மருத்துவம் படிக்கலாம் வாங்க!சா.வடிவரசு, படங்கள் : ர.சதானந்த்
உலகம் முழுக்க, மருத்துவர்களைக் கடவுளாகக் கொண்டாடுகிறார்கள் மக்கள். அந்தளவுக்கு பொறுப்பும் மகத்துவ மும் கொண்ட பணி, மருத்துவப் பணி! தற்கால மருத்துவத் துக்கு மருத்துவத் தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை. எனினும், நோயாளிகளின் பிணி நீக்க, மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளலும், கருணை யும் எப்போதும் அடிப்படைத் தேவைகள் மருத்துவப் பணிக்கு. இத்தகைய மருத்துவப் பணிக்கான படிப்புகள், பயிற்சிகள், வேலைவாய்ப்புகள், அதிலுள்ள சவால்கள், சாதக பாதகங்கள் என எல்லாம் அலசுவோம் இங்கு!
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ம ருத்துவத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருபவரும், சென்னை, சவீதா நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் முதல்வருமான குணசாகரன், மருத்துவத் துறையில் உள்ள படிப்புகள் மற்றும் பயிற்சிகள் குறித்துப் பேசும்போது, ''மற்ற எல்லா துறைகளைக் காட்டிலும், சமூக மரியாதையிலும், வருமானத்திலும் முதன்மையான துறை, மருத்துவத் துறை. இந்தத் துறையை கையில் எடுப்பதற்கான படிப்புகள் நிறையவே இருக்கின்றன. இதில் சிறப்புப் பிரிவு படிப்புகளும், பலவிதமான டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகின்றன (பார்க்க பெட்டிச் செய்தி). என்றாலும், பொதுமருத்துவத்துக்கு அடிப்படையான படிப்பு... எம்.பி.பி.எஸ். பல் மருத்துவத்துறைக்கு பி.டி.எஸ்.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
அரசுக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புகளில் சேர நினைப்பவர்கள் ஆண்டுதோறும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் (Directorate of Medical Education, Tamilnadu) நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டும். ப்ளஸ் டூ வகுப்பில் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவு மற்றும் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் கட்-ஆஃப் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையாக வைத்து, மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்கப்படுகிறது. தனியார் கல் லூரிகளில் என்றால், அவர்கள் நிர் ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி படிப்பில் சேரலாம். இதேமுறையில் தான் பி.டி.எஸ். படிப்புக்கும் சேர்க்கை நடத்தப்படுகிறது.
வேலைவாய்ப்புகள்
எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இவர்களுக்கு, கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவராகப் பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது. பிறகு, பணி அனுபவம், திறமை மற்றும் மேற்படிப்பின் அடிப்படையில் பணி உயர்வு வழங்கப்பட்டு தாலுகா, மாவட்ட மருத்துவமனைகள் என கொஞ்சம் கொஞ்சமாக பதவி உயர்வு பெறலாம். தனியார் மருத்துவமனைகளில் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப் படையில் பணியில் சேரலாம்.
எம்.எஸ். மற்றும் எம்.டி. போன்ற முதுநிலை படிப்புகளைப் படிப்பவர்கள், படிக்கும் காலத்திலேயே சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் பணி செய்துகொண்டே படிக்கலாம். படிப்பு முடிந்து அங்கேயே பணி வாய்ப்பு பெறவும் முடியும். மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பணிவாய்ப்பு பெறலாம். இன்றைக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கான வாய்ப்புகளும் அதிகளவில் நிரம்பியுள்ளன. மருத்துவர்கள் சொந்தமாக மருத்துவமனை தொடங்கும் வாய்ப்பும் உள்ளது'' என்ற குணசாகரன், வெளிநாட்டில் மருத்துவப் பணி மற்றும் மருத்துவ படிப்பு பற்றியும் பேசினார்.
வெளிநாட்டில் வேலை!
''நம் நாட்டில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள், வெளிநாடுகளில் மருத்துவராகப் பணியாற்ற, அந்தந்த நாட்டில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது அவசியம். உதாரணமாக, அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிய விரும்புபவர்கள், அந்நாடு நடத்தும் தேர்வில் (United States Medical Licensing Examination) பங்கேற்று தேர்ச்சி பெறவேண்டும். இதை உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும், ஆன்லைன் மூலமாக எழுதலாம். இதில் தேர்வானால், 'அமெரிக்காவில் மருத்துவராகப் பணிபுரிய தகுதியுடையவர்' என்ற சான்றிதழோடு, அங்கு பணியாற்றலாம்.
மருத்துவப் படிப்பை வெளிநாடுகளில் முடிக்கும் இந்திய மாணவர்கள், அந்த நாட்டில் சுலபமாக பணிவாய்ப்பை பெற்றுவிடலாம். ஆனால், அவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிய விரும்பினால், 'நேஷனல் போர்டு ஆஃப் எக்ஸாமினேஷன்' நடத்தும் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சிபெற வேண்டியது அவசியம்'' என்று விவரங்கள் தந்தார், குணசாகரன்.

