ஒரு லட்சம் வருமானத்துக்கு உயர்ந்த கதை!ந.ஆஷிகா, படங்கள் : பா.காளிமுத்து
''சொந்தமா ஏதாச்சும் ஒரு தொழில் செய்யணும்னு நினைக்கிறீங்களா..? அது உங்களுக்கு சௌகரியமானதா, லாபகரமானதானு மட்டும் பாருங்க. 'இந்தத் தொழிலைச் செய்தா... மத்தவங்க என்ன சொல்லுவாங்களோ' அப்படிங்கற தயக்கம் அறவே கூடாது. ஏன்னா, எந்தத் தொழில் செய்தாலும் அதுதான் நமக்கு தெய்வம்!''
- பக்கத்து வீட்டு அக்கா போல பேசுகிறார், மதுரையைச் சேர்ந்த லலிதா பரமேஸ்வரி. மருத்துவமனை, பியூட்டி பார்லர் போன்ற இடங்களில் பயன்படுத்தும் துணிகளை மொத்தமாகப் பெற்று, தான் நடத்திவரும் 'சன் ஸ்டீம்ஸ்’ லாண்டரியில் சலவை செய்து கொடுக்கும் இவரின் மாத வருமானம், ஒரு லட்சம்!
''பத்து வருஷமா இந்தத் தொழிலை நடத்துறேன். இதை ஆரம்பிச்ச நேரத்துல சந்திச்ச சறுக்கல்கள், கைக்குழந்தையை கவனிக்க முடியாத தவிப்பு, உறவினர்கள், நண்பர்களோட கேலினு என்னைத் துரத்தின எல்லாத்தையும் முறியடிச்சு... இப்போ இதை வெற்றிகரமா நடத்துறேன்னா, அதுக்கு முக்கியக் காரணம்... மூணு பேர். என் கணவர், தோழி, அப்புறம் அவள் விகடன்! ஆமா... 'அவள் விகடன்’ல நான் படிச்ச சாமான்யப் பெண்கள், சாதனைப் பெண்களான கதையெல்லாம்தான், என் தொழில்ல நான் தளர்ற ஒவ்வொரு தடவையும் என்னைத் தாங்கிப் பிடிக்கும். இப்போ என்னைப் பற்றின கட்டுரையே வரப்போகுதுனு நினைக்கும்போதே, நம்ப முடியாத சந்தோஷமா இருக்கு!'' என்று பூரித்த லலிதாவின் வெற்றிக்குக் காரணமான மற்ற இருவரைப் பற்றி, கட்டுரையின் போக்கில் சொல்கிறார்...

''என் கணவர் சம்பத்குமார், அப்போ ஒரு மருத்துவமனையில வேலை பார்த்துட்டு இருந்தார். அங்க சலவைக்கு சரியான ஆட்கள் கிடைப்பதில்லை... அப்படியே கிடைச்சாலும் கேட்ட நேரத்துக்கு டெலிவரி செய்றது கிடையாதுனு பல காரணங்களால மருத்துவமனை சந்திக்கும் சிரமங்களை எங்கிட்ட பகிர்ந்துக்குவார். 'அந்த ஆர்டரை நானே எடுத்துச் செய்யட்டுமா..?’னு ஒரு தடவை கேட்டேன். 'நிச்சயமா... இதுக்கு வெளியிலயும் கஸ்டமர்கள் கிடைப்பாங்க...’னு அவரும் ஊக்கப்படுத்தினார். கடன் வாங்கி மெஷின்கள் வாங்கிப்போட்டேன். ஆரம்பத்துல எதிர்பார்த்தபடி கஸ்டமர்கள் கிடைக்கல. எடுத்தவொடனேயே அடி. உடனே, 'ஊருல இருக்கறவங்களோட துணியை எல்லாம் துவைச்சு சம்பாதிக்கணுமா? இந்தத் தொழிலை விட்டுரு’னு பலரும் இலவச அறிவுரை தந்தாங்க.
'எதுக்காக விடணும்... இதே தொழில்ல அவங்க முன்ன ஜெயிச்சுக் காட்டணும்'னு முடிவெடுத்தேன். நான் இலக்கா வெச்சுருந்த மருத்துவமனைகள் ஏமாத்திட்டாலும், மற்ற மருத்துவமனைகளில் போய் வாய்ப்புக் கேட்டேன். அப்போதான், ஹோட்டல்கள்லயும் கேட்கலாமேனு புது ரூட்டும் கிடைக்க, ஹோட்டல் படி ஏறி இறங்கினேன். புதுசா தொழில் ஆரம்பிச்சுருந்ததால தயங்கினவங்களுக்கெல்லாம், ஒரு வாரம் 'டிரயல் வாஷ்’ செய்து கொடுத்தேன். அதுல திருப்தியடைஞ்ச பலர், மொத்த ஆர்டரையும் கொடுத்தாங்க. அடுத்ததா... பியூட்டி பார்லர்களுக்கும் போய் அங்க இருக்கிற துணிகளை துவைச்சு தர்றதுக்கு ஆர்டர் கேட்டு நின்னேன். பல நடைகளுக்கு பிறகு அதுவும் கை கூடுச்சு.

