ஒரு மருத்துவரின் அக்கறைக் குறிப்புகள்வே.கிருஷ்ணவேணி, படம் : எம்.உசேன்
''உலகத்திலேயே மிகவும் அழகான தருணம், ஒரு பெண் தாயாகும் தருணம்தான். குழந்தையின் முதல் மூன்று வருடங்களில், அதன் வளர்ச்சியும், அதற்குத் தேவைப்படும் கண்காணிப்பும் அதிகம். அந்த சவாலான பணியை ஒவ்வொரு தாயும் மிகப்பொறுமையாக, கவனமாக கையாள்வது அவசியம்!'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர் பார்வதி, கர்ப்பம் முதல் பள்ளி செல்லும் வரை குழந்தை வளர்ப்புப் பற்றி வழிகாட்டுகிறார்... வார்த்தைக்கு வார்த்தை அக்கறை கோத்தபடி!
''கர்ப்பிணிகளுக்கு நல்ல உணவும், நிம்மதியான மனநிலையும் முக்கியம். சிசுவுக்கு அம்மாவின் ரத்தத்தின் வாயிலா கத்தான் உணவு கடத்தப்படும். பொதுவாக, நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ரத்தத்தில் கலக்கும் என்பதால்தான், கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையும் சாப்பிடக் கூடாது என்கிறோம். ரத்த அழுத்தம், தைராய்டு என ஏற்கெனவே சிகிச்சையில் இருப்பவர்கள், கர்ப்பகாலம் முழுக்க மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். காசநோய் பாதிப்பு உள்ளவர்கள் கர்ப்பத்தை தவிர்ப்பது நல்லது.
பிரசவத்துக்குத் தயாராகும் பெண்கள், அந்த வலியை எதிர்கொள்ளும் வலிமையை கட்டமைத்துக் கொள்ள வேண்டும். 'எல்லா பெண்களுக்கும் பொதுவான பிரசவ வலியை, நானும் கடப்பேன்’ என தைரியம் சொல்லிக்கொள்ள வேண்டும். சிலர் ஜாதகம் பார்த்து, சுகப்பிரசவத்தைக்கூட சிசேரியன் ஆக்குகிறார்கள். இது முற்றிலும் தவறு. 'ஆடியில் பிறந்தா ஆகாது’, 'சித்திரை தள்ளி குழந்தை பிறக்கட்டும்’ என்று பழமையான காரணங்கள் சொல்லி குழந்தை பிறக்கும் தினத்தை செயற்கையாக நீட்டிப்பதோ, குறைப்பதோ ஆபத்தானது.

குழந்தை பிறந்த உடனேயே தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். இது குழந்தையின் உரிமை, தாயின் கடமை. குழந்தைகளுக்கு அம்மா சாப்பாடு ஊட்டுவதே சிறந்தது. அப்போதுதான் உணவு மட்டுமல்லாது அன்பு, பாசம், அரவணைப்பு அனைத்தும் முழுமையாகக் கிடைக்கும். விரல் சூப்பும் குழந்தைகளை அதிகம் கோபிக்க வேண்டாம். இது ஒரு வகையான ருசி அறியும் தன்மை. அதைத் தடுப்பதற்காக குழந்தையை அடிப்பதைவிட, டீத்தர் போன்ற, அதன் வாயில் வைக்கப் பாதுகாப்பான, குழந்தைகளை ஈர்க்கக்கூடிய ஒரு பொருளைக் கொடுக்கலாம்.
ஸ்கூல் செல்ல ஆரம்பிக்கும் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் பேரீச்சை, பழங்கள், நட்ஸ் பிஸ்கட் என்று கொடுத்தனுப்பலாம். வீட்டில் உள்ளவர்கள், 'எனக்கு இது பிடிக்காது, அது பிடிக்காது’ என்றால், குழந்தையும் தனக்குப் பிடிக்காத லிஸ்ட் சொல்லும். எனவே, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நாமும் கடைப்பிடித்து அதற்கும் கற்பிக்க வேண்டும்.
குழந்தைக்கு முதல் ஆசான் தாய், தந்தைதான். அதற்குப் பிறகுதான் வெளியுலக சூழல். அதனால்... நல்லதும், கெட்டதும் ஒருசேரப் பதியும் குழந்தை வயதில் நல்லதை மட்டுமே அதன் மனதில் பதிய வைக்க, பெற்றோர்தான் முன்மாதிரியாக இருக்க வேண்டும்!’' என்று வலியுறுத்தும் டாக்டர் பார்வதி, கர்ப்பகால பராமரிப்பு, குழந்தை பிறந்ததும் கண்காணிக்க வேண்டிய விஷயங்கள், குழந்தைக்கான உணவு, ஆடைகள், வெளியில் அழைத்துச் செல்லும்போது எடுக்க வேண்டிய எச்சரிக்கைகள் மற்றும் வளர்ப்பு முறையில் காட்டவேண்டிய நுணுக்கமான அக்கறைகள் என்று நிறையவே பகிர்ந்தார். அதையெல்லாம் கேட்க, வழிகாட்டும் ஒலி குரல் வழி சேவை எண்ணுக்கு (044 6680 2912) ஒரு போன் போடுங்கள்!
