மருத்துவ டிப்ஸ், செல் டிப்ஸ், சமையல் டிப்ஸ்
இந்த இதழில் இடம் பெறும் 'மருத்துவ டிப்ஸ்’ மற்றும் 'செல் டிப்ஸ்’களின் தொகுப்பு:
எம்.மரிய பெல்சின், இந்துலேகா.சி
வாசகிகள் அனுப்பிய டிப்ஸ்களின் தொகுப்பு: விஜயலட்சுமி ராமாமிர்தம்

மருத்துவ டிப்ஸ்
கீழாநெல்லியை பால் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு 3 நாள் தொடர்ந்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால், குடலில் தேங்கியிருக்கும் பித்தவாயு வெளியேறிவிடும். இதுமட்டுமல்லாமல்... குடல் வீக்கம், வயிற்றுமந்தம் சரியாகும்.

காய்ச்சலுக்கு கைகண்ட மருந்து இருக்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் இஞ்சிச்சாறும், தேனும் சேர்த்து சாப்பிடுங்கள், கூடவே கொஞ்சம் வெந்நீரும் குடியுங்கள். காலை, மாலை என

மூன்று நாள் இதே போல் செய்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.
பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து, அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு... வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் பலன் கிடைக்கும். இதை

வாரம் ஒருமுறை செய்து வந்தால் இரண்டொரு மாதங்களிலேயே வித்தியாசத்தைப் பார்க்கலாம்.
குழந்தைகளோ, பெரியவரோ... யாராக இருந்தாலும், வயிற்றுவலியால்

அவதிப்படும்போது, 10 புதினா இலைகளை வெறுமனே வதக்கி, ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி, ஆற வைக்கவும். இதை காலை, மதியம், மாலை என கொடுத்து வந்தால், வயிறுவலி மட்டுமில்லாமல் வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளும் சரியாகும். குழந்தைகளுக்கு அளவைக் குறைத்துக் கொடுப்பது நல்லது.
பிரண்டையின் மேல்பகுதியில் உள்ள நாரை உறித்து எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து, பச்சை நிறம் மாறி பொன்னிறமாக ஆகும்வரை வதக்க வேண்டும். அத்துடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு, உளுந்து, தேங்காய் சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிட்டால்... வயிற்றுப்பொருமல், வாயுத்தொல்லை விலகுவதோடு உடம்புக்கு பலமும் தரும்.
‘செல்’ டிப்ஸ்

செல்போனில் ஸ்க்ரீன் சேவர், மூவிங் வால்பேப்பர் போன்றவற்றை உபயோகப் படுத்தும்போது, பேட்டரியின் சார்ஜ் அதிகமாக செலவாகும். அதனால் வெறும் படங்களை வால்பேப்பராக பயன்படுத்தும்போது சார்ஜை மிச்சப்படுத்தலாம். டவர் கிடைக்காத பட்சத்தில் செல்போனை ஆஃப் செய்து வைத்தால் பேட்டரியில் சார்ஜ் மேலும் நீடிக்கும்.
உங்கள் செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்-களில் தேவையானதை தவிர்த்து,

மற்றதை உடனுக்குடன் அழித்துவிடுங்கள். இதனால் இன்பாக்ஸ் நிரம்பி வழிவது மற்றும் தேவையில்லாமல் பேட்டரி சார்ஜ் குறைவதில் இருந்து தப்பிக்கலாம். ஆப்ஸ்கள் மற்றும் சாஃப்ட்வேர்கள், தேவையில்லாத பட்சத்தில் அப்லோடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
கீ-போர்டின் பின்புறம் ஒளிரும் ' பேக் லைட் ’ மற்றும் 'பவர் சேவர் லைட்’ போன்றவற்றை அணைத்து வைப்பதால், பேட்டரியின் ஆற்றலை மிச்சப் படுத்தலாம். 'கீ-பேட்’ டோன்கள், உபயோகிக்கும் பட்சத்தில் 'லைட்’ கள் அவசியம்