ஆஹா... இனி ஏறுமுகம்தான்னா... அதுதான் இல்ல! மூட்டை மூட்டையா துணியை வாங்கிப் போட்ட சமயம், வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்கல. அந்த சமயம், வேலை காரணமா கணவரும் சென்னையில தங்கியிருக்க, தனியாளா நின்னேன். கூடவே, எட்டு மாசக் கைக்குழந்தையா என் இடுப்புலயும், கையிலயுமா பையன் இருந்தான். சொன்ன நேரத்துல துணிகளை டெலிவரி கொடுக்கணுமே என்ற ஒரே சிந்தனைதான் மூளையை போட்டு அழுத்திட்டு இருந்துச்சு. அழுகை அழுகையா வரும். அப்போதான் என் தோழி ஒருத்தி, 'நானும் சேர்ந்து தொழிலை பார்த்துக்கறேன்... சமாளிச்சிடலாம்!’னு பலமா நின்னா. கொழந்தையை தொட்டில்ல போட்டுட்டு, ரெண்டு பேருமா இடைவிடாம துணிகளை துவைச்சு எடுத்தோம். வாடகைக்கு வண்டி பிடிச்சு, சொன்ன தேதியிலேயே டெலிவரி செஞ்சோம்.
சுத்தமான வேலை, நேரம் தவறாமை, உழைப்பாளிகளான பெண்கள்னு இதெல்லாம் எங்களுக்கு நல்ல பெயரும், தொடர்ந்து நிறைய ஆர்டர்களும் கிடைக்க வெச்சது. வேலையும் வருமானமும் கூடக் கூட, ஆட்களை பணிக்குச் சேர்த்தேன். இப்போ எங்கிட்ட 18 பேர் வேலை பார்க்கிறாங்க. 15 லட்சம் ரூபாய் முதலீடு செஞ்சுருக்கிற இந்தத் தொழில்ல, மாசம் ஒரு லட்சம் வரை வருமானம் கிடைக்குது!'' என்ற லலிதாவுக்கு... க்ரீன் டிரெண்ட்ஸ், நேச்சுரல்ஸ் போன்ற பிரபலமான பியூட்டி பார்லர்கள் கஸ்டமர்கள்.

''காலையில மருத்துவமனைகள்லயும், மாலை நாலு மணிக்கு மேல ஹோட்டல்கள்லயும், எங்களோட மினி லாரியில போய் துணிகளை வாங்கிட்டு வருவோம். ஒரு நாளைக்கு 2,000 முதல் 5,000 துணிகள் வரை சலவை பண்ணுவோம். மருத்துவமனை துணிகள், ஹோட்டல் துணிகள்னு ரெண்டுக்கும் தனித்தனியா மெஷின்கள் வெச்சுருக்கோம். ரெண்டும் கலக்காம பார்த்துக்குவோம். ஹோட்டல் துணிகளை உள் அறையிலும், மருத்துவமனைத் துணிகளை வெயில்லயும் காய வைப்போம். நல்லா உலர்ந்த துணிகளை ஸ்டீம் அயர்ன் செய்து நீட்டா மடிச்சு, சாயங்காலம் மினி லாரில டெலிவரி கொடுத்துடுவோம்'' என்ற லலிதா பரமேஸ்வரி,
''பத்து வருஷத்துக்கு முன்ன இந்தத் தொழிலை ஆரம்பிச்சப்போ, 'மாசம் இவ்வளவு வருமானம் வந்தா போதும்’னு எந்த இலக்கும் நிர்ணயிச்சுக்கல. ஒவ்வொரு மாசம் லாண்டரி கணக்குகளை முடிக்கும்போதும், 'இவ்வளவு வருமானம் வருதே!’னு திருப்தியடைஞ்சுடவும் இல்ல. 'உழைப்போம், அதோட பலனை எடுப்போம்’னு தொடர்ந்து ஓடிட்டே இருக்கேன். அதனாலதான் இன்னிக்கு லட்சத்தில் வந்து நிக்கிறேன். என் ஓட்டம் தொடர்ந்துட்டுதான் இருக்கு!''
- பிரமிப்புடன்தான் விடைபெற முடிந்தது, லலிதா பரமேஸ்வரியிடம் இருந்து!