திக் திக் மெடிக்கல்
ஆர்ட்ஸ், இன்ஜீனியரிங் மாணவர்கள்கிட்ட அவங்களோட வகுப்பறை அனுபவங்கள் பற்றி கேட்டா, 'அசைன்மென்ட், டெஸ்ட், செமினார்’னு சொல்லுவாங்க. இதுவே இதயம், மூளை, எலும்பு, நரம்புனு பிராக்டிகலா படிக்கிற மெடிக்கல் காலேஜ் ஸ்டூடென்ட்ஸ்கிட்ட கேட்டா?!
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு எம்.பி.பி.எஸ். படிக்கற புள்ளைங்ககிட்டதான் இதைக் கேட்டோம். ஆனா, 'ஏன்தான் கேட்டோமோ'னு ஆயிடுச்சு. ஒவ்வொரு விஷயமா அவங்க சொல்லச் சொல்ல... 'உவ்வே’, டெரர், அலறல்னு நம்மகிட்ட ஏகப்பட்ட 'காலி’ ரியாக்ஷன்ஸ்... அந்தப் புள்ளைங்ககிட்ட... அதே அளவுக்கு 'ஜாலி’ ரியாக்ஷன்ஸ்!
''காலேஜ்ல சேர்ந்த புதுசுல டிஸெக்ஷன் ஹால்ல, திறந்த கண்களோட இருக்கிற 'கெடாவர்’ (cadaver - பிரேதம்) பார்க்கவே பயமா இருக்கும். கூடவே ஃபார்மலின் ஸ்மெல் வேற வயித்தைப் புரட்டும். காலையில எட்டு மணிக்கே வகுப்பு ஆரம்பிச்சுடும்ங்கிறதால, பலரும் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடாமத்தான் வருவோம். மூணு மணி நேரம் டிஸெக்ஷன் ஹால்ல நிக்கணும். எல்லாமுமா சேர்ந்துகொள்ள, 'தொப் தொப்'னு நிறைய பேர் மயக்கம் போட்டு விழுவாங்க!''னு எடுத்ததுமே திகில் கிளப்பினாங்க ஜெயஷங்கரி.

அடுத்ததா வாய் திறந்த கிருத்திகா, ''இதயம், நுரையீரல்னு கெடாவர்ல டிஸெக்ட் பண்ணி எடுத்த உள்ளுறுப்புகளை எல்லாம், கையால பிடிச்சுப் பார்க்கும்போது, வித்தியாச அனுபவம்தான். அதிலும் மண்டை ஓட்டை உடைச்சு, மூளையை தனியா எடுக்கறது ரொம்ப சவாலான விஷயம் தெரியும்ல!''னு ஏதோ கசாப்புக் கடைக்காரர் போல பேசிட்டே போக...
''ஆமாம்... முதன்முதலா மண்டை ஓட்டை கையில் பிடிச்சப்போ, கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. அப்புறம் அதுல இருக்கிற சின்னச்சின்ன துளைகள், அதோட வேலை, அமைப்பு எல்லாம் படிச்சப்போ... படுசுவாரஸ்யம்தான் போங்க'' என்று சிரித்துத் தீர்த்தார் பவித்ரா.