இல்லை. தேவைப்பட்டால் இரவு நேரத்தில் மட்டும் 'ஆன்’ செய்து பயன்படுத்தி, பேட்டரியின் ஆயுளைக் காக்கலாம். செல்போனின் 'டிஸ்பிளே செட்டிங்ஸ்’ என்கிற பகுதியில் இந்த ஆப்ஷன்கள் இருக்கும்.
செல்போன் பேட்டரியின் ஆயுளைக் கூட்ட, எப்போது பேட்டரியின் சார்ஜ் தீர்கிறதோ... அப்போது சார்ஜ் செய்தால் போதும். ரெட் சிக்னல் காட்டியபின் அதிக நேரம் கழித்து சார்ஜ் செய்வது, விடிய விடிய சார்ஜ் செய்வதெல்லாம் கூடாது. பேட்டரியில் முழுவதும் சார்ஜ் ஏறிய பிறகு உபயோகப்படுத்துவது, பேட்டரியின் ஆயுளைக் கூட்டும்.

நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்யும்போது இரண்டு, மூன்று வேளைக்கான சப்பாத்திகளை எடுத்துச் செல்வோம். அவை உலர்ந்து அட்டை போல ஆகி விடாமல் இருக்க, சப்பாத்தி வைத்த டிபன் பாக்ஸ் அல்லது பாத்திரத்தில் சில இஞ்சித் துண்டுகளைப் போட்டு வைத்துப் பாருங்கள்... சப்பாத்தி இருக்கும் 'சாஃப்ட்’டாகவே!
- அகிலா பஞ்சாபகேசன், பெங்களூரு

உங்கள் வீட்டில் தினமும் சப்பாத்தியா... ஒரு வித்தியாசத்துக்காக கோதுமை மாவில் மோர்க்களி செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்! வாணலியில் ஒரு டம்ளர் கோதுமை மாவை நன்கு சூடாகும் வரை (சுமார் ஒரு நிமிடம்) வறுத்து, அதை இரண்டு டம்ளர் புளித்த மோரில் உப்பு சேர்த்துக் கரைத்துக்கொள்ளுங்கள். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, நாலைந்து மோர் மிளகாய் ஆகியவற்றை வறுத்து, கரைத்த மாவைக் கொட்டி, வெந்து கெட்டியாகும் வரை (சுமார் 2 அல்லது 3 நிமிடங்கள்) கிளறி, சூடாகப்

பரிமாறினால்... ருசித்துச் சாப்பிடுவார்கள்!
- எஸ்.வெண்மதி, சென்னை
இஞ்சி, மிளகாய் சேர்த்து அரைப்பதால், சில குழந்தைகள் அடை சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு அடை மாவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பீட்ரூட், சௌசௌ போன்ற இனிப்பான காய்களைத் துருவிச் சேர்த்து, சின்னச் சின்ன கட்லெட் போல தோசைக் கல்லில் சுட்டு, வெல்லம் அல்லது தக்காளி

சாஸுடன் கொடுத்துப் பாருங்கள்... பிளேட் காலி!
- என். ரம்யா, கொல்கத்தா
கசப்பில்லாத மொறுமொறுப்பான பாகற்காய் பொரியல் செய்ய ஒரு யோசனை இதோ... பாகற்காய்களைப் பொடியாக அரிந்து வைக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, தனியா, நாலைந்து மிளகாய் வற்றல் இவற்றை வறுத்து... உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் பொடித்து, பாகற்காய்த் துண்டுகளுடன் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கலந்து வைத்துள்ள பாகற்காயைப் போட்டு நன்கு வதக்கினால்... சுவையான, கசப்பில்லாத, உதிர் உதிரான பாகற்காய்ப் பொரியல் தயார்!
- என்.ஜரினா பானு, திருப்பட்டினம்