உலகம் சுற்றும் ஜெனிஃபர்!ரிமோட் ரீட்டா
எல்லாரும் சம்மர்லதான் டூர் பிளான் போடுவாங்க. ஆனா, இந்த ஜெனிஃபர் பொண்ணு, ஆல்டைம் டூர்லதான் இருக்கு. அட, விஜய் டி.வி-யில 'ஜோடி நம்பர்-1’ டான்ஸ் புரோகிராம்ல, 'ஆபீஸ்' கார்த்திக் கூட, ஜோடி போட்டு ஆடற அதே பொண்ணுதாங்க!
''அதென்னமா ராசி... எப்பவும் ஃபிளைட்லயே பறந்துட்டு இருக்கியாமே..?!''
''ஆமா ரீட்டா... வருஷா வருஷம் நான் சுவிட்சர்லாந்துலதான் கிறிஸ்துமஸ் கொண்டாடுவேன். சுவிஸ், எனக்கு சொந்த ஊரு மாதிரி. அந்தளவுக்கு எல்லா ரூட்டும் அத்துப்படி. போன நியூ இயர்க்கு, என்னோட ஆல் டைம் ஃபேவரைட்டான வெனிஸ் போயிருந்தேன். அந்த நகரம் முழுக்க தண்ணிதான். ஊர் சுத்தி பார்க்கறதுக்கே, நீர்வழிப் பயணம்தான். செமஜாலியா இருக்கும். இந்த ஊர் சர்ச்சுகளில் இருக்கும் வேலைப்பாடுகளை நாள் முழுக்க ரசிக்கலாம்.''


''உலகமே சுற்றியிருக்க போல...''
''யா யா! இது தவிர டென்மார்க், நார்வே, இத்தாலி, லண்டன், ஜெர்மனினு ஒரே ஆட்டம்தான். சுவிஸ், வெனிஸ் தவிர இவையெல்லாம் நான் நடன நிகழ்ச்சிகளுக்காக, மீடியா நண்பர்களோட போனது. ஜெர்மனில 'யுரோப்பா பார்க்’னு ஒரு அம்யூஸ்மென்ட் பார்க் இருக்கு. அங்க இருக்கும் விளையாட்டுகள் எல்லாம், செம த்ரில்லிங். ரெண்டு நாள் முழுக்க செலவழிச்சாதான், அந்த பார்க்கை முழுசா சுத்திப் பார்க்க முடியும். அதனால, பார்க்லயே ரிசார்ட்டும் இருக்கும்.''
''சூப்பர் ஜெனீ!''
''இன்னும் துபாய், அபுதாபி, ஷார்ஜா, கத்தார், மஸ்கட், பஹ்ரைன் எல்லாம் சுத்தி இருக்கேன். இங்கயெல்லாம் இருக்கிறவங்களோட கலாசாரம் ரொம்ப ஒழுக்கமானது. கத்தார்ல புதுசு, பழசுனு ரெண்டு பிரிவு இருக்கு. அதாவது பழைய கத்தாரை ராஜாவும், புது கத்தாரை இளவரசரும் பார்த்துக்கறாங்க. இப்பகூட இங்க நடக்கப் போகும் ஃபுட்பால் மேட்ச்சுக்கு ரெண்டு பேரும் போட்டி போட்டு செலவு பண்ணி, கடலுக்கு நடுவுல ஒரு ஸ்டேடியம் கட்டிட்டு இருக்காங்க. துபாய் மாதிரி உயரமான கட்டடங்களை, நான் எங்கயுமே பார்த்ததில்ல. இரவு விளக்கொளியில் மின்னும் துபாய், வாவ்!
பாங்காக்ல இருக்கிற தீவு, வாட்டர் ரைடு எல்லாமே புது அனுபவமா இருக்கும். அங்க 'சியாம் நிரமட்’னு ஒரு டிராமா பார்த்தேன். சில நொடிகளில் ஸ்டேஜ் பேக் டிராப் மாத்திடுவாங்க. நரகம், ஒரு செகண்ட்ல சொர்க்கமா மாறிடும் அளவுக்கு, ஸ்பீடான டெக்னாலஜி அது.''
''சரி, இந்த சம்மருக்கு எங்கயும் போகலயா?''
''இப்பதான் லண்டன்ல இருந்து வர்றேன் ரீட்டா!''
ரைட்டு... உலகம் சுற்றும் ஜெனிஃபர்!

வாசகிகள் விமர்சனம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
இதுதான் புத்தாண்டு சிறப்பா?
''தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளில் எந்த சேனலை திருப்பினாலும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன்தான். அவர் பேட்டி இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்னும் அளவுக்கு போரடிக்க வைத்துவிட்டார்கள். நடிகர் - நடிகைகளின் பேட்டி, நிகழ்ச்சி மட்டும்தான் புத்தாண்டின் சிறப்பு என்று தொலைக்காட்சிகள் நினைக்கின்றனவா? இதையும் தாண்டி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன... கொஞ்சம் யோசியுங்க'' என்று சூடாகிறார்... நெல்லையில் இருந்து ஆர்.கற்பகபூமி.
அத்தனை சேனல்களின் கவனத்துக்கு!
''விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'நீயா... நானா?' நிகழ்ச்சியில் தேர்தலில் வாக்கு போடுவதன் அவசியம் குறித்து பலர் பேசினர். தேர்தலில் வாக்களிப்பது எப்படி? என்பதற்கு 'மாதிரி வாக்களிப்பை’ தேர்தல் அதிகாரிகளே வந்து நடத்திக்காட்டினார்கள். தேர்தல் வாக்களிப்பு பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் பொறுப்பாக பதில் அளித்தார்கள். மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. மக்களுக்கு பயன்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பிற டி.வி-க்களும் ஒளிபரப்ப வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் கிருஷ்ணகிரியில் இருந்து ஜெயலட்சுமி வசந்தராசன்.
குழந்தைகள் மனதில் நல்லெண்ணம்!
''டி.வி. விளம்பரம் ஒன்றில், ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அதைக் கவனிக்காத சிறுமி ஒருத்தி, தன் நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறாள். 'நீ என்ன அடுத்த ஷேக்ஸ்பியர் ஆகப் போகிறாயா?’ என்று கேட்டு அதட்டுகிறார் ஆசிரியை. 'நான் முதலில் அனித்தா ஆகப் போகிறேன்’ என்கிறாள் சிறுமி. அதைக் கேட்டு ஆசிரியை புன்முறுவல் செய்கிறார். நோட்டுப் புத்தகத்துக்கான இந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது, நமக்கும் சின்ன புன்முறுவல் வருகிறது. இதுபோன்ற விளம்பரங்கள் பிஞ்சுக் குழந்தைகள் மனதில், பாஸிட்டிவ் மனப்பான்மையை உருவாக்கும் என்பது நிச்சயம்'' என்று சிவப்பு கம்பளம் விரிக்கிறார் பாண்டிச்சேரியில் இருந்து அனுராதா ரமேஷ்.