வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200
'டைமிங் பன்ச்’!

சமீபத்தில் என் ஐந்து வயது மகனின் பிறந்தநாளுக்கு புதுத்துணி எடுப்பதற்காக, அவனை அழைத்துக்கொண்டு ஜவுளிக் கடைக்குச் சென்றிருந்தேன். மிகவும் விலை உயர்ந்த சட்டையைக் காட்டி அதுதான் வேண்டுமென அவன் அடம் பிடிக்க... கோபத்தில் அவனைத் திட்டிவிட்டேன். பிறகு, வேறு டிரெஸ் வாங்கிக்கொள்ள சொன்னபோது, ''நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'' என்று அவன் அழுதுகொண்டே 'டைமிங் பன்ச்’ அடித்ததைக் கேட்டு, ஜவுளிக்கடையே சிரிப்பால் அதிர்ந்தது.
எஸ்.சுப்புலெட்சுமி, புதுக்கோட்டை
தண்ணீர்... கண்ணீர்!
எங்கள் வீட்டு பேத்திகளின் லூட்டி என்றுமே அடங்காத ஒன்று. என் மகள், தன்னுடைய மூத்த மகளின் 'வாட்டர் பேக்’கில் தண்ணீரின் அளவு குறையாமலிருப்பதைக் கண்டு, நிறைய தண்ணீர் குடிக்கச் சொல்லி அறிவுறுத்தினாள்... ''தண்ணி குடிச்சாதான் நல்லா வளர முடியும்; சாப்பிட்ட உணவு செரிமானமாகும்; வயிற்றுவலி வராது'' என்றெல்லாம் சொல்லி முடித்தபோது... யு.கே.ஜி படிக்கும் இரண்டாவது மகள், ''ஆமாண்டி! அப்பத்தான் நாம அடம் பண்ணி அழும்போது கண்ணுல நிறைய தண்ணி வரும்... கேட்டது எல்லாம் கிடைச்சுடும்'' என அவள் பங்குக்கு அட்வைஸ் (!) செய்ய... கண்ணில் நீர் வருமளவு சிரித்துத் தீர்த்தோம்.
- பி.விக்டோரியா, சேலம்
தாயுமானவன்!
என்னுடைய தம்பிக்கு 4 வயதிலும் 3 வயதிலும் இரண்டு குட்டிப்பசங்க இருக்கிறார்கள். ஒருநாள், பெரிய குட்டியிடம் இரண்டு சாக்லேட்டுகளைக் கொடுத்து, ''நீ ஒண்ணு எடுத்துக்கோ... தம்பிக்கு ஒண்ணு கொடு'' என்று சொன்னேன். அவன் தன்னுடைய சாக்லேட்டை சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டுவிட்டு, மற்றொரு சாக்லேட்டின் கவரைப் பிரித்து வாயில் வைத்துக் கடித்தான். ''தம்பிக்கு கொடுனா... நீயே சாப்பிடறியே?'' என்று நான் கேட்க... ''அத்தை... சாக்லேட்ல ஸ்வீட் சரியா இருக்கானு பார்த்துட்டு கொடுக்கலாம்னுதான் டேஸ்ட் பண்ணினேன். அம்மா குழம்பு, ரசத்தையெல்லாம் டேஸ்ட் பண்ணிட்டுதான் கொடுப்பா!'' என்றானே பார்க்கணும்... ஹாலில் சிரிப்பலை நிரம்பி வழிந்தது.
- தாரா, கோயம்புத்தூர்