வறண்ட சருமம்... இனி, வசீகர சருமம்!இந்துலேகா.சி
இந்த இதழில் வறண்ட சருமத்துக்கான பார்லர் மற்றும் பாரம்பரிய பராமரிப்புகள் இரண்டையும் பார்க்கலாம்..!
பார்லர்
வறண்ட சருமத்துக்கான பார்லர் சர்வீஸ் பற்றி விளக்கிச் சொல்கிறார், 'க்ரீன் டிரெண்ட்ஸ்’ சீனியர் டிரெயினர் பத்மா.
''வறண்ட சருமத்தை சரியா பராமரிக்கத் தவறினா... முகத்தில் சுருக்கம், தொய்வு, வயதான தோற்றம் இப்படி பல பிரச்னைகள் ஏற்படும். கடைசியில் வறண்ட சருமம் சென்ஸிட்டிவ் சருமமா மாறிடும். அதனால, தினமும் மாய்ஸ்ச்சரைஸரும், இரவு தூங்கும்போது நைட் க்ரீமும் தவறாம பூசிக்கணும். முகத்துக்கு க்ரீம் பேஸ்டு ஃபேஸ் வாஷ், மேக்கப் அயிட்டங்கள் பயன்படுத்துவது, முகம் மேலும் வறண்டு போவதிலிருந்து பாதுகாக்கும்.
பார்லர் சர்வீஸைப் பொறுத்தவரை, வறண்ட சருமம் உள்ளவங்க, பிளீச் செய்யவே கூடாது. ஃபேஷியல்களில் அரோமா கோல்டு ஃபேஷியல், சாக்லேட் ஃபேஷியல், அட்வான்ஸ்டு பிரைட்டனிங், லைட்டனிங் மற்றும் க்ளோ அண்ட் வொயிட், O3 ஃபேஷியல்... இதெல்லாமே வறண்ட சருமம் உள்ளவங்களுக்கானது. குறிப்பா, சாக்லேட் ஃபேஷியல், வறண்ட சருமத்துக்கு ரொம்ப உகந்தது'' என்ற பத்மா சாக்லேட் ஃபேஷியலை விவரித்தார்...

''முதல்ல கிளென்ஸிங் மில்க் அப்ளை பண்ணி முகத்தை சுத்தப்படுத்திட்டு, டோனர் அப்ளை பண்ணுவோம். கோகோ பவுடர், சர்க்கரை ரெண்டையும் மிக்ஸ் செய்து முகத்துக்கு ஸ்கிரப் செய்வோம். எல்லா ஃபேஷியலுக்கும் ஸ்கிரப் முடிஞ்சதும் முகத்துக்கு நீராவி கொடுப்போம். ஆனா, வறண்ட சருமத்துக்கு மசாஜ் கொடுத்துட்டுதான் நீராவி கொடுக்கணும். மசாஜ் செய்யறதுக்கு ஃப்ரெஷ் க்ரீம், சாக்லேட், கோகோ பவுடர் எல்லாம் கலந்த கலவையைப் பயன்படுத்துவோம். அடுத்ததா நீராவி கொடுத்து, பிளாக் அண்டு வொயிட் ஹெட்ஸ் ரிமூவ் பண்ணிடுவோம். பேண்டேஜ் துணியை முகத்துக்கு மேல விரிச்சு, அதுக்கு மேல பாரஃபின், சாக்லேட், கோகோ பவுடர் எல்லாம் சேர்த்து உருக்கின கலவையை விட்டு, காய்ந்ததும் எடுத்துடுவோம். இதனால முகத்தின் வறட்சி குறைஞ்சு, முகம் 'பளிச்’னு இருக்கும்'' என்று சொன்னார்.
பாரம்பரியம்
வறண்ட சருமத்தின் குணாதிசயங்களோடு.... அதன் பராமரிப்பு பற்றியும் விரிவாகச் சொல்கிறார், 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக் நிர்வாகி, கீதா அஷோக்,
''ஏற்கெனவே சொன்ன மாதிரி நம்முடைய சருமத்தோட இரண்டாம் அடுக்கான 'டெர்மிஸ்’-ல் உள்ள செபேஷியஸ் கிளாண்ட், சீபம் எனும் எண்ணெயைச் சுரக்கும். தேவையான அளவு சீபம் தோல் உள்ளேயும் வெளியேயும் சுரந்தா, நம்மோட ஸ்கின் இயற்கையாகவே பாதுகாக்கப்படும். ஆனா... வறண்ட சருமத்துக்கு முக்கிய காரணமே சீபம் குறைவான அளவுல சுரக்கறதுதான். ஆய்லி ஸ்கின்னுக்கு முகத்தில் உள்ள துவாரங்கள் பெருசாவும், வறண்ட சருமத்துக்கு துவாரங்கள் சுருங்கியும் இருக்கும். இதனால வறண்ட சருமத்துல, குறைவான அளவில் சுரக்கும் சீபமும், துவாரங்கள் வழியா வெளியே வர முடியாததால... முகம் பொலிவிழந்துடும்.
உங்களுக்கு வறண்ட சருமமானு கண்டுபிடிக்கறதுக்கு, ஒரு வழி... காலையில தூங்கி எழுந்ததும், கண்ணாடியில் முகத்தை நெருக்கமாப் பார்த்தா, சருமத்துல சின்னச் சின்னதா கட்டங்கள் மாதிரியான சுருக்கங்கள் தெரியும். தொட்டுப் பார்த்தா சொரசொரப்பா இருக்கும். இந்த வகை சருமத்தோட நன்மைகள்... மேக்கப் பொருட்கள், க்ரீம், சோப்பு, ஆயில்னு எல்லா வகையான காஸ்மெடிக் பொருட்களும் ஒத்துப்போகும், எந்த அலர்ஜியும் வராது. முக்கியமா, முகப்பரு எட்டிக்கூடப் பார்க்காது.
