க.பிரபாகரன், படம் : எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்
உள் உறுப்புகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாட்டை பலரும் எதிர்கொள்ளப் பழகிவிடுகிறார்கள். ஆனால், தீ விபத்து, வாகன விபத்து, சமையலறைக் காயங்கள் என எதிர்பாராத விபத்தால் முகம், உடலில் ஏற்படும் கோரத்தை சுமந்துகொண்டு வெளிவரத் தயங்கி, முடங்குபவர்கள் பலர். கிட்டத்தட்ட 46 வருடங்களாக, அப்படி ஆயிரக்கணக்கானவர்களை, தன் மருத்துவ சிகிச்சையால்... சேவையால்... வெளியுலகுக்கு கொண்டுவந்து, தன்னம்பிக்கையுடன் நடமாடவைத்துக் கொண்டிருக்கிறார், டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்.
பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத்துறையில் தொண்டாற்றி வரும் இவர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட்’ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர். இவருடைய சேவைகளைக் கௌரவிக்கும்விதமாக, 2014-ம் ஆண்டுக்கான 'ஒளவையார் விருது’ அறிவித்திருக்கிறது தமிழக அரசு!
''சிறுவயதில் இருந்தே, மற்றவர்களின் கஷ்டத்தை ஏதோ ஒரு வகையில் தீர்க்கும்போதெல்லாம், என் மனம் உணரும் மகிழ்ச்சி அலாதியானது. அந்த அர்ப்பணிப்புதான், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் 'பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடென்ட்’ என்கிற சிறப்புத் தகுதியுடன் எம்.பி.பி.எஸ். முடிக்க வைத்தது. பிளாஸ்டிக் சர்ஜரி மீதான அளவில்லாத ஆர்வமும், சேவை எண்ணமும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தில் 'டாக்ட்ரேட் ஆஃப் சயின்ஸ்' பட்டம் பெற்ற, தமிழகத்தின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன் என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.
கீழ்ப்பாக்கம் மெடிக்கல் கல்லூரியின் 'பிளாஸ்டிக் அண்ட் ரீகன்ஸ்ட்ரக்டிவ்’ துறைத் தலைவராக நான் இருந்தபோதுதான், தென்னிந்தியாவிலே முதல் முறையாகவும், மிகப்பெரியதுமான 50 பெட் வசதிகளை கொண்ட 'பர்ன் யூனிட்' (Burn unit) மற்றும் அதற்கான தனி கட்டடத்தையும் எழுப்பினோம். அன்றிலிருந்து ரிட்டயர் ஆகும்வரை, கிட்டத்தட்ட 25 வருடங்களாக, என் மனமும் மூளையும் இடைவிடாமல் இயங்கிய இடம் அது'' என்று சிலிர்ப்பவர், அதன்பிறகுதான் 'காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட்’ பொறுப்பேற்றிருக்கிறார். இவருடைய கணவர் ராமகிருஷ்ணன், எழும்பூர் மருத்துவமனையின் முன்னாள் முதன்மை மருத்துவர். மகள், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர்.

''கிட்டத்தட்ட 60 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறேன். சிதைந்த உடம்பை, முகத்தை சீர்படுத்தி தரும்போது, நோயாளியின் முகத்திலும் மனதிலும் நான் பார்க்கும் சந்தோஷத்துக்கு இணையான இன்னொரு உணர்வை, அனுபவத்ததில்லை. ஆனால், சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு எல்லாம் உடனே தீக்குளித்துவிடுகிறார்கள். இப்போது, ஆசிரியர் அடித்தார், திட்டினார் என்று மாணவர்கள் தீக்குளிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. அதனால், தீயணைப்புத் துறையுடன் இணைந்து மாணவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறோம்'' என்ற டாக்டர் சொன்ன ஒரு சம்பவம், கல்லையும் கரைத்திடும்!
''எத்தனையோ காயங்கள் பார்த்திருந்தாலும், குறிப்பிட்ட அந்தக் குழந்தையை மறக்க முடியாது. அந்தத் தம்பதிக்கு குழந்தையில்லை. கணவனிடம் சொல்லாமல், நான்கு வயது ஆண் குழந்தையைத் தத்தெடுத்துவிட்டார் மனைவி. கோபமான கணவன், குழந்தை மீது ஆசிட் ஊற்றிவிட்டான். வேதனையுடன் குழந்தை துடித்ததை எங்களால் தாங்க முடியவில்லை. அந்த ஏழைப் பெண்ணால் பணமும் ஏற்பாடு செய்யமுடியவில்லை. தெரிந்தவர்களிடம் டொனேஷன் ஏற்பாடு செய்து, அறுவை சிகிச்சையை முடித்தோம். பார்வை பறிபோகும் நிலையில் இருந்த அந்த குழந்தைக்கு, மதுரையிலிருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனையினர், ஓரளவு அடையாளம் காணும் வகையில் பார்வையை தக்கவைத்துக் கொடுத்தார்கள். நல்ல குரல் மற்றும் இசை வளமுள்ள அந்தப் பையன், இசைக்குழு பாடகனாக இப்போது வலம் வருகிறான்'' என்று சொல்லும் டாக்டர், இப்படி தன்னிடம் வரும் பல ஏழை நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பெரிய மருத்துவச் செலவுகளுக்கு தானே பல்வேறு இடங்களில் உதவி பெற்றுத் தருகிறார். இதுபோன்ற பணிகளைப் பாராட்டி ஏகப்பட்ட விருதுகளைக் குவித்திருக்கும் இவருக்கு, இந்திய அரசு 2002-ல் 'பத்மஸ்ரீ’ வழங்கியும் சிறப்பித்திருக்கிறது.
''70 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது கடினம் என்பார்கள். சவாலாக மட்டுமல்லாமல், சக உயிர் மேலான அக்கறையாகவும் அதை எதிர்கொண்டு, பெரும்பாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். 'இவர் இதற்காகத்தான் படைக்கப்பட்டார்’ என்பது போல, நான் இந்த மகத்துவமான சிகிச்சையால் பலரின் கண்ணீர் துடைக்கும் கருவியாகவே படைக்கப்பட்டுள்ளேன் என்று நம்புகிறேன்!''
- அமைதியான வார்த்தைகள் வருகின்றன டாக்டர் மாதங்கியிடமிருந்து!