இருக்க வேண்டியவை... கழிக்க வேண்டியவை..!
ஒரு மருத்துவருக்கான இலக்கணத்தை எடுத்துரைத்தார், பிரபல இதயவியல் சிறப்பு நிபுணர் டாக்டர் தணிகாசலம்... ''நம்பகத்தன்மை, பகுத்தறியும்தன்மை, தன்னம்பிக்கை, சகிப்புத்தன்மை, அறிதல் திறன், எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல், மனிதாபிமானம், பக்குவம், பொறுமை போன்றவை ஒரு மருத்துவருக்கு கட்டாயம் இருக்க வேண்டியவை. அப்படி இருக்கும் ஒரு மருத்துவரால்தான் தன் கடமையைச் சரியாக செய்யமுடியும்.
ஆதாயத்தை எதிர்பார்த்துச் செயல்படுவது, மருத்துவப் பணிக்கு எந்நேரமும் தயாராக இல்லாமல், ஞாயிறு விடுமுறை, 9 டு 6 மணி வரைதான் பிராக்டீஸ் என ஃபிக்ஸ் செய்வது, கடின உழைப்பு இல்லாமல் கடமைக்கு பணியாற்றுவது, படித்தது போதும் என்று தங்களை மேற்கொண்டு புதுப்பிக்காமல் இருப்பது, நோயாளிகளிடம் பக்குவமின்றி, பொறுமையின்றி நடந்துகொள்வது, மருத்துவ வேலையில் அர்ப்பணிக்காமல் செயல்படுவது, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செயல்படுவது போன்றவை, மருத்துவத் துறையில் உள்ளவர்கள் கழிக்க வேண்டிய குணங்கள். ஆனால், இந்தக் குணங்களைக் கழிக்காமல் வைத்திருக்கும் சிலரால்தான், ஆங்காங்கே மருத்துவத்துறை மீது கறை படிந்துகிடக்கிறது'' என்று நேர்படச் சொன்ன டாக்டர் தணிகாசலம்,
பாட புத்தகம் மட்டும் போதாது!
''பாட புத்தகங்களைப் படிப்பது மட்டுமே போதும் என்கிற எண்ணம், ஒருபோதும் வரக்கூடாது. அதையும் தாண்டி அறியவேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன என்கிற ஆர்வம் அவர்கள் மனதில் உதிக்கவேண்டும். ஒரு மருத்துவ மாணவர், வெறும் பாடத்தை மட்டுமே படித்து வெளியேறினால், அவரால் சிறப்பான ஒரு மருத்துவராகச் செயல்பட முடியாது. கூடவே பயிற்சியும் அவசியம். அப்போதுதான் மருத்துவத்துறையில் சிறந்து விளங்க முடியும்'' என்று அறிவுறுத்தினார்.
இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவப் படிப்புகள் குறித்து சென்னை, சாய்ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதா கூறியபோது, ''இந்தியாவின் இயற்கை மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி படிப்புகள் இன்றைக்கு பல கல்லூரிகளில் சிறப்பாக கற்பிக்கப்படுகின்றன. இதில் பி.ஏ.எம்.எஸ். என்கிற ஆயுர்வேதப் படிப்பும், பி.எஸ்.எம்.எஸ் என்கிற சித்த மருத்துவப் படிப்பும், பி.ஹெச்.எம்.எஸ். என்கிற ஹோமியோபதி படிப்பும் கற்பிக்கப்படுகின்றன. இதற்கும் மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான அதே தகுதிகளின் அடிப்படையில்தான் சேர்க்கை நடக்கும். இந்த ஐந்தரை ஆண்டு படிப்புகளில் சேர, இன்றைக்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தப் படிப்புகளை அரசுக் கல்லூரிகளில் படிக்க ஆண்டுக் கட்டணமாக 5 ஆயிரம் ரூபாயும், தனியார் கல்லூரிகளில் படிக்க ஆண்டுக் கட்டணமாக 30 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது'' என்றார்.

சவால்கள் அதிகம்
மருத்துவத் துறையில் உள்ள சவால்கள் பற்றி பேசிய சென்னை ஸ்டான்லி, மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், ''மருத்துவர்களை மக்கள் சந்தேகப் பார்வையோடு பார்க்கும் நிலை உருவாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், மருத்துவர்கள் தங்கள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்துவது, அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது என்றாகிவிட்டது. தங்களுக்கும் நோயாளிகளுக்குமான இடைவெளியைக் குறைத்து, நீடித்த வருடங்களுக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றினால் மட்டுமே, முதன்மை மருத்துவராக உயரலாம். மற்ற துறைகளைப் போல ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால் பின்னால் சரிசெய்துகொள்வதற்கான வாய்ப்பு, உயிர் சிகிச்சை அளிக்கும் மருத்துவத் துறையில் இல்லை என்பதால், இப்பணிக்குத் தேவையான பொறுப்பும் விழிப்பும் அதிகம்'' என்றவர்,
''இன்றும், இனி வரும் காலங்களிலும் மருத்துவத் துறையின் தேவையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. எனவே, மருத்துவப் படிப்புகளுக்கான போட்டி வருங்காலத்திலும் அதிகமாகவே இருக்கும்!'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.
