
திரையுலக பிரம்மாக்களின் ரீவைண்ட் தொடர்இயக்குநர் சுந்தர்ராஜன், படம் : எம்.உசேன்
''என்னோட எல்லா படங்களிலுமே பெண் கதாபாத்திரங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் முக்கியத்துவம் கொடுத்துதான் எடுத்திருப்பேன். நான் பெரியார் கொள்கை கொண்டவன். அதனால, பெண்கள் மேல மிகுந்த மரியாதை உள்ளவன். அந்த வகையிலதான், நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் சந்திக்கும் போராட்டங்களை எல்லாம், என் படங்களோட நாயகிகள் மூலமா... சமூக பிரதிபலிப்போடு புரியவைத்திருப்பேன்.

நான் எடுத்த படங்கள்ல என்னை அதிகமா பாதிச்ச கதைநாயகி... 'நான் பாடும் பாடல்’ படத்தின் 'கௌரி’. இந்த கேரக்டர்ல அம்பிகா, ஹீரோ 'ஆனந்த்’ கேரக்டர்ல... மோகன் ரெண்டு பேரும் நடிச்சுருப்பாங்க. 'ஆனந்த்’ ஒரு டாக்டர். 'கௌரி’ ஒரு இசைக்குழு பாடகி. 'கௌரி’யோட பாடலுக்கு மயங்குற 'ஆனந்த்’, அவளை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குவான். கல்யாணத்துக்குப் பிறகு, பின்னணி பாடகி வாய்ப்பு 'கௌரி’க்கு கிடைக்கும். 'கௌரி’ அதை ஏற்க மறுத்துடுவா. ஆனா, கணவன் ஆசைப்பட்டுக் கேட்க, பாட ஒப்புக்குவா. பாட்டு ரெக்கார்டிங் சமயத்துல 'ஆனந்த்’, தன் பேஷன்ட் ஒருத்தரோட முக்கியமான ஆபரேஷனை முடிச்சுட்டு, மனைவி பாடுறதை நேர்ல பார்க்க அவசர அவசரமா ரெக்கார்டிங் தியேட்டருக்கு கார்ல வரும்போது, விபத்தில் சிக்கி இறந்துடுவான். 'கௌரி’ விதவையாக, அதுக்கப்புறம் அவளைத் திருமணம் பண்ண விருப்பப்படுவார் எழுத்தாளர் சிவகுமார். ஆனா, அவரை ஏத்துக்க முடியாம தனிமரமா நின்னுடுவா 'கௌரி’. இந்த கதைக்கான கரு, ஓர் உண்மைச் சம்பவத்தில் இருந்துதான் எனக்குக் கிடைச்சுது.
ஒரு தடவை, எம்.எஸ் விஸ்வநாதன் சார்கிட்ட, '' 'சுஜாதா’ படத்துல 'நீ வருவாய் என நான் இருந்தேன்’னு ஒரு பாட்டு வருமே சார்... அந்தப் பாட்டு மாதிரியே எனக்கும் ஒரு பாட்டு கம்போஸ் பண்ணித் தர முடியுமா..?''னு கேட்டேன். அப்போ எம்.எஸ்.வி சார் சொன்ன கதைதான், 'நான் பாடும் பாடல்’.
அந்தப் பாட்டைப் பாடின பாடகியோட பேரு கல்யாணி மேனன். அதுதான் அவங்க பாடின முதலும் கடைசியுமான பாட்டு. அவங்களுக்கு நடந்தது காதல் கல்யாணம். அவங்க பாடகியாகணும்னு, அவங்க கணவர் நிறைய பேர்கிட்ட சான்ஸ் கேட்டு அலைஞ்சுருக்கார். ஆனா, அவருக்கு டெல்லிக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சுடுது. மனைவியை பாடகியாக்கியே தீரணும்னு அங்க இருந்தே முயற்சியைத் தொடர்றார். ஒரு வழியா வாய்ப்பும் கிடைச்சுடுது. எம்.எஸ்.வி-யும் அவங்களுக்கு ரெக்கார்டிங் தேதியை குறிச்சு கொடுத்துடறார். இதை கேள்விப்பட்ட கணவர், முதன் முதலா மனைவி ரெக்கார்டிங் தியேட்டர்ல பாடுறதை பார்க்க... டெல்லியில இருந்து கிளம்பி வர்றார்.
ரெக்கார்டிங் தியேட்டர்ல எல்லாம் ரெடி. ஆனா... கணவர் வர்றதுக்காக பாடாம காத்துட்டு இருக்கற கல்யாணிகிட்ட, 'நேரமாகுதும்மா... என்னை அப்பா மாதிரி நினைச்சுட்டு பாடு’னு எம்.எஸ்.வி. சார் தைரியம் சொல்றார். இவங்களும் கணவர் வரணும்ங்கிற ஏக்கத்துல உண்மையாவே உருகி உருகி 'நீ வருவாயென' பாட்டை... அழுது பாடறாங்க. அந்தப் பாட்டு அவ்ளோ தத்ரூபமா வந்ததா எல்லாருமே சந்தோஷப்பட்ட சமயம், அவங்க கணவர் இறந்துட்டதா தகவல் வருது. மனைவி பாடுறதைக் கேக்கணும்னு அவசரமா ஏர்போர்ட்ல இருந்து டாக்ஸியில வந்தவர், விபத்துல இறந்துடறார். கணவர் இறந்த பிறகு, பாடவே மாட்டேன்னு அவங்க முடிவு பண்ணினதா எம்.எஸ்.வி. சார் சொன்ன கதைதான், என் 'கௌரி’யோட கதை.
இன்னிக்கும் கல்யாணி மேனன் போல, பல பெண்கள் கணவனை இழந்த பின்னும் அவருக்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்றாங்க. அவங்களுக்கெல்லாம் அர்ப்பணமானவதான் என் 'கௌரி’.