தீமைனு சொல்லணும்னா... அதிக வறட்சி, வயசானவங்களுக்கு வரக்கூடிய சுருக்கங்களான வாய் ஓரங்கள்ல வரக்கூடிய லாஃபர் லைன்ஸ் (laughter lines), கண் ஓரங்கள்ல வரக்கூடிய க்ரோ’ஸ் ஃபீட் லைன்ஸ் (crow’s feet lines) மற்றும் நெற்றியில் வரக்கூடிய ஃப்ரான் லைன்ஸ் (frown lines) மாதிரியான சுருக்கங்கள் எல்லாம்... 30 வயசுலயே வந்துடும். சரும துவாரங்கள் சுருங்கி இருக்கும். அதுவும் குளிர்காலத்துல ரொம்ப சுருங்கிடும். 'டெர்மிஸ்’-ல் இயற்கையா சுரக்கும் சீபம், சருமத்தோட துவாரங்கள் வழியா தோலோட மேற்புறம் வெளியேறி, நம்ம தோலை பாதுகாக்கும். ஆனா... வறண்ட சருமத்துக்கு சீபம் வெளியே வர முடியாத காரணத்தால, சூரியக் கதிர், மாசு காரணமா ஸ்கின் கடுமையா பாதிக்கப்படும். சாதாரணமா வெயில் காலத்துல பலருக்கும் முகத்தில் எண்ணெய் வடியும். ஆனா... வறண்ட சருமம், வெயிலால் அதிகமா வறண்டு போகும். வெண்தேமல், மங்கு இதெல்லாம் வறண்ட சருமத்தினரோட சொத்துகள்'' என்று சொன்ன கீதா, இவ்வகை சருமத்துக்கான தீர்வுகளை விவரித்தார்.
''வறண்ட சருமத்தினர், தினமும் இரவு படுக்கும் முன், தரமான ஹெர்பல் கிளென்ஸிங் மில்க் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுத்து கழுவிட்டு, ஹெர்பல் மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை பண்ணணும். டோனர் தேவையில்ல. மாய்ஸ்ச்சரைஸர் வாங்கும்போது லோஷனா இல்லாம, டீப் மாய்ஸ்ச்சரைஸிங் க்ரீம் வாங்குறது சிறப்பு. தினமும் காலையில முகம் கழுவறதுக்கு முன்ன, காய்ச்சாத பால் பத்து மில்லி, அதோட 20 சொட்டு கிளிசரின் கலந்து, அதை பஞ்சால தொட்டு, முகம் மற்றும் கழுத்தை நல்லா துடைச்சு எடுக்கணும். இது 4 - 5 மணி நேரத்துக்கு முகம் வறட்சி ஆகாம பார்த்துக்கும். சருமம் வறண்டு போகாம இருக்க அதிகளவு நீர்ச்சத்து தேவைங்கறதால நிறைய தண்ணீர் குடிக்கணும்.
தினமும் காலையில 'ஸ்பைருலினா' (Spirulina) மாத்திரை எடுத்துக்கறது நல்லது. இது கடல்ல வளரும் சுருள் பச்சை பாசியில்இருந்து தயாரிக்கப்படுது. விட்டமின்-சி தவிர மற்ற எல்லா விட்டமின் மற்றும் மினரல்கள் இதுல இருக்கு. இதோட சிறப்பு, சருமத்தோட ஈரப்பதம் குறையாம பாதுகாக்கும். இரவு விட்டமின்-சி மாத்திரையும், மாலை பிரிம் ரோஸ் ஆயில் கேப்சூலும் எடுத்துக்கறது, சருமத்தோட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; டிரை ஸ்கின்னை, நார்மலா மாத்திடும். வறண்ட சருமத்தினர், சருமத்தில் எதுவும் அப்ளை பண்ணாம வெளியில போகக்கூடாது. நல்ல தரமான டே அண்டு நைட் க்ரீம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தா, வயதான தோற்றம், முகச் சுருக்கம்... இதில் இருந்து தப்பிக்கலாம்'' என்றார் கீதா.
பளீரிடும்...

வறண்ட சருமத்துக்கான வரப்பிரசாதம்..!
'பட்டர் ஃப்ரூட்' எனப்படும் அவகாடோ பழத்தை (சூப்பர் மார்க்கெட் பழக்கடைகளில் கிடைக்கும்) பச்சையாக வாங்கி, வீட்டில் மூன்று நாள் வைத்திருங்கள். மூன்றாவது நாள், அதன் தோல் பச்சையிலிருந்து பிரவுன் நிறத்துக்கு மாறி இருக்கும். அந்தப் பதத்தில் பழத்தை வெட்டி, உள்ளிருக்கும் சதைப்பகுதியை எடுங்கள். அதோடு, கனிந்த இரண்டு சப்போட்டா பழத்தின் சதைப்பகுதியைச் சேர்த்து மிக்ஸியில் அடித்து, அதனுடன் 2 டீஸ்பூன் பால் பவுடர், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் கால் டீஸ்பூன் ஜெலட்டின் (சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்) கலந்து, 3 - 4 மணி நேரம் வைத்திருங்கள். பின், காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். இதை தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்து முகம், கை, கழுத்துப் பகுதியில் அப்ளை செய்து, காய்ந்ததும் பச்சைத் தண்ணீரில் கழுவ வேண்டும். 10 நாட்கள் தொடர்ந்து செய்தாலே, சருமம் வறட்சியிலிருந்து மீண்டு பளபளப்பாகும்!