ஸ்பெஷல் 1
Published:Updated:

அவன்... அவள்... அது... தெரிஞ்சுக்கோங்க... புரிஞ்சுக்கோங்க!

'காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்... சருகாகும் அப்பாவிப் பெண்கள்!’ ஜி.பிரபு, கோவிந்த் பழனிச்சாமி, பொன்.விமலா- சென்ற இதழ் தொடர்ச்சி...

அவன்... அவள்... அது... தெரிஞ்சுக்கோங்க... புரிஞ்சுக்கோங்க!

டந்த சில இதழ்களாக குழந்தையின்மை சிகிச்சையில் நடக்கும் ஏமாற்று வேலைகள் குறித்து பார்த்து வருகிறோம். 'குழந்தை இல்லை' என்பதை வைத்து, சமூகத்தில் பலவித கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகிறார்கள் பெண்கள். ஏன், உயிரேகூட பறிபோகும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதிலிருந்தெல்லாம் தப்பிப் பிழைக்க... எப்படியாவது ஒரு குழந்தை பிறந்துவிடாதா என்று ஏங்கியபடிதான் மருத்துவமனைகளை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால், பெரும்பாலும் அங்கே நடப்பதென்னவோ... மோசடிகளாகவே இருக்கின்றன.

இப்படிப்பட்டவர்களிடம் சிக்கி பணத்தை மட்டுமல்லாது, உடல் நலத்தையும் மொத்தமாக இழந்துவிடுவதைத் தவிர்க்க... முதலில், கணவன்- மனைவி இருவரும் உடல் மற்றும் மனரீதியில் எடுக்க வேண்டிய முயற்சிகள் நிறையவே இருக்கின்றன.

''திருமணமாகி ஓராண்டு ஆகிவிட்டது. இன்னும் பெண் வயிற்றில் ஒரு புழு, பூச்சி தங்கவில்லை என்று மாமியார், அம்மா, அக்கம்பக்கமெல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்களா? இதுதான் நீங்கள் உஷாராக வேண்டிய தருணம்!'' என்று சொல்லும் டாக்டர் கோமதி சின்னசாமி, கணவன் - மனைவி இருவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய மருத்துவ உண்மைகளை அழகாக அடுக்கினார்.

ஆண்களின் பிரச்னைகள்..!

''முதலில் குழந்தை உருவாகாமல் போவதற்கான காரணங்களைப் பார்த்துவிடுவோம். திருமணமானவுடன், 'இப்போது குழந்தை வேண்டாம்' என்று நினைத்து சிலர் மாத்திரை, ஆணுறை போன்றவற்றை உபயோகித்து இருக்கலாம். முறையான உடல் உறவு பற்றி தெரியாததால், உறவு முழுமை அடையாமல் இருக்கலாம். ஆணின் விந்து, பெண்ணுறுப்பின் முன்பகுதியிலேயே தங்கிவிடுவதால், பெண் எழுந்து நிற்கும்போதும், திரும்பிப் படுக்கும்போதும் உள்ளே செல்லாமல் வெளியேறலாம். ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை குறைவாக இருப்பதால், பெண் உறுப்பில் நுழைக்க முடியாமல் இருக்கலாம்.

'வலி' என்று பெண் சொல்லிவிட்டால், அவள் முகம் சுருக்கினால், பயப்பட்டால், முனகினால், வெளியே யாரோ பேசுவது கேட்டால், போன் அடித்தால், அன்றைய தினம் நடந்த காரியங்கள் மனதில் நினைவுக்கு வந்தால், பெண் கோபமாக... கவலையாக... அதிருப்தியாக இருந்தால், வீட்டில் சண்டை நடந்திருந்தால்... இப்படிப்பட்ட காரணங்களாலும் உடலுறவு முழுமை அடையாமல் போகலாம்.

'பெண்ணுக்கு மாதவிலக்கு ஆகி 14-ம் நாள், குழந்தை உருவாகும் தினம்' என்று டாக்டர் சொல்லி, மனைவி அதை வேதவாக்காக கருதி காத்திருக்க... அதைக் கணவன் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலும் பிரச்னைதான். பாதியில் துவண்டு போகும் ஆண் உறுப்பு காரணமாக, பலநேரங்களில் விந்து சரியாக வெளியேற்ற இயலாமல் மனம் கவலை அடையலாம். இதுபோன்ற காரணங்கள் எல்லாம், சூழ்நிலை சிக்கல்களால் ஆண்களைப் பொறுத்தவரை உண்டாகும் விறைப்பு குறைபாடுகள் (Erection weakness).

அவன்... அவள்... அது... தெரிஞ்சுக்கோங்க... புரிஞ்சுக்கோங்க!

