வே.கிருஷ்ணவேணி, படங்கள்: கே. கார்த்திகேயன், வி. செந்தில்குமார்
சென்னை, மாதவரம், பால்பண்ணை சாலை, ஆர்.சி அபார்ட்மென்ட் அருகில் தன்னுடைய தள்ளுவண்டிக் கடையில் பேன்ட் மற்றும் டாப்ஸ் உடையில் நின்றிருந்த பெண்ணை ஆச்சர்யமாகப் பார்த்து, சற்றே நின்றோம். கடைக்கு வந்த ஒருவரிடம், ''வாட் கேன் ஐ டூ ஃபார் யூ அண்ணே..?'' என்று அந்தப் பெண் கேட்க... இன்னும் கூடியது ஆச்சர்யம்!. கடையை நெருங்கிச் சென்றபோது... ''சாம்பார், ரசம், ஃபிஷ் கறி, எஃக் எல்லாம் இருக்கு? வாட் டு யூ வான்ட்..?'' என்று அசத்தலாக ஆங்கிலம் கலந்து நம்மிடம் கேட்டார்.
''தள்ளுவண்டிக் கடை, நவீன உடை, சரளமான இங்கிலீஷ்... எப்படி?'' என்ற கேள்வியுடன் பேச்சுக் கொடுத்தபோது, வேம்புலியம்மாள் எனும் அந்தப் பெண்மணி சொன்ன கதை, சோகக் கவிதை!
'அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதா, 'மனதில் உறுதி வேண்டும்’ சுகாசினி போன்ற கதாபாத்திரங்களின் நிஜவார்ப்பு, இந்த வேம்புலியம்மாள். அம்மா, தங்கை, தம்பிகள் என குடும்பத்துக்காக 21-வது வயதில் சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்குச் சென்றவர், கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் அங்கே கழித்துத் திரும்பியிருக்கிறார். இந்த 45 வயதில்... தன் அம்மா, தங்கை, தங்கையின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறார்.

''இங்கதான் பிறந்து, வளர்ந்தேன். எட்டு வயசிருக்கும்போது, அப்பா இறந்துட்டார். மூணு குழந்தைங்க மட்டுமில்லாம, ஏற்கெனவே தத்தெடுத்திருந்த ஒரு தம்பியையும் சேர்த்து மொத்தம் நாலு பேரை வளர்க்க ரொம்பக் கஷ்டப்பட்டாங்க அம்மா. கொஞ்சம் வசதியான வீட்டுல பிறந்த அம்மாவுக்கு, கூலி வேலையெல்லாம் தெரியாது. இருந்தாலும் விதி அவங்கள விடல. வயித்துக் கஞ்சிக்காக காலையில மூணு மணிக்கெல்லாம் போய் கூலிக்குப் புளியம்பழம் பறிச்சு, கொத்தவால்சாவடியில வித்துக்கொடுத் துட்டு... கிடைக்கிற காசுல எங்களுக்கு ஏதாச்சும் சாப்பிட வாங்கிட்டு வருவாங்க. ஆனா, அது நிரந்தரமில்ல. பல நாட்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு, தண்ணி குடிச்சே வாழ்ந்தோம்.
இடையில கடன்காரங்க பிரச்னை வேற. பிள்ளைங்க வாழ்க்கையாச்சும் நல்லாயிருக்கணும்னு, எப்படியோ உதவிகளை வாங்கி, எங்களையெல்லாம் தாம்பரத்துல இருக்கற பள்ளிக்கூட ஹாஸ்டல்ல சேர்த்தாங்க. அங்க தங்கச்சிக்கும், தம்பிக்கும் அம்மை போட்டிருச்சி. அதனால எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர, படிப்பு நின்னுபோச்சி. இங்க வந்தா... அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல. அப்பா இறந்த பிறகு, எங்க பசிக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்துட்டு, செங்கல்லைத் தேய்ச்சு, சலிச்சு, அதைச் சாப்பிட்டு தண்ணி குடிச்சிட்டு அம்மா தூங்க வர்றதை பலமுறை பார்த்திருக்கேன். அதெல்லாம் அவங்கள ரொம்பவே பாதிச்சிருச்சு. யாரும் உதவிக்கு வராத நிலையில... ஆஸ்பத்திரியில அம்மா கிடக்க, நான் தினமும் சர்ச்சுக்குப் போய் ஜபம் பண்ணி அழுவேன். என் பிரார்த்தனையோ என்னவோ, மூணு மாசத்துல அம்மா கொஞ்சம் உடம்பு தேறினாங்க.
அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்போ, மழையால வீடே சேறும் சகதியுமா கிடக்க... செங்கல் பொறுக்கிட்டு வந்து போட்டு, அது மேல அட்டையை விரிச்சு அம்மாவைப் படுக்கவெச்சோம். அடுத்து சாப்பாடு வேணுமே? அக்கம்பக்கம் வீடுகள்ல இருக்கறவங்களுக்காக கடைக்குப் போய் சாமானெல்லாம் வாங்கிக் கொடுப்போம். இதுக்காக அவங்க கொடுக்கிற சில்லறையில... பன், டீனு வாங்கிட்டு வந்து சாப்பிடுவோம். அது எந்த அளவுக்கு வயித்தை நிரப்பும்? அதனால, பக்கத்து வீடுகளுக்கு போய், 'அம்மா, ஏதாச்சும் சாப்பாடு மிச்சம் இருந்தா வாங்கிட்டு வரச் சொன்னாங்க’னு நிப்போம். பகல்ல போக அசிங்கப்பட்டுக்கிட்டு, ராத்திரியிலதான் போவோம்.
ஐ கெநாட் ஃபர்கெட் ஆல் திஸ்...''
- வேம்புலியம்மாளின் கண்களில் சரசரவென வழிந்தோடுகிறது நீர்.
''நாளாக ஆக, அம்மாவுக்கு உடம்பு கொஞ்சம் தேறியிருக்க, நாங்களும் வளர்ந்திருந்தோம். எல்லாருமா சேர்ந்து கூலி வேலைகளுக்குப் போனோம். பிறகு, ஒரு ஆஸ்பத்திரியில வேலை பார்த்ததேன். அங்க ஆல்ட்ராய் சார் அறிமுகமானார். சிங்கப்பூர்ல இருக்கிற இலங்கை தம்பதியோட குழந்தையைப் பார்த்துக்க, வீட்டு வேலைகளைச் செய்ய என்னை அனுப்பினார். 22 வருஷமா அங்கதான் இருந்தேன். என்னோட சுத்தமான வேலை, சுவையான சமையல், குழந்தையைப் பார்த்துக்கிட்ட அக்கறை இதெல்லாம் பிடிச்சுப்போக, என்னை விடவே அவங்களுக்கு மனசில்ல. ஆனாலும், அம்மாவோட உடல்நிலை மோசமானதால, மூணு வருஷத்துக்கு முன்ன இங்க திரும்பிட்டேன். வந்த கையோட இந்த தள்ளுவண்டிக் கடையை ஆரம்பிச்சுட்டேன். ஏன்னா... பொறுப்புகள் இன்னும் மிச்சமிருக்கில்ல?
இந்த 22 வருஷ சம்பாத்தியத்துல, முதல்ல கடன்களை எல்லாம் கட்டி முடிச்சேன். அப்புறம் அம்மாவுக்கு வைத்தியம் பார்த்தேன். வீட்டுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிப் போட்டேன். தங்கைக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன். இதுக்கு இடையில என்னோட வயசு கரைஞ்சுட்டே இருந்தது எனக்கு தெரியவே இல்ல. பூ வைக்கணும், பொட்டு வைக்கணும்ங்கிற சராசரி ஆசைகூட வந்ததில்ல எனக்கு. குடும்பம் நல்லா இருந்தா போதும்னு இருந்துட்டேன். குடிசை வீட்டுல இருந்த நாங்க, இப்போ... கல் வெச்சுக் கட்டின வீட்டுல குடியிருக்கோம். அம்மா, தங்கச்சி, அவ பொண்ணுங்க, பேத்திங்கள தாங்கறதுதான் எனக்கு சந்தோஷமா இருக்கு. அதுக்காகத்தான் இந்த சாப்பாட்டுக் கடை. இதுவரைக்கும் எனக்குனு ஒரு பைசாகூட சேமிப்பா வெச்சுக்கல. வெச்சுக்கவும் தோணல...''
- நிறைவு மட்டுமே வேம்புலியம்மாளின் பேச்சில்.

''ம்... இந்த டிரெஸ் பத்தியும், பேசுற இங்கிலீஷ் பத்தியும் கேட்டீங்கள்ல? ரெண்டும் சிங்கப்பூர்ல பழகினது. அங்க ஷார்ட்ஸ், பஞ்சாபி சூட்ஸ், ஜீன்ஸ்தான் போடுவேன். இங்க வந்து சேலை கட்டினா, நாம பார்க்கிற வேலைக்கு வசதியாவே இல்ல. அதனால அந்த டிரெஸையே இங்கயும் போட்டுட்டேன்.
மதிய சாப்பாட்டுக்கடை இது. ஒரு சாப்பாடு 35 ரூபாய்க்குக் கொடுக்கிறேன். ஒரு நாளைக்கு 800 - 1000 ரூபாய் நிக்கும். கஞ்சிக்காக நாங்க வீடு வீடா நின்ன காலம் போய், இன்னிக்கு, இல்லைனு வந்து நிக்கிற ரெண்டு பேருக்காச்சும் என்னால சாப்பாடு போட முடியுது. 'பசிக்குது’னு யாராவது சொல்லக் கேட்டா... எனக்குப் பதறிடும். ஏன்னா, பசிங்கறது எப்படி இருக்கும்னு நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கறவ நான்''
- மீண்டும் நீர்த் திரையிடுகிறது வேம்புலியம்மாளின் கண்களில்.
பிறருக்காக உழைக்க மட்டுமே படைக்கப்பட்டவர்களில் ஒருவர், வேம்புலியம்மாள்!