விகாஸ் பால்!

என் கதைப்படி ராணியின் காதலனை வில்லனாக மாற்றவேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஹீரோ இந்த கதைக்கு வில்லனாக வருவதைவிட, ராணி தைரியமாகப் பிரச்னையை சந்திக்கிறாள் என்று புதுமையாக சொன்னாலே ஜெயிக்கும் என்று நினைத்தேன்... ராணி சாதித்துவிட்டாள்' என்று புளகாங்கிதப்பட்டுச் சொன்னார் விஷாக் பால்!

உண்மைதான்... ராணி ஜெயித்தேதான் விட்டாள்... இந்தியப் பெண்கள் பலரின் உள்ளத்தை!

- மும்பையிலிருந்து நிதி ஆலோசகர் தண்மதி திருவேங்கடம்