பெண்ணுக்கான சிக்கல்கள்!

பெண்களைப் பொறுத்தவரை... உடல், மனம் பிரச்னை காரணமாக குழந்தை உண்டாவது தாமதம் ஆகலாம். உடலுறவுக்குப் பயந்து ஆணின் உறுப்பு உள்ளே செல்லாத வண்ணம் கால்களை இறுக்கி வைத்தும், அடி வயிற்றை எக்கிப் பிடித்தும் உறவில் ஈடுபட பெண் மறுக்கலாம். உடலுறவு பற்றிய விவரம் தெரியாததால்... சரியான உறவைத் தெரிந்துகொண்டு, அதை ஆரம்பிப்பதற்குள் ளாகவே 2-3 வருடங்கள் ஓடி இருக்கலாம்.

பல பெண்கள், 'பெண் உறுப்பு கிழிந்துவிடும்... ரத்தம் வரும்' என்றெல்லாம் தோழிகள் சொல்லக்கேட்டு, அந்த பயத்திலேயே உறவில் ஈடுபடுவதை தவிர்க்கவும் செய்யலாம். சில பெண்களுக்கு கன்னித்திரையானது லேசாக இல்லாமல், தடித்து தசைநார் போல் இருக்கும். இதுபோன்றவர்கள்... ஆண் உறுப்பு உள்ளே செல்லும்போது மரண வேதனையை அனுபவிப்பார்கள். தக்க சோதனைக்குப் பின் அறுவை சிகிச்சை செய்து குணம் பெறலாம்'' என்ற டாக்டர்,

''தம்பதியரைப் பார்த்து, அவர்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டும்... அவர்களுடைய உடல் நிலை, உடல் உறவு நிலை, மனநிலை ஆகியவற்றின் ஆரோக்கியம் பற்றி தெரிந்துகொண்டும், தேவையான ஆலோசனை, சிகிச்சைகள் தருவதன் மூலமே இத்தகைய பிரச்னைகளை சரிப்படுத்த முடியும். இவற்றில் எல்லாம் தீர்வு இல்லை என்றால்தான், வேறுவிதமான சிகிச்சைகளில் இறங்க வேண்டும். எதுவாக இருந்தாலும், காலம் கடத்தாமல், முயற்சியை மேற்கொண்டால்... குழந்தை கிடைப்பது உறுதி'' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

பறிபோகும் பணம்!

அவன்... அவள்... அது... தெரிஞ்சுக்கோங்க... புரிஞ்சுக்கோங்க!

குழந்தைப்பேறு சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் மற்றும் அதன் குளறுபடிகள் குறித்து சில கருத்துக்களை முன்வைக்கிறார் திருப்பூர், சமூக ஆர்வலர் சுப்ரபாரதிமணியன். ''சிகிச்சை என்கிற பெயரில் தம்பதியரை மாதக்கணக்கில் மருத்துவமனையில் தங்கவைத்து, கட்டணம் என்கிற பெயரில் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் அவலம், நாடு முழுக்க நடக்கிறது. அதிகபட்சம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் முடியவேண்டிய செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சைக்கு, 10 லட்சம் ரூபாய் வரைகூட செலவு செய்த தம்பதியர் உண்டு.

சில தம்பதியர்களுக்கு நிவர்த்தி செய்யக்கூடிய சிறு குறைதான் இருந்திருக்கும். சில ஆயிரம் ரூபாய் செலவில் அதை செய்யமுடியும். ஆனால், அந்த 'டெஸ்ட்... இந்த டெஸ்ட்' என்றெல்லாம் பலமுறை அலைக்கழித்து, பின்னர் ஒரு கட்டத்தில் மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளைக் கொடுத்து, கர்ப்பம் உருவாகி உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். பிறகு, இரண்டு, மூன்று மாதங்களில் தொடர் சுழற்சியில் ஏற்படும் மாதவிடாயை, கரு அபார்ஷன் ஆகிவிட்டது என்று புளுகும் வேலையைச் செய்கிறார்கள்.

'டெஸ்ட்டியூப் பேபி' என்கிற வகையிலும் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதற்காக, வேறு ஆணின் விந்து அல்லது பெண்ணின் சினை முட்டையைத் தானமாகப் பெறுவதும் நடக்கிறது. இதற்கென விந்து/சினைமுட்டையை தருவோருக்கு சொற்பமாக ஒரு தொகைதான் தரப்படுகிறது. ஆனால், இதற்காக பல ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகச் சொல்லி, குழந்தையில்லா தம்பதியிடம் கறந்துவிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம்... இப்படி குழந்தை பெற்றுக்கொள்வது சமூகரீதியிலும் பிரச்னைகளை உருவாக்குகிறது. உறவினர்கள், நண்பர்கள் என்று சிலருக்கு தெரியவரும்போது, இதைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதெல்லாம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் தம்பதிக்கு மன உளைச்சல் ஏற்பட... குழந்தை உதாசீனப்படுத்தப்படுகிறது. சமயங்களில் தற்கொலை, விவாகரத்து என்பதில்கூட போய்முடிகிறது'' என்று சொன்னார்.