''எங்க ரத்தத்தை நாங்களே எக்ஸாமின் பண்ற வேலையும் உண்டு''னு சொன்ன ஜெயரஞ்சிதம், ''இதுக்காக எங்க விரலை, நாங்களே குத்தி, அப்ப வர்ற ரத்தத்தை நாங்களே பிப்பேட்ல உறிஞ்சுவோம். அப்போ காற்றுக் குமிழ்கள் வந்தாலோ, கவுன்ட் தப்பா வந்தாலோ... மறுபடியும் குத்து, தொடர்ந்து ரத்த உறிஞ்சல்தான்!''னு ஏதோ டிராகுலா ரேஞ்சுக்கு சொல்ல... நமக்கு உள்ளுக்குள்ள செம உதறல்! அடுத்ததா நிவேதா சொன்னது... செம இன்ட்ரஸ்ட்டிங் ஏரியா... ''ஒரு நாள், 'வார்டுல நல்ல கேஸ் யாரையாவது பார்த்தீங்கனா ஹிஸ்டரி டேக்கிங் அண்ட் எக்ஸாமினேஷன் பண்ணுங்க’னு புரொஃபஸர் சொன்னாரு. என் ஃப்ரெண்டு ஒருத்தி வார்டுல ரெண்டு மணி நேரமா ஒரு பேஷன்ட்கிட்ட ஹிஸ்டரி எடுத்துக்கிட்டே இருந்தா. அப்ப திடீர்னு ஒரு நர்ஸ் வந்து, 'சைக்கியாட்ரிக் பேஷன்ட்கிட்ட என்ன பண்றீங்க?’னு கேட்க, அவ அசடு வழிஞ்சத பார்க்கணுமே..! அப்புறம் அந்த பேஷன்ட்டைப் பார்க்க எங்களுக்கெல்லாம் கஷ்டமா இருந்துச்சு!''

பிரசவ வார்டு கதை பேசிய கலைவாணி, ''முதல் லேபர் கேஸ்ல, அந்தப் பெண் துடிச்சதைப் பார்த்து எனக்கு மயக்கமே வர்ற மாதிரி இருந்துச்சு. என் ஃப்ரெண்ட்கிட்ட சொன்னா, 'நீ மெடிக்கல் ஸ்டூடென்ட்தானே... லேபர் பார்க்க பயப்படலாமா?’னு வீரமா கேட்டா. கொஞ்சம் நேரம் கழிச்சுப் பார்த்தா, அந்த வீரமங்கையை கையையும் காலையும் பிடிச்சு லேபர் வார்டுல இருந்து தூக்கிட்டுப் போனாங்க. யெஸ்... அவளும் மயக்கம் போட்டு விழுந்துட்டா!'' என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார்.
''இதேமாதிரி முதல் முதலா ஒரு பிரசவம் பார்த்தப்போ, பிரசவ வலியைப் புரிஞ்சுக்க முடிஞ்சுது. என் அம்மாவை எவ்வளவு கஷ்டப்படுத்தி நான் பிறந்திருக்கேன்னு, அம்மா மேல அந்த செகண்டே லவ் 'சடார்’னு கூடிருச்சு'' என்று சொன்ன, ஜெயஷங்கரி, ''பிரசவத்தப்போ கணவரும் உடன் இருக்கும் பழக்கம் நம்ம நாட்டுலயும் வரணும். அப்போதான், பெண்களோட வலியும் வலிமையும் ஆண்களுக்குப் புரியும்!'' என்று சமயம் பார்த்து ஊசி ஏத்தினார்.
நிறைவாக... ''கம்யூனிட்டி மெடிசின்ல, ஒவ்வொருத்தருக்கும் ஒரு குடும்பம் அலாட் பண்ணி, ஒவ்வொரு வாரமும் அவங்களோட ஹெல்த்தை செக் பண்ணணும். பி.பி. பார்க்கற கருவியோட நாங்க தெருவுல வர்றதைப் பார்த்ததும், எல்லோரும் வந்து எங்ககிட்ட வந்து செக் பண்ணிட்டு, காய்ச்சல், தலைவலி, கண்வலினு பிரச்னை எல்லாம் சொல்லி விளக்கம் கேட்பாங்க. கடைசியா, மனசார நன்றி சொல்லிட்டுப் போவாங்க. ஒரு மாதிரி நெகிழ்ச்சியா இருக்கும். டாக்டர் தொழிலை தேர்ந்தெடுத்ததை நினைச்சு பெருமையாவும் இருக்கும்'' என்று சொல்லி உருகினார் ரெய்னா!
- மு.ஜெயராஜ்
படம்: ஜெ.முருகன்