என் மனசுல ஆழமா பதிஞ்ச மற்றொரு படம், 'வைதேகி காத்திருந்தாள்’. கதையில் ரேவதியோட பேரு 'வைதேகி’. ஹீரோவான 'வெள்ளச்சாமி’ விஜயகாந்துக்கும் 'வைதேகி’ங்கிற முறைப் பெண்ணோட ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். முறைப்பெண் வைதேகி தற்கொலை பண்ணிட்டு செத்துப் போயிடுவா. இந்த 'வைதேகி’க்கு (ரேவதி) கல்யாணம் நடந்த அன்னிக்கே மாப்பிள்ளையை ஆத்து வெள்ளம் அடிச்சுட்டுப் போயிடும். தாலி ஏறின நாள்லயே விதவையான 'வைதேகி’க்கு, தன் வீட்ல குடியிருக்கும் ரேஷன் கடை பையன் மீது மெல்லிய ஈர்ப்பு. ஆனா, அவன் வேறு ஒரு பெண்ணை காதலிப்பான். கடைசியில் அந்தக் காதலை சேர்த்து வைக்க 'வெள்ளச்சாமி’யும் 'வைதேகி’யும் (ரேவதி) துணையா இருப்பாங்க. அந்தப் போராட்டத்துல 'வெள்ளச்சாமி’ இறந்துபோக, இந்த 'வைதேகி’ (ரேவதி) யாருக்கும் துணையாக முடியாம தனிமரமாவே காத்துக் கிடப்பா.
இந்த 'வைதேகி’யை என் நிஜ வாழ்க்கையில சந்திச்சுருக்கேன். சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை. ஒரு தடவை எங்க ஊர் ஆத்துல திடீர் வெள்ளம் வந்துச்சு. அப்ப, படகுல வந்துகிட்டிருந்த எல்லாரையுமே அடிச்சுட்டுப் போயிடுச்சு. அதுல ஒருத்தர் எங்க ஊருக்குப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை. அவர் இறந்த பிறகு, அந்த பெண் ராசியில்லாதவனு சொல்லி யாருமே கல்யாணம் பண்ணிக்க முன்வரல. அந்தப் பொண்ணோட வாழ்க்கை கேள்விக்குறியான சோகம், எனக்குள்ள ஏற்படுத்தின தாக்கம்தான் படத்தோட திரைக்கதை.

அவளுக்குத் திருமணம் நடந்தபிறகு கணவர் இறந்திருந்தா, கதையில அழுத்தம் அதிகமா கிடைக்கும்னு யோசிச்சேன். கழுத்துல தாலினு ஒண்ணு ஏறின ஒரே காரணத்துக்காக, எதிர்பார்க்காம நடந்த இயற்கை விபத்தா இருந்தாகூட, அங்கே ஒரு பெண்தான் பாதிக்கப்படுறானு என் கதைநாயகி 'வைதேகி’ மூலமா சொல்ல நினைச்சேன். என்னோட இந்தக் கதை நாயகி, ஒரு நாள் கணவன் என்றாலும், அவனுக்காக வாழ்வை தொலைக்கும் பெண்களோட அவலைத்தை சொல்ல நான் படைச்சது.
'அம்மன் கோவில் கிழக்காலே’... இந்தப் படத்தின் நாயகி 'கண்மணி’யை (ராதா), திமிர் பிடிச்ச பெண்ணா உருவாக்கியிருப்பேன். படிப்பும் பணமும் மட்டுமே ஒரு பெண்ணை சந்தோஷப்படுத்திட முடியாது, பொறுமையும் அனுசரிப்பும் அவசியம்னு சொல்ல வந்தவளே, என் 'கண்மணி’. க்ளைமாக்ஸில் விஜயகாந்த்தான் எல்லா சொத்துக்கும் சொந்தக்காரர், ராதாவுக்கு எதுவும் இல்லை என்பது மாதிரி வரும். உண்மை தெரிந்ததும், ராதா திருந்த, படம் முடியும்.
இந்த 'கண்மணி’ கதாபாத்திரத்தை, என் நண்பனின் வாழ்க்கையில் இருந்து எடுத்தேன். அவனுடைய முறைப்பெண்ணுக்கும் இவனுக்குமான கதையை மனசுல வெச்சு எழுதினேன். 'ஒரு பெண்ணை இவ்வளவு திமிர் பிடிச்சவளா காட்டுறோமே, அது சரியா வருமா?’னு ஆரம்பத்துல யோசிச்சேன். ஆனா, படம் பயங்கர ஹிட். ஒரு பொண்ணு எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு 'கண்மணி’யை உதாரணமா எடுத்துக்கிட்டதா பலரும் சொன்னாங்க.
சாஸ்திரம் சம்பிரதாயம்ங்கிற பேர்ல பெண்களை முடக்கிட வேணாம்னுதான், என் நாயகிகள் மூலமா சமூகத்துக்குச் சொன்னேன். மொத்தத்துல... ஒவ்வொரு பெண்ணுக்குமே ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அதை உணர்ந்து பெண்களைக் கொண்டாடணும்.''
சந்திப்பு: பொன்.விமலா