'வருத்தம், அவமானம் வேண்டாம்!’

பெண்களின் இத்தகைய பிரச்னைக்கு மிகமிக முக்கியமான காரணம்... குழந்தையில்லை என்பதல்ல. அதைச் சொல்லிச் சொல்லியே நோகடிக்கும் உறவுகள், நட்புகள் போன்றோரின் நடவடிக்கைகள்தான். இதைப் பற்றி பேசும் சென்னை, மனநல மருத்துவர் அசோகன், ''குழந்தையின்மை என்பதை ஒரு குறையாக சுட்டிக்காட்டும்போது அதைப் பெரிதுபடுத்தாமல், நமக்கான வாழ்க்கை குறித்த தெளிவான புரிதல் இருக்க வேண்டும். நம்மிடம் உடல்ரீதியான குறைபாடுகள் இருந்தால், உரிய சிகிச்சை எடுக்கத் தயங்கக்கூடாது. அதேசமயம், குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்கிற சூழல் ஏற்பட்டாலும், அதை ஒரு பெருங்குறையாக எடுத்துக் கொள்ளாமல், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற கேள்வியில் இருந்து முதலில் வெளியில் வரவேண்டும்.

அவன்... அவள்... அது... தெரிஞ்சுக்கோங்க... புரிஞ்சுக்கோங்க!

இது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த விஷயம். இதில் வருத்தப்படவோ, அவமானப்படவோ எதுவும் இல்லை. குழந்தை உள்ள ஒருவர், உங்கள் அளவுக்கு திறமையில்லாதவராக, குணமில்லாதவராக, சுற்றம் இல்லாதவராக, ஆரோக்கியம் இல்லாதவராகக்கூட இருக்கலாம். எனவே, இந்த உலகில் எல்லோரும் எல்லாமும் கிடைக்கப் பெற்றவர்கள் இல்லை. அதில் ஒன்றுதான் குழந்தையும். குழந்தை என்பது திருமணத்துக்குப் பிறகு வரும் ஒரு பந்தம், அவ்வளவுதான். அது இல்லை என்பதற்காக வாழ்க்கையே இல்லை என்பதில்லை'' என்று சொன்ன அசோகன்,

''தம்பதிகள் பிள்ளைகளுக்கு ஏங்குவது போலவே, நாட்டில் எத்தனையோ ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள்... பெற்றோருக்கு ஏங்கியபடி. விரும்பினால், இவர்களில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். நம் வாழ்க்கை குறித்த முடிவு, நம் மனதுக்கு ஏற்புடையதாக மட்டும் இருந்தால் போதும். சமூகம் என்பது, இன்றைக்கு ஒன்றை பேசும்... நாளையே அதை மறந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

இனி, சருகாவதும்... சமர்த்தாவதும்... பெண்களின் கைகளில்தான்!

கருத்தரிப்பு செலவு... ஒரு பார்வை!

செயற்கை கருத்தரிப்பு மற்றும் டெஸ்ட் டியூப் பேபி ஆகியவற்றுக்கான செலவுகள் பற்றி, மருத்துவத்துறையில் மக்கள் நலப்பணிகள் இணைஇயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது, ''கணவரின் விந்தணுவை சேகரித்து, அதை சில முறைகளில் தூய்மைப்படுத்தி, நேரடியாக கருப்பை வாய் அருகில் கொண்டு சேர்க்கும் முறையை ஐ.யூ.ஐ. என்று சொல்வார்கள். இந்த செயற்கை கருத்தரிப்பு முறைக்கு, அதிகபட்சமாக 1,500 ரூபாய் வரை செலவாகும். சிகிச்சை எடுக்க வருபவரிடம் குறைந்தது 5 ஆயிரம் ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை இதற்காக வசூலிக்கப்படுகிறது. இது, மருத்துவமனைகளைப் பொறுத்து இன்னும் அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு ஹார்மோன் ஊசி, நிறைய மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கலாம். இத்தகைய சூழலில், கொஞ்சம் கூடுதலாக செலவாகலாம்.

