ஃபேர்வெல் ஃபீலிங்ஸ்...
நோ அட்டெண்டன்ஸ்! நோ எக்ஸாம்ஸ்! நோ பிராக்டிகல்ஸ்! நோ காலேஜ்???

இது ஃபேர்வெல் சீஸன். ஒருசோறு பதமா, சென்னை, எத்திராஜ் கல்லூரி விஸ்காம் இறுதியாண்டு மாணவிகளோட ஃபேர்வெல் ஃபீலிங்ஸ் இங்கே!
''ஃபேர்வெல்... 'இது சோகமா, சந்தோஷமா?’னு சொல்லத் தெரியல. இனிமே நோ அட்டெண்டன்ஸ், நோ எக்ஸாம்ஸ், நோ பிராக்டிகல்ஸ். ஆனா... நோ காலேஜ்னு சொல்லும்போது, மனசுல 'திக்’குங்குது. ஃப்ரெண்ட்ஸை மிஸ் பண்ணப் போறோம்னு நினைச்சாலே அழுகையா வருது. ஆனா, எங்களோட வருத்தத்தைப் போக்கறதுக்காக, ஜூனியர்ஸ் ஏற்பாடு பண்ற ஃபேர்வெல் பார்ட்டி, அன்பான ஆறுதல். எங்களுக்கு காலேஜ்ல கடைசி ஃபங்ஷன் இதுதானே!'' என்று என்ட்ரியிலேயே வயலின் வாசித்தார் சஞ்சனா.
''எங்க காலேஜ்ல டிபார்ட்மென்ட் ஃபேர்வெல், காலேஜ் ஃபேர்வெல்னு ரெண்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஜூனியர்ஸ் எங்களுக்காக நிறைய நிகழ்ச்சிகள், பரிசுகள்னு பார்த்துப் பார்த்து செய்தாங்க. 'ஹலோயிங் தீம்’, அதாவது ரெட் கலர் பார்ட்டி வேர்ல வரணும்ங்கிறது ஜூனியர்ஸோட கண்டிஷன்'' என்று ரூபிகா படபடக்க, தொடர்ந்த ஷர்மிளா,
''எங்க கேங்க் போட்டோஸை எல்லாம் அட்டகாசமான வீடியோவாக்கி, கேக் வெட்டி, கேம்ஸ் வெச்சு, போறப்ப எல்லாருக்கும் குட்டி புக், வித் பென் கொடுத்துனு... கிடைச்ச ஒன் ஹவர்ல பட்டையை கிளப்பிட்டாங்க ஜூனியர்ஸ்’' என்று ஷார்ட் அண்ட் க்யூட் பாராட்டு பத்திரம் வாசித்தார்.

''இருங்க... நானும் சொல்றேன்'' என்று வாலன்டியராக வந்த மோஷினா, ''ஒரு பக்கம் பக்கெட் பக்கெட்டா சோகம் பிழிஞ்சாலும், ஃபேர்வெலுக்காக நாங்க ஷாப்பிங் போன கதை இருக்கே... அது கலகல எபிசோட். டிபார்ட்மென்ட் ஃபேர்வெலுக்கு பார்ட்டி வேர், காலேஜ் ஃபேர்வெலுக்கு புடவை, அததுக்கு மேட்சிங்கா ஆக்ஸசரீஸ், செப்பல்னு தி.நகர், சௌகார்பேட்டையை ஒரு வாரம் குரூப் குரூப்பா சுத்தி வந்து செலக்ட் பண்ணினோம்.
ஃபேர்வெல் கேக் வாங்கறதுக்காக, ஊருல இருக்கற பேக்கரி எல்லாம் சுத்தி, டேஸ்ட் பார்த்து, டிசைன் செலக்ட் பண்ணினு அலப்பறை விட்டோம். ஆனா, அந்த கேக், வாய்க்குள்ள போனதைவிட, கன்னத்துல அப்புற கலாட்டாதான் அதிகமா நடந்துருக்கு. அப்புறம் ஹெச்.ஓ.டி. மேம்ல இருந்து வார்டன் வரைக்கும் எல்லாருக்கும் எங்க பேட்ச் ஞாபகமா நாங்க கொடுத்த கிஃப்ட்ஸ், எத்தனை வருஷமானாலும் அவங்க நினைவுல, எங்களை சேமிச்சு வெக்கும்'' என்று பசுமை நினைவுப் பக்கங்களைத் திறக்க...
''யேய்... நம்ம செண்பகத்தை கொஞ்சம் பேச விடுங்கப்பா'' என்று குரல் கேட்க, மைக் எடுக்காத குறையாக பேசினார் செண்பகம்.

''கேங்ல... 'ஏய், நானெல்லாம் அழமாட்டேன்’னு முதல் நாள் சபதம் போடுற பொண்ணுங்களும், ஃபேர்வெல் அன்னிக்கு கரகரனு அழறதுதான் அழகு. அதிலும் ஜூனியர்ஸ் எங்களுக்காக உருவாக்கின வீடியோ, ஃப்ரெண்ட்ஷிப் சாங் இதெல்லாம் போட்டு, எங்க கண்ணுல தண்ணி வர வைக்காம விடமாட்டோம்னு அன்பைக் கொட்டிடுவாங்க. ஃப்ரெண்ட்ஸ், மேம்ஸ், ஜூனியர்ஸ்கூட போட்டோ எடுக்கறதுக்காக நாள் முழுக்க போட்டோ செஷன்தான். ஸ்லாம் புக்கின் பக்கங்கள் எல்லாம் எங்க கண்ணீராலதான் நிறைஞ்சுருக்கு'' என்று செண்பகம் சொல்ல, மொத்த கும்பலும் சைலன்ட் ஆகிப்போனது.
ஃபைனலாக வந்த வினோதினி, ''இதோ... முடிஞ்சுருச்சு ஃபேர்வெல். இனிமே கிளாஸ் ரூம் கலாட்டா, கெக்கபிக்க சிரிப்பு, கேன்டீன் அரட்டை, ஃப்ரெண்ட்ஸோட அவுட்டிங்... இதெல்லாம் இல்லைனு நினைக்கும்போது, இதுவரை அனுபவிச்சிடாத ஒருவித தவிப்பா இருக்கு. இப்போ கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு கேட்டா, மறுபடியும் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து வாழ்க்கையை ரீவைண்ட் பண்ணச் சொல்லுவோம். வருவாரா..?!'' என்று பீலிங்ஸ் கொட்டினார்.
- வினோதினியின் ஏக்கம், நம்மையும் தொற்றிக்கொள்கிறது!
- ஜெ.பி.ரினி, அபிநயா.ஜி