'கட்-ஆஃப்’ எப்படி கணக்கிடுவது?
ப்ளஸ் டூ தேர்வில் பெரும் உயிரியல் பாடத்தின் மதிப்பெண்ணை 100-க்கும் (200/2=100), இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தின் மதிப்பெண்களை 100-க்கும் (200 + 200=400; 400/4 = 100) கணக்கிட்டு வரும் மதிப்பெண்களை கூட்டினால் கிடைக்கும் மதிப்பெண் (100 + 100=200) 'கட்-ஆப்’ மதிப்பெண்ணாகும். ஒருவேளை தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தை ப்ளஸ் டூ-வில் தனித்தனியாக படித்திருந்தால் அதை 100 மதிப்பெண்களுக்கு (200 + 200=400; 400/4=100) கணக்கிட வேண்டும்.
50 லட்சம் வரை...!
சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாக மருத்துவக் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மாணவர்கள் சேர்வதற்கு ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சியோடு உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தை படித்திருந்தாலே போதும், அவர்கள் சொல்லும் கட்டணத்தையும், நன்கொடையையும் செலுத்தி மருத்துவப் படிப்பில் சுலபமாக சேர்ந்துவிடலாம். தற்போது, தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் சில, நுழைவுத்தேர்வுகள் மூலமாகவும்... சில கல்லூரிகள் நேரடியாகவும் மாணவர்களைச் சேர்க்கின்றன.தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை, அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் என்ற ஒன்று இருந்தாலும், அதற்கும் மேலாக 50 லட்சம் வரையிலும்கூட நன்கொடை என்கிற பெயரில் கட்டாய வசூல் நடத்தும் கல்லூரிகளும் இருக்கின்றன. இதே கதைதான் சில நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளிலும்!
ப்ளஸ்... மைனஸ்
ப்ளஸ்: சேவையோடு கூடிய பணி, அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு, சமுதாயத்தில் மரியாதை, ஓய்வுக்குப் பின்னும் பணியைத் தொடரும் வாய்ப்பு, குடும்பம் மற்றும் சுற்றத்தாருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை உடனுக்குடன் வழங்குவது... உள்ளிட்ட இன்னும் பல.
மைனஸ்: நேரம் பார்க்காத வேலை, ஓய்வின்மை, வேண்டிய நேரத்தில் விடுமுறை எடுப்பதில் சிரமம், எப்போதும் கவனமாகச் செயல்பட வேண்டிய பொறுப்பு, நோயாளிக்கு வழங்கும் சிகிச்சையின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம்... உள்ளிட்ட இன் னும் பல.
அகில இந்திய அளவில்..!
அகில இந்திய அளவில் புகழ்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் சேர்வதற்காக ஆண்டுதோறும் 'சென்ட்ரல் போர்டு ஆஃப் எஜுகேஷன்’, தரத்தேர்வு நடத்துகிறது. ப்ளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம். தரத் தேர்வில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து 'தரப்பட்டியல்’ ஒன்று வெளியிடப்படும். அந்த தரப்பட்டியலின்படி அகில இந்திய அளவில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இந்தத் தேர்வில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்புகிறவர்கள், 'ப்ரீ மெடிக்கல் டெஸ்ட்’ தேர்வையும், பல் மருத்துவம் படிக்க விரும்புகிறவர்கள் 'ப்ரீ டென்டல் டெஸ்ட்’ தேர்வையும் எழுதவேண்டியது அவசியம்.
அரசு மருத்துவக் கல்லூரிகள்..!
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 11 இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 1,066 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் தனியார் மருத்துவக் கல்லுரிகள் செயல்படுகின்றன. இவற்றில், அரசு இலவச இடங்கள்-75, அரசு கட்டண இடங்கள்-60 எண்ணிக்கையில் உள்ளன. இந்த 135 இடங்களுக்கும் சேர்த்து, ஆண்டுதோறும் 'தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம்’ கலந்தாய்வு நடத்தி, அதன் மூலமாக மாணவர்களைத் தேர்வு செய்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே அரசு பல் மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. ஆனால், சென்னை, கோவை, ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களில் மொத்தம் 10 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், அரசுக் கல்லூரியில் 51 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 345 அரசு இலவச இடங்களும், 246 அரசு கட்டண இடங்களும் உள்ளன. இதற்கும் ஆண்டுதோறும் 'தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம்’ கலந்தாய்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்கிறது.