விந்தணுவை சேகரித்ததும் முறையாக பதப்படுத்த வேண்டும். தேவையான கவுன்ட் இருக்கிறதா என்று செக் செய்துதான், பெண்ணுக்குள் செலுத்த வேண்டும். ஆனால், அடுத்தடுத்த முறையும் பில் போட்டு பணம் பார்ப்பதற்காக, இதையெல்லாம் ஏனோதானோ என்று செய்பவர்களும் உண்டு.

சில பெண்கள் நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். கருமுட்டை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். ஆனால், கருப்பை பாதையில் ஏதாவது அடைப்பு இருக்கும். இத்தகையோருக்கு பல தடவைகூட ஐ.யூ.ஐ முறையில் முயற்சிக்கலாம். ஆனால், இதற்காக அதிக மருந்துகளும், ஹார்மோன் ஊசிகளும் எடுத்துக்கொள்வது சில பின்விளைவுகளைக் கட்டாயம் ஏற்படுத்தும்.

கருப்பைக்குள் கரு உருவாவதில் உள்ள சில பிரச்னைகள் காரணமாக, செயற்கை கருவூட்டல் முறை சிலருக்கு சரிப்பட்டு வராது. அந்த மாதிரி பெண்கள், சோதனைக்குழாய் முறைக்கு போகலாம். ஆனால், இரண்டு அல்லது மூன்று தடவை ஐ.யூ.ஐ. முயற்சி செய்ய வேண்டும். சில டாக்டர்கள் அதிக தொகை வசூலிப்பதற்காகவே நேரடியாக சோதனைக்குழாய் முறையை கையில் எடுத்துவிடுவார்கள்.

கரு முட்டையையும், விந்தணுவையும் தனியாக மூன்று நாட்கள் வைத்திருந்து, கரு பிடித்த பிறகு, கருப்பைக்குள் வைக்க வேண்டும். அதற்கு முன்பாக, கரு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொண்டு விட்டால்... ஃபெயிலியர் இருக்காது. சில மருத்துவமனைகளில் பெண்களிடம் மானிட்டர் மூலமாக இதைக் காட்டியபடியே கருப்பைக்குள் வைக்கிறார்கள்.

இத்தகைய சோதனைக்குழாய் முறைக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மருத்துவமனைக்கு செலவாகும். இதற்கான மருந்துகள் மற்றும் மருத்துவமனைக்கான செலவுகள் அதிகம். மிஞ்சிப்போனால், 2 லட்ச ரூபாய் வரை இருக்கலாம். ஆனால், 5 லட்ச ரூபாய் வரையிலும்கூட பில் போடும் மருத்துவமனைகளும் இருக்கின்றன. தற்போது பெரும்பாலான மருத்துவமனைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போலவே இயங்க ஆரம்பித்து விட்டதால்... கட்டணம் என்பது அதிகமாகவே வசூலிக்கப்படுகிறது'' என்று சொன்னார்.

முக்கியமான சில டிப்ஸ்!

ஆண், தன் விந்தணுக்களின் அளவிலும் ஆரோக்கியத்திலும் சிறந்து இருக்கிறனா... என்பதைப் பார்க்க வேண்டும். விந்தணு ஓடும் தன்மை நன்றாக இருக்க வேண்டும். நிறம் முத்து போல் பளபளப்பாக இருக்க வேண்டும். துர்நாற்றம் இருக்கக் கூடாது. இதை பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆண், தன் உறுப்பின் மொட்டுப் பகுதியிலிருக்கும் மேல்தோல் (Foreskin), திறந்து மூடும்படி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சரியாக திறக்கவில்லை என்றால்... உடலுறவு கடினமே. ஆண் உறுப்பு எளிதாக பெண் உறுப்புக்குள் போகாது. இதனால் விந்து, கர்ப்பப்பைக்கு அருகில் செல்வது தடைபடும். ஆண் டாக்ட ரிடம் சென்று இதற்குரிய சிகிச் சையை எடுக்க வேண்டும்.

பெண் எடை அளவுக்கு அதிகமாகவோ... குறைவாகவோ இருப் பின்... கருமுட்டை உருவாக்கும் ஆரோக்கியம் குறைந்து இருக் கும். மாதவிலக்கு முறையாக மாதம் ஒருமுறை வர வேண்டும். பெண் உறுப்பில் வெள்ளைப்படு வது அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ, அரிப்பு, துர்நாற் றம், மஞ்சள் நிறமாக, உள்ளாடை கறை படிய, அரித்து ஓட்டை ஆகும்படி... படை, சிரங்கு போல் தோல் மாறி இருந்தால்... உடனே பெண் மருத்துவரை அணுகவும்.